எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….

எஸ்.வி.ராஜதுரை ஆழ்ந்த அறவேதனை தொனிக்க எழுதிய குறிப்புகளை அவரது ஆதவாளர்கள் ஊடகங்களில் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முதியவர், இடதுசாரி, நோயாளி,திராவிடச்சிந்தனையாளர் என எல்லா அடையாளங்களையும் அவர் பயன்படுத்திக்கொள்கிறார். உண்மையில் பயன்படும் அடையாளம் எது என அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அதுதானா எஸ்.வி.ராஜதுரை? அதுவா அவரது மனம், அதுதானா அவரது மொழி?

அவர் எனக்களித்த வக்கீல்நோட்டீசின் பக்கங்கள் இதோ உள்ளன. [தனியாக அதன் தட்டச்சு வடிவம் உள்ளது]

இந்த மொழிநடையைப் பாருங்கள். இதில் பக்கம்பக்கமாக வெளிப்படும் வசைச்சொற்கள். [கேனையன்,மலத்தில் மொய்த்த ஈ]

அப்பட்டமான அவதூறுகள் சம்பந்தமே இல்லாமல் மனைவிமக்களை இழுத்துப்பேசும் கீழ்த்தரமான குறிப்புகள். [பொண்டாட்டி பேரிலான களவாணித்தனத்திற்கு’ சொந்தக்காரர்]

சினிமாவிலிருந்து பொறுக்கியெடுத்த வசைகள் , உவமைகள்.[வின்னர் வடிவேல், லார்டு லபக்கு]

என்னை அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் நான் பெண் பொறுக்கி என்கிறார் [“பிடிக்கிலேனா விட்டிருங்கோ…” வசனம் மூலம் உம்மைப் புல்லரிக்க வைத்த உமது ‘பாஷை’யில் சொன்னால் அதிகம் அறிவில்லாத ‘அவளுக்கோ’]

என்னைக் குடிகாரன் என்று குற்றம்சாட்டுகிறார். [‘ஃபுல்’ தடுக்கி (புல் தடுக்கி அல்ல) பயில்வானாக]

சாதிசார்ந்த வசைகள்தான் எவ்வளவு. [ நீர், ஒரு சனாதனப் பார்ப்பார் – பெரு சாதிவெறியர் , பிறரை சுரண்டுகிற அறிவு மட்டுமே உடைய ‘அவாளுக்கோ’ ]

என் பிறப்பை வசைபாடுகிறார் [பிறப்பின் பிறழ்வு]

என்ன நினைக்கிறார் எஸ்.வி.ராஜதுரை? இதே போல ஒரு வக்கீல் நோட்டீஸை நான் அவருக்கு அனுப்புவேன் என்றா? அது என்னால் முடியுமென நினைக்கிறாரா என்ன? என் குடும்பத்தையே அழிக்கும் செயலை எஸ்.வி.ராஜதுரை செய்திருந்தால்கூட அவர் என் மனைவியை சம்பந்தபப்டுத்தி எழுதியிருப்பதுபோன்ற ஒரு வரியை நான் சொல்லிவிடுவேனா என்ன? எனக்கு மகள் இருக்கிறாள். உலகமெங்கும் வாசகியர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் அதன்பின் என்னால் விழிக்கமுடியுமா?

ஆம், நான் வாழும் உலகமும் சிந்திக்கும் தளமும் வேறு. அதை எஸ்.வி.ராஜதுரை ஒருபோதும் உணரமுடியாது.

*

இந்த வக்கீல்நோட்டீஸை வழக்கறிஞர் விஜயன் அவரே எழுதியிருக்க வாய்ப்ப்பில்லை. சட்டப்படி வழக்கறிஞர் கட்சிக்காரரின் குரலாகவே ஒலிக்கிறார். இதன் எல்லாப் பக்கங்களிலும் எஸ்.வி.ராஜதுரை கையெழுத்திட்டிருக்கிறார்.

