இருண்மை-கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு, மருது என்பவரின் கடிதத்தில் ஒரு சிறு தகவல் பிழை. அவர் ‘சோளகர் தொட்டி’ எழுதிய ச.பாலமுருகனையும் ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ எழுதிய கே.பாலமுருகனையும் ஒருவரென நினைக்கிறார் போலும். அவர் தமிழகம் இவர் மலேசியர். கடிதத்தை வாசிப்பவர்களும் இருவரும் ஒருவரெனக் கருதக்கூடும்.

நவீன்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது “ஏன் இருண்மையை வாசிக்கவேண்டும்?” என்ற தலைப்பிலான பதிவைப் பார்த்தபிறகு, என்னுள் எழுந்த சில கேள்விகள் தங்கள் பார்வைக்கு. தங்களின் வசதியைப் பொறுத்து தயவு செய்து பதிலளிக்கவும்.

புராதான செவ்விலக்கியங்கள் எவை இவ்வாறு இருண்மையைப் பற்றிப் பேசுகின்றன என்று தாங்கள் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் ஒருமுறை திருவிளையாடற் புராணத்தில் அம்மாதிரி ஒரு சம்பவம் குறிப்பிடப் பட்டதைக் கண்டிருக்கிறேன். வேறு ஏதும் உதாரணங்கள் இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்.

மேலும், அந்தக் கதாபாத்திரங்களை முதன்மைப் பொருளாக வைத்து அவை எழுதப் பட்டுள்ளனவா என்றும் அறிய விரும்புகிறேன். நான் படித்தவற்றிலும், கேள்விப் பட்டவற்றிலும், எதிர்மறையாகவே அந்தக் கதாபாத்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. Pls correct me if I am wrong.

புராணங்கள் பற்றி முழுதும் தெரியவில்லை ஆனால் இதிஹாஸங்களைப் பொறுத்தவரையில், எனக்குத் தோன்றும் ஒரு கருத்து. அக்கதா பாத்திரங்களின் உயர்நிலைமையை சாதாரண மனிதனை விட அதிக உயரத்திலும், அவை வாழ்க்கையில் தாழும்போது அம்மனிதனைவிட பல படிகள் தாழ்ந்து பின் தன் முயற்சியினால் மீண்டும் அந்த உயர் நிலைக்கு சென்று சேர்வதாக அமைக்கப்பட்டுள்ளன என்பது. இதன் மூலம் அதைப் படிக்கும் ஒரு சாதாரணனுக்கு, தன்னம்பிக்கையையும், ஏற்படும் தளர்ச்சியை அகற்றும் வகையிலும் அப்பாத்திரங்கள் அளிக்கின்றன. இவ்வாறு ஒரு positive energy கொடுக்கும் கதைகள்/நிகழ்ச்சிகள்தானே ஒரு மனிதனுக்குத் தேவை?

தாங்கள் கூறுவது போல் இது ஒரு ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் மனநிலையாகவே இருக்கலாம். ஆனால் துன்பம் ஏற்படும்போது எந்த ஒரு மனிதனும் (சில காலமேனும்) இந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனின் நிலையைத்தானே அடைகின்றனர்? அப்படி இருக்கையில், இப்படி ஒரு negative energy கொடுக்கும் கதைகள் (அவற்றை இலக்கியங்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை) எந்த வகையில் உபயோகம்?

எனது பாட்டி, “ஆனானப் பட்ட ராமனே அவ்வளவு கஷ்டப்பட்டான்.. நாமெல்லாம் எம்மாத்திரம்” என்று அங்கலாய்ப்பதைப் பார்த்திருக்கிறேன். (அவரே தனது மிக முதிய காலத்தில் “ராமா ராமா” என்று சொல்லலாமே என்று சொன்னதற்கு “ஆமா.. அந்த ராமனே, ஸீதையை விட்டுட்டுத்தானே போனான்? அவனை நான் ஏன் நினைக்கணும்”னு என் வாயை அடைத்தது வேறு விஷயம்) :) எனினும் துன்பம் வரும்போது, புராண கதாபாத்திரங்களை ஒரு pain killer போன்றாவது நினைத்துக் கொள்ளலாம் இல்லையா?

நீங்கள் சொல்லும் இந்த எதிர்மறைக் கதைகள் சமுதாயத்தின் இன்னொரு பக்கத்தை வேண்டுமானால் நமக்கு அறிமுகப் படுத்தலாம். ஆனால் இக்கதைகளை வாசிப்பதனால் பெறும் அறிவை விட ஆபத்துகள்/அபத்தங்கள் தானே அதிகம்? ஆகவே அவற்றை நிராகரிப்பதுதானே நியாயம்?
எப்படி வேண்டுமானாலும் இலக்கியம் இருக்கலாம் என்பதையும் என்னால் ஏற்க முடியவில்லை. இப்படி வேண்டுமானால் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ”யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம். அவற்றை இலக்கியமாக்குவதோ அல்லது குப்பைக்குக் கொண்டு செல்வதோ காலத்தின் கையில் இருக்கும்”. எனது இந்தக் கருத்து சரிதானா?

அன்புடன்,

கணேஷ்.

அன்புள்ள கணேஷ்

நான் இவ்வினாக்களுக்கு விரிவாகவே பதிலளித்திருக்கிறேன். ‘அறிதல்’ என்பது எந்நிலையிலும் பயனுள்ளதே. ஆன்மீகம் என்பது அறிதல்களின் தொடர்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைஈஸோவாஸ்யம்- முன்னுரை
அடுத்த கட்டுரைநாட்டார் கதைமரபு- ஒரு கடிதம்