செக்,பிரகாஷ்-கடிதங்கள்

ஆசிரியருக்கு,

வணக்கம். மேலை வாழ்வு தனி மனித உரிமை பேணுதலில் அக மகிழ்வை இழக்கின்றன என்பது குறித்த
உங்கள் வாசகரின் பார்வையைப் பார்த்தேன். இது ஒரு பக்கம் என்றே தோன்றுகின்றது.

நீங்கள் முத்துலிங்கம் சிறுகதைகள் தொகுப்புக்கு ஒரு சிறு பத்தி எழுதி இருந்தீர்கள். அதில் உலகமே ஒரு கிராமமாக சுருங்குகின்றது. மானுடம் இணைக்கப் படுகின்றது என்று அந்தப் பத்தியில் வரும். இது நான் எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கையில் ஆங்கிலp பாடத்தில் படித்த “shrinking world” என்ற பாடம் போல இருந்தது. அந்தப் பாடம் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டது. உங்கள் வரிகளை முத்துலிங்கம் தொகுப்பில் படித்த பொழுது பழைய பாடத்தினை மீண்டும் அசை போட வைத்தது.

உங்கள் வாசகர் தனது கட்டுரையில் இரண்டு வகை வாதங்களை முன் வைக்கின்றார்.

1) கீழை வழி மிகப் புனிதமானது. ஏன் என்றால் அது ஈராயிரம் ஆண்டுக்கு முன்னரே பிரபஞ்ச தத்துவங்களை அசைத்துப் பார்த்தது. மிகப் பெரிய தத்துவ வடிவை உண்டாக்கியது. அது தனி மனித உரிமை வழி இழந்து போகும் குடும்ப அமைப்பினைப் பேணிக் காக்கும். ( உபரியாகக் கீழை வழியின் எல்லா குறைக்கும் அந்நிய ஆதிக்கமே காரணம் என்ற வெள்ளையடிப்பு. உடன்கட்டை ,தீண்டாமை , போட்டு கட்டுதல், பெண்ணடிமை , கொத்தடிமை, குடிமை உணர்வில்லாமை மற்றும் இன்ன பிற எல்லாவற்றுக்கும் அந்நிய ஆதிக்கமே முழு காரணம். வைதீகம் பாவம், அது எந்தத் தீமைக்கும் எதற்குமே பொறுப்பில்லை. இந்த மண்ணில் உண்டான எல்லா நல்ல கருத்துகளுக்கு மட்டுமே வைதீகம் பொறுப்பெடுத்துக் கொள்ளும். கேட்க நகைச்சுவையாக இருந்தாலும் வேறு வழியில்லை, இப்படி மட்டுமே பொருள் கொள்ள வேண்டும். )
2) மேலை வழி அதீத தனி மனித உரிமை வழி சென்று தனது குடும்ப அமைப்பினை இழந்து ஆற்று மணல் போல் உள்ளது. வசதியான வாழ்வு உண்டு , அக மகிழ்வு இல்லை .

இந்தத் தரப்புக்கு அவர் முன் வைக்கும் தரவுகள் அவரது மத்திம  பொருளாதாரம் சார்ந்த ,சாதி அடுக்கில் ஓரளவு மேலே உள்ள அவரது குடும்பச் சூழலையும், அவரது பல்கலைக் கழகம் சார் நண்பர்களையும் முன் வைத்து சொல்கின்றார். இதைப் பிறர் பார்க்கும் பொழுது வேறு காட்சி வருதல் சாத்தியமே. ஒரு மீனவ வீட்டுக் குடும்பம் , ஒரு தெருக் கூட்டுவோர் குடும்பம், சிறு விவசாயக் குடும்பம், விவசாயக் கூலிக் குடும்பம் போன்று கடும் உடல் உழைப்பும், குறைந்த கூலியும் ,குறைந்த குமாஸ்தா கல்வி அறிவும் கொண்ட வைதீகம் சாரா மற்றும் குறைந்த அளவு வைதீக தாக்கம் உள்ள குடும்ப பிரதிநிதி பார்க்கும் பார்வை வேறு போல் இருக்க வாய்ப்பு உண்டு என்று நான் எண்ணுகின்றேன்.

நீங்கள் பண்பாட்டு விழுமியம் குறித்து சொன்னது போல ஒருவன் தன்னை விட மாறு பட்ட ஒன்றினைக் காணும் பொழுது அதைத் தன்னிடம் இருப்பவற்றினைக் கொண்டே ஒப்பிட முடிகின்றது. அதைத் தாண்டி செல்ல முடிவதில்லை. நிறைய நேரம் நாம் மேலே பார்க்கத்தான் நேரம் உண்டு, கீழே காண முடிவதில்லை. அதைத்தான் நண்பர் செய்து இருந்தார்.

