பழையபாதைகள்

1

 

 

 

என் அப்பாவும் அம்மாவும் இறந்தபின் நான் சொந்த ஊரான திருவரம்புக்குச் சென்றதேயில்லை. இருபத்தாறு வருடங்களாகின்றன. நாகர்கோயிலில் நான் குடியிருக்கும் இடத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரம்தான், ஒருமணிநேரத்தில் சென்றுவிடலாம். ஆனால் என் கால்கள் அந்த எல்லையைத் தாண்டுமா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அப்பாவை எரியூட்டியபிறகு காலையில் ஒரு தோல்பையை தோளில் தூக்கியபடி தலைகுனிந்து அந்தச் சின்னஞ்சிறு ஆற்றோர கிராமத்தைவிட்டு விலகிச் சென்றேன். அப்போது வடகேரளத்தில் காசர்கோட்டில் வேலைபார்த்தேன். அங்கே திரும்பிச்செல்லவும் மனமில்லை. திருவனந்தபுரத்தில் ஒருமலிவான விடுதியை வாடகைக்கு எடுத்து அதில் தங்கிக்கொண்டேன்.

இரவும்பகலும் ஒரே எண்ணம் ஓடிக்கொண்டிருப்பதை, அந்த எண்ணம் மீது நமக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமலிருப்பதையே மனிதநிலைமைகளில் மிகமிகக் கொடுமையானது என்பேன். கொடிய இழப்புகளில் பெரும் அவமதிப்புகளில் மட்டுமே அந்நிலை கைகூடுகிறது. நான் நான்குநாட்கள் அந்த விடுதியிலேயே அடைந்துகிடந்தேன். நள்ளிரவில் மட்டும் எழுந்து வெளிவந்து எதையாவது உண்பேன். தூக்கமும் விழிப்புமற்ற இருப்பும் இன்மையுமற்ற நிலை.

நான்காம் நாள் எனக்கு விசித்திரமான ஒரு பிரமை எழுந்தது. என் கிராமம் அங்கே தூரத்தில் அப்படியே இருப்பதாக. நான் திரும்பிச்சென்றால் அங்கே என் அம்மாவும் அப்பாவும் வீடும் எல்லாம் அப்படியே இருக்கும் என்று. அந்த பிரமையை நான் அந்தரங்கமாக வளர்த்துக்கொண்டேன். அந்த ஒளிமிக்க நினைவில் என் பிரியத்துக்குரிய எல்லாம் அப்படியே இருந்தன. அழியவே அழியாமல். அந்த உலகை நான் வார்த்தைகளாக ஆக்கிக்கொண்டேன். என் நூற்றுக்கணக்கான கதைகள் வழியாக அதை எழுதி எழுதி நிறுவினேன்.

அந்த கிராமத்துக்கு ஒரு பேருந்தில் சென்றிறங்குவது எளிது. ஆனால் நான் விட்டுவந்த அந்த கிராமத்துக்குச் செல்லமுடியாது. ஒருவேளை இப்போதிருக்கும் கிராமம் அந்த அந்தரங்கமான கிராமத்தை அடியோடு அழித்துவிடக்கூடும். ஆகவே நான் பிறகு திரும்பிச்செல்லவேயில்லை.

எப்போதாவது நண்பர்கள் எவரேனும் வந்தால் அவர்களுடன் திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்குச் செல்வேன். என் ஊர் அதிலிருந்து மிக அருகேதான். ஆறுவழியாகச் சென்றால் மூன்றுகிலோமீட்டர். மழைக்காலத்தில் அருவியின் பேரோசை எங்களூரில் கேட்கும். இரவுகளில் நெருங்கி வரும் கடல்போல அருவி முழங்கிக்கொண்டிருக்கும். அன்றெல்லாம் நாங்கள் ஆறுவழியாக நடந்து அருவிக்கு வந்து குளித்துவிட்டுச்செல்வோம்.

