அறிவுஜீவிக்குரங்கும் ஆப்பும்

[மறுபிரசுரம்]

ஊருக்கு முதல்வனையும் போருக்கு முதல்வனையும் யமனே நேரடியாக வந்து கூட்டிச்செல்லவேண்டுமென்ற விதி இருந்தாலும் குரங்குகளுக்கு அது செல்லுபடியாவதில்லை. ஆகவே முதலில் ‘அனுமதி’ என்று போட்டிருந்த நீண்ட வரிசையில் அறிவுஜீவிக்குரங்கை நிற்கவைத்தார்கள் கிங்கரர்கள். வாலைச்சுருட்டிக் கொண்டு சாதுவாக நின்று வேடிக்கை பார்த்தது.

வரிசையில் முன்னால் நின்றது ஒரு சிங்கம். ”எப்படி?”என்று அறிவுஜீவிக்குரங்கு நலம்விசாரித்தது. ”கிணற்றுக்குள் இருந்த சிங்கத்தைப் பிடிக்கப் போனேன்” என்றதுகாட்டரசன். ”அது பஞ்சதந்திரக் கதைகளில்தானே?” என்றது அறிவுஜீவிக்குரங்கு.”அது எங்கள் கொள்ளுதாத்தாவுக்கு தாத்தா. பொதுவாக இது எங்கள் பரம்பரைவழக்கம்…” ”ஓகோ”என்றது அறிவுஜீவிக்குரங்கு. ”உள்ளே இருந்த சிங்கம் சரியான முட்டாப்பயல்.நான் குதித்ததும் அவனும் என்னை நோக்கி பாய்ந்துவந்தான். ஒதுங்கு ஒதுங்கு என்று நான் கத்திக் கொண்டேதான் போனேன். முட்டிக் கொண்டோம்…”

”அங்க என்ன பேச்சு? இது உங்க பூலோஹம் இல்லை. யமலோஹமாக்கும். வாய மூடுங்கோ”என்றது அவ்வழியாகச் சென்ற முயல். ”நீங்க?” என்றது அறிவுஜீவிக்குரங்கு.”நாந்தான்…தெரியலையா? நாலுவேதம் ஆறு சாஸ்திரம் படிச்ச மொசல்னு ஒரு திருநவேலி சைவப்பிள்ள என்னைப்பத்தி எழுதியிருக்காரே….” ”ஆமா…’எல்லாம் முடிவிலே இன்பம்-ங்கிற கதை. புதுமைப்பித்தன் எழுதினது…நீங்கதானா அது? எங்க அந்த கறுப்புநாய்?” ”அவாளுக்கெல்லாம் நரஹம். மாம்சம் சாப்பிடுற நீஜாள். சத்தம் போடாதீங்கோ…

’’சைலேன்ஸ்!” வைதீக முயல் அதட்டிவிட்டு ”தாசாரதே!” என்று அலுத்தபடிஅந்தப்பக்கமாகப் போயிற்று. அறிவுஜீவிக்குரங்குக்கு சற்று களைப்புதான். வரிசைமெல்லமெல்லத்தான் சென்றது. பக்கத்திலே விறகுவண்டிகள் உள்ளே சென்றுகொண்டிருந்தன. எண்ணைக்கொப்பரைகளைக் காய்ச்சுவதற்கான விறகு என்றது அருகே நின்ற பன்றி.

ஒருவழியாக பெயர் பதிந்து துண்டுசீட்டுவாங்கிக் கொண்டு உள்ளே போய் நின்றபோது சற்றே கண்ணசத்தியது. உட்கார்ந்து தூங்க கொழுகொம்பு இல்லாமல் கஷ்டமாக இருந்ததனால் வாலால் பக்கத்தில் நின்ற வெள்ளாட்டின் கழுத்தைச் சுற்றிக் கொண்டாலும் ஒன்று குறைந்தது. ”எக்ஸ்யூஸ் மி” என்றது அறிவுஜீவிக்குரங்கு. ”என்னாது?”என்றார் கிங்கரர். ”ஒரு பின்நவீனத்துவக் கட்டுரை கெடைக்குமா? கண்ணசத்துது…தூங்கலாம்ணு பாக்கிறேன்…” ”இங்க லைப்ரரியிலே அதெல்லாம் கெடையாது. வந்துசேரலை…” என்றார் இன்னொரு ஒல்லி கிங்கரர்.

