கருநிலம் – 7 [நமீபியப் பயணம்]

நமீபியா ஒரு பெரிய நாடு. அதைப் பொதுவாக மூன்று பெரும் நிலப்பகுதிகளாகப் பிரிக்கலாம். மேற்கே கடற்கரையை ஒட்டியபகுதி பாலைவனம். தெற்கே கொஞ்சம் வளமான ஆற்றுப்படுகைகள் உண்டு. அங்கே மக்காச்சோளம் பயிரிடுகிறார்கள். கிழக்கே உள்ள கலகாரி பாலைவனம் உண்மையில் பாலைவனம் அல்ல, மேய்ச்சல்நிலம்தான் நாங்கள் ஒரேஒருவாரம்தான் திட்டமிட்டிருந்தோம். அதில் இருநாட்கள் சினிமா சம்பந்தமான விசாரணைகளுக்காகச் செலவாயின. எஞ்சியநாட்களில் கணிசமான நேரம் காரில் கழிந்தது. ஏனென்றால் பாலைவனத்தில் ஆயிரம் கிலோமீட்டரெல்லாம் ஒரு தூரமே இல்லை.

ஆகவே ஒருபானைச்சோற்றுக்கு ஒரு சோறு என்ற தேய்வழக்கின்படி நமீபியாவின் ஒரு நாநுனிச்சுவையையே அறிந்தோம். அதற்கே இரண்டுலட்சம்வரை செலவாயிருக்கும். ஆனால் ஒப்பிடும்போது இந்தியாவிலேயே அந்தச் செலவு ஆகிவிடும் என்று தோன்றியது. பதினொன்றாம் தேதி நாங்கள் கிளம்பவேண்டும். அதற்கு முன் சில நமீபிய கிராமங்களைப் பார்க்க விரும்பினோம்.

நமீபியாவில் இன்றும் முழுமையான பழங்குடிவாழ்க்கை வாழ்பவர்கள் என்றால் ஹிம்பா, புஷ்மேன் என்ற இரு இனக்குழுக்கள்தான். புஷ்மேன் வாழ்வது கலகாரியில். அங்கே செல்ல வின்ட்ஹோக்கில் இருந்து நேர் எதிர் திசையில் செல்ல வேண்டும். நெடுந்தூரம். ஹிம்பா கிராமத்துக்குப் போகத் திட்டமிருந்தது. ஆனால் அதற்கான செலவு அதிகம் என்று கடைசியில் அதைக் குறைத்துவிட்டோம். சினிமாவுக்கான இடங்களை மட்டுமே முடிவுசெய்தோம். எங்கள் கதைக்குள் ஹிம்பாக்கள் இல்லை. மேலும் ஹிம்பாக்களைத் திரையில்காட்ட நமீபிய அரசு ஒப்புக்கொள்வதில்லை. காரணம் அவர்கள் பெரும்பாலும் ஆடை அணியாதவர்கள்.

ஒக்கஹாஞ்சா [ Okahandja ] இடத்துக்கு டேவிட் கொண்டு சென்றார். அது ஒரு பழங்குடி கலைப்பொருள் சந்தை. கலைப்பொருட்களைச் செய்பவர்களே கொண்டுவந்து விற்கவேண்டும் என்பது விதி. அல்லது உறவினர்கள் விற்கலாம். டேவிட்டின் பெரியம்மா பையன் அங்கே ஒரு கடை வைத்திருந்தான். காட்சனின் மகன் ஆரோனுக்காக ஒரு சிறிய முரசு வாங்கிக்கொண்டேன். மர முகமூடிகள், மரத்தாலான வாட்கள், மந்திரக்கோல்கள், பலவகையான சிற்பங்கள் குவிந்துகிடந்தன. வெள்ளையர் வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

ஒக்கஹாஞ்சா என்ற கிராமம் சற்று தள்ளி இருந்தது. அங்கே டேவிட்டின் தாய்மாமாக்கள் இருவர் இருந்தனர். அவரைப்பார்த்த ஒரு பெண் கட்டித்தழுவி உணவுண்ண அழைத்தார். டேவிட்டின் பெரியம்மா மகளாம். காலையுணவும் மக்காச்சோளக் களியும் மாட்டிறைச்சியும்தான். ‘No meat don’t eat’ என்பது தன் கொள்கை என்றார் டேவிட்.