மறுபக்கம் ரப்பர்தோட்டங்கள் வயல்வரப்புகள் வழியாக வருவதற்கான பாதை உண்டு. சைக்கிளில் வரலாம். அப்போதுகூட பாடகச்சேரிக்கும் குருவிக்காடு சந்திப்புக்கும் நடுவே அரைகிலோமீட்டர் தூரத்துக்கு வயல்வரப்பு வரும். சாரைப்பாம்புபோல வளைந்து கிடக்கும் வரப்பில் சைக்கிளில் செல்ல ஒல்லிகோலப்பனால் மட்டும்தான் முடியும். மற்றவர்கள் இறங்கி தள்ளித்தான் செல்வார்கள். அதுவேகூட ஒரு நல்ல சர்க்கஸ்தான்.

பாடகச்சேரி அந்தக்காலத்தில் வயலில் வேலைசெய்பவர்களுக்கு எஜமானர்கள் ஒதுக்கிக் கொடுத்த மேட்டுநிலம். அதற்குஅப்பால் இருந்த பொற்றைக்காடுகளில் ரப்பர்தோட்டங்கள் வந்தபோது அவர்களில் பலர் ரப்பர்வெட்டும் தொழிலாளர்களாக ஆனார்கள். கூடைகவிழ்த்தது போலிருந்த குடிசைகளை மண்சுவர் வைத்து கட்டி எழுப்பினார்கள். சிலர் ஓடுகூட போட்டுக்கொண்டார்கள். அங்கே சிறியகடைகள் வந்தன. சர்ச்சுகள் முளைத்தன.

ஆனால் குலசேகரத்துக்கும் திருவட்டாறுக்கும் போவதற்கு குருவிக்காடு ஜங்ஷனுக்கு வந்துதான் பஸ்பிடிக்கவேண்டும். அதற்கு அந்தச் சிறிய இடைவழியினூடாக செல்ல வேண்டும். பனையில் இருந்து விழுந்த அம்புரோஸை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்ல அழைக்கப்பட்ட டாக்ஸி குருவிக்காடு மீனவர் சர்ச் அருகே நின்றுவிட நேர்ந்தது. அவரை ஒரு கயிற்றுக்கட்டிலில் போட்டு தூக்கிக்கொண்டு நான்குபேர் ஓடினார்கள். பாதை அகலமில்லாததனால் சேறு நிறைந்த வயலில் மிதித்து சென்றார்கள். முழங்காலளவுச்சேற்றில் இரு இடங்களில் காலிறங்கி விழப்போனார்கள். ஒரு முறை அம்புரோஸே கட்டிலில் இருந்து சரிய அவனை பின்னால்வந்த பொன்னுமணி பிடித்துக்கொண்டார். டாக்ஸியில் ஏற்றுவதற்குள் அம்புரோஸ் ‘மாதாவே எனக்க பிள்ளியள காப்பாத்தம்மா!’ என்று முனகி இறந்துவிட்டிருந்தார்.

அதன்பின் ஒரு சாலை அமைப்பதைப்பற்றி பேச்சுகள் எழுந்தன. ரட்சணியசேனை சர்ச்சில் ஜெபக்கூட்டம் முடிந்தபின் கூடிப்பேசினார்கள். அவர்களின் பிரதிநிதிகள் வந்து கோயிலில் கூடியிருந்த எஜமானர்களிடம் சாலையைப்பற்றி விவாதித்தார்கள். ஆரம்பத்தில் ‘அதுக்கொண்ணும் அவசியம் இல்ல…ஆண்டுக்கொருத்தன் பனையிலே இருந்து விளுறான். அது அவனுக்க விதியாக்கும். அதுக்காக ஊரெளகி ரோடுவெட்டுகதுக்கு அவசியமில்லை’ என்று மறுப்புகள் வந்தன. சாலை வந்தால் சேரியில் இருந்து ஆட்கள் வயல்வேலைக்கு வரமாட்டார்கள், பெண்கள் அண்டியாப்பீஸுக்கு வேலைக்குச் சென்றுவிடுவார்கள் என்று பட்டாளம் ஸ்தாணுமாலையன் சொன்னார்.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பொதுக்கருத்து எட்டப்பட்டது. ஒரு இதுக்காக முரண்பட்டவர்கள் செல்லமாக மிரட்டி அடக்கப்பட்டார்கள். பாடகச்சேரியில் இருந்து ஆறடி அகல மண்சாலை வெட்டப்பட்டு வயல் வரப்பு வரை இறங்கியது. காளிகோயில் நிலமும் கத்தோலிக்க சர்ச்சின் நிலமும் எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்பிபெருவட்டரின் ரப்பர்தோட்ட விளிம்பு சகாயவிலைக்கு அளிக்கப்பட்டது. ஆனால் சாலை வயல் வெளிவரை வந்து நின்றுவிட்டது. காரணம் காலாயம்வீட்டு தம்பி.