”நாங்கள்லாம் இப்பமும் பழைய ரஷ்யமுற்போக்கு கோட்பாடுதான் படிச்சுட்டிருக்கோம். ஒரு எழவும் புரியல்ல்லே…..” ”வெறகு வண்டிகளைப் பாத்தப்பவே நெனைச்சேன்.” என்ற குரங்கு ஆவலாக ”ரஷ்ய ஆட்கள்லாம் எங்க இருக்காங்க?” என்றது. ”பல எடங்களிலே பரவி இருக்காங்க. அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது. அவங்க அதையெல்லாம் படிக்கலை. அச்சடிச்சதுமே ஏற்றுமதி பண்ணிடுவாங்களே…” ”அப்ப தோழர்கள்ட்ட கேட்டுபாக்கிறது?” ”வெளையாடாதீங்க. அவங்க எங்க படிக்கிறாங்க? அவங்க விக்கிறதோட சரி”

அறிவுஜீவிக்குரங்கு கொட்டாவி விட்டு ”சரி அப்ப அதையாவது குடுங்க…தூங்கணும்ல?” என்றார். பிளாட்டானோவ் எழுதிய ‘இலக்கியம் என்பது என்ன?’ என்ற தடிமனான நூலின் ரா.பூர்ணையா தமிழாக்கம். ”பூர்ணையா இங்கதானே இருக்கார்?” என்றது அறிவுஜீவிக்குரங்கு அதை பிரித்துக் கொண்டே. ”ஆமா. நரகத்தை பத்தி நாங்க சொற்கத்துக்கு குடுக்கிற ரிப்போர்ட்டெல்லாம் அவர்தான் டிரான்ஸ்லேட் பண்றார்…”

அழைப்புவந்தபோது அறிவுஜீவிக்குரங்கு எழுந்து மிடுக்காக நடந்து உள்ளே போயிற்று. யமதருமனைப் பார்த்ததும் அவருக்கு சற்றே குழப்பம். எங்கேயோ பார்த்த முகம்.”ய்யே கொக்குமக்கா, யாருய்யா இவுஹெ?” என்று யமன் கேட்டதுமே தெளிந்து சிரிப்பை அடக்கிக் கொண்டது குரங்கு.

யமன் சினந்து மீசையை முறுக்கியபடி ”சிரிக்காதே வானரப்பதரே. எனக்கு உருவம் கிடையாது. உனக்குள் இருக்கும் யமனுருவில் என்னை நீ காண்கிறாய்… நெடுங்காலம் ஹெரான் ராமசாமி வடிவிலே என்னைப்பார்த்த மானுடப்பதர்கள் இன்று……” என்று சொல்லிவந்து சட்டென்று மனமுடைந்து நாத்தழுதழுக்க ”என்ன மயித்துக்குடா நீயெல்லாம் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ மாதிரி படம்லாம் பாக்கணும்? எடுபட்ட பயலே?” 

”நான் அறிவுஜீவிக்குரங்கு யமதருமரே” என்றது அறிவுஜீவிக்குரங்கு. ”குரங்கு வம்சம்தான். ஆனால் நாங்கள் பரிணாமத்தின் அடுத்த படி…””அதென்ன ஜீவி? வனஜீவி என்றுதானே கேட்டிருக்கேன். கொழப்பமா இருக்கே…அவூஊ” என்று பம்மிய யமதருமன் சித்திரபுத்திரனிடம் ”யோவ் கணக்கு ,என்னய்யா இது?”என்றார்.

”அப்படி ஒரு ஜீவி பூலோகத்திலே உலவுகிறது மன்னரே” என்றார் சித்திரபுத்திரன்.”இது அதில் ஒருவகை”. அறிவுஜீவிக்குரங்கை யமன் கூர்ந்து நோக்கி ”இது என்னபண்ணும்?”என்றார். ”தாவும்.வேற என்னத்த பண்ணப்போகுது?”

