எஞ்சும் இருள்

சி.சு.செல்லப்பா தமிழ் விக்கி

சுந்தர ராமசாமியின் தனிப்பட்ட நூலகத்தில் இருந்து சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலின் ஆரம்பகாலப் பிரதியை வாசிக்க நேர்ந்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த சிறிய நூலில் அட்டையில் செல்லப்பாவே எடுத்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் அழகிய புகைப்படம் இருந்தது. துள்ளிக்குதிக்கும் கருப்புக்காளை அந்தரத்தில் மாலைசுழல நிற்க அதை பிடித்து ஒருவர் தொங்கிக்கொண்டிருக்கும் உத்வேகமான தருணம் அது. காலத்தில் கல்லாக ஆகிவிட்டது அந்தக் கணம்

செல்லப்பா ஒரு புகைப்பட நிபுணர். ஐம்பதுகளிலேயே அவர் நல்ல ஒளிப்பதிவுக்கருவி வைத்திருந்தார். மூர்மார்க்கெட்டில் இருந்து புகைப்படம் சம்பந்தமான நூல்களை வாங்கி வீட்டுக்குக் கொண்டுவந்து முறையாக அவரே கற்றுக்கொண்ட கலை அது. தன் வீட்டிலேயே கள்ளிப்பெட்டிகளைக்கொண்டு ஒரு சிறிய இடத்தை உருவாக்கிக்கொண்டு அதனுள் அமர்ந்து புகைப்படங்களைக் கழுவுவார். அக்காலத்தில் ஒளியுணரும்தன்மை குறைந்த படச்சுருள்களும் குறைந்த மூடுபொறி வேகமும் கொண்ட காமிராவில் அவர் எப்படி அற்புதமான தருணங்களைப் படமாக்கியிருக்கிறார் என்று பார்த்தால் வியப்பே எழும்

ஆனால் செல்லப்பா அந்தக் கலையைப் பிழைப்பாகக் கொள்ள மறுத்துவிட்டார். இத்தனைக்கும் அக்காலத்தில் புகைப்படக்கலைஞர்களுக்கு வேலைக்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. சுதந்திரப் புகைப்படக்கலைஞராகப் பணியாற்றினால்கூட வாழ்ந்துவிடமுடியும். செல்லப்பா பிடிவாதக்காரர்.எழுத்தாளனாக மட்டுமே வாழ்வேன் என்று உறுதியாக இருந்தார்.அந்தக்கால எழுத்தாளர் பலரும் அந்த விஷப்பரீட்சையில் ஈடுபட்டு இலக்கியத்துக்குக் களப்பலியானவர்கள்தான்.

உண்மையில் அந்த முடிவு மிக எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கியது. க.நா.சு,சி.சு.செல்லப்பா போன்றவர்கள் ஒருவேளை வேறு வேலைகளில் இருந்திருந்தால் நிறையவும் தரமாகவும் எழுதியிருப்பார்கள் என நினைக்கிறேன். வாழ்க்கைக்கான போராட்டத்தில் அவர்கள் மெல்லமெல்ல இலக்கியத்தை இழந்தார்கள். பிழைப்புக்கான எழுத்தை எழுத நேர்ந்தது. எழுத்துக்கான நேரமும் மன ஆற்றலும் பிழைப்புத்தொழில்களுக்காக வீணாகியது. இன்றுகிடைக்கும் இவர்களின் எழுத்தைவைத்து இவர்களைப் பெரிய எழுத்தாளர்கள் என்று சொல்லிவிடமுடியாது. அவர்களின் பெருந்தியாகத்தை, இலக்கியச் செயல்பாட்டை வழிபடும்நிலையில்கூட அவர்களின் படைப்பிலக்கியங்கள் மிகக்குறைவானவை, ஓர் எல்லைக்குமேல் எழாதவை என்றே சொல்லவேண்டும். உதாரணமாக சி.சு.செல்லப்பா. வாடிவாசல் மற்றும் சரசாவின் பொம்மை போன்ற ஐந்தாறுகதைகள். அவ்வளவுதான் பொருட்படுத்தத்தக்க எழுத்து.

