கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

இந்தத் தொலைபேசி உரையாடல் ஒரு சிறு கதையைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது. தங்களின் ஆகச்சிறந்த ஒரு நேர்காணலாகவே இதை பார்க்கிறேன். பெரும்பாலான் உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் தாங்கள் என்ன வரையப்போகிறோம் என்ற திட்டமிடுதலின்றியே தங்களின் படைப்பை தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மேம்பட்ட அனுபவங்களின் அனிச்சையான பகிர்வே அந்தப் படைப்புகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அன்புடன்,
இளம்பரிதி

மதிப்புமிக்க ஆசிரியருக்கு,

நீங்கள் எழுதிய “யானை டாக்டர்” “முராத்தியின் பீர் புட்டிகள் ” படித்தபின் வீசப்படும் புட்டிகளினால் விலங்குகள் படும் துயரம் புரிந்தது.

ஆனால் அந்த அவலமான நிலை இப்பொழுது சென்னை வீதிகளிலேயே நடக்கிறது. அவசரத்திற்கு டாஸ்மாக்கிற்கு ஒதுங்கும் குடிமகன்கள், இப்பொழுதெல்லாம் தெருவிலேயே சுவர் ஓரத்தில் தங்கள் வேலையை முடித்து கொண்டு போகிற போக்கில் புட்டிகளை போட்டுவிட்டுச் செல்கின்றனர். என்ன அவர்கள் அதை உடைத்து தூளாக்குவதில்லை . எப்படியும் பல தெருக்களில் நடை பாதை கிடையாது. அதனால் பின்னால் வரும் வண்டிகள் அந்த புட்டிகளை உடைத்து தூளாக்கிவிடுகின்றன.

பொதுஇடங்களில் புகை பிடிக்க அதிகாரப்பூர்வ தடை இருப்பது போல் குடிக்க தடை இருக்கிறதா தெரியவில்லை. ஆனால் தெருவோரத்தில் குந்தி குடிப்போரை எந்தப் போலிசும் பிடிப்பதாகத் தெரியவில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் தெருவில் நடந்தால் கண்டிப்பாக எல்லா டாஸ்மாக் கடைக்கும் நூறு அடி தூரத்திற்குள் உருளும் மது புட்டிகளைப் பார்க்கலாம். டாஸ்மாக் கடைகளைத் தாண்டி நடக்கவே பயமாக இருக்கிறது.

இதைச் செய்யும் பலர் சராசரிக்கும் கீழ் வருமானம் இருக்கும், கூலி வேலை செய்பவர்களாகவே தெரிகிறார்கள். வேலை கடுமையினால் ஏற்படும் உடல் களைப்பைப் போக்க குடி அவசியமானதாக இவர்களுக்கு இருப்பதை ஒதுக்கவும் முடியவில்லை. ஆனால் இது எங்கு கொண்டு போய் விடுமோ தெரியவில்லை.

குடியினால் சீரழியும் தனிப்பட்ட குடும்பகளைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. ஆனால் பொது வெளியில் இப்படி ஆக்கிரமித்து, பீதியை கிளப்பும் இவர்களின் செயலை ஒரு சராசரி குடும்பஸ்தனாக, தெருவில் நடக்கும் பிள்ளைகளின் தகப்பனாக எப்படி எதிர்கொள்வது ? குடியிலிருந்து ஓரளவாவது சமூகத்தை மீட்டு கட்டுக்கடங்காமல் போகாமல் தடுக்க என்னதான் வழி ?

கோகுல்

அன்புள்ள கோகுல்,

நீங்கள் குறிப்பிட்ட இச்செயல் கேரளத்தில் தமிழகத்தை விட அதிகம். அதாவது படிப்பும் பணமும் அதிகரிக்கும்போது இந்த மாதிரி குடிமை ஒழுங்குகளை மீறுவதும் நம்மூரில் அதிகரிக்கிறது.

திருவனந்தபுரத்தில் இரவு பன்னிரண்டுக்குப்பின் கிட்டத்தட்ட ஊரடங்கை பிறப்பித்துள்ளது காவல்துறை. நிரந்தரமாக. இதைப்பற்றி இங்கே விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. காவல்துறை அந்தக் கட்டுப்பாட்டை நியாயப்படுத்துகிறது. இரவு கொஞ்சம் கட்டுப்பாட்டை தளர்த்தினால்கூட அடிதடி கலாட்டா என குடிக்கொண்டாட்டம் அத்து மீறுகிறது என்கிறார்கள்.

என்ன புதுச்சிக்கல் என்றால் இன்றெல்லாம் இப்படி குடி கலாட்டாவில் அதிகமான பெண்களும் ஈடுபடுகிறார்கள் என்பதே. குடித்தால் அல்லது கும்பல் சேர்ந்தால் எல்லாவகையான குடிமை ஒழுங்குகளையும் மீறவேண்டும் என நாம் நினைக்கிறோம். அதற்கான உளவியலை யாராவது விரிவாகவே ஆராயவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைமலையாளத்தின் பழமை
அடுத்த கட்டுரைஅத்வைதமும் தொழில்நுட்பமும்