விஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 1, ஜடாயு


“மௌனம் ஒரு விதையாயிற்று. அதிலிருந்து வேர் முளைத்தது. அது மண்ணைக் கவ்வி உறிஞ்சியது. அதில் அர்த்தம் நிரம்பியது. காவியம் முளைவிட்டது. மண்ணைப் பிளந்து வெளிவந்த
து


விஷ்ணுபுரம் நாவலும் விஷ்ணுபுரம் கோயிலைப் போன்றே பிரம்மாண்டமானது. திசைக்கொரு கோபுரம். மேகங்களைத் தாண்டி விண்ணில் எழும் அவற்றின் முகடுகள். பூலோகத்தை மட்டுமல்ல, புவர்லோகத்தையும், சுவர்லோகத்தையும் அதன் மேல் உலகங்களையும் உள்ளடக்கிய அதன் வெளி. பிரக்ஞையின் பல அடுக்குகள். இதெல்லாம் சேர்ந்தது விஷ்ணுபுரம்,

நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது போல பல்வேறு விதமான புடைப்புத் தூண்கள், சுதைகள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்ப அற்புதங்கள் எல்லாம் செறிந்தது விஷ்ணுபுரம். இடையறாது ஒலித்து அதிர்வெழுப்பும் சுவர்ணகண்டம் போல, சோனாவின் நீரொழுக்குப் போல, ஒரு இடையறாத தொடர்ச்சி, அதில் பல்வேறு சலனங்கள்.


எல்லாவிதங்களிலும் முழுமையைத் தொட முயலும் ஒரு காவியம்.

விஷ்ணுபுரத்தை வாசிக்கும்போது எனக்கு சில வட இந்தியக் கோயில்களின் கூம்பு வடிவ சிகர விமானம்தான் நினைவுக்கு வருகிறது. நாகர பாணி விமானம். அதில் கீழிருந்து மேலாக, சிறுசிறு சிகர விமானங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக அமைக்கப் பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் பெரிய சிகர விமானத்தின் சிறுபிரதிகளே போல இருக்கும். அவை எல்லாம் ஒன்றிணைந்து ஒரு பிரம்மாண்டமான சிகர விமானமாக நம் கண்முன் எழும். அது போன்றது விஷ்ணுபுரம் நாவலின் அமைப்பு.

அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு காவியத்தருணம். தன்னளவில் முழுமை கொண்டது. நாம் இதுவரை படித்து வந்திருக்கும் மற்ற எல்லா நாவல்களிலும் உச்சம் என்பது ஒரு சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கும். நாவலின் மற்ற பகுதிகள் அனைத்தும் அந்த உச்சங்களை நோக்கி இட்டுச் செல்லும் புள்ளிகளாகவோ, அவற்றை நோக்கிச் செலுத்தக் கூடிய இடங்களாகவோ அல்லது இயல்பான கதைத் தொடர்ச்சியாக அமைந்த பகுதிகளாகவோ இருக்கும். மிகப் பெரிய நாவல்களில் இத்தகைய தொடர்ச்சிப் பகுதிகள் ஒப்பீட்டில் இன்னும் அதிகம். ஜெயமோகனின் மற்ற படைப்புகளான பின் தொடரும் நிழலின் குரல், காடு ஆகிய நாவல்களில் கூட உச்சங்கள் என்று சொல்லக் கூடிய சில இடங்களே உண்டு. காளிதாச காவியங்களில் கூட ஒவ்வொரு சர்க்கத்திலும் உச்சங்கள் நமக்குக் காணக் கிடப்பதில்லை.

ஆனால் விஷ்ணு புரத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உச்சங்களும் அதை நோக்கியே செல்லும் புள்ளிகளும் வந்த படியே உள்ளன. அத்தியாயங்கள் ஒன்றன் மீது ஒன்றாக, ஒன்றையொன்று மூழ்கடிப்பது போல, அலையலையாக எழுந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக நாவலுக்கான ஒன்றிரண்டு உச்சத் தருணங்கள் இவை தான் என்று நாம் எதையும் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லி விட முடியாது.