மேலைக் குடும்ப வாழ்வின் சூழலுக்குக் காரணம் மானுடத்தின் மாற்றுப் பொருளாதார விடுவிப்பே என்று நான் எண்ணுகின்றேன். கிராமிய குடும்பம் , கூட்டுக் குடும்பம் என்ற அமைப்புகள் நில உடமை /பழங்குடி சார் கலாசார அடிப்படை அலகுகள். அதில் மையம் ஆண். பெண் குடும்பம் நிர்வகிக்கலாம், ஆணைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் அவள் ஆண் மைய சமுதாயத்துக்கு உட்பட்டவளே. பெரும்பொழுது இது ஆண் மைய சமுதாயமே. கணவனின் தவறுகள் மன்னிக்கப் படுகின்றது , திருத்தப்படுகின்றது. மத்திய தர வாழ்வின் மைய நோக்கு பெண்னுக்கு பெரும் பொறுப்பினை அளித்து அதன் அச்சில் சுழல்கின்றது. மேலை சமூகம் பெண்ணை இந்தத் தளையில் இருந்து விடுவிக்கின்றது. மெல்ல ஆண் மைய நோக்கினை அழித்து வருகின்றது. ஒரு மத்திய தரப் பெண் கணவன் இல்லாமல் குடும்பமாகவோ , தனியாகவோ தனது வாழ்வினைப் பேணலாம். அவள் சமூகத்தில் இருந்து நகர்ந்து செல்வதில்லை. அவள் வேறு பார்வையில் அணுகப் படுவதில்லை. அவள் சுய அடையாளதினைப் பேண முடிகின்றது. இந்தச் சூழல் நிகழும் பொழுது பெண் அவள் மேல் ஆண் மைய சமூகத்தினால் பொருத்தப்பட்ட சகிப்புத்தன்மை என்னும் தளையை நகர்த்திக் கொள்கின்றாள். குடும்ப அமைப்பு கேள்வி ஆகின்றது. காதலே குடும்ப அச்சாணி ஆகின்றது , காதலின் காரணமாய் சகிப்புத்தன்மை வரலாம் , ஆனால் சமூகத்தின் உறுப்பினராய் அங்கீகாரம் தேடுவதன் மூலம் வரும் சகிப்புத் தன்மை இல்லை. இதுவே நான் நினைப்பது.

நான் மேலை அமைப்பில் பிரச்சனையாகக் காண்பது அதன் நுகர்வின் உச்சத்தினை. கையில் கிடைக்கும் எல்லாவற்றினையும் நுகரும் பொருளாகப் பார்த்தல் ஒரு அச்சம் தருகின்றது. இது குறித்த ஒரு விழிப்புணர்வு தேவை என்று எண்ணுகின்றேன். அதன் பொருளாதாரம் விற்பதிலும் ,வாங்குவதிலும் உள்ளது, வாங்குபவன் விழிதிருப்பது மிக முக்கியம். மயக்க நிலையில் வாங்குபவன் இருப்பதே சிரமம்.

நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

பிரகாஷ் அவரது பார்வையின் எல்லைக்குள் நின்றே சொல்லியிருக்கிறார், அதை அவரே பதிவும்செய்திருக்கிறார். பொதுவாக நாம் உதாசீனமான மனப்பதிவுகளை சொல்வோம். அவர் தெளிவாகப் பலவருடம் கூர்ந்து அவதானித்து தன் எண்ணங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்

இந்தமாதிரி கருத்துக்களில் ஒரு பொதுமைப்படுத்தல் எப்போதும் உண்டு. அதன் விளைவான பிழைகளும் உண்டு. ஆனால் பொதுமைப்படுத்தாமல் புரிந்துகொள்ள முடியாது. பல கோணங்களிலான பொதுமைப்படுத்தல்களின் ஒட்டுமொத்தம் இன்னும் நல்ல புரிதலை நோக்கிக் கொண்டுசெல்லலாம்

ஜெ

ப்ரிய ஜெமோ சார்,

வணக்கம். குடும்பத்திற்கு எங்கள் அன்பு.

நான் வெங்கடேஷ் (கென்யாவிலிருந்து).

இங்கு வந்து ஒரு வருடம் ஆகியது கடந்த ஜூலையுடன் (வருமுன் 2011 ஜுலையில் ஒரு கடிதம் எழுதினேன் உங்களுக்கு).

நாங்கள் இருப்பது Nakuru – வில். இங்கின் தட்பவெப்பமும், சூழலும், மக்களும் எல்லோருக்கும் பிடித்துப்போனது. முக்கியமாய் எங்கள் மகள் இயல் மிக இயல்பாய் சட்டென்று ஒட்டிக்கொண்டாள்.

உங்களின் வலைத்தளத்தை நானும், மல்லிகாவும் தினமும் படிக்கத் தவறுவதில்லை.

சமீபத்தில் சின்மயி விஷயத்தில், உங்களின் நிலைப்பாடும், எழுத்துக்களும் படித்து மிகவும் சந்தோஷமாயிருந்தது (சுசிலா மேடம் போலவே).

கருநிலம் விரும்பிப் படித்தேன்.

ப்ரகாஷின் செக் வாழ்க்கை கட்டுரையும், கோவை பாலாஜிக்கான உங்கள் பதிலும் யோசிக்க உதவியாய் இருந்தது.

