காந்தி: புறவயநோக்கில்

எழுத்தாளர்களுக்கு ஒரு முக்கியமான சிக்கல் உண்டு, அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களை அவர்களால் வலுவான கதாபாத்திரங்களாக உருவாக்க முடியாது. இதைப்பற்றிப் பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கான காரணங்களும் பலமுறை சொல்லப்பட்டவைதான். நெருக்கமானவர்களை நாம் அவர்களுடன் கொண்ட உறவின் வழியாகவே அறிகிறோம். அந்த உறவு ஒரு சிறிய பாதைதான். வாழ்நாளெல்லாம் ஒருவருடன் சேர்ந்திருந்தாலும்கூட உறவு மிகச்சில பரிமாற்றங்களால் கட்டுப்படுத்தப்பட்டது. அந்த வழியின் எல்லா உணர்ச்சிகளும், எல்லா முன்முடிவுகளும், எல்லாத் தயக்கங்களும் அவர்களைப்பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளத் தடையாக ஆகின்றன. அவர்களைப்பற்றிய நம்முடைய உணர்வுகளை மட்டுமே நம்மால் அதிகபட்சமாக எழுதமுடியும். அவர்களின் ஆளுமையைக் காட்டிவிடமுடியாது.ஆனால் நமக்கு நெருக்கமில்லாதவர்கள் அப்படி அல்ல. அவர்களை நாம் பார்க்க முடிவில்லாத கோணங்கள் திறந்து கிடக்கின்றன. அவர்களை நாம் அவர்களாகப் பார்க்கமுடிகிறது, நம்மவர்களாக அல்ல. எதையும் அவ்வாறு ஒரு துல்லியமான பார்வை அமைய ஒரு தூரம் தேவைப்படுகிறது. காலத்தின் தூரம். உணர்வுகளின் தூரம்.

காந்தியைப்பற்றிப் பேசும்போது இந்த எண்ணம் அடிக்கடி வருகிறது. காந்தியை இந்தியாவில் அனேகமாக எவருமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்ற வரி சுந்தர ராமசாமிக்கு மிகப்பிடித்தமானது -விதிவிலக்கு ஜெ.சி.குமரப்பா. காரணம், அவர் சிந்தனை அடிப்படையில் ஒரு மேலைநாட்டவர். காந்தியை ஒரு ஐரோப்பியன்தான் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும் என்று சுந்தர ராமசாமி நம்பினார். அவர் சொன்ன காரணங்கள் இரண்டு. முதலில் காந்தி ஒரு ஐரோப்பியமனம் கொண்ட மனிதர். அவரது அடிப்படைத்தரிசனம் இந்தியாவில் வேரூன்றியது என்றாலும் அவரது சிந்தனையும் செயல்பாடுகளும் உருவானதெல்லாம் அவர் தன் முதிரா இளமைப்பருவத்தைக் கழித்த லண்டனில்தான். இரண்டாவதாக ஐரோப்பியர் பொதுவாக எதையும் தர்க்கபூர்வமாக ஆராய்ந்து நோக்கக் கூடிய மனப்பயிற்சி கொண்டவர்கள். காந்தியை அத்தகைய ஒரு ஆய்வுநோக்கு வழியாகவே புரிந்துகொள்ளமுடியும். வெற்றுபக்தி அவரை நம்மிடமிருந்து மறைத்துவிடும் என்றார் சுந்தர ராமசாமி.

ராமசாமியின் கருத்துக்களுடன் பெரும்பாலும் நான் உடன்படுகிறேன். ஆனால் ஐரோப்பியர் என்று ஒற்றைப்படையாகச் சொல்லமாட்டேன். இரு ஐரோப்பாக்கள் உள்ளன. பிஸ்மார்க்கின்,ஹிட்லரின், சர்ச்சிலின் ஐரோப்பா ஒன்று. இன்னொன்று வர்ட்ஸ்வர்த்தின் மொஸார்தின் தல்ஸ்தோயின் ஐரோப்பா. முதல் ஐரோப்ப்பா ஆதிக்கவெறியின், நுகர்வுவெறியின், மதவெறியின் பருவடிவம். இரண்டாவது ஐரோப்பாதான் நாம் இன்றும் போற்றிவரும் மகத்தான மானுட இலட்சியவாதங்களில் பலவற்றை உருவாக்கியது. அந்த இரண்டாவது ஐரோப்பாவை நான் ‘மற்ற ஐரோப்பா’ என்று சொல்வேன். அந்த மற்ற ஐரோப்பியர்களால் எளிதில் காந்தியைப் புரிந்துகொள்ளமுடியும். நம் நூற்றாண்டின் மகத்தான காந்தியவாதிகள் பெரும்பாலும் அவர்களே.

நாம் காந்தியை தேசப்பிதாவாக ஆக்கிவிட்டிருக்கிறோம். ஆரம்பப் பள்ளியில் காந்தித்தாத்தா என்று கற்பிக்கப்படுகிறோம். ரூபாய்நோட்டுகளில் பார்த்தபடி இருக்கிறோம். சத்தியம் அகிம்சை போன்ற சில தேய்ந்துபோன சொற்களால் அவரை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள். நான் நம்முடைய இளைஞர்களிடம் காந்தியைப்பற்றிப் பேசியிருக்கிறேன். மொத்தமாகப் பத்து வரிகளுக்குமேல் காந்தியின் சிந்தனைகளை , காந்தியின் அரசியல் பங்களிப்பைப்பற்றி பேசத்தெரிந்தவர்கள் மிகமிகச் சிலரே. காந்தியைக் கிட்டத்தட்ட ஒரு மதநிறுவனர் இடத்துக்குக் கொண்டு சென்று உட்காரச்செய்துவிட்டது இந்தியமனம். அவரை வழிபடுதெய்வமாக்கி வாழ்க்கையில் இருந்து விலக்கிவைத்துவிட்டது. ’அவர் மகான்’ என்ற ஒரே வரி வழியாகக் காந்தியைக் கடந்து செல்லப் பழகிவிட்டோம்.