பாத்திரங்களின் படைப்பும் அதே போலத் தான். எந்த ஒரு பாத்திரமும் பெரு நாவல்களில் வருவது போல நீடித்ததாக, ஆதியோடந்தமாக, “முழுதாக”ப் படைக்கப் படவில்லை. அதே சமயம் ஒவ்வொரு பாத்திரமும் தன்னளவில் முழுமையானதும் கூட. சில சமயங்களில் பெருநாவல்களின் பாத்திரங்களை விடவும் அவை நமக்கு நெருக்கமாகி விடுகின்றன. பாத்திரங்கள் ஒரு மாபெரும் திரையில் தோன்றி மறையும் பிம்பங்களாக, சலனத் தன்மை கொண்டவையாக உள்ளன. இது விஷ்ணுபுரத்தின் தனித்துவம். வேறு எந்த நவீன நாவலிலும் இது போன்று காலவெளியில் மிதந்து செல்லும் இவ்வளவு நேர்த்தியான பாத்திரங்களை நாம் நேர்கொள்ள முடியாது.

இந்த விஷயத்தில் விஷ்ணுபுரத்திற்கு ஈடாகச் சொல்ல வேண்டுமென்றால் மகாபாரதத்தை மட்டும் சொல்ல முடியும். மகா வியாசன் படைத்த அந்த மாபெரும் காவியத்தில் முடிவற்று ஓடும் காலம் மட்டுமே பிரதான பாத்திரம். மற்ற அனைத்தும் அதில் பங்கேற்று நடிக்கும் “பாத்திரங்களே”. விஷ்ணுபுரத்திலும் அப்படியே. விஷ்ணுபுரம் என்ற நகரம் அந்த நாவலின் எல்லா நிகழ்வுகளுக்கும் சாட்சியாக நிற்கிறது தான். ஆனால் அதுவும் அந்த நாவலின் பிரதான பாத்திரமல்ல. காலமென்னும் காட்டாற்றில் காவியம் மொண்டெடுத்த ஒரு கைநீர் மட்டுமே அந்த நகரம்.

காவியமாக்கல்:

இந்த நாவலில் எல்லா இடங்களிலும் ‘காவியமாக்கல்’ என்ற செயல்பாடு நிகழ்ந்தபடியே உள்ளது. கலாபூர்வமாக நாம் கவனித்து ரசிக்க வேண்டிய விஷயம் இது.

தாராசுரத்திலும் மாமல்லபுரத்திலும் நமது கோயில் சிற்பங்களில் உள்ள எழிலார்ந்த யானைகள், காட்டில் திரியும் யானைகளைப் போன்று அப்படியே இருப்பதில்லை. அந்த சிற்பங்களின் சிறப்பியல்பு என்பது ஒரு யானையை தத்ரூபமாகக் காண்பிப்பது அல்ல. மாறாக, யானை என்ற கருப்பொருளை எடுத்துக் கொண்டு சிற்பியின் கலை சிருஷ்டித்துக் காட்டும் ஒரு மாயப் பொருள் அந்த சிற்பம்.

அதே போல, நீங்கள் எந்தக் கோயிலும் சென்று பார்க்கலாம். அங்கு நாம் சிற்பங்களில் காணும் மயில்களும் அன்னங்களும் ஒரு குத்துமதிப்பாகத் தான் அந்த நிஜப் பறவைகள் போல இருக்கின்றன. அந்த சிற்பப் பட்சிகளின் அலகுகள், கழுத்து அமைப்பு, சிறகுகள், தோகைகளின் வனப்பு இதெல்லாம் ஒரு அலாதியான, பல சமயங்களில் இயற்கைக்கு மாறான தன்மையுடன் தான் தோற்றமளிக்கின்றன.
அதே போன்று தான் விஷ்ணுபுரத்தின் பாத்திரங்களும். அந்தப் பாத்திரங்களின் குணங்கள், மன அவசங்கள், அலைக்கழிப்புகள், தேடல்கள் இவையெல்லாம் அப்பட்டமான யதார்த்தத்திலிருந்து எடுக்கப் பட்டவை தான். ஆனால் இந்த நாவலில் அவை யதார்த்த சித்தரிப்புகளாக அல்ல, அவற்றின் காவியமாக்கப் பட்ட வடிவிலேயே எங்கும் உள்ளன.