இளையராஜா பற்றிய சமீபத்திய கட்டுரை அருமையாய் இருந்தது (குறிப்பாய் பின்னணி இசை பற்றி); நான் குழுமத்தில் இதற்காய் ஒரு திரி தொடங்கலாமென நினைத்தேன்.

உங்களின் பயணக் கட்டுரைகள் மிகுந்த ஏக்கத்தை உண்டாக்குகின்றன (குறிப்பாய் போலியோவால் ஒரு கால் பாதிக்கப்பட்ட எனக்கு)

மன்னிக்கவும். தமிழில் விரைவாய் அதிகமாய் தட்டச்சு செய்ய முடியவில்லை.

அனைவருக்கும் அன்பு.

வெங்கடேஷ்

அன்புள்ள வெங்கடேஷ்

நலம்தானே?

கென்யாவை நமீபியாவின் கினியா என்றே சொல்கிறார்கள். நமீபியா போலத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

அயல்வாழ்வு குறித்த அவதானிப்புகள் நம்மிடையே மிகவும் குறைவு. நீங்கள் குழுமத்தில் எழுதலாமென்றே தோன்றுகிறது. தட்டச்சு செய்வது இரண்டுநாளில் கைக்குப்பழகிவிடும்

குழந்தைக்கு என் அன்பு

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. வாயடைத்துப் போயிருக்கிறேன் பிரகாஷ் சங்கரன் அவர்களின் கடிதத்தைப் படித்துவிட்டு. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. என் வாழ்வின் முக்கியத் தருணமிது. நான் செல்ல வேண்டிய தூரத்தை மிகப்பலமாக அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது இப்பதிவு. மிக்க…. மிக்க நன்றி ஜெ.

முக்கியமாக இரண்டு உவமைகள் சொல்ல வந்த விஷயங்களை மிக ஆழமாக சொல்லிச் செல்கிறது. நாம் காணும் ஐரோப்பியச் சமூகம் மணல் வெளி போல என்றும் இங்கு காணும் உறவுகளின் நிலை காற்றில் மிதக்கும் சோப்பு நுரை போல என்றும் எழுதியிருக்கும் வரிகள். கலை, இலக்கியத்தை நான் எப்போதும் மனிதனின் உச்சபட்ச சாதனைகள் என எண்ணியிருப்பினும் மீண்டுமொரு முறை மானுடப் படைப்பு மனதை நெகிழ்ச்சியோடு எண்ணிக்கொள்கிறேன்.

ஒரு கோணத்தில் நான் கூறியதன் மறுபாதியாக பிரகாஷ் அவர்களின் கடிதத்தை எடுத்துக் கொள்கிறேன். நான் இங்கு வெளியில் நின்று பார்த்தவை ஒரு தனி மனிதன் தன்னுடைய நிறைவை, மகிழ்ச்சியை நோக்கி தன்னளவில் மட்டும் செய்யும் விஷயங்களை. இது ஒரு பாதிதான் என்றும் மற்றொரு பாதி அவனுடைய உறவுகளில் உள்ளதென்றும் இப்போது புரிகிறது. இம்மறுபாதி மகிழ்ச்சியும் நிறைவும் கொள்ளா நிலையில் அம்மனம் கொள்ளும் தவிப்பையும் வெறுமையும் இப்போது உணர முடிகிறது.

இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன கூறுவதற்கு. மொத்தமாக பிரகாஷ் அவர்களின் இக்கடிதம் எனக்குள் மிக முக்கிய அசைவை ஏற்படுத்தி இருக்கிறது என்று மட்டும் இப்போதைக்குக் கூறிக் கொள்கிறேன். எல்லாவற்றையும் தாண்டி எனக்காக நீங்கள் செலவழித்திருக்கும் நேரத்திற்கு நான் மிகவும் கடன்பட்டுள்ளேன்.

இது குறித்து பிரகாஷ் அவர்களுடன் நிறைய பேச ஆர்வமாக உள்ளேன். அவர்களின் அனுமதியுடன் மின்னஞ்சல் முகவரி கிடைத்தால் மகிழ்வேன்.

மீண்டுமொருமுறை உங்களின் நேரத்திற்கு நன்றி..

மிக்க அன்புடன்,
பாலாஜி
கோவை

அன்புள்ள பாலாஜி,

பிரகாஷின் இணையமுகவரி அளித்திருக்கிறேன். அவர் http://jyeshtan.blogspot.in/ என்ற வலைப்பதிவை எழுதிவருகிறார். கதைகளும் நிறைய எழுதியிருக்கிறார்.

பிரகாஷின் அவதானிப்புகளையே நானும் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு விரிவாக ஐரோப்பாவைப்பார்க்க எனக்கு வாய்ப்பில்லை.

ஆனால் ஆப்ரிக்காவை அவதானித்தபோது அவர்கள் நமக்கு மிக நெருக்கமானவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. குறிப்பாக அங்கே ஒவ்வொருவரும் உறவுகள் சூழ வாழ்வதைக்கண்டபோது

ஜெ

முந்தைய கட்டுரைக.நா.சு.கடிதங்கள்
அடுத்த கட்டுரைமறுபிறப்பு