நமீபியா , நிஜமாகவே

’எங்கியோ ஒதைக்குதே’

சென்ற தேதி நம்பீபியாசெல்வதற்காக நானும் இயக்குநர் மாதவன்குட்டியும் திருவனந்தபுரம் ரயில்நிலையத்தில் இருந்து கிளம்பி மும்பை சென்றோம். மும்பையில் கோகுலம் மூவிஸின் ஓய்வுவிடுதியில் தங்கிவிட்டு நள்ளிரவில் கிளம்பி விமானநிலையம் சென்றோம். பெட்டியை பாலிதீன் தாளால் உறையிட்டு, பாதுகாப்புச் சோதனை முடிந்து ஏர் ஆப்ரிக்காவின் வரவேற்பாளர் முன் நின்றபோது அவர் எங்கள் சீட்டுகளைப் பரிசோதித்துவிட்டு ‘டிரான்ஸிட் விசா எங்கே?’ என்றார்.

’அது என்னது? ’ என்று கேட்டோம். தென்னாப்ரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க்கில் இறங்கி நமீபியாவின் விந்தோக் போகவேண்டுமென்றால் அது தேவை என்றார். நாங்கள் விமானநிலையம்விட்டு வெளியே போகப்போவதே இல்லையே என்றேன். இல்லை, கண்டிப்பாகத் தேவை என்று சொன்னார்.

உடனே எங்கள் பயணமுகவரைத் தொடர்புகொண்டோம். அவர் ‘அதெல்லாம் தேவையே இல்லை, நீங்க தாராளமா விமானத்திலே ஏறிக்குங்க சார்’ என்றார். ‘ஏறவிடமாட்டேன் என்கிறார்கள்’ என்றோம். ‘பதமா சொல்லிப்பாருங்க சார், என்ன இது சின்னப்பிள்ளை மாதிரி பேசிட்டு?’ என்றார். வேறு வழி தெரியவில்லை. கெஞ்சிப்பார்த்தோம். அவர் இணையதளத்தைத் திறந்து காட்டினார். அதில் எழுதப்பட்டிருந்தது.

நான் மீண்டும் பயணமுகவரைக் கூப்பிட்டேன். அவர் ‘டிரான்ஸிட் விசான்னு ஒன்னு கெடையாது சார். சொதப்புறானுங்க இந்திக்காரனுக’ என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டார். ஆகவே உடனே தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டு காரைத் திரும்ப வரச்சொன்னோம். விடிகாலை மீண்டும் அதே ஓய்வு விடுதிக்கு வந்துசேர்ந்தோம்.

காலையில் ஞாயிற்றுக்கிழமை. மும்பையில் இஸ்லாமியக்குழுவினரின் கலவரம் என்று செய்தி. தொலைக்காட்சியில் செய்தியில் ஒரே அடிதடி ரகளையாகக் காட்டினார்கள். ஆகவே அறைக்குள்ளேயே இருந்தோம். பகல் முழுக்க சூரியா நடித்த சிங்கம் என்ற படம் பார்த்தோம். சூரியா அடித்துக்கொண்டே இருந்தார். ஒருவர் கூட அவரை அடிக்கமுடியவில்லை.

மாலையில் எட்டிப்பார்த்தால் பெரிய பிரச்சினை ஏதுமில்லை. ஆகவே கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் என்ற படம் பார்க்கப்போனோம். சில்லறை நகைச்சுவை இருந்தாலும் மொத்தத்தில் கேனத்தனமான படம். நோஞ்சான் ஹீரோ கொன்றுகொண்டே இருந்தான். சுட்டான் , கழுத்தை அறுத்தான். ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி கொல்லப்படும் என்பதுதான் கதை.அறைக்கு வந்தபோது என்னை யாரோ ஏற்கனவே கொன்றுவிட்டார்கள் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

மறுநாள் தென்னாப்பிரிக்க டிரான்ஸிட் விசாவுக்காக முயன்றோம். அக்பர் டிராவல்ஸில் ஒரு வாரம் தாமதமாகும் என்றார்கள். ஆகவே அறைக்குத் திரும்பினோம். சின்னத்திரையில் ஒரு படம் பதினைந்து நிமிடம் பார்த்தேன். சுரேஷ்கோபி கொன்றுகொண்டே இருந்தார். இந்தியசினிமா இந்தியாவின் மக்கள்தொகைக்கு எதிராக ஏதோ ஒரு வன்மம் கொண்டிருக்கிறது.

இரவில் எர்ணாகுளம் வழியாகத் திருவனந்தபுரம் விமானநிலையம் வந்தோம். அங்கிருந்து நள்ளிரவில் காரில் ஊருக்கு வந்தேன். உடனே டிரான்ஸிட் விசா வாங்கிவிடலாம் என்றார்கள். ஆகவே பெட்டியைப் பிரிக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். நடுவே சென்னை, ஆகும்பே பயணங்கள்.

இப்போது டிரான்ஸிட் விசா வந்துவிட்டது. நான்காம்தேதி மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்புகிறேன்

முந்தைய கட்டுரைஆதாரம் நீயே
அடுத்த கட்டுரைசங்கசித்திரங்கள்