பெயர்கள்

name

 

தெரிந்த பெண் கைக்குழந்தையுடன் அருகே வந்தபோது ”ஜூஜூஜூ ….”என்று அதன் கன்னத்தைத் தட்டி குட்டிக்கன்னம் உப்ப முறைக்கபப்ட்ட பின் அவளிடம் ”பிள்ளை பேரென்ன?” என்றேன். ”பாகுலேயன் பிள்ளை” என்றாள். ஒருகணம் முதுகெலும்பில் ஒரு தொடுகை. அப்பாவை நான் அந்நிலையில் எதிர்பார்க்கவில்லை. கன்னத்தைவேறு தட்டிவிட்டேன். ”…போய் சோலிமயிரைப் பாருடா…நாயுடே மோனே” என்று கனத்த குரலில் எக்கணமும் அது சொல்லக்கூடும் என்று தோன்றியது.

”என்னத்துக்கு இந்த மாதிரி பேரெல்லாம்?”என்றேன். ”என்ன செய்ய? இது அவருக்க அப்பா பேரு. கேக்க மாட்டார்…” கூப்பிடுவது ‘ஜிங்கு’ என்று ச்ன்னாள் தாய். ‘ஜிங்க்க்க்க்கு…”என்றேன் .இன்னும் அதிகமாக முறைத்தது. ”மூஞூண்ணு கூப்பிட்டாத்தான் அவனுக்கு இஷ்டம்…”

அதென்ன பெயர் என்று நான் திகைக்க அவள் ”மூணுண்ணு அர்த்தம். அவனுக்கு மூணுண்ணா பிடிக்கும்….” அதுசரி. பிள்ளைகள் சிறுவயதில் ஏராளமான, நிறைய, பெரிய என்பதற்கு அப்படி ஒரு எண்ணை எண்ணிக் கொள்கின்றன. ”மூஞூ …மூஞூட்டா” என்றேன். வெட்கி அம்மா தோளில் முகம் புதைத்தான்.

பெயரிடுவது கஷ்டம்தான். பெற்றோரின் கனவுகளும் மோகங்களும் மொழிப்பிரச்சினைகளும் பக்கத்துவீட்டாருடன் உள்ள உறவுகளும் எல்லாம் சேர்ந்து குழந்தைகளின் பெயர்களை தீர்மானிக்கின்றன. பொதுவாக சம்ஸ்கிருதப் பெயரே வழக்கம். அர்த்தம் தெரியாமல் வெறும் ஒலியின்பம் நோக்கியே பேரைப்போடலாம். ”கிருஷ்ண பிரசாந்த்– நல்லாருக்கா சார்?” ”கிருஷ்ணபிரசாத் தானே?” ”இல்ல சார். அப்டித்தான் பக்கத்துவீட்டிலே டீச்சர் சொன்னாங்க. நாந்தான் இப்டி போட்டேன்…” ”அப்டியா நல்லாருக்கு”

”சம்ஸ்கிருதத்திலே இது என்ன சார் அர்த்தம்?”. ‘கரிய பேரமைதி ‘ என்று சொல்ல முடியுமா என்ன? கரிய பேரமைதி மிட்ட்ட்ட்ட்டாய்ச் சிவப்பு சட்டையுடன் குமுதத்தை  கைகளால் சோற்றை அள்ளுவதுபோல அள்ளி வாய்க்கு கொண்டுபோக முடியுமா என முயன்றுகொண்டிருந்தது. மார்பில் எச்சில் கண்ணாடிக்குழாய். ”தெரியல்ல சார்”என்றேன் ” கிருஷ்ணனுக்கு பிரியமானவன்னு அர்த்தம் சார்” என்றார் அவர், ”எங்க போஸ்ட்மாஸ்டர் சொன்னார்”

வாழ்க மனிதாபிமானிகள். ஏற்கனவே ஒரு போஸ்ட்மேன் பெண்ணுக்கு சாரதா என்று பெயர் வைத்து அதன் பொருள் என்ன என்று கேட்க ‘கறுப்பி’ என்று ஆத்மார்த்தமாகச் சொல்லி வசைகேட்டேன். கோயில் அய்யர் ”அம்பாளோட பேருன்னா…அஷ்ட ஐஸ்வரியமும் உள்ளவள்னு அர்த்தம்… தக்ஷணை வைங்கோ ”என்று சொல்லி போட்ட பேராம்.

