அய்யா பெரியார் -கை.அறிவழகன்

“கை.அறிவழகன்.” 
to me

show details

 Feb 21 (1 day ago) 

 அன்புக்குரிய நண்பர், ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் கடிதம் படித்து அதில் உள்ள நுண்ணிய சில செய்திகளை அறிந்தேன், உங்கள் அழகான விளக்கக் கடிதத்துக்கு நன்றி…

நான் உங்களுடன் விவாதம் செய்வதற்காக அந்த கடிதத்தை எழுதவில்லை, அதற்கான தகுதியும் எனக்கு இல்லை என்றே கருதுகிறேன், தனி மனிதத் துதி பாடலில் எனக்கும் எப்போதும் நம்பிக்கை இல்லை, ஆனால், சம காலத்தில் வாழுகின்ற அல்லது வாழ்ந்த சில சீர்திருத்த வாதிகளை, மட்டும் என்னால் அடையாளம் காண முடிந்தது…அந்த வகையில் பெரியார் எனக்கு ஒரு அறிய வழிகாட்டியாக இருந்தார், இருக்கிறார்.

எனக்கான சமூகத்தை, ஆடுகள் மேய்த்து, அறிவிழந்து, பண்ணை அடிமைகளாய் இருந்த எந்தன் மூத்த தலைமுறையை, கல்வியை நோக்கியும், பொருளாதார மேம்பாடு நோக்கியும், கொண்டு செலுத்தியது தந்தை பெரியார் தான் என்று சொல்ல வந்தேன்.

அண்ணல் அம்பேத்கர் பற்றி உங்கள் அளவுக்கு எனக்கு நுண்ணிய வாசிப்பு அறிவு இல்லை, மேலும்,  அவருடைய அருகாமை நமக்கு கிடைக்கவில்லை, இருப்பினும் அவர் மிகப்பெரிய சிந்தனையாளர், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கான விடிவெள்ளி என்பதில் எனக்கு எள்ளளவும் அய்யம் இல்லை,

நண்பரே, எந்த ஒரு தனி மனிதனும் முழுக்க சமூக மாற்றங்களுக்கு காரணமாக இருக்க முடியாது, ஏனெனில் பல்வேறு தனிமனிதர்களின் பங்களிப்பு ஒவ்வொருவருடைய வாழ்விலும் கலந்து இருக்கிறது…இந்த இடத்தில் ” கலீல் கிப்ரான் ” என்ற கவிஞனின் வரிகள் என் நினைவுக்கு வருகிறது… ” நான் ஒரு காலி பாத்திரம், எனக்கான முழுமையை சமூகம் தான் எனக்கு அளிக்கிறது”. அதை போல ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு சிந்தனை உடைய மனிதர்களும், கருத்துகளும் சமூக மாற்றத்திற்கான விதையை ஊன்றியிருகிறார்கள்.

ஆனால் நான் சொல்ல வந்தது,

அய்யா பெரியார் என்ற மகத்தான மனிதரும் இவற்றில் ஒரு முக்கிய பங்காற்றிய தலைவர் (நம்முடைய காலகட்டத்தில்), இன்றைய இளைய தலைமுறை இடத்தில் இது பற்றிய சிந்தனைகள் இல்லை..காட்டு கூச்சலிடும், திரைப்பட மோகத்திலும், அரசியல் வரலாறு தெரியாத, சமூக அக்கறை இல்லாத அரசியல் வாதிகளின் பின்னாலும், ஆன்மிகம் என்ற பெயரில், கலாச்சார பண்பாட்டு விழாக்களை மறந்து, குடும்பத்தோடு வீதிகளில் திரியும் அவலமும், நேர்கிற ஒரு இளைய தலைமுறை எங்கே உங்களைப் போன்ற படித்தோர் கருத்தை தவறாக புரிந்து கொண்டு விடுவார்களோ என்ற ஒரு எண்ணத்தில் தான் எழுதினேன்.