சோகம் என்றால் காவிய சோகம். தனிமை என்றால் காவியத் தனிமை. வெறுமை என்றால் காவிய வெறுமை. தேடல் என்றால் காவியத் தேடல். களிவெறி என்றால் காவியக் களிவெறி.

புதிர்த் தன்மை:

விஷ்ணுபுரத்தின் இன்னொரு தனித்துவம் அது தன்னைத் தானே மீள் சார்ந்திருக்கும் பிரதியாக இருப்பது. intertextuality என்று சில நவீன இலக்கியக் கோட்பாட்டு சொல்லாடல்களில் குறிப்பிடப் படும் விஷயம். நூலின் போக்கில் பல இடங்களில் முடிச்சுகள் இடப்பட்டு, அவை ஒவ்வொன்றாக அவிழ்க்கவும் படுகின்றன. பல சமயங்களில் நேர்கோடாக அல்லாமல் சுற்றி வளைத்தும் கூறப்பட்டு பிரதியின் போக்கில் இது வளர்ந்து கொண்டே செல்கிறது. Self Referential Puzzles என்ற வகையான தர்க்கப் புதிர்களை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். அந்தப் புதிரில், கேள்விகள் வரிசைப் படுத்தப் பட்டு, கேட்கப்படும் முறையிலும் அமைப்பிலுமே, அந்த அத்தனை கேள்விகளுக்குமான பதில்களும் கட்டமைக்கப் பட்டிருக்கும். விடைகள் புதிருக்கு உள்ளேயே இருக்குமேயன்றி எதுவும் வெளியே தேட வேண்டியதில்லை.

விஷ்ணுபுரம் நாவலின் கதைப் போக்கும் இதே போன்று வாசகனுக்கு ஒரு சவாலாக, ஒரு விடுகதையாக, முடிச்சுகள் அவிழ்க்க வேண்டிய ஒரு பிரித்துச் சேர்க்கும் புதிராக (Jigsaw Puzzle) உள்ளது. தேடல் கொண்ட வாசகன் நாவலின் ஆழங்களுக்குள் கரைந்து கொண்டிருக்கும் போதும் அவனது தர்க்க மனத்தை எப்போதும் உசுப்பி விட்டு, விழிப்பு நிலையில் வைத்திருக்க இந்தப் புதிர்த்தன்மை உதவுகிறது. மகாபாரதம் போன்ற எல்லா பெருங்காவியங்களிலும் உள்ள விஷயம் தான் இது. விஷ்ணுபுரத்தில் மிகச் சிறப்பாக, நேர்த்தியாக வந்திருக்கிறது.

தன்னைத் தானே மீறிச் செல்லும் காவியம்:

விஷ்ணுபுரம் என்ற காவியம் உருவாகும், வளரும், வாசிக்கப் படும், மீள் எழுதப் படும் பரிணாமம் காவியத்திற்குள்ளேயே பல இடங்களில் பேசப்படுகிறது. எழுத்தைப் பற்றிய எழுத்தாக, ஒருவகையான சுய விமர்சனத் தன்மையுடன் அமைந்துள்ள இந்தப் பகுதிகள் ஏதோ ஒட்டவைத்தது போன்று இல்லாமல் காவியத்தின் போக்கில் தானாக வந்து மிக அழகாக அமைவது விஷ்ணுபுரத்தின் தனிச் சிறப்பு.

ஒரு காவியம் ஏன் எழ வேண்டும்? அதற்கான தேவை தான் என்ன?

எல்லாவற்றையும் உண்டு செரிப்பது காலம். அந்தக் காலத்திற்கே சவால் விடுவது காவியம். சங்கர்ஷணனின் ஆற்றாமை ததும்பும் வரிகளில் அந்தக் குரலைக் கேட்கிறோம் –

“ஜடத்தை ஆத்மாவால் மீற முடியாதா? மீண்டும் மீண்டும் சொல்லி அந்தச் சொற்களை என் ஆத்மாவிற்குள் நுழைய வைப்பேன். ஒரு யுகமென்றால் எத்தனை காலம்? எத்தனை கோடி மக்கள்? எத்தனை கோடி கனவுகள்? எத்தனை லட்சம் சிந்தனைகள்? என் இளமை என்னை வெறி கொள்ள வைக்கும். நான். கவிஞன். காலத்தை சொல்லால் அளப்பவன். ஜட்த்தின் சட்டங்களை மீறிச் செல்வேன். எனது காவியும் ஒரு யுகத்தை தன்னுள் பிரதிபலித்துக் காட்டும்.. எனது காவியம்!”