சம்ஸ்கிருதப் பெயர் பொருள் தெரியாமலிருக்கையில்தான் அதன் நளினம் அதிகரிக்கிறது. கிஷோர் என்றால் பொருள் ‘பையன்’ என்று சொல்ல முடியுமா? ஆனால் தர்மபுரிப்பக்கம் வன்னியர்கள் நடுவே ‘சின்னப்பையன்’ என்று பெயர் உண்டு. எழுபது வயதான சின்னப்பையனை பார்த்திருக்கிறேன். நாட்டுக்கோட்டை செட்டியார்களில் ‘குழந்தையன்’ சாதாரணமாக இருந்திருக்கிறது. மொழியறிஞர் குமரிமைந்தனின் பெயர் பெரியநாடார்– சின்னக்குழந்தையாக இருக்கும்போதே.

நண்பர் ஒருவரின் குழந்தைபெயர் ‘நிஷாத்’. காட்டுமிராண்டி! அவரது வீட்டுபெயர் ‘மா நிஷாத’ — கூடாது காட்டுமிராண்டியே! வான்மீகி ராமாயணத்தின் முதல் இரு சொற்களாம். ஒரு சாமியார் போட்டபெயர்கள். கிரௌஞ்சம் நோக்கி அம்பு தொடுக்கும் வேடனைப்பார்த்து ஆதி கவி மனமுடைந்த ஒலி. சம்ஸ்கிருதம் என்றாலே அது ஒரு மந்திரம்தானே?

சம்ஸ்கிருதமே அல்லாமல் அப்படியே ஒலிக்கும் சொற்களில் பெயரிட்டு விட்டு ”என்ன சார் அர்த்தம்?”என்று கேட்கப்படும் கொடுமைக்கு ஆளாவது சமீப கால வழக்கம். ”ஜிஷாத் சார்…” ”அப்டியா? ஜிஹாத்-தானே கேள்விபப்ட்டிருக்கேன்” ”இது சம்ஸ்கிருதத்திலே சார். ஜிஷாத்” பெருமூச்சுடன் பேசாமலானேன். சம்ஸ்கிருதத்தை என்ன வேண்டுமானாலும் செய்ய ஒரு இந்துவுக்கு உரிமை உண்டு.

இந்தி வழி சம்ஸ்கிருதச் சொற்கள் வருகையில் அவை உருமாறி நாம் ஏதாவது கேட்கப்போகும் முன் வாயில் விரல்வைத்து ”உஷ்! உஷ்!’ என அதட்டுகின்றன. சுமேஷ், [சும+ ஈஸன்] சுரேஷ் [சுர+ ஈஸன்] கணேஷ் [கண+ஈஸன்] ரமேஷ் [ரம்+ ஈஸன் அல்ல ரம + இஸன்] – சரி. ஏன், கர்நாடகப்பக்கம் உள்ள குகேஷ் கூட பரவாயில்லை. இதே ஒலிக்கு எதிரொலியாக வைக்கப்படும் ரினீஷ், துமேஷ், ஜிலீஷ் எல்லாம் என்ன கணக்கு? ஏதோ டம்ளர் கைநழுவி கல்லில் விழுந்த ஒலிகள். ‘டணால்’ ‘டுமீல்’ ‘தடார்’ என்றெல்லாம் கூட பெயர்கள் எதிர்காலத்தில் வருமோ என்னவோ?

இந்தப்பக்கம் தூய தமிழ்ப்பெயர்கள். தேன்மொழி, மான்விழி எல்லாம் சரிதான், ஆனால் என் தமிழியக்க நண்பர் ஒருவரின் பெண்ணின்பெயர் கனிச்சாறு. அடுத்த குழந்தைக்கு பழக்கூழ் என்று பெயரிட்டு விடுவாரோ என்று எனக்கு அச்சம். ஆகவே கேட்கவேயில்லை. என் நெருக்கமான நண்பர் ஆசிரியர் தங்கமணி தருமபுரி மாவட்டம் மூக்கனூர்பட்டியில் வசிக்கிறார். அங்கே பெரும்பாலானவர்கள் குடியேற்ற கொங்கு கவுண்டர்கள். கிராமமே சுயமரியாதைக் கிராமம். பக்கத்து வீட்டில் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரான கண்ணிமை அவர்களின் பெண்களுக்கு இனமானம், தன்மானம் என்றுபெயர். இரண்டுக்கும் முரண்பாடு வரும்போது என்ன செய்வார்கள் தெரியவில்லை. பக்கத்தில் யாரும் செட்டியார்கள் இல்லை, வருமானம் என்று பெயரிட.