தொடர்ந்து உங்கள் எழுத்துப் பணிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள், அதே நேரத்தில் அய்யா பெரியார் பற்றி கருத்துக்கள் சொல்லும் போது சரியான தளங்களில் சொல்லுங்கள், ஏனெனில் நீங்கள் சொல்ல வந்த முழுமையான செய்திகள் இன்றைய இதழ்களில் வராது, அந்த கருத்துகளில் எங்கே விளம்பரமும், வருமானமும் வருகிறதோ அவை மட்டும் தான் இன்றைய வார இதழ்களில் வரும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

எப்போதும் தனி மனிதர்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் எதிர்ப்பது என்பது அறிவற்ற செயல். தொடர்ந்து கருத்து வாதங்களால் விழிப்புணர்வை எடுத்துச் செல்வதே என்னுடைய நோக்கம், தனி மனித வசை பாடுவதும், தனி மனித துதி பாடுவதும் அல்ல..

உங்கள் அன்புக்கு நன்றி,

நண்பன் கை.அறிவழகன்.

அன்பு நண்பர், ஜெயமோகன் அவர்களுக்கு,

நீங்கள் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில், இருக்கும் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை, அவை உங்கள் சொந்த கருத்துக்களாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு கற்ப்பிக்கப்பட்ட ஊடகங்களின் விளைவாகவும் இருக்கலாம்.
அவற்றில் சிலவற்றை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்…உங்கள் விளக்கத்தையும் எதிர் நோக்குகிறேன்…

1) தலித் இளைஞர்களின் கற்ப்பிதம்.

தலித் இளைஞர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள், பெரியாரை புகழ் பாட என்கிறீர்கள், சரி..கற்ப்பிதங்களும், கற்றலும் இல்லாத வாழ்வியல் முறையை நீங்கள் எங்காவது கண்டிருகிறீர்களா? இவர்தான் அம்மா என்று மருத்துவர் கற்பிக்கிறார், இவர் தான் அப்பா என்று அம்மா கற்பிக்கிறாள். ஒரு வாதத்திற்கு நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும், அதில் எங்கே தலித் இளைஞர்கள், தலித் அல்லாத இளைஞர்கள் என்ற வேறுபாடு இருக்கிறது.இன்று உங்களை விடவும், சிறப்பாக தலித்துகளின் போராட்ட வரலாற்றை ஆய்வுக்கட்டுரைகள் எழுதி, உண்மை உணர்ந்து, படித்த, வாசிப்பு அறிவு மிகுந்த தலித் இளைஞர்கள் ஏராளமான அளவில், தமிழகத்தில் மட்டுமல்ல, உலகின் பல மூலைகளிலும் பரவிக் கிடக்கிறார்கள் என்பதை இணையத்தில் குடி புகுந்திருக்கும் நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்..

நீங்கள் சொல்வது போல ஒரு குறுகிய எல்லைக்குள், அதாவது, மாநில எல்லைகள் என்ற அளவில் தலித்துகளின் போராட்டத்தை சுருக்கி விட முடியாது…இது இந்தியா முழுவதும் பரவி கிடக்கும் ஒரு நச்சுக் கிருமி, தொடர்ந்த ஆதிக்க சாதியினரின் தலைமை பீடமாக இருந்த (பெரியாரின் காலகட்டத்தில்) பார்ப்பனர்களின் ஆளுமையை உடைத்து தலித் எழுச்சிக்கான அடித்தளத்தை அமைத்தவர் பெரியார் என்பது காலத்தின் மறுக்க முடியாத ஒரு வரலாறு.  எனவே இந்தியா முழுவதும் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு தலைவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று இருக்கிறார்கள். இதில் தமிழக நிலை, ஆந்திர நிலை, பிகாரிய என்றெல்லாம் பாகுபாடு எதுவும் கிடையாது.

2) ஆப்ரிக்க ஏழ்மை நிலை.