கிராமம் என்றாலும் அது நாம் நினைப்பது போன்ற ஆப்பிரிக்க கிராமம் அல்ல. பழமையான குடிசைகள் அனேகமாக இல்லாமலாகிவிட்டிருக்கின்றன. தகரக்கூரை போட்ட வீடுகள். ஒரு சில வீடுகளில்தான் புல்கூரை. அந்தப் பாலைவனப்புல் நம் கட்டைவிரல் அளவு கனமானது. பிளாஸ்டிக் போல மட்காதது. அதை ஒரு சாண் கனத்துக்கு அடுக்கிக் கூரைபோட்டிருக்கிறார்கள். கூரை புதியதாக இருக்கையில் பொன்னிறமாகவும் ஓரிரு வருடம் கழித்துக் கருமையாகவும் இருக்கும். பத்துவருடம்வரை கூரை இருந்துகொண்டிருக்குமாம்.

மரச்சிம்புகளால் உருவாக்கப்பட்ட தட்டிகளில் மண்பூசி சுவராகக் கட்டிய சில குடிசைகளும் இருந்தன. குடிசைக்கு வெளியேதான் அடுப்பு. மக்காச்சோளக் கதிர் முதல் மாட்டிறைச்சி வரை நேரடியாக அடுப்பில் சுட்டுத் தின்பதுதான் அவர்களின் வழக்கம். ஆனால் சுடுவதை அற்புதமான கலையாக ஆக்கியிருந்தார்கள். முழுக்கோழியையும் பொன்னிறமாகச் சுட்டார்கள். ஒரு கருகல் இல்லை, ஒரு இடத்தில் தசைவெடித்துக் கொழுப்பு ஒழுகவும் இல்லை.

சுட்ட சீனிக்கிழங்கும் கோழியிறைச்சியும் புளிக்கவைக்கப்பட்ட மாவுநீரும் [நீராகாரமேதான்] தந்து எங்களை டேவிட்டின் பெரியப்பா உபசரித்தார். அவர் ஒரு முன்னாள் ராணுவவீரர். தென்னாப்பிரிக்க ராணுவத்தில் இருந்தார். 1989 இல் தென்னாப்பிரிக்க ராணுவத்திற்கும் நமீபிய சுதந்திரப்படைக்கும் போர்நடந்து கிட்டத்தட்ட பதினாறாயிரம் பேர் கொல்லப்பட்டபோது அவர் நமீபிய புரட்சிப்படையில் இருந்தார். இப்போது அரசு ஓய்வூதியம் வழங்குகிறது. வீட்டில் இருந்து கலைப்பொருட்கள் செய்வது தொழில்.

கிராமத்தில் வயதானவர்கள் மட்டுமே இருந்தார்கள். கோயில்பட்டிப்பக்கம் ஒரு கிராமத்திற்குப் போனதுபோல இருந்தது. வயதானவர்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கைவேலைகள் செய்தார்கள். மற்றவர்கள் மாடு மேய்க்கச் சென்றிருந்தார்கள். பெரியகுலுக்கைகளில் மக்காச்சோளம் சேமித்து வைத்திருந்தனர். அதுதான் வருடம் முழுக்க உணவு. எண்ணை, நெய் போன்றவை உணவில் கிடையாது. பதிலுக்கு மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்புதான்.

தலையில் ஆறுமாதத்துக்கு ஒருமுறை சுருள்வைத்து சிறிய சடைகள் கட்டிக்கொண்டால் அதன்பின் எண்ணை தேய்ப்பது சீவுவது ஏதும் இல்லை. அல்லது மொட்டை. அங்கே சீப்பே புழக்கத்தில் கிடையாது. இரண்டு வாரத்துக்கு ஒருமுறைதான் குளியல். அதுவும் நீரால் துடைத்துக்கொள்வது மட்டுமே. துணிகளைப் பெரும்பாலும் துவைப்பதில்லை. உதறி வெயிலில் போட்டு ஒரு குச்சியால் அடித்துத் தூசு இல்லாமலாக்கிக்கொள்வார்கள். சோப்பெல்லாம் கிராமங்களில் யாருக்கும் தெரியாத பொருட்கள். உண்மையில் அந்த வறண்ட காலநிலைக்கு சோப்பு போட்டால் தோல் காய்ந்து உரிந்துவிடும். நான் சோப்பு போடாமல் குளித்ததுகூட என் சருமத்தை உரிந்து கழலச்செய்தது. மீண்டும் சொந்தச்சருமம் பெற பத்துநாட்கள் ஆயின.