மேலும் இந்த வக்கீல் நோட்டீஸில் திரித்தும், நக்கலடித்தும், ஆபாசமான உட்குறிப்புகள் கொண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் பலவிஷயங்கள் நெடுநாள் சிற்றிதழ்ச்சூழலில் புழங்குபவர்களுக்கு மட்டுமே தெரிந்தவை. இந்த மொழிநடை நெடுங்காலமாக நம் இடதுசாரி தீவிர இதழ்களில் சிலர் எழுதிவந்த அழுகல்நடை. எஸ்.வி.ராஜதுரை உருவாகிவந்த நாற்றங்கால் அது.

இதுதான் உண்மையான எஸ்.வி.ராஜதுரை என அவரிடம் பேசியவர்களும், கடிதம் பெற்றவர்களும் சொல்லிக் கேட்டிருந்தாலும் இது எனக்கு முதல் அனுபவம்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் மனம் உடைந்துபோனேன். எஸ்.வி.ராஜதுரைக்கே தெரியும், நான் அவர் நூல்களை வாசித்து வளர்ந்தவன். அதைப் பலமுறை எழுதியவன். இன்று அவரது திரிபுநிலைகளைக் கண்டு கருத்தியல் ரீதியாக முரண்படும்போதும் உள்ளூர அவர்மேல் ஆழ்ந்த மதிப்பு கொண்டவன். இந்த மொழியும் இந்த அவதூறும்தான் எஸ்.வி.ஆர் என்றால் என் மனதுக்குள் நான் கொண்டிருக்கும் அந்த பிம்பம் எவருடையது?

இருபதையொட்டிய வயதுகளில் பிம்பங்கள் உடைவது சாதாரணமான விஷயம். ஐம்பதில் உடைவது மிகமிக வலி அளிப்பது. இந்த வக்கீல் நோட்டீஸை நான் என் மனைவியிடமோ நண்பர்களிடமோ கூட காட்டவில்லை. இது ஒரு சட்ட ஆவணமாக இல்லை என்றால் அப்போதே கிழித்துப்போட்டிருப்பேன். இதை இன்னொரு கண் வாசிக்கலாகாதென்றே எண்ணினேன். இரண்டுமாதங்களுக்கும் மேலாக இதைப்பற்றி நான் எவரிடமும் பேசியதில்லை.

‘அன்னியமாதல்’ ‘ரஷ்யப்புரட்சி இலக்கிய சாட்சியம்’ போன்ற நூல்களின் ஆசிரியரை இந்த வண்ணத்தில் இந்தக் கோலத்தில் வெளிக்காட்ட நான் விரும்பவில்லை. ஆனால் வழக்கு நீதிமன்றம் சென்றபின் இதை வாசிக்க நேர்ந்த நண்பர்கள் அனைவரும் இது பொதுப்பார்வைக்கு வந்தாகவேண்டும் என்றார்கள். ஏன் என்றால் இதிலுள்ளது ஓர் அறப்பிரச்சினை.

ஒரு வக்கீல்நோட்டீஸ் என்பது தனிப்பட்ட கடிதமல்ல. அது ஒரு பொது ஆவணம். அழிக்கவோ மறைக்கவோ முடியாத ஒன்று. அதில் இவ்வளவு ஆபாச வசைகளையும் அவதூறுகளையும் எழுதிச்சேர்ப்பதென்பது மிகமிக மோசமான முன்னுதாரணம். யோசித்துப்பாருங்கள் இத்தகைய ஒரு வக்கீல்நோட்டீஸ் வழியாக ஒரு எளிய மனிதரை உளவியல் ரீதியாக உடைத்துப்போட்டுவிட முடியும். ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையையே நாசம் செய்துவிடமுடியும்.