”நான் புஸ்தகம் படிப்பேன்…” என்றது அறிவுஜீவிக்குரங்கு. ”எதுக்கு?”என்றார் யமதருமன். ”இது என்ன கேள்வி? திட்றதுக்குத்தான்”. ”அட நாதாரிப்பயலே…அப்றம்?” ”நானே புஸ்தகம் எழுதுவேன்…” ”ஆத்தீ ,அது எதுக்கு?” ”மன்னா நீவீர் இத்துணை கேணையனாக இருத்தல் தகாது…”என்றார் சித்திரபுத்திரன் ”பிறரும் திட்டவேண்டாமா? அதற்குத்தான்”

யமன் மீசையை முறுக்கியபடி உற்று நோக்க அறிவுஜீவிக்குரங்கு ”என்னை அப்படி சும்மா எடை போட்டுவிடாதீர்கள் மன்னா.என் நாவல்களை எடைபோட முடியாமல் பூலோகத்தில் திணறிக்கொண்டிருக்கிறார்கள்….” சித்திரபுத்திரன் பக் என்று சிரித்து ”யமலோகத்தை தவறாக எண்ணிவிட்டீர் ஐயா. இங்கே நாங்கள் அவற்றை எடைபோட்டுவிட்டோம்…”

”எப்படி?” ”எளிது. முதலில் அவற்றை ஒரு படகில் ஏற்றி நீரில் மிதக்க விட்டோம்.அமிழும் இடத்தை அடையாளம் செய்தபின் அதேயளவுக்கு மண்ணை ஏற்றினோம். அந்த மண்ணை அளந்து நோக்கினோம்….”

அறிவுஜீவிக்குரங்கு சற்றே சோர்ந்து ”பெரிதாக ஒன்று எழுதிக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் இப்படி ஆயிற்று…” என்றது. ”என்னாது?” என்று யமதருமன் ஐயத்துடன் கேட்டார். ”அங்கதம்!” சித்திரபுத்திரன் ”வாலியின் தம்பிதானே? அவன் என்ன செய்தான்?” அறிவுஜீவிக்குரங்கு தவித்து ”இது வேறு, இது பாரடி” என்றது.

”பிழை. நீவிர் சித்திர புத்திரனைக் குறிப்பிட்டிருந்தால் பாரடா என்றிருக்கவேண்டும்” என்றார் யமதருமன். அறிவுஜீவிக்குரங்கு குழப்பமாக வாலை சுழற்றியபின் ”மன்னா இது கிண்டல். நக்கல்.” சித்திரபுத்திரன் ”அதுவா? சுருக்கமாச் சொன்னா வாய்க்கொழுப்பு சீலையிலே வடியறது..”என்றார்.

”அப்டி என்னத்தை செய்து தொலைச்சீர்?” என்றார் யமதருமன். ”என்ன சொல்றது போங்க. விதி. எங்க காட்டிலே ஒரு மரத்திலே நாங்க பத்திருபதுபேரு ஒரு  குழுமமா உக்காந்துபேசிட்டிருந்தோம்….” ”எல்லாமே வானரம்தானா?” ”இல்ல. எல்லா இனமும் உண்டு. வாயப்பொளந்து கேட்டுட்டு மட்டும் இருக்கிற முதலைகூட நாலஞ்சு உண்டு…”

”ஸ்திரீகள்? ”என்றார் யமதருமன். ”உண்டு, உண்டு… வேறு கோணத்தில் எல்லாவற்றையும் புரிந்துகொள்வார்கள்” என்றது அறிவுஜீவிக்குரங்கு. ”வேறு கோணத்தில் என்றால்?” அறிவுஜீவிக்குரங்கு மன்னிப்புகோரும் புன்னகையுடன், ”தப்பாகப் புரிந்துகொள்வதைத்தான் அறிவுஜீவி மொழியிலே அப்படிச் சொல்வோம்…”என்றது.