காலாயம்வீடு எங்களூரின் பழைய நிலப்பிரபுக்குடும்பம். ஏகப்பட்ட நிலங்கள். முக்கால்வாசி குத்தகைதாரர் கைகளில் இருந்தன. அவர்களுடைய இரண்டுபெரிய வயல்கள் பாடகச்சேரி குருவிக்காடு சாலையில் குறுக்காக அடைத்திருந்தன. கடந்துசெல்ல வழியே இல்லை. ஃபாதர் வடக்கப்பன் தலைமையில் காலாயம்வீட்டுக்குச் சென்று தம்பிசாரிடம் பேசினார்கள். அவர் அவர்களை அமரும்படிகூட சொல்லவில்லை. ‘டேய், அந்தப்பேச்சையும் பேசிக்கிட்டு இனி இந்தப் படி தாண்டப்பிடாது கேட்டியா? எதுக்குடே ரோடு? நேத்துவரை இந்த வீட்டு முற்றத்திலே காலுவைக்க தைரியமில்லாம துண்ட இடுப்பிலே கெட்டிகிட்டு கும்பிட்டு நின்னவனெல்லாம் நான் போற வளியிலே நின்னு பீடி பிடிக்கான். அவனுகளுக்கு நான் மண்ணு விட்டுக்குடுக்கணுமா? எனக்கு மனசில்லை. போய் கோர்ட்டுலே பேசிக்கோ..போ’

மீண்டும் மீண்டும் மன்றாடினார்கள். கோயில் அர்ச்சகர் நாராயணன் போற்றியை அனுப்பி சொல்லவைத்தார்கள். ‘நல்ல கதை. நாடு நாறியாச்சு. அவனுகளுக்காக பிராமணன் நீரு வந்து பேசுதீராக்கும்..போவும் ஓய்’ என்றுவிட்டார் தம்பி. பின்பு மெல்ல நம்பிக்கை இழந்து திட்டம் கைவிடப்பட்டது. மண்சாலை வந்து காலாயம்வீட்டு வயலில் இறங்கி பச்சைப்பரப்பில் மூழ்கி மறைந்தது. அதுவரை சைக்கிளில் ‘விட்டு வந்தவர்கள்’ அங்கே இறங்கி தள்ள ஆரம்பித்து அதுவே ஒரு பழக்கமாக ஆகியது. எவருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை.

அப்போதுதான் அப்பகுதி வழியாக ’சகாவு’ ஓட்டு கேட்க வந்தார். எங்களூரில் மார்க்ஸிய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஜெ.ஹேமசந்திரனை மட்டுமே வெறுமே சகாவு என்பார்கள். வழக்கமாக ரப்பர் தோட்டங்களில் ஓட்டு கேட்டபின் அப்படியே பாடகச்சேரிக்கு வந்து செல்லும் தோழர் ஜெ.எச். அவ்வழி வந்தது தற்செயலாகத்தான். அவர் எனக்கு தூரத்துச் சொந்தமாதலால் நான் அவருக்குப்பின்னால் உற்சாகமாக துண்டுப்பிரசுரம் வினியோகித்துக்கொண்டு ஓடினேன். சிவப்புத்தாள் துண்டுப்பிரசுரங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்கும். தண்ணீர் தொட்டு கையில் ஒட்டி வைத்தால் மருதாணிபோல சிவக்கும். ‘அண்ணா அண்ணா’ என்று பின்னால் ஓடிவரும் பிள்ளைகளை ‘ஓடுலே ..லே ஓடுலே’ என்று துரத்திவிட்டு பெரியவர்களுக்கு மட்டும் துண்டுப்பிரசுரம் கொடுப்பது என் பொறுப்பு. அவர்களில் பாதிப்பேர் வாசிக்கத்தெரியாமல் பிள்ளைகளிடமே கொடுத்துவிடுவதில் எனக்குப் பிரச்சினை இல்லை.