ஆனால் அவர்களின் வாழ்க்கை ஒரு குறியீடாக ஆகியது. இலக்கியம் என்ற மரபுக்காக வாழ்க்கையையே அர்ப்பணிப்பது என்பதற்கு முன்னுதாரணமாக அவர்கள் அமைந்தார்கள். ஐம்பதுகள் முதல் முப்பது வருடம் தமிழில் வணிக எழுத்தும் வணிகப்பத்திரிகைகளும் மட்டுமே இலக்கியமாக கருதப்பட்டன. அந்த இருண்ட காலகட்டத்தில் இரண்டு தலைமுறையைச்சேர்ந்த இலக்கியவாதிகள் பணமோ புகழோ அடையாளமோ எந்த லாபமும் இல்லாமல் இலக்கியத்துக்காக வாழ அந்த முன்னோடிகளின் வாழ்க்கை வழிகாட்டியது. தமிழின் சிற்றிதழ்மரபு பிடிவாதமாக அரைநூற்றாண்டுக்காலம் நவீன இலக்கியத்தைப் புயல்காற்றில் தீபத்தைப் பொத்திக்கொண்டுவருவதுபோலக் கொண்டுவந்து நம் கைகளில்சேர்த்தது. அதற்குக் காரணம் முன்னோடிகளின் தியாகமே.

அதிலும் செல்லப்பாவின் வாழ்க்கை இன்றும்கூட இலக்கியமேடைகளில் உணர்ச்சிகரமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. வத்தலக்குண்டில் பாரம்பரிய நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர். கொஞ்சகாலம் தினமணியில் உதவியாசிரியராகப் பணியாற்றியபின் அவர் எந்த வேலையும் செய்யவில்லை. கைப்பணத்தைச் செலவிட்டு எழுத்து சிற்றிதழும் எழுத்து பிரசுரமும் நடத்தினார். ஈழத்தில் இருந்து வந்த சந்தாவை மட்டுமே நம்பிப் பிடிவாதமாக இதழை நடத்தினார். கடைசிப்பணம் வரை செலவானதும் காகிதப்பொம்மைகள் செய்து கடற்கரையில் கொண்டுசென்று கூவி விற்று சென்னையில் ஒண்டுக்குடித்தனத்தில் வாழ்ந்தார்.

செல்லப்பாவைப்பற்றி நாகர்கோயில் பேராசிரியர் ஒருவர் ஒரு சித்திரத்தைச் சொன்னார். நாகர்கோயிலில் அவரது கல்லூரிக்கு வெளியே இரு பைகளிலும் எழுத்து பிரசுர நூல்களுடன் செல்லப்பா வந்து நின்று அவ்வழியாக சென்ற அவரிடம் தமிழ்த்துறைத்தலைவரைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார். மெலிந்து நீண்ட வற்றிய முகம். நரைத்த தலைமுடி. ஒருவாரத்தாடி. பேருந்துநிலையத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர்தூரம் வியர்வை வழிய வெயிலில் நடந்து வந்திருந்தார். அவரிடம் ‘என்னவேணும்?’ என்று கேட்டபோது ‘புத்தகங்கள் விக்கணும்’ என்றார். போகும் வழியில்தான் அவர் சி.சு.செல்லப்பா என்று சொன்னார். நண்பர் அவரது சில கதைகளை தினமணியில் படித்திருந்தார்.

கல்லூரித் தமிழ்த்துறை அவரை வரவேற்கவில்லை. ”புக்ஸெல்லாம் வாங்குறதில்லீங்க” என்று சொல்லிவிட்டார்கள். “சரீ நீங்க வாங்குங்கோ…எல்லாம் முக்கியமான புக்ஸ். நவீன தமிழிலக்கியத்திலே புதிய அலை பிறந்திருக்கு.படிச்சுப்பாருங்கோ” என்று செல்லப்பா நூல்களைப்பற்றிப் பேசினார். ஆனால் அவர்கள் அகிலனுக்கு அப்பால் நகர முடியாதவர்கள். ஒருவர் மட்டும் இரண்டு நூல்கள் வாங்கிக்கொண்டார். மொத்தவிலை நான்கு ரூபாய். அவ்வளவுதான். செல்லப்பா துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தபடி கிளம்பினார். ‘வாங்க கேண்டீன்ல டீ சாப்பிடலாம்” என்று நண்பர் அழைத்தார். ‘பணம் நானே குடுத்துடறேன்” என்று வந்த செல்லப்பா அவர் டீ குடித்ததற்கான முப்பது பைசாவை அவரே கொடுத்தார். வெயிலில் கனக்கும் பைகளுடன் செம்மண் படிந்த வேட்டி தரையில் இழுபட நடந்து அடுத்தக் கல்லூரிக்கு நடந்து சென்றார்

நான் செல்லப்பாவை வழிபடும் மனநிலையில் இலக்கிய உலகுக்குள் நுழைந்தவன். அவரது வாடிவாசலை மனப்பாடம் ஆகுமளவுக்கு வாசித்திருப்பேன். என் கம்யூன் தோழர் ரஸாக் குற்றிக்ககத்துக்காக அதை மலையாளத்தில் மொழியாக்கமும் செய்தேன். ஜீவனாம்சமும் எனக்கு பிடித்திருந்தது. பொதுவாகக் கவனிக்கப்படாத அவரது பல சிறுகதைகள் என் மனதைக் கவர்ந்தவை. குறிப்பாக வெள்ளை என்ற கதை. எனக்கு நாய்களைப்பிடிக்கும் என்பது காரணமாக இருக்கலாம்.

எண்பத்தெட்டில் என் நண்பராக இருந்த டி.ஐ.அரவிந்தனுக்கு நான் செல்லப்பாவை அறிமுகம் செய்தேன். அவர் சென்னையில் மேற்குமாம்பலத்தில் குடியிருந்தார். அவர் அன்றாடம் செல்லும் வழியில் செல்லப்பா குடியிருந்தார்.வயதான காலம். மகனுடன் கொஞ்சநாள் பெங்களூரில் இருந்தவர் முதுமை காரணமாக சென்னைக்கு வந்திருந்தார். அரவிந்தன் செல்லப்பாவைச் சென்று சந்தித்துவிட்டு எனக்கு உணர்ச்சிகரமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். எனக்கு செல்லப்பாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டியது அந்த கடிதம்

நான் அந்தக்கடிதத்தை சுந்தர ராமசாமிக்கு அனுப்பியிருந்தேன். கூடவே என்னுடைய உணர்ச்சிக்கொந்தளிப்பான ஒரு குறிப்பும் இருந்தது. சுந்தர ராமசாமி அதில் பெரிய உற்சாகம் காட்டவில்லை. ”வேணுமானா போய்ப்பாருங்கோ, அதிலே என்ன” என்று எழுதியிருந்தார். நான் அதனாலேயே கொஞ்சம் தயங்கினேன்.

சிறிதுநாள் கழிந்து கழித்து 1992ல் சுபமங்களா நடந்துகொண்டிருந்தபோது அதில் செல்லப்பா எழுதி வந்த இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய அறிமுகக் கட்டுரையைப்பற்றி நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக்கடிதத்தை கோமல் சுவாமிநாதன் செல்லப்பாவுக்கு அனுப்பியிருந்தார். செல்லப்பா அதற்கு ஒரு சிறு கடிதம் அனுப்பியிருந்தார். சென்னை சென்றிருந்தபோது ”செல்லப்பாவை வேணுமானா நீங்க பாக்கலாம்” என்றார் கோமல்.

நான் முதல்நாள் செல்லப்பாவைப் பார்க்கமுடியவில்லை. மறுநாள் மாலை செல்லப்பாவைச் சென்று பார்த்தேன். நான் சுபமங்களாவில் பல பெயர்களில் நிறைய எழுதிக்கொண்டிருந்த காலகட்டம் அது. செல்லப்பா தினமும் எழுதும் பழக்கம் கொண்டவர். பெங்களூரில் இருந்த காலகட்டத்தில் எழுதிய கைப்பிரதிகள் நிறைய இருந்தன. தொண்ணூறுகளில் சுபமங்களா, இந்தியாடுடே,தினமணி தமிழ்மணி ஆகிய இதழ்களை ஒட்டி ஓர் இலக்கிய மறுமலர்ச்சி உருவானதனால் அச்சாகாமல் கிடந்த அந்த கைப்பிரதிகளை வாங்கி பலர் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

நான் செல்லப்பாவைச் சென்று பார்த்தேன். அவரது வீடு என்பது ஒரு பழையபாணி வீட்டின் இரு சிறு அறைகள்தான். ஒன்றில் அவரது சிறிய எழுத்துமேஜை. கூடவே துணிகள் தொங்கும் கொடிகள். சுருட்டி தொங்கவிடப்பட்ட பாய்கள், துருப்பிடித்த இரும்புநாற்காலிகள். பல கள்ளிப்பெட்டிகளில் புத்தகங்கள். எழுதிச் சேர்க்கப்பட்ட பழைய காகிதங்கள். நான் சென்றபோது செல்லப்பா இல்லை. அவரது மனைவி அவர் பக்கத்துக் கடையில் இருப்பதாகச் சொன்னார். மிகவயதான பெண்மணி. செல்லப்பாவுக்கு அப்போது எண்பது வயது தாண்டிவிட்டது என்று தெரியும். ஆனால் அவர் மனைவி அதை விட மூத்தவர் போலிருந்தார்.