மறுபக்கம் இந்த அடையாளங்களே அவர்மீதான உக்கிரமான வெறுப்பை உருவாக்கிவிட்டன. அவர் இந்தியதேசிய அடையாளமாக முன்வைக்கப்படுவதனாலேயே இந்திய மைய அரசின் மீதான எதிர்ப்புகள் அனைத்துக்கும் அவர் இலக்காகிறார். அவர் விழுமியங்களின் அடையாளமாக ஆவதனாலேயே அவர் மீறுவதும் மறுப்பதும் கலகம் எனப்படுகிறது. இன்றும் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக அமைப்பாக நிலைநிறுத்தும் சக்தி அவர் என்பதனால் எல்லா தேசவிரோதக் கூட்டத்துக்கும் அவர் எதிரியாகிறார். அவர் மீதான அவதூறுக்காகக் கோடானுகோடி பணம் அள்ளி இறைக்கப்படுகிறது

இந்த இரு திரைகளால் மறைக்கப்பட்டவர் காந்தி. இவற்றை விலக்கி அவரை அணுகுவது இன்று எளிய விஷயமல்ல. நான் காந்தியைப்பற்றிய என்னுடைய தெளிவை ஐரோப்பிய காந்தியர்களிடமிருந்தே அறிந்தேன். இருபத்தைந்து வயதில் வாசித்த இவான் இல்யிச்சின் நூல்களே என்னை உண்மையில் காந்தியை நோக்கிக் கொண்டுசென்றன. நவகாந்திய சிந்தனைகளைத் தொடர்ந்துவெளியிட்டு வந்த சூசீமுகி என்ற மலையாள சூழியல் சிற்றிதழ் எனக்கு ஐரோப்பியகாந்தியர்களை அறிமுகம்செய்தது. அதன்பின்னர் லாரிபேக்கருடனான சந்திப்பு. காந்தி என்பது ஒரு சென்றகால வரலாற்றுப்பெயர் அல்ல என்று அவரிடமிருந்து அறிந்தேன். காந்தி ஒரு வாழும் மானுடதரிசனம் என்று புரிந்துகொண்டேன். காந்தி சொன்னவை உபதேச மஞ்சரிகள் அல்ல. அவர் காட்டியது கண்மூடிக் கடைப்பிடிக்கவேண்டிய சீலங்கள் அல்ல. காந்தி நம்மால் உள்வாங்கப்பட்டு நாம் வாழும் காலச்சூழலுக்கேற்ப வளர்த்தெடுக்கப்படவேண்டிய ஒரு ஞானம்.

காந்தியைப்பற்றிய ஐரோப்பியர்களின் கருத்துக்கள் அடங்கியது இந்தச்சிறுநூல். இன்றைய இளைஞர்கள் நடுவே காந்தியைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு உருவாகி வருவதன் அடையாளமாக நான் காண்பவர், எப்போதும் எனக்கு நம்பிக்கையூட்டும் பெயராக இருப்பவர், டாக்டர்.சுநீல்கிருஷ்ணன். அவர் தேர்வுசெய்த கட்டுரைகளின் தொகுதி இது. இந்தக் கட்டுரைகளில் வெவ்வேறு கோணங்களில் ஐரோப்பிய எழுத்தாளர்கள் காந்தியைக் கண்டுகொள்கிறார்கள். இவை வழக்கமாக நாம் காணும் சம்பிரதாயமான பாராட்டுகளோ உபச்சாரங்களோ அல்ல. இவை ஆத்மார்த்தமான தேடலையும் அதன் முடிவில் கிடைத்த கண்டடைதலையும் முன்வைக்கின்றன. இவை இன்றைய நவீன மனத்தை நோக்கிப் பேசுகின்றன. காந்தியை சென்ற நூற்றாண்டுக்கான முன்னுதாரணமாக அல்ல இன்றைய வாழ்க்கைக்கான சிந்தனையாளராக அணுகுகின்றன

இந்நூல் நமக்கு முக்கியம். நாம் காந்தியை நம்முடைய முன்முடிவுகளை கசப்புகளைக் களைந்து, பழமையின் இடிபாடுகளில் இருந்து மீட்டு, இன்றைய சூழலில் வைத்து புத்தம்புதியவராக அணுக இந்நூல் உதவுகிறது.சுநீல் கிருஷ்ணன் வணக்கத்திற்குரியவர்

ஜெயமோகன்

www.jeyamohan.in

[சொல்புதிது வெளியீடாக வரவிருக்கும் ’காந்தி-எல்லைகளுக்கு அப்பால்’ என்ற நூலின் முன்னுரை.தமிழாக்கம் சுநீல் கிருஷ்ணன் ]

இன்றைய காந்தி இணையதளம்

முந்தைய கட்டுரைகாந்தி எல்லைகளுக்கு அப்பால் -சுநீல் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைகவிபேதம்