நட்பு

அன்புள்ள போகன்,

சில யதார்த்தங்களில் இருந்து ஆரம்பிக்கிறேன்

ஒன்று, நீங்கள் சொல்வதுபோல நான் நட்புகள் முறியும் அனுபவம் அதிகம் உடையவன் அல்ல. ஒப்புநோக்க எனக்கு வரும் நட்புகளில் மிகமிகச்சிலவே முறிகின்றன. பெரும்பாலான நட்புகள் அப்படியே இன்றுவரை நீடிக்கின்றன.பல நட்புகள் கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்கால ‘வரலாறு’ கொண்டவை!

நான் இளமையில் நட்புசூழ வாழ்ந்தவன். எந்நேரமும் நண்பர் புடைசூழ இருந்தவன். அந்நண்பர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் நான் ஆழமாகப் பதிந்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன். என்னுடைய பள்ளி நண்பர்கள் அனேகமாக அனைவருமே அவர்களின் பிள்ளைகளுக்கு என் பெயரைப் போட்டிருக்கிறார்கள். ‘ஜெய’ பெயர் கொண்ட பதினைந்துவயதுப் பிள்ளைகள் பலர் இருக்கிறார்கள். கண்கள் பிரியத்தில் நெகிழ நண்பர்கள் எனக்கு அவர்களைப்பற்றிச் சொல்வார்கள். அவர்களின் மனைவிகள் அவர்கள் என்னைப்பற்றிக் கொண்டிருக்கும் பிரியத்தை என்னிடம் சொல்வார்கள்.

சிலநாட்களுக்கு முன்னால் என் இளம்நண்பர் பிரேராவின் மனைவி சொன்னார்‘கல்யாணமான நாளுலே இருந்து உங்க பேச்சுதான். குங்குமத்திலே உங்க படம்போட்டிருக்குன்னு சொன்னாங்கன்னு இங்க போயி கேட்டுபாத்தப்ப இல்லேன்னு சொன்னாங்க. பைக் எடுத்துட்டு தொடுவட்டி போயி வாங்கிட்டு வந்தாவ. சும்மா வச்சு பாத்துக்கிட்டே இருந்தாவ’ நண்பர் கண்களில் சிரிப்புடன் தலையசைத்தார்.

இந்த நட்பின் பின்னால் ஒரு கடந்த கால ஏக்கம் உள்ளது. இன்றுள்ள மாணவர்களைப்போல படிப்பை மட்டுமே நடத்திய சோகையான மாணவர்கள் அல்ல நாங்கள். மொத்தக் கன்னியாகுமாரி மாவட்டத்தையும் அலைந்து திரிந்து கண்டடைந்தவர்கள். வாடகை சைக்கிள்களில் கொளுத்தும் வெயிலில் டபிள்ஸ் அடித்து முப்பதும் நாற்பதும் கிலோமீட்டர் தூரம் பயணம் சென்ற நாட்கள் எல்லாம் மீண்டும் வராத பொற்காலங்கள்.

அந்தக்குழுவுக்குள் எப்போதும் அத்துமீறிச்செல்லும் கற்பனையாலும் வாசிப்பாலும் பிறரைக் கவரக்கூடியவனாக நான் இருந்தேன். அந்நாட்களில் நாங்கள் பித்துப்பிடித்ததுபோல திருவிழாக்களிலும் கோயில்கலைகளிலும் ஈடுபட்டிருந்தோம். ‘ஒரு மாறுதலுக்காக’ சர்ச்சின் ஊசிக்கோபுர உச்சி நுனியில் ஏறி அமர்ந்து சிலுவைப்பாடு நாடகம் பார்த்திருக்கிறோம். வருடத்தில் நூறு திருவிழா நடந்த அந்தக் குமரிமாவட்டமும் இன்றில்லை.

பின்னர் நான் நட்பே இல்லாதவனானேன். மிகக்குறுகிய காலம். உக்கிரமான அந்தரங்கத் தனிமையில் அலைந்தேன். ஆனால் காசர்கோட்டுக்கு வந்தபின் மீண்டும் தீவிரமான நட்புகள் உருவாயின. அவர்கள் என்னை மீட்டார்கள். இரவெல்லாம் நீண்ட தொழிற்சங்கக்கூட்டங்கள், அரசியல் வகுப்புகள்,இலக்கிய விவாதங்கள், உண்ணாவிரதங்கள், நடைப்பயணங்கள். அந்த நட்புகள் இன்றும் நீடிக்கின்றன.

எழுத்தாளனாக ஆனபின் நட்புவட்டம் திடீரென்று பெருக ஆரம்பித்தது. அவ்வளவு நட்புகளை என்னால் கையாள முடியவில்லை. அந்நாட்களில் ஒருமுறை ஒருவரைத் தவிர்ப்பதுபற்றி நித்ய சைதன்ய யதியிடம் பேசும்போது ’நட்புக்கு முன் நான் மனிதர்களை மதிப்பிடுவதில்லை. ஏனென்றால் நட்புதான் அவர்களை மதிப்பிடும் வழி’ என்றார். அதை ஒரு விதியாக எடுத்துக்கொண்டேன். என்னை நெருங்கிவரும் எவரையுமே தவிர்ப்பதில்லை, எவரிடமும் நல்ல நட்பை என்னளவில் நீட்டிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

இப்போதும் அதற்காகவே முயல்கிறேன். எல்லாரையும் உடனடியாக நட்பாக ஏற்றுக்கொள்கிறேன். ஆரம்பத்திலேயே தவிர்ப்பதில்லை. ‘எச்சரிக்கையாக’ இருப்பதில்லை. அதனால் பல சிக்கல்கள், இழப்புகள் வந்திருக்கின்றன. மனச்சோர்வுகளும் அவமதிப்புகளும் நிகழ்ந்துள்ளன. ஆனாலும்கூட ஒருவரை அறிய ஒரு நல்ல வாய்ப்பு அளித்தபின் அந்தப்பிரிவு நிகழ்ந்துள்ளது, பரிசீலனையே இல்லாமல் நிகழவில்லை என்று ஒரு நிறைவு உள்ளது. இதுதான் நல்ல வழி என்றே இப்போதும் நினைக்கிறேன்.

எனினும் எழுத்தாளனாக அது மிகவும் கடினம். அதில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால் பிறநட்புகள் நம் தனிப்பட்டஆளுமையைச் சார்ந்து உருவாகக்கூடியவை. எழுத்தாளன் என்ற நிலையில் உருவாகும் நட்புகள் நம் எழுத்து உருவாக்கும் பிம்பம், சமூக இடம், அதிகாரம் ஆகியவற்றை சார்ந்தே முதலில் அமைகின்றன. அந்த எல்லையைத் தாண்டி நம் ஆளுமையுடன் நெருங்கும்போதே உண்மையான நட்புகள் உருவாக முடியும்.

இந்நிலையில் அறிமுகம், பழக்கம் என்பதற்கும் நட்புக்கும் நடுவே ஒரு வடிகட்டி தேவையாகிறது. இந்தவடிகட்டி வழியாக இப்பால் வந்து நம்மை நெருங்குபவர்களை மட்டும் நண்பர்களாகக் கொண்டால்போதும் என்பதுதான் நடைமுறையில் சாத்தியமானது. எழுத்தாளர்கள் அவர்களுக்கே உரிய முறையில் ஒரு வடிகட்டியை உருவாக்கி வைத்திருப்பார்கள். உதாரணமாக ஜெயகாந்தன் எப்போதும் புதியவர்களிடம் ஒரு உதாசீனமான முரட்டுபாவனையைக் கைக்கொள்வார்.

நான் என்னை நெருங்குபவர்களிடம் எழுத்தாளனாக அல்லாமல் ஜெயமோகனாக இருப்பது என்பதை ஓர் வடிகட்டியாக வைத்திருக்கிறேன். அவர்கள் உருவாக்கிக்கொண்டுவரும் எந்த பிம்பத்தையும் நான் ஆதரிக்கமாட்டேன். சர்வசாதாரணமாக இருப்பேன். அவர்கள் ஏமாற்றம் அடைந்தால் அது என் பிரச்சினை அல்ல. அது எனக்கு எப்போதுமே உதவுகிறது.

ஆனாலும் என் நண்பர்களின் எண்ணிக்கை மிக அதிகம். என்னைப்போன்ற ஒருவன் கையாளக்கூடியதைவிடப் பற்பலமடங்கு அதிகம். அந்நட்புகள் அனேகமாக எவையுமே உடைவதில்லை. இலக்கியவாசகர்களாக அறிமுகமானவர்கள் நாட்பட நாட்பட இலக்கியமே முக்கியமில்லை என்பதுபோல நெருக்கமாகிவிடுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை பெருகியபடியும் உள்ளது. என் இதுவரையிலான வாழ்க்கையில் அத்தகைய நட்புகளில் ஒன்றுகூட விலகிச்சென்றதில்லை. மனவிரிசல் நிகழ்ந்ததும் இல்லை.

ஆனால் எழுத்துத்தளத்தில் உருவாகும் நட்புகளில் விரிசல்களுக்கான சாத்தியங்கள் பல உள்ளன. காரணம் எழுத்தாளனாக என்னை அணுகக்கூடிய எழுத்தாளர்களுக்குப் பலவகை நோக்கங்கள் உள்ளன. நம் இளமையில் சக எழுத்தாளர்களாக அறிமுகமானவர்களிடம் உள்ளூர ஒரு பொறாமையும்போட்டியும் இருக்கும். அதிலிருந்து மனப்பிளவுகள் உருவாகும். எழுத்தாளர்கள் இதைத் தவிர்க்கவே முடியாது. மனப்பிரிவினை உருவாகும்போது மென்மையான விலகலாக அதை அமைத்துக்கொள்ளலாம் என்பது மட்டுமே வழி

ஆனால் என் வரையில் கடந்தகாலத்தில் அவ்வாறு நெருக்கமாக உணர்ந்து இன்று தூரத்தை உணரும் சக எழுத்தாளர்கள் என எவரும் இல்லை. வாழ்க்கைப்போக்கில் அடிக்கடி சந்திக்காமல் ஆன எழுத்தாள நண்பர்கள் உண்டு, சுரேஷ்குமார் இந்திரஜித் போல. அதேசமயம் கால்நூற்றாண்டாகப் பல எழுத்தாள நண்பர்களுடனான நட்புகள் தீவிரமாகவே இன்றும் நீடிக்கின்றன. பாவண்ணன், யுவன் போன்றவர்களுடனான நட்பு நான் எழுத ஆரம்பிக்கும்போதே உருவானது.

பொதுவாக தமிழில் சேர்ந்து சிற்றிதழ் ஆரம்பித்தவர்கள் சண்டைபோட்டுத்தான் பிரியவேண்டுமென்பது மாறாவிதி. அப்படி சிற்றிதழ்நடத்தியும் சண்டைபோடாமல் நீடிக்கும் நட்பு சொல்புதிது குழுவின் நட்புதான். சமீபத்தில் சூத்ரதாரி [எம்.கோபாலகிருஷ்ணன்] யிடம் அதைச் சொன்னேன். ‘எழுதிக்கிழுதி வச்சிடாதீங்க. சண்டய உண்டாக்கிரப்போறாங்க’ என்று சிரித்தார்.

நான் எப்போதுமே அபிப்பிராயங்களை உருவாக்கக்கூடியவனாகவே இருந்திருக்கிறேன். ஆகவே இளம் எழுத்தாளர்கள் என்னை அணுகும்போது அவர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு உள்ளூர இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு பொய்க்கும்போது சிலசமயம் கடுமையான மனமுறிவுகள் உருவாகின்றன. அவற்றை இந்த ஆட்டத்தின் இயல்பான விதிகள் என்றே எடுத்துக்கொள்கிறேன்.

பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களுக்கும் அவர்கள் பற்றி, அவர்களுடைய ஆக்கங்கள் பற்றி மிகையான மதிப்பீடுகள் இருக்கின்றன. சில சமயம் அவை நம்பமுடியாத அளவுக்கு யதார்த்தஅடிப்படை அற்றவை. நாம் அந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளமுடியாத நிலையில் இருந்தால் அவர்கள் ஆழமாகப் புண்படுகிறார்கள். ஆரம்பத்தில் எனக்குத் திகைப்பை அளித்த விஷயம் இது. ஒரு சர்வசாதாரணமான விமர்சனக் கருத்தால் கொந்தளித்துப்போய்விடுகிறார்கள். ஆனால் நம் விமர்சனத்தைக் கோரியபடியும் இருப்பார்கள்.

