அனல் காற்று, பின்தொடரும் நிழலின்குரல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்
இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இணையத்தின் வழியாக உங்கள்
எழுத்துக்கள் எனக்கு அறிமுகம் ஆயின . உங்களின் சிறுகதைகள் எல்லாம்
வாசித்து இருக்கிறேன். இன்று அனல்காற்று படித்தேன். செதரிசிஸ் என்று
சொல்வார்களே அது போன்ற ஒரு உணர்வை அடைந்தேன் . என்னிலிருந்து காமம்
அகன்று விட்டதைப் போல் ஒரு உணர்வு. இது தற்காலிகம் என்று புரிந்தாலும் ஒரு
விடுதலை உணர்வு என்னுள். இந்தத் தருணத்தில் இதற்கு மேல் எழுத எண்ணத்தில்
வடிவம் எல்லை அதனால் மொழியும் வரவில்லை. பிறிதொரு தருணம் மீண்டும்
எழுதுகின்றேன். நன்றி. வாழ்க வளமுடன் !

கிஷோர் விஸ்வநாதன்

அன்புள்ள கிஷோர்

தாமதமான கடிதத்துக்கு மன்னிக்கவும்

அனல்காற்று காமம் பற்றிய ஒரு அவதானிப்பு மட்டுமே. யட்சிகளைத் திரும்பிப்பார்த்தால் அவை வல்லமைபெறும், தாக்கும். காமம் நேர்மாறான ஒரு யட்சி. திரும்பிப்பார்க்காமலிருக்கும்தோறும் வல்லமைபெறும். பார்க்கப்பார்க்க சாதாரணமாக ஆகி மறையும். அனல்காற்று அதைக் கூர்ந்து கவனிக்கிறது. அதன் அற, ஒழுக்க, உணர்ச்சிகர அம்சங்களை நோக்கிக் குவிகிறது

அனல்காற்றடித்தால் மழைபெய்வதுபோல எப்போதும் காமம் அதன் உச்சியில் அர்த்தமிழக்கிறது. அது ஒரு பேராச்சரியம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

நீண்டகாலம் எடுத்து இப்போதுதான் உங்களுடைய பெரியநாவல் பின் தொடரும் நிழலின் குரலை வாசித்துமுடித்தேன். என்னுடைய தொழிலில் ஒரு சிறு இடைவெளி. அதை இவ்வகையில் பயன்படுத்திக்கொண்டேன்.

இந்நாவல் போல என்னைக் குழப்பிய எந்த ஒரு கதையையும் நான் வாசித்ததில்லை. பல கோணங்கள். பல வகையான உணர்ச்சிகள். எல்லாக் கதைகளுமே சரியானவை என்று தோன்றியது. எந்த முடிவையும் எடுக்கமுடியவில்லை.

ஆனால் அருணாச்சலம் அடையும் கொந்தளிப்பு என்னை மிகவும் பாதித்தது. மெல்லமெல்ல அவனுடைய சமநிலை அழிவதை நான் மிகுந்த பயத்துடன் மட்டுமே வாசித்தேன். பல சமயம் மேலே வாசிக்கமுடியாமல் புத்தகத்தையே மூடிவைத்துவிட்டேன்

அருணாச்சலம் மீண்டு வருவதும் ஆழமாக எழுதப்பட்டிருந்தது. வாசித்து முடித்தபோது எங்கெல்லாமோ போய் விதவிதமான வாழ்க்கைகள் வழியாக வாழ்ந்து திரும்பியதுபோல உணர்ந்தேன்

இந்த நாவலை நான் கடந்துவர இன்னும் நீண்டகாலமாகும்.

ரமேஷ் முருகையா

அன்புள்ள ரமேஷ்

நன்றி

பின்தொடரும்நிழலின் குரலின் பேசுபொருளே அதுதான். எல்லாம் சரியாகத் தெரியும்போது உருவாகும் மகத்தான தர்மசங்கடம்

ஜெ

முந்தைய கட்டுரைதேவதேவனும் நானும்
அடுத்த கட்டுரைகனல்