தோழர் ஜெ.எச். என்னும் ’ஹேமேந்திரன் அம்மாவன்’ குட்டையான உருவம் கொண்டவர். ஒட்டடைக்குச்சி போல சிலிர்த்து நிற்கும் தலைமுடி. குறுகிய நெற்றிக்குமேல் வரப்பில் புல்போல அது வெட்டிவிடப்பட்டிருக்கும். கனத்த மீசை. பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் வக்கீலுக்குப் படித்துவிட்டு தொழிலைப்பார்க்காமல் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். எங்களூரில் கட்சியே அவரது சொத்தில் கட்டப்பட்டதுதான். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. கட்சி அலுவலகத்தில் ஒரு பெஞ்சியில் படுத்து இரவுறங்குவார். நிறையமுறை ஜெயிலில் கிடந்திருக்கிறார். காங்கிரஸ் காலத்தில் அவரை விலங்கிட்டு ஒரு மாட்டுவண்டியில் கட்டி முரசறைந்தபடி தெருத்தெருவாக அழைத்துச்சென்றார்கள் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

தோழர் ஜெ.எச். வயல் வரப்பில் நின்று கண்களைச் சுருக்கி பார்த்து ‘டே இது என்னடே? மயிராண்டி, பஞ்சாயத்திலே சொல்லி ஒரு ரோடு போடப்பிடாதாடே” என்றார். மெம்பர் நேசையன் மெல்லிய குரலில் பிரச்சினைகளை சொல்லிக்கொண்டே கூட வர அவர் செருப்பைக் கழற்றிவிட்டு சேற்றில் கால் வைத்து நடந்து மறுபக்கம் போனார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆறரை மணிக்கு ஜெ.எச். குருவிக்காடு ஜங்ஷனில் பதிமூன்று ஜி பஸ்ஸில் வந்திறங்கினார். கண்ணன் பார்பர்ஷாப்பிலும், தண்டுநாயர் டீக்கடையிலும் பனையேறி முடித்து வந்தவர்களும் மண்வெட்டிவேலைக்குப் போகிறவர்களுமாக நல்ல கூட்டம். யாரோ ‘லே சகாவுலே’ என்றார்கள்.

ஜெ.எச். வேட்டியை மடித்துக்கட்டியபடி வந்து கண்ணன் பார்பர்ஷாப் முன்னால் நின்றிருந்த ஏசுவடியானிடம் ‘சகாவே ஒரு பீடி எடு’ என்று கேட்டு வாங்கி பற்றவைத்தார். ஆழமாக நான்கு இழுப்பு இழுத்து ஊதியபடி என்னிடம் ‘எந்தெடா?’ என்றார். ‘அப்பாவுக்குப் புகையிலை..’ என்று பம்மினேன். ‘ம்ம்’ என்று ஆழ இழுத்தார்.

அதற்குள் சொத்தி நாணப்பன் சூடான டீ டம்ளருடன் வந்துவிட்டான். அதைக் கலக்கிக் கலக்கி குடித்துவிட்டு கடைசி இழுப்பு. பின்பு பீடிக்கொள்ளியை சுண்டி வீசி காறிதுப்பிவிட்டு ‘டேய் அந்த நம்மாட்டியை இஞ்ச குடு’ என்று ஞானப்பனின் மண்வெட்டியை வாங்கிக்கொண்டு நடந்தார்.

‘சகாவு எங்க போறாரு?’ என்று நாணப்பன் கேட்டான். ‘இவருக்கு இஞ்ச வாளயா நிக்குவு?’ என்று கேட்ட மிக்கேல்ராஜை அருளப்பன் ஓங்கி அறைந்து ‘நாறப்பயலுக்க வாயப்பாரு…லே வாலே. சகாவு தனியாட்டுல்லா போறாரு” என்றான்.

