ஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்

ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் எழுதிய ராம் மோகனை சிற்றிதழ் சூழலில் காளிதாஸ் என்றபேரில்தான் அறிவார்கள். கசடதபற இதழுக்குப்
பின்னர் எழுதவந்தவர்களில் காளிதாஸ், கனகதாரா என்று ஒரு தனி வரிசை உண்டு. சிறிதளவு காலமே எழுதி அதிகம் கவனிக்கப்படாது போனவர்கள். காளிதாஸ் பின்பு ஸ்டெல்லா புரூஸ் என்ற பேரில் கதைகள் எழுத ஆரம்பித்தார். குமுதத்தில் விசித்திர முடிவுகள் கொண்ட சில காதல்கதைகள் முதலில் கவனிக்க வைத்தன. பின்னர் ஆனந்த விகடனில் அது ஒரு கனாக்காலம் போன்ற புகழ்பெற்ற தொடர்கதைகளை எழுதினார்.

ஸ்டெல்லா புரூஸின் சில கதைகளை அவற்றின் இயல்பை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற இயல்பான ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். பாலகுமாரன் சுஜாதா இரண்டும் கலந்த கலவை. கொஞ்சம் ஜெ.கிருஷ்ணமூர்த்தி. பொழுதுபோக்கு எழுத்துக்களைப் படிக்கும் வளரிளம்பருவ வாசகர்களை மிகவும் கவரும் இளமைத்துடிப்பு கொண்ட ஆக்கங்கள்.

இரு மாயவலைகளில் சிக்கி அழிந்தவர் என்று காளிதாஸ் பற்றி எனக்கு மனச்சித்திரம் இருக்கிறது. பின் தொடரும் நிழலின் குரல் தவிர என் பிற நாவல்களை விரும்பிப்படித்து கடிதங்கள் அனுப்பியிருக்கிறார். இருமுறை அந்தரங்கமாக பேசியிருக்கிறேன். அவருக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் திரைப்பட ஆசை இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தன்னை புத்திசாலிகள் என நினைக்கும் பலருக்கும் இருக்கும் ஆசை. அதுவே அவரை குடும்பத்தொழிலில் இருந்து பிரித்துசென்னையில் அல்லாடச் செய்தது.

ஆனால் சினிமா அவருடைய இயல்புக்கு ஒத்துவருவதல்ல. வசதியான குடியில் பிறந்தவராதலால் நாசூக்கானவர். போராடி தன் இடத்தை அடையும் முனைப்பு இல்லாதவர். அத்துடன் எளிதில் புண்படும் மனமும் கொண்டவர். சினிமா அவரை பயன்படுத்திக் கொண்டு தூக்கிப்போட்டது. புகழ்பெற்ற சில படங்களில் அவரது முக்கியமான பங்களிப்பு உண்டு என்று சொல்லியிருக்கிறார். கதைவிவாதங்களுக்கு கூப்பிட்டு அமரச்செய்து சிலநூறுகளை கையில் வைத்து அனுப்பிவிடுவார்கள். படமே அவர் சொல்லும் சில கருத்துக்களின் பலத்தால் நிற்கும், ஆனால் படத்தில் பணியாற்றிய எடுபிடிபபியனுக்குக் கூட அதிக ஊதியம் கிடைத்திருக்கும்.

இரண்டாவது மாயை லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட நவீன மருத்துவம். உயிர்தப்ப வாய்ப்பில்லாத ஒரு நோயாளியை சிலநாட்கள் மேலும் வாழச்செய்வதற்காக அவரது சுற்றத்தின் வாழ்நாள் சேமிப்பை அது உறிஞ்சி விடுகிறது. அதன்பொருட்டு அவர்களுக்கு ஆசையையும் நம்பிக்கையையும் கொடுத்தபடியே இருக்கிறது. காளிதாஸின் மனைவியின் சிகிழ்ச்சை அவரை தீராக்கடனாளியாக்கியது. வயோதிகநிலையில் அவரால் மீளமுடியாத மனச்சோர்வில் தள்ளியது.

காளிதாஸ் ஜெ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாண்டிச்சேரி அன்னையின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர். அவற்றைப்பற்றி நீண்டகடிதங்கள் எழுதுபவர். எனக்கும் எழுதியிருக்கிறார். நான் ஒருமுறை அவருக்கு ‘எழுத்தாளனுக்கு தத்துவம் உதவாது’ என்று எழுதினேன். அதுவே உண்மையாகியிருக்கிறது.

துயரம் மிக்க ஒரு முடிவு. ஆனால் வேறுவழியில்லாத ஒன்று என்றும் படுகிறது. வாழும் முனைப்பையும் காரணத்தையும் அவர் இழந்துவிட்டபின் என்ன செய்வது?

முந்தைய கட்டுரைஅறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன்
அடுத்த கட்டுரைநவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்