”சரி…அங்கே என்ன செய்தீர்கள்?” ”வேறு என்ன செய்வது, விவாதித்தோம்.””எதை?” ”விவாதத்தை” ”அப்புறம்?” ”அங்கே ஒரு திருநெல்வேலி சைவப்பிள்ளைக் குரங்கு—”

”அடப்பாவி அப்டியா நீ இந்தக் கதிக்கு ஆளானாய்?” என்று யமன் அலறினார். ”விதி வலிதல்லவா மன்னா?”என்று சித்திரபுத்திரன் பெருமூச்சுவிட்டார். அறிவுஜீவிக்குரங்கும் கண்ணீர் உகுத்தது.

”சரி போனது போகட்டும். என்ன நடந்தது?” என்றார் சித்திரபுத்திரன். ”அந்தப்பாவிதான் நீ நன்றாகக் கடிக்கிறாய் என்று என்னை பாராட்டினான். முதலில் ஒரு ஆட்டைக்கடித்துப் பார். பிரச்சினை இல்லை என்றால் பிறகு மாட்டைக் கடித்துப்பார்க்கலாம் என்று சொன்னான்… அப்படியே கடிக்கப்போய்த்தான்….”

”அதுசரி…கடைசியில் என்ன ஆயிற்று?” என்றார் யமதருமன்.. ”இன்னும் என்ன ஆகவேண்டும்? இதோ வந்து நிற்கிறேனே இது போதாதா? வரலாற்றையே உலுக்கக் கூடிய நாவலை பாதியிலேயே விட்டுவிட்டு…” ”அதை இங்கே வந்து உலுக்கலாமே…” என்றார் யமதருமன் ஆறுதலாக.குரங்கு கடுப்பாக ” இங்கே எங்கே வரலாறு இருக்கிறது? எங்கே பார்த்தாலும் ஒரே புராணம்…”என்றது.

சித்திரபுத்திரன் ”எனக்கு ரிப்போர்ட் அனுப்ப தேவைப்படுது. நடந்த சம்பவத்தைச் சொல்லும் ஓய் ”என்றார்.”போகிற வழியில் ஒரு கொட்டகைக்குள் பாதி அறுத்த ஒரு மரத்தைப்பார்த்தேன்…ஆப்பு வைத்து அகற்றியிருந்தார்கள்…” யமதருமன் புன்னகையுடன் சித்திரபுத்திரனைப் பார்க்க அவர் தலையசைத்தார்.”நான் அங்கதம் ஒன்றை எடுத்துவிட்டபோது மரம் வாய் திறந்து சிரிப்பது போல இருந்தது. ஆப்பை எடுத்துவிட்டால் இன்னும் அகலமாகச் சிரிக்குமே என்று எண்ணி போய் உட்கார்ந்து–”

”அட எடுபட்ட பயலே…இதைத்தானே அந்தக்காலத்திலேருந்தே உங்க ஆளுங்க செய்து வராங்க…””அவர்கள் செவ்வியல் குரங்குகள். அவர்கள் செய்ததை நான் பலமுறை நூல்களில் படித்திருக்கிறேன். ஏன், அதைப்பற்றி நானே ஒரு நூலும் எழுதியிருக்கிறேன்…நான்பின்நவீனத்துவச் சாயல் கொண்டவன்…”

”அதென்னாது சாயல்?”

”சாய்ந்து நின்றபோது ஒட்டியது. அதனாலே நான் இன்னும் ஆழமாகச் சிந்தித்தேன்”

”சிந்தித்து?”

”முதலிலேயே வாலை வெளியெ எடுத்து அக்குளில் இடுக்கிக் கொண்டேன். அதன் பிறகுதான் ஆப்பைப் பிடுங்கினேன்…”

”ஆத்தீ…பெரிய ஆளா இருக்கியே…அப்றம் என்ன ராசா?”

”வேறு ஒன்றை எடுக்க மறந்துவிட்டேன்”

முந்தைய கட்டுரைஅறம் வாழும்-கடிதம்
அடுத்த கட்டுரைகோயிலுக்குச் செல்வது ஏன்?