மண்வெட்டிகளுடன் பத்துபேர் ஜெ.எச். பின்னால் நடந்தார்கள். வேதக்கோயிலை அணுகும்போது இருபதுபேர். திண்ணைகளில் சீட்டாடிக்கொண்டிருந்த மீனவர்கள் ‘லே சகாவுலே’ என்று சீட்டுகளை செருகிவிட்டு எழுந்து நின்று முண்டாசை அவிழ்த்தார்க்ள். அவர் அவர்களைப் பார்க்காமல் கடந்துசென்றார். ‘இஞ்சேருங்க…என்னண்ணு பாருங்க போங்க’ என்று மீனவப்பெண்கள் கணவர்களைத் தூண்ட அவர்களும் பின்னால் வந்தார்கள்.

வயல்வரப்பை அடைந்தபோது ஐம்பதுபேர் வரை திரண்டிருந்தார்கள். ஜெ.எச். நேராகச்சென்று செருப்பைக் கழட்டிவிட்டு வயலில் இறங்கினார். வரப்பை ஓங்கி மண்வெட்டியால் வெட்டினார். காலாயம்வீட்டு அடங்கல்வேலைக்காரன் ரவீந்திரன் ஓடிவந்தான். ‘சகாவு இது என்ன செய்யுது? வேண்டாம்…வேண்டாம் கேட்டுதா?’ என்றான்.

‘டேய், நான் இங்க பாதை போடப்போறேன். ஒண்ணு இங்க பாதை வரும். இல்லேன்னா நான் செத்துகிடப்பேன். ஆனா போறதுக்குள்ள பத்தாள வெட்டிப்போட்டுட்டுதான் போவேன்..ம்ம் வெலகு’ என்றார் ஜெ.எச்.  ரவீந்திரன் பீதியுடன் பின்னால் நகர்ந்தபின் சேற்றை மிதித்து ஓடி மறுபக்கம் ஏறி அப்பால் சென்றான். ஓ என்று கூச்சலிட்டபடி அத்தனைபேரும் மண்வெட்டிகளுடன் வயலில் இறங்கினார்கள்.

சற்றுநேரத்தில் மேல்துண்டும் வேட்டி நுனியும் காற்றில் பறக்க காலாயம்வீட்டு தம்பிசார் விரைந்து வந்தார். வரும்போதே ‘டேய்..ஹேமேந்திரா, நாயே…’ என்று கூச்சலிட்டபடி வந்தார். ’கரையில் ஏறுடா…நான் சும்மா விடமாட்டேன். இந்நாட்டில் போலீஸும் பட்டாளமும் உண்டா என்று பார்க்கிறேன்’ என்றார்.

‘தம்பிசாரே…இப்ப வேலை நடந்துட்டிருக்கு. இதில தலையிட்டா தலை இருக்காது…சாரு போகணும்..ம்ம்’ என்றார் ஜெ.எச்.

‘டேய் எங்கிட்ட வெளையாடாதே’ என்று தம்பிசார் கைநீட்டி கூச்சலிட்டார்.

‘டேய் போடா..’ என்றார் ஜெ.எச்.

தம்பிசார் அப்படியே உறைந்து விட்டார். சுற்றி நின்ற நூற்றுக்கணக்கான ஆணும்பெண்ணும் சிலைபோல குளிர்ந்து நின்றார்கள்.

‘நான் விடமாட்டேன்…நான் இத விடமாட்டேன்…’ என்ற ஊளையுடன் அடிபட்ட நாய் போல சுருண்டுபோய் தம்பிசார் திரும்பி ஓடினார்.