அப்படியென்றால், காலத்தைப் பிரதிபலிப்பது, ஒரு யுகத்தின் பிரதிநிதியாக நிற்பது, காலப் பெருக்கில் சுழன்றோடும் வாழ்க்கையின் திவலைகளை அள்ளி சொல்லில் உறைய வைப்பது – அது மட்டும் தான் உன்னத காவியத்தின் இலக்கணமா? காலக் கண்ணாடியாக நிற்பது மட்டும் தானா காவியத்தின் பணி?

மீண்டும் சங்கர்ஷணனின் பதைபதைப்பில் அந்தத் தவிப்பைக் கேட்கிறோம் –

“சொல்லில் அடங்காத ஆதியந்தமற்ற பேரழகு. அதைத் தொடும் பொருட்டு சூரியனை நோக்கிப் பறக்கும் பறவை போல என் காவியம் பறந்தெழ வேண்டுமென ஆசைப்பட்டேன். என் மொழி எரிய வேண்டும். ஒவ்வொரு சொல்லும் சூரிய பிம்பமாக ஒளிவிட வேண்டும். காவியமும் சங்கீதமும் தொட முடியாத எல்லையில், பெரு மௌனமாக நிரம்பியுள்ள அழகை அது அடைய வேண்டும் என்று எண்ணினேன்.. அந்த நாட்களில் நான் மண்ணில் இல்லை.”

காவியத்தின், கலையின், மொழியின், சொல்லின் எல்லைகளை மீறிச் செல்லும் ஒரு காவியம். என்ன ஒரு மகோன்னதமான கனவு! அந்தக் கனவு தான் விஷ்ணுபுரம்.

பல நல்ல நாவல்களில் நாம் அவற்றுக்குள் உட்கலந்து பாத்திரங்களாக, சம்பவங்களாக மாறிவிடும் ரசவாதம் நிகழக் கூடும். நல்ல இலக்கிய வாசிப்பு, இலக்கிய ரசனை தரும் பொதுவான அனுபவம் அது.

ஆனால் விஷ்ணுபுரத்தில் பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் மட்டுமல்ல, இதைப் படைத்தவர்களின், எழுதியவர்களின், வாசித்தவர்களின் குரல்களும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன – சங்கர்ஷணன், பாவகன் மற்றும் இன்னும் சில பாத்திரங்களின் வாய்மொழியாக. எழுதப் படுவதும், எழுதுபவனும், படிக்கப் படுவதும், படிப்பவனும் ஒரே நேரத்தில் ஒன்றாகவும், வேறாகவும் நிற்கும் தருணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. நாம் சம்பவங்களாகவும், சம்பவங்களுக்கு உண்மை சாட்சிகளாகவும், அவற்றின் தோற்ற பிரதிகளைக் கண்டு திகைப்பவர்களாகவும் ஒரே நேரத்தில் இருப்பது போன்ற அனுபவம். பிரமையும் கனவும் மயக்கமும் கலந்த அனுபவம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இலக்கிய அனுபவத்தையும் தாண்டி, மனதையே கருவியாக்கி மனதை அவதானிப்பது போன்றதான தியான அனுபவத்திற்கு நிகரானது இது.