ஆரம்பகாலத்தில் புண்படுத்தாமல் மென்மையாகக் கருத்துக்கள் சொல்லவும் பாராட்டுக்களுக்குள் பொதிந்து விமர்சனங்களைச் சொல்லவும் முயன்றிருக்கிறேன். பிறகு தெரிந்தது எப்படித்தான் சொன்னாலும் விமர்சனம் அதைப் பெறுபவருக்கு ஆழத்தில் நேரடியாகவே சென்று தாக்குகிறது என. ஆகவே இன்றெல்லாம் ஓரளவு கறாராகவே என் மதிப்பீடுகளைச் சொல்கிறேன்.இவ்வாறு அறிமுகமாகும் பத்து இளம் இலக்கியவாதிகளில் எழுவர் விலகிச்செல்ல எஞ்சும் மூவருடனான நட்பு கடைசிவரைக்கும் நீடிக்கிறது. இதுவே நான் கண்ட நல்ல வழியாகும்.

இப்படி விலகிச்சென்றவர்களில் தங்களை நிரூபித்துக்கொண்டவர்கள் நட்புக்குள் மீண்டும் வருகிறார்கள். கடுமையான கசப்புடன் நீடிப்பவர்கள் தொடர்ந்து தங்களை நிறுவிக்கொள்ள முடியாமலிருப்பவர்கள்தான். அது தங்கள் தகுதியின்மையால்தான் என நம்ப அவர்களால் முடிவதில்லை. ஆகவே தங்களால் தங்கள் விரும்பிய இடத்தைஅடையமுடியாது போனமைக்குப் பிற காரணிகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். எதிரிகளைக் கண்டடைகிறார்கள். அந்த எதிரிகளில் ஒருவராக நாமும் இருக்கிறோம்.

இலக்கியம் என்பது கருத்துமாறுபாடுகள் எழக்கூடிய ஒரு தளம். ஒவ்வொருவரும் தங்களுக்கான இடத்தை வழியைத் தேடிக்கொண்டிருக்கும் வெளி. நான் பலமுறை சொல்லியிருப்பதுபோல இலக்கியமே ஒரு நுட்பமான அகங்காரச்செயல்பாடு. ஆகவே இங்கே கசப்புகள் ,வெறுப்புகள் ,நிராகரிப்புகள் ஆகியவற்றுக்கான காரணங்கள் உள்ளூர எங்கோ கொப்பளித்தபடி இருக்கின்றன. இன்னொருவரின் வெற்றி தன்னை மறைக்காமலிருப்பதற்காக ஓர் எழுத்தாளன் வெறுப்பை உருவாக்கிக்கொள்ளலாம். இன்னொருவன் உருவாக்கும் கலைவிதிகள் தன்னைக் குறைத்துக்காட்டும் என்பதை அறிந்து நிராகரிப்பைக் கட்டமைக்கலாம். உலகம் முழுக்க இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

தான் எழுத விரும்பாதவற்றை எழுதிய இன்னொருவனை எழுத்தாளன் வெறுப்பான்.தான் எழுத விரும்புவதை எழுதியவனை இன்னும் உக்கிரமாக வெறுப்பான். அந்த ஆழத்து வெறுப்பில் இருந்து கோட்பாட்டுக்காரணங்களை கண்டுபிடிப்பான். தனிப்பட்ட காரணங்களை உருவாக்கிக்கொள்வான். அதைப்புரிந்துகொள்ள முயல்வதே வீண். அதை சரிசெய்ய நினைப்பது அதைவிட வீண். நம் தரப்பை சமநிலையுடன் வைத்துக்கொள்வதும் சாதாரணமாக அதைக் காலத்தில் தாண்டிச்செல்வதுமே சரியான வழி.

இந்தப் புரிதல் எனக்கு உருவாக நித்யா ஒரு காரணம். ஆகவே எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தாண்டிச்சென்றுவிடுவேன். அந்தவகையில் ஒருவேளை இலக்கியத்தில் இன்று மிகக்குறைவான முறிவுகளுடன் மிக அதிகமான நட்புவட்டத்துடன் இருக்கும் எழுத்தாளன் நானே. கறாரான கருத்துக்களுடன் இதை அடைந்திருப்பதை என்னுடைய ஆளுமையின் வெற்றி என்றே நினைக்கிறேன்.