நான் அந்தக்கடையை நோக்கிச் சென்றேன். அது ஒரு மூடிய கடை. அதன் திண்ணையில் செல்லப்பா சட்டை போடாமல் ஒரு துண்டு போர்த்திக்கொண்டு அமர்ந்து சாலையைப்பார்த்துக் கொண்டிருந்தார். அருகே ஒரு சிறு டீக்கடை அவருக்குச் சம்பந்தமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது. செல்லப்பாவின் வீட்டுக்கு திண்ணையே அந்த கடையின் திண்ணைதான் என்று இப்போது தோன்றுகிறது

நான் செல்லப்பா அருகே சென்று அவரிடம் என்னை அவரது வாசகர் என்று அறிமுகம் செய்துகொண்டேன். என் எழுத்துக்கள் எதையும் செல்லப்பா படித்திருக்கவில்லை. என்னுடைய கடிதமும் அவரது பதிலும்கூட அவருக்கு நினைவிருக்கவில்லை. நினைவு தரைதட்டும்போது முதியவர்களிடம் காணப்படும் ஒரு வகைப் பதற்றத்துடன் ஏதேதோ கேட்டார். ஒருவழியாக என்னை அவர் சுபமங்களாவுடன் அடையாளப் படுத்திக்கொண்டார்.

வீட்டுக்கு வரும் வழியில் செல்லப்பா சுபமங்களாவின் மீதான தன்னுடைய மனக்குறைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் சுபமங்களா ஓர் இடைநிலை இதழ் என்பதையே புரிந்துகொள்ளவில்லை. அதைத் தீவிரமான சிற்றிதழாக ஏன் கோமல் சுவாமிநாதன் நடத்தவில்லை என்று குமுறினார். ”எதுக்கு அதிலே சுஜாதாவையும் பாலகுமாரனையும் எழுத வைக்கணும்? அவங்களுக்கு அதிலே என்ன எடம்? இல்ல கேக்கறேன்? வியாபாரம்தானே?” என்று என்னை நோக்கிக் கைசுட்டிக் கேட்டார்.

நான் அது ஓர் இடைநிலை இதழ் என்று சொல்லிப்பார்த்தேன். ‘அதென்ன இடைநிலை? மண்ணாங்கட்டி. ஒரு டீய வாங்கி அதிலே ஒரு ஸ்பூன் சாக்கடை சேத்துக் குடிப்பியா? சொல்லு’ என்றார்.

நான் மையமாக ‘இல்லை…தீவிரமான இலக்கிய இதழ்களும் இருக்கு…’ என்றேன்

‘அதென்ன அது தீவிர இலக்கியம்? இலக்கியம்னாலே தீவிரம்தான். தீவிரம் இல்லேன்னா அது இலக்கியமே கெடையாது. வேற என்னமோ…நல்லா இருக்கே. தீவிரம் இல்லாத இலக்கியம்னு ஒண்ணை உண்டுபண்றதுக்கு டிரை பண்றேளா எல்லாரும்?’ என்று செல்லப்பா கொதித்தார்.

கொஞ்சநேரத்தில் சமனமடைந்தபின் ”நீங்க என்ன வாசிச்சிருக்கேள்?’ என்றார்.

அவர் ரசனை தெரியும் என்பதனால் நான் “மௌனி குபரா புதுமைப்பித்தன் எல்லாம் படிச்சிருக்கேன்” என்றேன்.

“பி.எஸ்.ராமையா படிச்சிருக்கேளா?”

நான் வாயை விட்டுவிட்டேன். ‘படிச்சிருக்கேன். அவரோட கதைகள் எனக்கு அவ்ளவா புடிக்கலை”

உரத்த குரலில் “ஏன்? ஏன் புடிக்கலை?” என்று கேட்டு செல்லப்பா தெருவிலேயே நின்றுவிட்டார்

“அவரோட கதைகள்லாம் வெறும் சம்பவங்கள்தானே?”

செல்லப்பா என்னை முற்றுகையிட்டுவிட்டார். ஒருமணி நேரம் புடைத்து எடுத்தார். நான் வாய்தவறி சுந்தர ராமசாமியின் நண்பன் என்று சொல்லியிருந்தேன். சுந்தர ராமசாமிக்கான அர்ச்சனைகள்தான் எனக்கு முதலில் வந்தன. ஆறடி தள்ளி நின்றால் நான் அவரிடம் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காதவன் என்று தோன்றும்.

