முழுமை, சமூகம், ஐரோப்பா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

நான் ஒருவர் தன் லௌகீக வாழ்க்கையை முழுமையாக்கியபின் அதை
முடித்துக்கொள்வதை உயர்ந்த விழுமியமாகவே நினைக்கிறேன். நான் அப்படி
முடித்துக்கொள்வேன் என்றால் அதை என் உச்சநிலையாகவே எண்ணுவேன்

ஒருவரின் லௌகீக வாழ்க்கை முழுமையடைவது என்பது எப்பொழுது? நான் ஆரம்ப நிலையில் உள்ள உங்களின் வாசகன். எனவே என்னைப் பொறுத்து இதற்கு பதில் அளிக்கவும். நன்றி.

ரவி. கோவை

அன்புள்ள ரவி,

ஒரு வாழ்க்கை முழுமையடைகிறது என்பதை அவ்வாழ்க்கைக்குள் இருக்கும் அந்த மனிதர் மட்டும்தானே சொல்லமுடியும்? பிறர் அதைப்பற்றி எதுசொன்னாலும் அது பிழையாகவே இருக்கும்.

தன் வாழ்க்கை நிறைவடைந்துவிட்டது என்று உணர்ந்தநிலையில் சிலரைப்பார்த்திருக்கிறேன். மிகப் பெரும் மனஎழுச்சி உருவாகிறது.

இளமையில் நாம் வாழ்க்கையின் முடிவில்லா சாத்தியக்கூறுகள் முன்னால் நிற்கிறோம். எல்லாவற்றையும் தொட்டு அனைத்தையும் அடைந்துவிடுவோம் என்று மனம் தாவுகிறது. மெல்ல மெல்ல நம்முடைய சாத்தியக்கூறுகளும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள எல்லைகளும் தெரிய வருகின்றன.

இந்தத் ‘தன்னறிதல்’ ஒரு கட்டத்தில் வந்துவிட்டதென்றால் என்ன செய்யவேண்டும், எவ்வளவு செய்யவேண்டும் என்ற இலக்கும் வழிமுறையும் தெளிவாகிவிடுகிறது. அதைச் செய்பவர் ஒரு கட்டத்தில் ஆம் முடிந்தவரை செய்துவிட்டேன் என்ற நிறைவையும் அடைகிறார்.

நித்யாவின் உவமை ஒன்றுண்டு. மோட்டார் காரும் ஓடுகிறது. கடிகாரமும் இருந்த இடத்தில் இருந்தே ஓடுகிறது. உள்ளிருக்கும் விசை தீர்ந்துவிடும்போதே ஓட்டம் நிலைக்கிறது. அதை ஒருவர் உணரமுடியுமென்றே நினைக்கிறேன்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. தங்களின் ஒரு கொலை அதன் அலைகள் கட்டுரை படித்தேன்.. சமீபத்தில் நான் படித்த “the kingdom of God is within you” டால்ஸ்டாயின் புத்தகத்திலும் நீங்கள் கூறிய அதே கருத்து (யாருக்குக் குற்ற உணர்வு அதிகம் பாதிக்கும்…) கூறியிருக்கிறார். தனி நபர் மன மாற்றத்தினால் இந்நிலை மாறும் எனக் கூறுகிறார் (மிக மிக சுருக்கியிருக்கிறேன் !! படித்த போது மனதில் “இது சாத்தியமா?” என்ற கேள்வி எழுந்தது. 1890s இல் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், மேலும் அந்த காலத்தில் வந்த வேறு சில புத்தகங்களைப் படிக்கும்போது, சமூகத்தில் நிலவும் சுயநலம், ஊழல், வன்முறை etc, இந்த காலத்தில் இருந்து வெகுவாக மாறவில்லை, மேலும் மோசமாகி இருக்கலாம் அல்லது ஊடக வளர்ச்சியினால் இந்தத் தகவல்கள் மேலும் அதிகமான மக்களை சென்று அடைவதால் இதைப் பற்றி விழிப்புணர்ச்சி கூடியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது (ராஜாக்கள் காலத்தில் எப்படி இருந்தது என்று தெரியவில்லை ..)