பலவற்றை நாம் அனுபவங்கள் வழியாகக் கற்றுக்கொள்கிறோம். என் நண்பர்கள் எவரேனும் ஒருவரைச் சுட்டி ‘இவரை எப்படித் தாங்கிக்கொள்கிறீர்கள்?’ என்பார்கள். ’என்னை அவர் தாங்கிக்கொள்வதனால்’ என்று பதில் சொல்வேன். பொதுவாக நித்யா சொன்னபடி எவரையும் தவிர்க்காமல், எவர் மேலும் தீர்ப்பளிக்காமல், முடிந்தவரை நட்பை நீட்டிக்கவே நான் முயல்கிறேன். அந்நட்பினால் ஒட்டுமொத்தமாக என்னுடைய அனைத்து நட்புகளுக்கும் ஊறுவிளையும் என்றால், என்னுடைய மனச்சமநிலை ஒட்டுமொத்தமாகவே குலையும் என்றால், என்னைச் சுரண்ட மட்டுமே ஒருவர் முயல்கிறார் எனத் தெரியும்போது மட்டுமே விலகிக்கொள்கிறேன்.

அப்படி மிக அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது. அப்படி முறிந்த பின் அந்த நட்பைப்பற்றிய குறைகளை மேலே நினைவில் கொண்டுசெல்வதில்லை என்பதே நான் எனக்காக வைத்துக்கொண்டுள்ள விதி. அந்நினைவை அப்படியே அகற்றிவிடுவேன். கசப்புகளைக் கொண்டுசெல்வது எழுத்தாளனை வன்மம் மிக்கவனாக ஆக்கும். உண்மையான மனஎழுச்சிகள் நிகழமுடியாதநிலைக்குக் கொண்டுசெல்லும்.

கடைசியாக ஒன்றுண்டு. எழுத்தாளனாக நாம் எப்போதும் மிகைவெளிப்பாட்டுக்கு மிக அருகில்தான் நின்றுகொண்டிருக்கிறோம். உணர்ச்சிகள் நம் கட்டுக்குள் நிற்பதில்லை. அதுகூடப் பெரிய விஷயமல்ல. நாமே உருவாக்கிக் கொண்ட ஒரு கருத்துச் சட்டகம் நம் பார்வையை மறைத்துவிடுகிறது. உண்மைக்குப்பதில் நமது உண்மையை நாம் உருவாக்கிக்கொள்கிறோம். ஆகவே மிக எளிதாக நம் தரப்பில் தவறுநேர்கிறது. அதற்கான மாற்று வழியாக நான் நினைப்பது ஒரு முடிவை அல்லது நிலைப்பாட்டை எடுத்தபின் அகங்காரம் காரணமாக அதில் தொங்கிக்கிடக்காமலிருப்பதே. அதைக் கைவிட, அது தவறென்றால் அதற்காக மன்னிப்புக் கோர எப்போதும் தயாராக இருப்பதே.

வேறு வழியில்லை. நாம் ஒரு பெரிய நதியில் மிதந்துசெல்லும் எறும்புகள். நம்மருகே மிதந்துசெல்பவை எவை என நாம் பெரிதாகத் தீர்மானிக்கமுடியாது. நாம் அணுகுவதும் விலகுவதும் நம் கையிலும் இல்லை. நாம் செய்யக்கூடியது நம் வரைக்கும் விலக்கம் கொள்ளாமலிருக்க மட்டுமே. காயங்கள் துயரங்களுடன் எல்லா உறவுகளும் காலத்தில் பின்னுக்குச்சென்று வெறும் வடுக்களாக மட்டும் ஆகும். நட்புகள் மட்டும் அல்ல, சொந்தப் பெற்றோர் மனைவி குழந்தைகளுடனான உறவுகளும் கூட அப்படித்தான்.

க.நா.சு சொல்வார் ‘எல்லாமே முக்கியம்தான், ஆனால் எதுவுமே முக்கியமும் அல்ல’

ஜெ

முந்தைய கட்டுரைசோ-அண்ணா ஹசாரே-ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைநாஞ்சில் கலிஃபோர்னியாவில்