நான் சந்தித்த இலக்கியவாதிகளை எல்லாம் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் செல்லப்பா சந்திப்பு எப்போதுமே புகைமூட்டமாகவே நினைவுக்கு வருகிறது. அதை மறக்க என் மனம் முயல்கிறதுபோல. அவர் என்ன பேசினார் என்பது ஒட்டுமொத்தமாக நினைவில் இல்லை. அவ்வப்போது அவர் சொன்ன ஏதேனும் ஒரு விமர்சனம் நினைவுக்கு வந்து புன்னகையை வரவழைக்கும்

அவருக்கு பி.எஸ்.ராமையா இலக்கியச் சிகரம். அவரது கணிப்பில் மணிக்கொடி யுகத்தோடு தமிழில் இலக்கியம் தேங்கிவிட்டது. அதன்பின் எல்லாருமே ஓரளவுஎழுத முயல்பவர்கள் மட்டுமே. ‘உனக்கு யாரைப்பிடிக்கும்?’ என்றார். அசோகமித்திரன் என்றேன். ‘அடச்சீ…அவன் என்ன எழுதறான். உயிரே இல்லை” என்றார்

சி.சு.செல்லப்பா பி.எஸ்.ராமையாவுக்குப்பின் எவரையாவது வாசித்திருக்கிறாரா என்றே எனக்கு சந்தேகமாக இருந்தது. களைப்பினால் செல்லப்பா கொதிப்பை இழந்தார். வீட்டுக்கு உள்ளே கூட்டிச்சென்று அவர் எழுதி வைத்திருந்த சுதந்திர தாகம் நாவலின் கைப்பிரதியைக் காட்டினார். கணிப்பொறித் தட்டச்சு செய்து அட்டைபோட்டு வைத்திருந்தார். மாபெரும் பேரேடுகள் போல இருந்தன. ‘அச்சிலே ரெண்டாயிரம் பக்கம் வருமே” என்றேன்

“மேலேவரும்…பதினாறு வருஷமா தினம் எழுதறேன்…மூணுவாட்டி திருப்பி எழுதியிருக்கேன்” என்றார் செல்லப்பா

எனக்கு முதுகு சுளுக்கிக்கொள்வது போலிருந்தது. அதாவது அவரது அறுபத்தைந்து வயதுக்குமேல் ஆரம்பித்த நாவல். எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார். ஒருகோடிமுறை ஸ்ரீராமஜெயம் எழுதுவதுபோல ஒரு வெறி இல்லாமல் அது சாத்தியமே இல்லை.

சட்டென்று செல்லப்பா என்னிடம் அவர் தீபம் இதழில் எழுதிய ஒரு கட்டுரையைப்பற்றிக் கேட்டார். அதில் அவர் அவர் க.நா.சுவைப்பற்றி மிகக் கடுமையாக வசைபாடியிருந்தார். க.நா.சு அவரது முன்னாள் நண்பர். அவரைப்போலவே இலக்கியத்துக்காக வாழ்ந்தவர். நவீனத் தமிழிலக்கியத்தின் மகத்தான முன்னோடிகளில் ஒருவர். இருவரையும் இலக்கிய இரட்டையர் என்றே சொல்லிவந்தார்கள். ஆனால் காலப்போக்கில் செல்லப்பாவின் இலக்கிய முடிவுகளும் அவரது அலசல்விமர்சனமும் மதிப்பிழந்தன. க.நா.சு தமிழின் இலக்கியப் பிதாமகராக கணிக்கப்பட்டார். அந்த மாற்றம் செல்லப்பாவை எரிச்சல் கொள்ளச்செய்திருந்தது.

நான் கிளம்புபோதே கோமல் சுவாமிநாதன் எச்சரித்திருந்தார். ”க.நாசு பத்தி வாயே தெறக்க்காதே. பிச்சு எறிஞ்சிருவார். இப்பல்லாம் காலையிலே எந்திரிக்கிறது முதல் ராத்திரி தூங்கறதுவரை க.நா.சு ஞாபகமாவே இருக்கார். க.நா.சு வை வஞ்சு ஆயிரம் பக்கத்துக்குமேலே எழுதி வச்சிருக்கார். கட்டை சாயறதுக்குள்ள எப்டியும் இன்னொரு ஆயிரம் பக்கம் எழுதிடுவார்” .ஆகவே நான் ஒன்றும் சொல்லவில்லை.