தத்துவமாக்கலும் காவியமும்:

விஷ்ணுபுரம் நாவலின் இரண்டாம் பாகம் முழுவதும் தத்துவ விவாதங்களால் நிரம்பியது. ஆனால் அந்தத் தத்துவ விவாதங்கள் கறாரான தத்துவ மொழியிலேயே முழுவதுமாக இல்லாமல், பெரிதும் கவித்துவமான இலக்கிய மொழியிலேயே உள்ளன. நாவலில் வரும் இந்திய ஞான மரபுத் தரப்புகளின் சம்பிரதாயமான தத்துவக் கோட்பாட்டு நூல்களை வாசிக்கும்போது நாம் எதிர்கொள்ளும் வறட்டுத் தன்மையும், தூய தருக்கவாதமும் இந்த விவாதங்களில் இல்லை என்பதை தத்துவ நூல்களை நேரடியாகக் கற்றவர்கள் உணர முடியும். தத்துவ விவாதங்கள் கூட அவற்றின் காவியமாக்கப் பட்ட நிலையிலேயே விஷ்ணுபுரத்தில் உள்ளன. ஜெயமோகனே தனது விளக்கங்களில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். இது கவனிக்கப் பட்ட விஷயம். ஆனால் கவனிக்கப் படாத இன்னொரு விஷயமும் உண்டு. அதைக் கீழே பார்ப்போம்.

காளிதாசனை “அத்வைத கவி” என்று வேதாந்த ஆசான்களும், உரையாசிரியர்களும் சிலாகித்திருக்கிறார்கள். அவனது காவியங்களில் உவமைகளிலும், சித்தரிப்புகளிலும் அத்வைத தத்துவத்தின் நுட்பமான சிதறல்கள் உள்ளன என்று அவர்கள் ரசனையுடன் சுட்டிக் காட்டுவார்கள். காளிதாச காவியங்களைப் போலவே, ஏன் அதைவிடவும் கூட அதிகமாக இது விஷ்ணுபுரத்திற்கும் பொருந்தும். அடிப்படையில் விஷ்ணுபுரம் ஒரு “தத்துவ காவியமும்” தான். எப்படி கௌஸ்துப காண்டத்தில் தத்துவங்கள் காவிய மயமாக்கப் பட்டுள்ளனவோ, அதே போல ஸ்ரீபாத காண்டத்திலும், மணிமுடிக் காண்டத்திலும், காவியம் முழுவதும் தத்துவ மயமாக்கப் பட்டுள்ளது. பிங்கலனும் சங்கர்ஷணனும் திருவடியும் லட்சுமியும் லலிதாங்கியும் பிரசேனரும் கொள்ளும் வெறுமையும் தனிமையும் எல்லாம் காலரூபமாக சுழன்று நிற்கும் மகாசூன்யத்தின் மூர்த்திகரணங்கள் அன்றி வேறென்ன? வேததத்தனும், பாவகனும், பத்மனும் கொள்ளும் உணர்ச்சிகளும், வெண்பறவைகள் தலைசிதறி அழிவதும் வெளியே நிகழும் மகா பிரளயத்திற்கு ஈடாக உள்ளேயும் மனோநாசம் நிகழ்வதற்கான தத்துவப் படிமங்கள் அன்றி வேறென்ன?

நாவல் என்ற நவீன இலக்கிய வடிவத்தில் தத்துவ அம்சங்களுக்கும், தத்துவ சிக்கல்களுக்கும் எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பது இலக்கிய விமர்சகர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கருத்து. பொதுவாக, பெருநாவல்களில் சித்தரிப்புகள், உரையாடல்கள், கதைப்பின்னல்கள் இவற்றோடு கூட ஒரு சில அத்தியாயங்களில் தத்துவ சிந்தனைகள் அழுத்தம் தரப்பட்டு இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

ஆனால், விஷ்ணுபுரத்திலோ நாவலின் ஒவ்வொரு இழையிலும் தத்துவத் தேடலுக்கான வெளி உள்ளது. நாவல் முழுவதிலும், ஆழமான தத்துவத் திறப்புகளை சென்று தீண்டாத ஒரு அத்தியாயம் கூட இல்லை எனலாம். இதுவும் விஷ்ணுபுரத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று.

இவ்வாறு காவியமாக்கல், தத்துவமாக்கல் இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து விஷ்ணுபுரம் நூல் நெடுகிலும் விரவியுள்ளன என்று சொல்லலாம்.

[மேலும்]

முந்தைய கட்டுரைவிலாங்கு
அடுத்த கட்டுரைவழி