இரண்டாவதாக நீங்கள் ஆப்பிரிக்க நாடுகளின் ஏழ்மை நிலை பற்றி சொல்லிஇருக்கிறீர்கள், நண்பரே, நானும் நீங்களும், நமக்கு அருகில் பசியோடு இருக்கிற அண்டை வீட்டாரை பற்றி சிந்திப்பதை விட்டு விட்டோம், எத்தனையோ இலங்கைத் தமிழர்கள் இங்கே உணவுக்கும், உறைவிடத்துக்கும் நாதியின்றி நசிந்து கொண்டிருக்கிறார்கள், அதற்கான என் பங்களிப்பு என்ன என்பது பற்றித் தான் நான் சிந்திக்க முடியும், (குறுகிய மனப்போக்கு என்று தாங்கள் அருள் கூர்ந்து சொல்ல வேண்டாம்), ஏனெனில் இருட்டை என் வீட்டில் வைத்துக்கொண்டு நான் ஆப்ரிக்காவிலும், அமெரிக்காவிலும் விளக்கேற்ற முடியாது. என்னால் இயன்ற சமூகப் பணிகளை எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே செய்து வருகிறேன், நீங்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

3) காந்தியும், அம்பேத்கரும்.

இது நீங்களும், நானும் மேலோட்டமாக விவாதம் செய்யக்கூடிய ஒரு தளம் அல்ல, ஏனெனில் காந்தி தலித்துகளின் மீது பரிவு காட்டினார் என்பதையும் இட ஒதுக்கீடுக்கான அழுத்தமான தார்மீகக் கட்டாயம் செய்தார் என்பதையும் ஒப்புக் கொள்ள இயலாது, ஏனென்றால், ” இரட்டை வாக்குரிமை” என்ற பெயரில் உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரு புதிய தலைமுறைக்கான புரட்சியாக இருந்திருக்க வேண்டிய பொன்னான வாய்ப்பை காந்தியார் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் மறுத்தார், அதற்காக அவர் உண்ணா நோன்பிருந்து அம்பேட்கரை இரட்டை வாக்குரிமை நிலையில் இருந்து விலகுவதற்கு தார்மீக கட்டாயம் செய்தார் என்பது தானே உண்மை. அதை உங்களால் மறுக்க முடியுமா?

4) கம்யுனிஸ்டுகளின் நிலை.

யாருடைய சேவையும் இங்கு மறுக்கப்படவில்லை, எப்போதும் கம்யுனிச்டுகளின் சேவை தலித்துகளால் மறுக்கப்படவில்லை, மறைக்கப்படவும் இல்லை. இன்னமும் பல்வேறு பட்ட அமைப்புகளும், மனிதர்களும் சேவை செய்து காப்பற்றப்படவேண்டிய நிலையில் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள், நண்பரே தலித் அரசியல் என்கிற இந்தத் தளமே, குறிகிய காலங்களில் அறியப்பட்டு, வளந்து வரும் ஒரு தளம், இதில் திரிபுகள் என்பது இனிமேல் தான் தொடங்க வேண்டும்.

எனக்குத் தெரிந்து எந்த திராவிட இயக்கமும், பெரியாரை மட்டும் முன்னிறுத்தி, மற்ற தலைவர்களை வேண்டுமென்றே மறைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை, மாறாக பெரியார் என்னும் மகத்தான மனிதரின் உருவம் மட்டும் தான் எல்லா திராவிட இயக்கத்திலும் எஞ்சி நின்றது. வரலாற்றின் சுவடுகளில் எல்லாம் நீங்கள் குறிப்பிடுகின்ற தலைவர்களின் பெயர் பதியப்பட்டே வந்திருக்கிறது.

நண்பரே, உண்மையில் பெரியார் என்ற மகத்தான மனிதரின், அழுத்தமான உழைப்பும், பதிவுகளும் மட்டுமே அவர் ஒரு மக்கள் தலைவராக, மறைக்க முடியாத, மறுக்க முடியாத தலைவராக இருப்பதற்கு வழி செய்தன. அதற்கு பின்னால் அவர் தொடர்ந்து செய்த பிரச்சாரப் பயணங்களும், ஓயாத அவரது எழுத்துப் பணிகளும், கடுமையான நோய்க்கிடையிலும் தொடர்ந்த அவரது நூல் வெளியீடுகளும் பொதுக்கூட்டங்களும் இன்றும் சாட்சியங்கள்.