ஜெ.எச். உரக்கக் கூவினார் ‘டேய்….டேய் தம்பி…இதோ இந்த ரோடு இங்கதான் கிடக்கும். உனக்கு சங்கிலே ஊற்றம் இருந்தா இதிலே மண்வெட்டியாலே ஒரு வெட்டு வெட்டிப்பாரு…டேய், எந்தப்போலீஸும் பட்டாளமும் காவல் நின்றாலும் உன்னை தேடிவந்து வெட்டுவோம். உன் வீட்டு முற்றத்திலே உன்னை வெட்டிப் போடுவேன்…இந்தா நூறுபேரு கேக்கத்தான் இதைச் சொல்லுதேன்…’

தம்பிசார் விழுந்துவிடுவார் போலிருந்தது. நல்லவேளையாக ஊன்றிநடக்கும் குடை வைத்திருந்தார். தள்ளாடியபடி அவர் போய் மறைந்தார். சிலநிமிடங்கள் வரை அனைவரும் வாய் பிளந்து பார்த்து நின்றார்கள். சட்டென்று பொன்னுமணிக்கிழவர் ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று கூச்சலிட்டார். மொத்தக்கூட்டமும் ‘ஜே’ என்று கூச்சலிட்டது. நேசையன் மெம்பர் ’இங்குலாப் சிந்தாபாத்!’ என்று முழங்கினார். அத்தனைபேரும் அதை திருப்பிக்கூவினர்.

மாலைவரை அந்தக்கூச்சல் நீடித்தது. இருட்டும் நேரத்தில் மறுபக்கம் வரை சாலை போடப்பட்டிருந்தது. ஓடையில் ஜெ.எச். கைகளைக் கழுவிக்கொண்டிருக்கும்போது மறுபக்கம் வேதக்கோயில் அருகே ஜீப்பை நிறுத்திவிட்டு இன்ஸ்பெக்டர் ஒரு கான்ஸ்டபிளுடன் இறங்கி வந்தார்.

‘நமஸ்காரம் சகாவே’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘ஒரு கம்ப்ளெயிண்ட் உண்டும்’

‘எழுதிக்கிடும்வே…முதல்குற்றவாளி ஜே.ஹேமசந்திரன்…அட்ரஸ் தெரியுமே..ரப்பர்தோட்டத்தொழிலாளர் சங்கம், குலசேகரம். கண்டாலறியக்கூடிய நூறுபேர் கூட்டுக்குற்றவாளிகள். எழுதும்.’’ சட்டென்று குரல் மாறியது ‘முறையா கேஸு நடக்கட்டும். ஆனா இனி எவனாவது இந்த ரோட்டிலே கைய வச்சா அவனுக்க கொலைக்காக்கும் அடுத்த கேஸு’

இரண்டுவருடம் கேஸ் நடந்த நினைவு. அதற்குள் அந்தச்சாலையில் தாரே போட்டுவிட்டார்கள். இப்போது அது திற்பரப்பு அருவியின் கரை வழியாக திருவட்டாறுக்குப் போகும் முக்கியமான பேருந்து வழி. அவ்வழியாக நண்பரின் பைக்கில் அமர்ந்து வந்துகொண்டிருந்தேன். ‘இந்தவழியா போனா திருவரம்பு கோயில்…அங்கதான் எங்க வீடு’’ என்றேன்.

‘போவோமா?’ என்றார் நண்பர் பைக்கை நிறுத்தி.

‘வேண்டாம்’ ’’ என்றேன்.

எதிரே வந்த ஒரு பையனைச் சுட்டிக்காட்டி நண்பர் கேட்டார் ‘கேட்டுப்பாக்கட்டா?’

‘கேளும்’ ’’ என்றேன்

‘லே மக்கா…இந்த ரோடு ஆரு போட்டதிலே? ’’ என்றார் நண்பர்.

‘வெள்ளக்காரன் காலத்திலே போட்டதில்லா?’ ’’ என்றான் அவன்.

நண்பர் என்னைப் பார்த்தார். பையன் சுதாரித்துக்கொண்டு ’’’காமராஜு போட்டதாக்குமா?’’’ என்றான்.

‘ஆரு போட்டா என்ன? நீ நிமுந்து நடக்குதே இல்ல? அது போரும் மக்கா’’’ என்றபடி நண்பர் பைக்கைக் கிளப்பினார்.

‘ஆமா.சகாவு இருந்திருந்தா அவரும் அதைத்தான் சொல்லுவார்’ என்றேன்.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 20, 2012

 

 

முந்தைய கட்டுரைஅ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு
அடுத்த கட்டுரைஎந்த அடையாளம்?