நம் சூழலில் பெரும்பாலானவர்கள் தங்கள் சாதி, மதம் சார்ந்தும் கருத்துநிலைப்பாடுகள் சார்ந்தும் மட்டுமே ஒவ்வொன்றையும் புரிந்துகொள்கிறார்கள். பொதுவான ஓர் அறம்பற்றிப் பேசுபவர்கள் மிகக்குறைவு. எஸ்.வி.ராஜதுரை விஷயத்தில் ஆதரித்து நியாயங்கள் பேசியவர்கள் ஒவ்வொருவரும் அந்தரங்கமாகவேனும் இந்த வழக்கறிஞர் அறிக்கையைப்பற்றி யோசிக்கவேண்டும்.

சட்டத்தின் பெயரால் இத்தகைய உளவியல் வன்முறையை நாம் அனுமதிக்கலாமா? இது ஒரு முன்னுதாரணமாக ஆனால் இந்தியாவில் எவரேனும் மானமாக வாழமுடியுமா? மானமிகு என எஸ்.வி.ராஜதுரை போட்டுக்கொள்ளும் சொல்லுக்கான அர்த்தம் அதன் பின் இருக்குமா?

இதை வாசிக்க நேர்ந்த ஒவ்வொரு வழக்கறிஞரும் அதிர்ச்சியடைகிறார்கள். ஏனென்றால் இந்த மொழியில் ஒரு வக்கீல்நோட்டீஸ் அனுப்பப்படுவது தமிழகத்தில் இதுவே முதல்முறை. இதன் நகலைப் பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் கேட்டுப்பெற்றிருக்கிறார்கள். ஓர் ஆவணமாக.

சிற்றிதழ்ப்பண்பாடு என்று சொல்கிறோமே அதிலிருந்து சென்று நாம் சட்டத்தின் உலகுக்கு அளிக்கும் பங்களிப்பு இதுதானா?

அவரே குறிப்பிட்டதும் பொதுவெளியில் பேசப்பட்டதுமான ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுவதை அவதூறு என்றும் தாக்குதல் என்றும் சொல்லி கண்ணைக்கசக்கும் எஸ்.வி.ராஜதுரை இந்த வக்கீல்நோட்டீஸில் உள்ள ஆபாசத்தை எப்படி எனக்கு அனுப்பினார்? எப்படி அவர் கை நடுங்காமலிருந்தது?

அவரை ஒரு இடதுசாரித் தியாகி என்று முன் நிறுத்திய ஜூனியர்விகடன் போன்ற இதழ்கள் இதைப்பற்றி என்ன சொல்லப்போகின்றன?

அவரை ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர் என நினைப்பவர்கள் இந்த செயலைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? இதுவா இடதுசாரி ஒழுக்கம்? இதுவா இடதுசாரி கருத்தியல் நாகரீகம்?

வசதியான மௌனம் மூலம் இதை அவர்கள் அங்கீகரிக்கவா போகிறார்கள்?

சரி, நாளை அவர் எழுதிய ஒவ்வொரு எழுத்துடனும் இந்த நோட்டீசின் மொழியும் நினைவுகூரப்படுமென்றாவது எஸ்.வி.ராஜதுரை யோசித்தாரா?

எஸ்.வி.ராஜதுரையை நேரில் கண்டால் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு நான் சொல்ல விரும்புவது இதைத்தான். ‘எஸ்.வி. ஆர், இதைப்போல கீழிறங்காதீர்கள். தயவுசெய்து…. தமிழ்ச்சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உங்களை முன்வைத்து இத்தகைய கீழ்த்தரமான ஒரு வழக்கம் நம் சட்டச்சூழலில் உருவாக வேண்டாம். என்றோ ஒருநாள் உங்கள் நூலை வாசித்து மன எழுச்சியடைந்தவன் என்பதனால் நானும் உங்கள் மாணவனே. இந்தக் கீழ்த்தர மொழியாக உங்களை வாசிக்கையில் நான் அடைவது மரணத்துக்கிணையான ஓர் அனுபவம்… தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்….’

வக்கீல் நோட்டீஸ் ஸ்கான் பக்கங்கள்

[தட்டச்சு வடிவம் ]

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ்
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை- கடிதங்கள்