ஆனால் செல்லப்பா நேராக க.நா.சு வை நோக்கி வந்தார். ”க.நா.சு பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?’ என்றார்

“நான் வாசிச்சதே கெடையாது” என்றேன்

“வாசிக்காதீங்கோ…குப்பை…அழுகல்…வெஷம் அம்புட்டும்” அந்த அம்புட்டும் ஒரு வத்தலக்குண்டு மொழித்துணுக்கு. அதன்பின் க.நா.சு வை வைய ஆரம்பித்தார். க.நா.சு ஒரு இலக்கியப்போலி. தமிழுக்கு அவர் செய்ததெல்லாம் தீங்கு மட்டும்தான். அவருக்கு இலக்கியமும் தெரியாது ஒன்றும் தெரியாது. பரம முட்டாள். குழு அரசியல் செய்தார். இலக்கியத்தைப் பயன்படுத்தி வாழ்ந்தார். அவரது தமிழ் தவறு. ஆங்கிலம் சொல்லவே வேண்டாம். அவருக்கு சென்னையில் நல்ல காபிகூடக் குடிக்கத்தெரியாது. தஞ்சாவூர்க்காரர்களே மோசம். அதிலும் கும்பகோணத்துக்காரர்கள் சுத்த அயோக்கியர்கள்.

நான் ”அவர் நெறைய வாசிப்பாரே” என்றேன் பரிதாபமாக

”வாசிப்பாரா? நல்ல கதை…ஒரு புக்கு படிக்கமாட்டார்…எல்லாம் சும்மா, வெத்துப்பம்மாத்து” என்றார் செல்லப்பா. நான் வாயடைந்துபோனேன்.

ஒருவழியாக மதியம் கிளம்பினேன். என்னால் நடக்கவே முடியவில்லை. டீக்கடையில் சூடா ஒரு மலாய்டீ குடித்தபோது ஆசுவாசம் வந்தது. உலகம் ஊதித்துடைத்த மூக்குக்கண்ணாடிக்குப்பின் தெரிவதுபோலத் தெளிவடைந்தது.

தெருவில் நடக்கையில் எண்ணிக்கொண்டேன். இலக்கியம் என்னும் மகத்தான வாழ்க்கை லட்சியத்தைப் பின்தொடர்ந்து சென்ற முன்னோடிகளில் செல்லப்பாவுக்கு நிகர் எவரும் இல்லை. அவர் ஓர் இலக்கிய நாயனார். பிள்ளைக்கறி சமைத்துப்பரிமாறக்கூடத் தயங்காத பெரும்பற்று கொண்டவர். ஆனால் இலக்கியம் அவரைக் கொண்டு நிறுத்தியிருப்பது இந்த இடுங்கிய இருண்ட சிறைக்குள் என்றால் இலக்கியத்தின் பொருள் என்ன?

இலக்கியம் விளக்கு. அது ஒளிகொடுக்கும், வழிகாட்டும். ஆனால் தனக்குக் கீழே விழும் சொந்த நிழலை விலக்க விளக்கினால் முடியாது. அது காளிதாசனின் உவமை. அந்த அகங்காரத்தின் நிழலைக் கண்டு அஞ்சித்தான் மாபெரும் கலைஞர்கள்கூட இலக்கியத்தைவிட பெரிய ஒன்றின் காலடி தேடினார்களா? ‘எனக்கு ஒரு கடிகையில் தேசபக்தியையும் ஞானத்தையும் அளித்த விவேகானந்தரின் தர்மபுத்திரியான நிவேதிதா தேவிக்கு’ என்று பாரதி தன் கவிதைகளை காலடியில் சமர்ப்பணம் செய்கிறான்

செல்லப்பாவுக்குத் தேவை அத்தகைய ஒரு சன்னிதி என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்கான காலம் கடந்து விட்டதென்றும் பட்டது. அவரை இலக்கியம் மீட்கவில்லை. நம்பியவர்களைக் கைவிடும் தெய்வம் எவ்வளவு பொறுப்பற்றது. ஆனால் அதைச் சொல்லிக் குற்றமில்லை. அது அதைவிடப்பெரிய ஒரு தெய்வத்தின் அறிவிப்பாளன் மட்டுமே.

மறுபிரசுரம் – முதற்பிரசுரம் Nov 20, 2012


செல்லப்பா பற்றி வெங்கட் சாமிநாதன்

முந்தைய கட்டுரைசாதி,சமூகம்-கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தி நேரு-கடிதங்கள்