மற்ற மொழியாளர்களுக்கு இத்தகைய பெயர்கள் சிக்கலை அளிக்கின்றன. கவிஞர் அறிவுமதி பெயரை கேட்டு கல்பற்றா நாராயணன் சொனனர். ”என்னது ,அறிவு மதி என்றா சொல்கிறார்?” [மதி — போதும்] நான் சொன்னேன் ” இதைச் சொல்கிறீர்கள், காதல்மதி என்றே ஒருவர் இங்கே இருக்கிறார்” ”மதிமதி.. கேட்டது மதி..”’ என்றார் கல்பற்றா.

வடமொழிபெயர்களை தமிழ்பெயர்களாக ஆக்கிக் கொள்ளலாம்.பரிதிமால் கலைஞர் போல, தில்லை வில்லாளன் போல. ஆற்றலரசு போல. . ஆனால் பெண்கள் அதிகமும் இப்படி பெயர் மாற்றம் செய்துகொண்டதில்லை என்பதனால் ஒரு ஆறுதல். நாகவேணி பாம்புக்குழலி ஆகவும் ஜலஜா நீர்மகள் ஆகவும் [தண்ணிப்பொண்ணு என்றால் இன்னும் சரியாக இருக்குமோ?] வனஜா காட்டுக்குட்டி ஆகவும் மாற்றபப்ட்டால் நாட்டில் பிள்ளைப்பேறு விகிதமே குறைந்து போய்விடும்.

கொள்கையை பெயரிடுவது தந்தையை யாரெனக் காட்டுகிறது. மைந்தர்களை தந்தையின் கொடியடையாளமாக்குகிறது. ‘புரட்சி’ என்று பெயருள்ள தோழர்மைந்தன் என்னுடன் படித்தான். புரட்டாசி என்று கூப்பிடுவோம். லெனின்,ஸ்டாலின் பெயர்கள் வழக்கமென்றாலும் டிராட்ஸ்கி என்று பெயரிடபட்ட ஒருவரையும் கண்டிருக்கிறேன். ஸ்வெஸ்திலோவ், விஸாரியோவிச் போன்ற பெயர்களும் எங்காவது இருக்காமலா போய்விடும்? கேரள முற்போக்கு எழுத்தாளர் ஒருவர் பெண்ணுக்கு வோட்கா என்று பெயரிட்டதாக வதந்தி. வேட்கை என்ற சொல்லில் இருந்துதான் அச்சொல் பிறந்தது என்பது தேவநேயப் பாவாணர் கூற்று என்பர் நூலோர். இஸ்வெஸ்தியா என்றெல்லாம் பேரிடலாகாது. ”இழுத்துவச்சியா?” போல அ·தோர் வினா என பாமரர் எண்ண ஏதுவாகும்.

தருமபுரியில் ஒரு ஊழியர் பெயர் ‘கடவுள் இல்லை’ . வருடம் தோறும் மலைக்கு மாலை போடுவார் .” ஆனா அய்யப்பன் இருக்கார் சாமி” என்பார். அங்கேயே ‘பகுத்தறிவு’ என்று ஒரு நண்பர் இருந்தார். பக்கு என்று நண்பர்கள் சுருக்கமாகக் கூப்பிடுவதை விரும்ப மாட்டார். ”கும்பிடுறேன் சாமி” என்று ஒரு தலித் இருந்ததாகச் சொனனர்கள். உயர்சாதியினர் அவர் பேரை சொல்லி அழைக்கவே முடியாது. ‘பெரும்பண்ணி’ என்று தன்னை ஒரு ஆதிவாசி அறிமுகம் செய்துகொண்டார் பெண்ணாகரம் அருகே. அது உயர்சாதியினரே அவருக்கு போட்ட பெயராக இருக்கலாம்.

தங்கம் ,வைரம், முத்து , ரத்தினம் என்றெல்லாம் மனிதப்பேராசை பெயர்களாகிறது. கல் மண் பெயர்கள் பழங்காலத்தில் உண்டு. கடற்கரை என்ற பெயர் இருக்கிறது ஒரு இதழாளருக்கு. நான்குவருடம் முன்பு குளச்சலைச் சேர்ந்த கடற்கரை ஒருவர் பெயரை தமிழில் கடற்கரை என்றும் ஆங்கிலத்தில் ‘Beach’ என்றும் ரேஷன் கார்டில் எழுதியிருந்தார்கள் என ஒரு வழக்குவிவரம் தினத்தந்தியில் வந்தது. சு.சமுத்திரம் பெயரை S.Ocean என்று எழுதியிருப்பார்கள்.