தங்கள் கருத்தை அறிய ஆவல் … தனி நபர்கள் மன மாற்றமின்றி சமூக மாற்றம் இல்லை என்பது உண்மையாய் தோன்றினாலும், நடைமுறை நோக்கில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது, குறிப்பாக, இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் … சமூக மாற்றத்திற்கு வேறு பாதைகள் உள்ளதா?

தங்கள் பதில் எதிர்பார்க்கும்,
வெண்ணி

அன்புள்ள வெண்ணி,

இதில் தனிமனிதனா சமூகமா என்ற கேள்விக்கு இடமில்லை. அவற்றை அப்படி பிரித்துப்பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை.

ஒரு சமூகத்தில் உள்ள அடிப்படை மனநிலைகள், அறங்கள், ஆசாரங்கள் எல்லாமே அச்சமூகத்தில் கருத்துநிலையாக உறைகின்றன. நாம் அச்சமூகத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் அது சமூகத்தில் உள்ள அமைப்புகளாக அல்லது மரபுகளாக நம் கண்ணுக்குத் தெரியவருகிறது. தனிமனிதனை அலகாகக் கொண்டு பார்த்தால் அதெல்லாமே தனிமனித இயல்புகளாகத் தெரியவருகின்றன.

மாற்றம் என்பது அந்தக் கருத்துநிலையில் உருவாகக்கூடியதே. பெண்கள் கல்விகற்பதற்கும் சம உரிமை பெறுவதற்கும் எதிராக தமிழ்ச்சமூகத்தில் இருந்துவந்த மூர்க்கமான எதிர்மனநிலை எப்படி மாறியது? அதற்காக ஏதேனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டனவா என்ன?

இல்லை. நேர்மாறாக சமூகத்தில் உறைந்த கருத்துநிலை சிந்தனையாளர்களின் கூட்டான செயல்பாட்டால் சிறிது சிறிதாக மாற்றப்பட்டது. மாற்றம் நிகழ்வதறியாமலேயே நிகழ்ந்தது. அப்படித்தான் எல்லா சமூக மாற்றங்களும் நிகழமுடியும்.

ஆனால் ஒன்றுண்டு. சிலசமயம் மக்களின் கருத்துநிலை மாறிய பின்னரும்கூட சில அமைப்புகள் பிடிவாதமாக மாறாமலிருக்கும். உதாரணம் இன்றும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே வாழும் தாலிபான்கள்.

அந்நிலையில்தான் அவற்றை அழிக்கவும் தாண்டிச்செல்லவும் அமைப்புசார்ந்த எதிர்ப்புகள் தேவையாகின்றன.

ஜெ

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலமே விழைகிறேன்.

என்னுடைய இக்கடிதம் நம்முடைய அழகு பற்றிய அளவுகோல்களைப் பற்றியது. அழகு என்பது ஒவ்வொரு இனத்துக்கும் சற்றே வேறானது என்பது எனது எண்ணம். கனத்த உதடுகள் ஆப்பிரிக்கர்களுக்கு அழகென்றால் மெல்லிய உதடுகள் ஐரோப்பியர்களுக்கழகு. இடுங்கிய கண்கள் சீனர்களுக்கழகு என்றால் விரிந்த கண்கள் அரேபியர்களுக்கழகு.

அனைவருக்கும் பொதுவான, சமச்சீர் முகம், உயரம் ஆகியவற்றை விட்டுவிட்டால், ஓரிடத்தின் அளவுகோல் வேறோரிடத்தில் செல்லுபடியாவதில்லை என்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் நாம் நம்முடைய அழகு அளவுகோல்களைத் துறந்து ஐரோப்பியர்களின் அளவுகோல்களை வெகு காலமாக ஏற்றுக்கொண்டு விட்டோமோ என்று தோன்றுகிறது.