குழந்தைகள் புழுதியோடு புழுதியாக விளையாடிக்கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் அழகிய பெரிய கண்கள். சோழிப்பற்கள் நடுவே சிறிய இடைவெளி. பேசும்போது இரு கைகளாலும் சைகை காட்டித் தோளைச் சரித்து அவை பேசுவது அழகாக இருந்தது. ‘யூ குட் மேன்’ என்றான் ஒரு பயல், அவனுக்கு நான் ஒரு பிஸ்கெட் பாக்கெட் கொடுத்தபோது.

மாலை விண்ட்கோக் வந்து சேர்ந்தோம். டிம் என்ற ஜெர்மானிய வம்சத்தைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குநரைச் சந்தித்தோம். அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்கான நடைமுறைச் சிக்கல்களைக்கேட்டுத் தெரிந்துகொண்டோம். டிம் ஒரு தொலைக்காட்சித் தயாரிப்பாளர், இயக்குநர். நமீபியாவில் தொழில்முறை சினிமா இல்லை. வின்ஹோக்கில் மட்டுமே திரையரங்குகள் உள்ளன. கின்யா, நைஜீரியா படங்கள் வரும். தொலைக்காட்சிகளிலும் தென்னாப்பிரிக்க, நைஜீரிய ஆதிக்கம்தான். கிம் சில செய்திப்படங்களை எடுத்திருக்கிறார். ஒரு புனைவுப்படம் எடுக்கப்போகிறார்

பாலைவனப்படப்பிடிப்பு பற்றி சொன்னார். முக்கியமாக வெயில். அடுத்தது மணல். மணல்துகளுக்கு எதிராகக் காமிராவை நன்றாகப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இந்தியர்களுக்குச் சிறப்பான ஒரு சில ஆலோசனைகள் சொல்ல விரும்பினார். சில இந்திப்படங்கள் அங்கே எடுத்திருக்கிறார்கள். நமீபிய அரசு பாலைவனத்தை மிகச்சுத்தமாகப் பராமரிக்கிறது. பாலைவனத்தில் ஒரு குப்பைகூட மிஞ்சக்கூடாதென்பதில் கறாராக இருக்கிறது. இந்தி ஆசாமிகள் வழக்கம்போலக் குப்பை வீசியபடி வேலைசெய்தார்கள். முடிந்ததும் கூட்டிப்பெருக்கலாம் என்ற நினைப்பு

ஆனால் காற்றில் குப்பைகள் பறந்து பத்து கிலோமீட்டர் சுற்றளவில் நிறைந்துவிட்டன. அவற்றைத் தூய்மைப்படுத்தப் பதினாறு லட்சம் ரூபாய் கட்டணமும் எட்டுலட்சரூபாய் அபராதமும் போட்டார்களாம். குழு சத்தமில்லாமல் பணத்தைக் கட்டிவிட்டு வந்தார்களாம். ‘படப்பிடிப்பிலேயே ஒரு துண்டுத் தாள்கூட கீழே போடாமல் இருங்கள்’ என்றார் டிம்

மறுநாள் காலையிலேயே கிளம்பிவிட்டோம். எங்கள் விமானம் காலை எட்டுமணிக்கு. நான்குமணிக்கே டேவிட் வந்தார்.ஆறரை மணிக்கு எங்கள் டிக்கெட் விசா சோதனை முடிந்து உள்ளே செல்வது வரை வெளியே நின்றிருந்தார். பின்பு கையாட்டி விட்டுச் சென்றார். அவரைப் பிரியும்போது நமீபியாவின் மண்ணைப் பிரிந்த கனம் மனதில் வந்தது. கட்டித்தழுவி விடை பெற்றேன். ‘டேவிட் நான் அனேகமாக ஆறுமாதத்துக்குள் வருவேன். அல்லது அஜிதனை அனுப்புவேன் ’ என்றேன்

’அனுப்புங்கள்.நான் பார்த்துக்கொள்கிறேன். டிசம்பரில் என் திருமணம். திருமணத்துக்கு வந்தால் கௌரவமாக இருக்கும் எனக்கு’ என்றார் டேவிட். ’முயல்கிறேன்’ என்றேன்.

விமானம் மேலேறியது. கரிய மண் கீழே விரிந்து கிடந்தது. மனிதன் பிறந்த மண். கருவறை.

[நிறைவு]


படங்கள்

முந்தைய கட்டுரைபுதுக்கோட்டையில் காந்தி உரை
அடுத்த கட்டுரைகையும்தொழிலும்-கடிதங்கள்