கடற்கரைப்பக்கம் வினோதமான போர்ச்சுகீசிய பெயர்கள் உண்டு, கரைமானுடர் அவற்றை தங்களுக்கு ஏற்ப மாற்றுவது வழக்கம். பங்கிராஸ் என்ற பெயர் பான்கிரியாஸ் சுரப்பியாக உருமாறி ஆவணங்களில் பதிந்து பிரச்சினை உருவாகியிருக்கிறது. தனிஸ்லாஸ் என்ற பேரை தனுசுவாசு என்று கணக்கெடுப்பு அதிகாரி திருத்தியிருக்கிறார். எங்கள் கல்லூரி நண்பனும் இப்போது பாதிரியாராக இருப்பவனு[ரு?]மாகிய கிளிட்டஸை நாங்கள் பிரியமாக கிளிட்டோரிஸ் என்று அழைத்திருந்தோம். என் நண்பர் ஷாஜி அவரது பிஷப்பை ·பாதர் சி·பிலிஸ் மார் கொனோரியஸ் என்று சொல்லி தன் நாத்திகக் கடுப்பை வெளிக்காட்டுவார்.

குமரிமாவட்ட வெள்ளாளப்பெயர்களில் பலபெயர்களை சுருக்கியே அப்பெயராளி உயிர்வாழமுடியும். ஆய்வாளர் அ.கா.பெருமாளின் பெயர் காக்கும்பெருமாள். அவரை பிறர் காக்க வேண்டியிருக்கும். ஆபத்து காத்த பிள்ளை, நின்றருளிய பெருமாள் பிள்ளை, குன்றேறிய பெருமாள் பிள்ளை எனப்பல. நல்ல குத்தாலம் பிள்ளை, சிதம்பரம் பிள்ளை என ஊர்பெயர்கள். மகாலிங்கம் என்றபெயரை கேரளத்தில் பெண்கள் மத்தியில் சொல்லலாகாது. அணைஞ்ச பெருமாள் என்ற பெயரை அடிக்கடி காணலாம். சிவன் அணைந்த பெருமாள் என்பதன் சுருக்கம். அதை மேலும் சுருக்கி அணஞ்சி என்பார்கள். பொய்சொல்லாமெய்யன் பிள்ளை என்று ஒரு பெயர் உண்டு. நீளம்கருதி பொய்யன்பிள்ளை என்று சுருக்குவார்கள்.

என் ஆருயிர் நண்பர் ‘அன்பு’வின் மனைவி பெயரும் ‘அன்பு’தான். பெண் பெயர் சாஹித்யா. அன்பும் அன்பும் இணைந்தால் இலக்கியம் பிறந்துதானே ஆகவேண்டும்? மு.அறம் என்று ஓரு காந்திய அறிஞர் இருந்திருக்கிறார். அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும் பயனும் அது. பண்பு என்றபெயர் எங்காவது உண்டா?

ஆதி கிறித்தவபெயர்களும் ஆர்வமூட்டுபவை. பள்ளிக்குட்டி நாடார் என்பவர் சர்ச் அதாவது பள்ளியில் பிறந்தவர். பள்ளிக்கண், பள்ளிப்பிள்ளை என்ற பெயர்களும் உண்டு. பள்ளிமணி என்ற ஒரு பெயரும் தொலைபேசிப் பட்டியலில் உண்டு. வேதம் என்றால் பைபிள் ஆகையால் வேதக்கண்,வேதஜெபம் இருப்பது சாதாரணம். வேதமணியும் உண்டு. வேதசகாயமும் இல்லாமல் இல்லை. வேதப்பால் என்ற பெயரை எளிதில் புரிந்துகொள்ள முடியாது, வேதம் என்ற பசுவின் பால் பகவத் கீதை தானே? இந்த பால் என்பது Paul என அறிய நாம் கிறித்தவ வரலாற்றுக்குள் செல்ல வேண்டும். அடிக்கடி நடக்கக் கூடிய காரியமல்ல.