நாம் ஏன் பழுப்பு நிறத்தோலையும், கண்களையும், சற்றே தடித்த உதடுகளையும் அழகாகக்கொள்வதை விடுத்து, வெளுத்த தோல், மெல்லிய உதடுகள் அழகென்று நினைக்கிறோம்? நம் நாடகங்களில் இருந்து திரைப்பட நாயகர்கள் வரை அனைவரும் இந்த அளவுகோலுக்குதானே முயல்கிறார்கள்? ஐரோப்பிய முகவெட்டு கொண்ட நடிகர்களை அழகு என்கிறோம், மற்றவர்களை ‘அழகு’ பட்டியலில் சேர்ப்பதில்லை. மீசை வைத்தவர்கள் வேட்டி விளம்பரத்தில் நடிக்கத்தான் லாயக்கு. அலுவலக ஆடை விளம்பரத்துக்கு மேற்கத்திய சாயல் தேவை. என் நண்பர்கள் சிலருக்கு எந்த ஆப்பிரிக்கப் பெண்ணும் அழகியாகத் தெரியவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இது எப்படி நிகழ்ந்தது? ஐரோப்பிய ஆதிக்கத்தின்போது நம் அளவுகோல்கள் மெதுவாக மாறினவா?

அறிவியலின்படி புற அழகு என்பது ஒரு மேலோட்டமான வடிகட்டித் தேர்ந்தெடுக்கும் கருவி. அதன்படி பார்த்தாலும், அளவுகோல் வெவ்வேறு நிலப்பகுதிக்கு வேறாகவே இருக்க முடியும் என்று நினைக்கிறேன். உங்கள் கதைகளில் நாயகர்கள் பலர் அடர்ந்த நிறம் கொண்ட அழகர்கள் என்பதை கவனித்திருக்கிறேன். இதைப்பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.

– ராஜன் சோமசுந்தரம்

*

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம்தானே? அருகர்களின் பாதையில் நான் கொஞ்சம் பின் தங்கிவிட்டதால் இப்போது உற்சாகமாய் எழுத்துக்களின் வழியே பயணித்துக் கொண்டிருக்கிறேன்! அதென்னமோ நீங்கள் நண்பர் குழுவுடன் பயணம் செல்லும் நேரங்களில் எனக்கு ஒரு உற்சாக ‘பயண மனநிலை’ வந்துவிடுவதாக என் மனைவி சொல்லுகிறாள்! வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் சாதாரண விஷயங்கள் கூட பயணங்களையே சுற்றிச் சுற்றி வருகின்றன! இடைவிடா பயணத்திற்கு நடுவிலும் ஊக்கத்துடன் எழுதுவதற்கு நன்றி கலந்த வணக்கங்கள்!

நான் முன்பு தங்களுக்கு எழுதிய, கீழே உள்ள அழகு பற்றிய கடிதத்தின் தொடர்ச்சியாக இரு கேள்விகள்.

1 . கருப்புக்கண்ணாடி அணிவதை ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் அழகென்று நினைப்பதாகவே தோன்றுகிறது. இது எதனால்? இப்போது உள்ள கண்களை விட பெரிய கரிய கண்கள் இருந்தால் அழகு என்ற உள்மன ஏக்கம் காரணமா? தங்கள் கருத்தை அறிய ஆவல்.

2. இந்தியர்கள் கரிய தோல் குறித்து பெருமிதம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்றும், அதை ஆங்கிலேயர் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கறுப்பை சாத்தானின் வர்ணமாக்கினார்கள் என்று நண்பர் ஒருவர் சொல்லிக்கேட்டிருக்கிறேன். இதைப் பற்றி நீங்கள் ஏதேனும் எழுதியிருப்பின் சுட்டிகளைத் தர இயன்றால் நன்றி.

தங்கள் நேரத்திற்கு நன்றி!