5) தமிழரின் தொன்மை.

வெறும் பெருமை பேசும் தொன்மை, பண்பாடு பற்றித்தான் பெரியார் கவலை கொண்டாரே ஒழிய, அவர் ஐரோப்பிய முறைகளில் அனைத்தையும் நிராகரிததற்கு பொருளாதார முன்னேற்றமும், சமூக அங்கீகாரமும் தான் காரணம். பொருளாதார மேம்பாடு இல்லாத தொன்மையும், வளர்ச்சியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைத் தான் அவர் சொன்னார்.

இன்றைக்கு தமிழரின் தொன்மையும், நாகரீக வளர்ச்சியும் பற்றி நாங்கள் எல்லாம் அறிந்து கொள்ளவே ஒரு பெரியார் தேவைப்பட்டு இருக்கிறார், வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, கல்வியின் சுவடே அறியாத குப்பனும், அறிவழகனும் இணைய தளங்களில் உங்களுடன் விவாதம் செய்யக் காரணமான அந்த திறவுகோலை, அதற்கான விதையை எங்களுக்கு எடுத்துக் கொடுத்ததே அவர்தானே நண்பரே. இதை வெறும் வாய் மொழிகளுக்காக நான் சொல்லவில்லை, எங்கள் குடும்பத்தில் நடந்த மாற்றங்கள் அதன் விளைவாய் வளர்ந்த நாங்கள் என்ற சுய பரிசோதனையின் மூலம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து சொல்கிறேன் அய்யா, எந்த ஒரு தலைவனையும் பின்பற்றும், கழகங்களின் பின்னால் இருந்து கொண்டு இதை நான் சொல்லவில்லை, முழுக்க என்னுடைய சுய அறிவைக் கேள்விகள் கேட்ட பிறகு தான் சொல்கிறேன், நான் ஒரு எடுத்துக்காட்டு அவ்வளவுதான், என்னைப்போல் எத்தனையோ மருத்துவர்கள், பொறியாளர்கள், அறிவிச்சிறந்த அறிஞர்கள், ஆசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியாரின் தாக்கத்தில் உருவானார்கள் என்று சொன்னால் அது மிகையான கற்ப்பனை அல்ல அய்யா, உண்மை.

உங்களால் எப்படி நாராயணகுருவை, கேரள தலித் அரசியல் வரலாற்றில் இருந்து மறைக்க முடியாதோ,அவர் எப்படி ஒரு மதம், ஒரு சாதி, ஒரு கடவுள், மனித நேயம் என்று முழக்கினாரோ, அந்தப் பாதையை விட்டு பெரியார் சற்று விலகி , ஒரு மதமும் இல்லை, ஒரு சாதியும் இல்லை, ஒரு கடவுளும் இல்லை, எல்லாம் மனித நேயம் என்றார். நாராயண குருவுக்கு எப்படி கேரள வரலாற்றில் இடம் இருக்கிறதோ, அதே, இன்னும் சொல்லப் போனால் அதை விட ஒரு படி மேலான இடம் தந்தை பெரியாருக்கு உள்ளது. நீங்கள் சொன்னதைப் போல அவர் உங்கள் குருவுக்கே குரு.

பெரியாருக்கு முன்பு, பெரியாருக்கு பின்பு என்று, தமிழக அரசியல், பொருளாதார, சமூகத் தளங்களை ஆராய்ந்து பார்த்தால் (இல்லை ஆய்வுகளை பார்த்தால்) உங்களுக்கு இந்த உண்மை புரியும். தலித் அரசியலும் சரி, பொருளாதாரமும் சரி, கல்வி வாய்ப்புகள், சமூக அங்கீகாரம் இன்னும் எல்லாமே அவரது உறுதியான பயணத்திற்கு பின்னால் உயர்ந்துகொண்டே தான் வந்திருக்கிறது, இன்னும் உயரும்.