நாயர்கள் அந்தக்காலத்தில் சிண்டன், கண்டன், கோப்பன், கோமன் என்றெல்லாம் பெயரிட்டு திடீரென தங்கள் உயர்சாதி எனறு பிரக்ஞையை அடைந்து, தூயசம்ஸ்கிருதத்தில் சிந்தனைக்கனம் கொண்ட பெயர்களை போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள். ‘அமிர்தமதனன் நாயர்’ [அமுதம் கடைந்த நாயர்] ‘விஸ்வக்ஷேமன் நாயர்’ [உலக நல நாயர்] போன்ற விபரீதப் பெயர்களையும் காணலாம். பின்னர் ஈழவர்களும் அப்படி போட ஆரம்பித்தார்கள். கோவையில் ஒரு கேரள மருத்துவர் நித்ய சைதன்ய யதியின் பேணுநர். பெயர் டாக்டர் ரிதுபர்ணன்

நரிக்குறவர்கள் குழந்தை பிறந்த ஊர்களையே பெயர்களாக போடுவார்கள். ஆகவே நாகர்கோயில், குழித்துறை, பனச்சமூடு போன்ற ஆணும் பெண்ணும் அவர்களில் உண்டு. இப்போது நடிகை நடிகர் பெயர்கள். அதிக பிரபலமான பெயர் குஷ்புதான். இடுப்பில் தாயத்து மட்டும் அணிந்த குஷ்பு என்னைப்பார்த்து அன்பாகச் சிரித்து ”ஷாமி ஒரு ரூவா குடு ஷாமி…”என்றார். ”எதுக்கு, சினிமா பாக்கத்தானே?” என்று கேட்டேன். ”இல்ல, பாக்கெட்டிலே போடுகதுக்கு ”என்றார். ”பாக்கெட் எங்க?” குஷ்பு கைநீட்டிஅப்பால் அழுக்குச்சட்டையுடன் குடுமி வைத்துக்கொண்டு நின்றவரைச் சுட்டிக்காட்டி  ”பாவா சட்டையிலே”

செய்தித்தாள்களும் பெயர்களை உற்பத்தி செய்கின்றன. குமரிமாவட்டத்தில் ‘மானேக்ஷா’ என்றபெயர் பரவல். மானேக்ஷாக்கள் அனேகமாக 1970 வாக்கில் பிறந்தவர்கள். முஜிபுர் ரஹ்மான்களும் அதேவயது கொண்டவர்களே. தக்கலையைச் சேர்ந்த பேராசிரியர் முஜ்புர் ரஹ்மான் இணையத்தில் அதிசிக்கலான பின்நவீனக் கட்டுரைகள் எழுதி அவை புரியாமல் நம்மிடமே ஐயம் கேட்பார். அதேவயதுள்ள இரு யாஹ்யாகான்களையும் எனக்குத் தெரியும். இப்போது நாற்பத்தைந்து தாண்டிய ஒருவரின் பெயர் ‘தாஷ்கண்ட்’. நீலகண்டன் இருக்கையில் ஏன் கூடாது தாஸகண்டன்?

பொதுவாக சதாம் ஹ¤சைன்களுக்கு பத்துவயதுக்குள் இருக்கும். யாஸர் அராபத்துகள் சற்று மூத்தவர்களாக இருப்பார்கள்.பின் லாடன்கள் இப்போதுதான் மொட்டைத்தலையில் பட்டைவரியாக முடிவெட்டி அதன் மேல் வெள்ளைக்குல்லா போட்டு சீனிமிட்டாய் சப்பி அப்பா கையைப்பிடித்துக் கொண்டு மதரஸாக்களுக்கு போக ஆரம்பித்திருப்பார்கள்.

ஜெயமோகன் என்ற பெயர் பிடிக்காமல் நான் பத்து பேரில் எழுதியிருக்கிறேன். இலட்சியம் ,கனவு எதுவுமே இல்லாத சப்பைப் பெயர். சேட்டுப்பையன்களின் பெயர் போல. ஆனால் பெயரில் என்ன இருக்கிறது என்று பிற்பாடு புரிந்தது. மம்மூட்டி என்ற பெயர் இப்போது ஓர் அழகனை குறிக்கிறது. அதற்கு இணையான ஒரு தமிழ்பெயர் என்றால் சுப்புக்குட்டி என்று சொல்லலாம். கேட்டதுமே ”… ஸ்ஸூடா   இட்லி வடை போண்டா பஜ்ஜி சாதாதோசை மசால்தோசை ஆனியன் ஊத்தப்பம் பொங்கல் பூரி இருக்குசார்” என்ற குரல்தான் காதில் விழுகிறது இல்லையா?

 

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jan 26, 2013

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் கிண்டிலில்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67