ராஜன் சோமசுந்தரம்

அன்புள்ள ராஜன்,

தமிழகத்தின் கிராமங்களில் இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ள சிகப்பழகுப் பசைகள் விற்கப்படுகின்றன. சமீபத்தில் ஓர் இதழாளர் அளித்த கணக்குகளின்படி தமிழகத்தில் விற்கப்படும் அரிசியின் சந்தைமதிப்புக்கு பாதியளவுக்கு கொசுவத்தியும் சிவப்பழகுப் பசைகளும் விற்கப்படுகின்றன/

நாளெல்லாம் வெயிலில் சுற்றும் தமிழகத்துப்பெண் அந்தப் பசையை பூசிக்கொண்டு சினிமா நாயகி ஆகிவிடலாமென எண்ணுகிறாள். காரணம் நம் மனதில் சிவப்புநிறம் அழகு என்று பதிந்திருக்கிறது. கறுப்பான பெண் திருமணமாகாமல் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் ஒரு படத்தில் [ஒருகல் ஒரு கண்ணாடி] கறுப்பான பெண்ணை தொடர்ந்து அவமதித்து இழிவுபடுத்துவதாக வந்தது என்று ஒரு வாசகி எழுதியிருந்தார்.

இந்த மனநிலை மிகமெல்ல உருவாகி சமூகத்தில் நிலைநாட்டப்படுவது. பொதுவாக ஆதிக்கம் செலுத்துபவர்கள் மீது வழிபாட்டுணர்வு ஏற்படுவதும் அவர்களின் தோற்றம் பழக்க வழக்கம் அனைத்தையும் பிறர் பிரதி எடுக்கமுயல்வதும் உலக இயல்பு.

ஐரோப்பா பதினாறாம் நூற்றாண்டுமுதல் உலக ஆதிக்கம் பெற்றிருக்கிறது. ஆகவே ஐரோப்பியப் பண்பாடு கிட்டத்தட்ட உலகமெங்கும் நகல்செய்யப்படுவதாக உள்ளது. சீனர், ஜப்பானியர் போன்ற தனித்த பண்பாடுள்ள தேசத்தவர்கூட தோற்றம் பழக்கவழக்கம் அனைத்திலும் ஐரோப்பாவை நகலெடுக்கிறார்கள். இன்று உலகமெங்கும் ஐரோப்பிய பாதிப்பில்லாத தனிப்பண்பாடு என ஏதும் இல்லை. அழகுணர்வு அதன் ஒரு பகுதியே.

ஐரோப்பா இந்த விஷயத்தை மிகப்பெரிய ஒரு வணிக சாத்தியக்கூறாகக் கண்டுகொண்டது. அது இன்று தன்னுடைய பண்பாட்டையே ‘மோஸ்தர்களாக’ ’பிராண்டுகளா’க உலகமெங்கும் விற்கிறது. அதற்காக அது கலைகளையும் இலக்கியங்களையும் உருவாக்கி உலகமெங்கும் பரப்புகிறது. விளம்பரமென்னும் வலையால் உலகை பிணைத்திருக்கிறது. நவீன ஊடகங்கள் வளர வளர இந்த வலை பிரம்மாண்டமானதாக ஆகிறது.

ஏன் அழகு என்பதைப்பற்றி மட்டும் பேசுகிறீர்கள்? அது ஒரு சிறு விஷயம். நவீனமானது என எதை நாம் நினைக்கிறோம்? முற்போக்கானது என எதை நம்புகிறோம்? நாகரீகமானது என எதைக் கருதுகிறோம்? அறிவுபூர்வமானது என்று எதை மதிப்பிடுகிறோம்? எதை நல்ல கலை என்கிறோம்?எதை நல்ல இலக்கியம் என்கிறோம்? அவற்றுக்கான நம் அளவுகோல்கள் என்ன?

அவை அனைத்துமே ஐரோப்பாவால் நம் மீது ஏற்றப்பட்டவை அல்லவா?

ஜெ

முந்தைய கட்டுரைஇலங்கைத் தமிழர்களைப்பற்றி…
அடுத்த கட்டுரைஆயிரம் கால் மண்டபம்