இன்றைய காலகட்டத்தில், தலித்துகளின் போராட்ட நிலை என்பது, பிற்ப்படுத்தப்பட்ட மக்களின் நிலைப்பாட்டின் கீழ் வருகிறது, அது உண்மைதான், ஆனால் பெரியாருடைய காலகட்டத்தில், அது முழுக்க ஆதிக்க சாதி, இந்துக்களின் (உதாரணமாக, பிராமணர், முதலியார், செட்டியார்) போன்ற சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது, அது பெரியாரின் பெரும் போராட்டங்களுக்கு பிறகு, நீர்த்துப் போய், இன்றைக்கு எங்கள் சகோதரர்களாம், பிற்ப்படுத்தப்பட்ட மக்களிடம் போய் தஞ்சம் அடைந்து இருக்கிறது, இதற்க்கு ஒரு உளவியல் ரீதியான காரணமும் இருக்கிறது, நாங்கள் நசுக்கப் பட்டோம், கொஞ்சம் நாமும் நசுக்கிப்பார்ப்போம் என்ற உளவியல் கோளாறு. அதனை சரி செய்யவும், மீட்டெடுக்கவும் எல்லா நிலைகளிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றே வருகிறது, தந்தை பெரியாரின் கொள்கை வழிகாட்டுதலில் என்பதே உண்மை.

தந்தை பெரியாருக்கு, எந்த கால கட்டத்திலும் ஒரு தனிப்பட்ட சமூகத்தின் மீதும், தனி மனிதர்கள் மீதும் வெறுப்பு இருந்ததாக எனக்கு நினைவில்லை, அப்படி இருப்பின் அய்யா ராஜாஜியுடனான அவரது நட்பு அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் பல்வேறு நிகழ்வுகளும், அவரது நட்பு வட்டமும் அதைத் தொடர்ந்து மெயப்பித்தே இருக்கிறது.

நானும் பெரியார் முழுக்க தலித் விடுதலையை முன்னிறுத்தி தன்னுடைய போராட்டங்களை எடுத்துச் சென்றார் என்று சொல்ல வரவில்லை, அவருடைய காலமும், களமும் ஆதிக்க இந்துக்களின் சமூக ஆக்கிரமிப்பு, உரிமை மீட்சி, மதத்தின் கொடிய முகம் இவற்றுக்கு எதிராகவே இருந்தது. இந்த இடத்தில் தான் நீங்கள் சொன்ன நிலமானிய முறையின் தாக்கமும், சாதீய அடுக்கு முறையின் ஆணிவேரும் நீக்கப்படுவதற்கான முதல் படி எடுத்து வைக்கப்பட்டது.அவர் எடுத்த அந்த தொடக்கம் தலித் விடுதலையை முன்னிருத்தவில்லையே தவிர அதற்கான விழிப்புணர்வை தலித் அரசியல் எழுச்சி வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகத் தொடங்கி வைத்தது.

இறுதியாக நண்பருக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன், இந்த மறுப்புக் கடிதத்தின் மூலமாக நான் முழுக்க முழுக்க பெரியாரை முன்னிறுத்தும் அல்லது தனி மனித வழிபாடு செய்யும் ஒரு ஒடுக்கப்பட்ட இளைஞன் என்று எண்ணி விடாதீர்கள், தேவையான அளவு பெரியாரை படித்து, அம்பேட்கரை அறிந்து இன்னும் விடியலை நோக்கி உலக வரலாற்றின் பக்கங்களை புரட்டிக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் மட்டும் தான் நான்.

உங்கள் பதிலில் இருக்கும் நல்லவற்றை எடுத்துக்கொண்டு, இந்த விவாதத்தின் மூலம் பயன் பெரும் ஒரு சாதாரண நண்பனாக தொடர்ந்து விவாதிப்போம்,

மனித குலத்தின் மன எல்லைகளை விரிவு படுத்துவோம்.

பிறிதொரு மடலில் உங்களை அன்போடு சந்திப்பேன்.

என்றும் தோழமையுடன்


கை.அறிவழகன்.

முந்தைய கட்டுரைபெரியார் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்