கடிதங்கள்

அன்புள்ள நண்பர் ஜெயமோகனுக்கு, நலம். நாடுவதும் அதுவே.
தங்களின் ஆஸ்திரேலிய பயணத்தொடரின் தொடக்கத்தையும் படங்களையும் பார்த்தேன். சுவாரஸ்யமாக தொடங்கியிருக்கிறீர்கள்.வணக்கம். உங்கள் ஆஸிப் பயணம் இனிதாக முடிந்திருக்கிறது.மகிழ்ச்சி .எல்லா இன மக்களும் வாழும் நாடு மட்டும்தான் உண்மையான ஜனநாயக நாடு. நம்முடைய நாட்டில் இனங்கள் இருக்கின்றன. கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இனப்பகைமையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். முற்றிலும் உண்மை ஜெ
உங்கள் அறிவியல்புனைகதைகள் நூலை இப்போதுதான் வாசித்தேன். . .  அறிவியல்புனைகதையில் வட்டாரத்தன்மையை நான் இதுவரை கவனித்ததே இல்லை. .
    Firthouse Rajakumaaren,

Coimbatore-8 

 

அன்புள்ள ஜெ
உங்கள் அறிவியல்புனைகதைகளை இப்போதுதான் வாசித்தேன். அறிவியல் ஆன்மீகத்துக்கு எதிரான ஒரு ஆய்வு முறை என்ற எண்ணம்தான் எனக்கு இருந்து வந்தது. ஆனால் பூர்ணம் , உற்றுநோக்கும் பரவை என்ற இருகதைகளும் அந்த எண்ணத்தை மாற்றின. அறிவியலுக்கு ஆழமான ஆன்மீக தேடலை நடத்தும் திராண்டி உன்டு என்ற எண்ணம் ஏற்பட்டது.

நன்றி
சண்முகம் பெருமாள்

 

அன்புள்ள ஜெ,

அனல் காற்றைப் போன்றே கஸ்தூரிமான், நான் கடவுளுக்கும் திரைக்கதை எழுதியிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். வியாபாரத் தொந்தரவுகள் இல்லாதிருப்பின் அவைகளை நீங்கள் இணையத்திலோ புத்தகமாகவோ வெளியிடலாமே.

ஜெகதீசன்.
அன்புள்ள ஜெகதீசன்
சட்டப்படி அந்த திரைக்கதைகள் அதன் இயக்குநர்களுக்குச் சொந்தம்
ஜெ

அன்புள்ள ஜயமோகன்

 
 
பிராமணர்கள் தமிழக மன்னவர்களிடம் சலுகைகள் பெற்றார்கள், வாஸ்தவம்தான். ஆனால் பிரிட்டிஷ் அதிகாரம் கீழே ஒரு சலுகையும் பெறவில்லை. பிரிட்டிஷ் காலனீய ஆதிக்கத்தில் பிராமணர்களுக்கு கல்வியிலோ, உத்யோகத்திலோ , வீடு, நிலங்களிலோ ஒரு சலுகையும் இல்லை. பிரிட்டிஷர் போட்டி முறை கல்வியில் நிறைய இடங்கள் பெற்று , அதனால் அந்தஸ்தும், உத்யோகங்களையும் பிராமணர் பெற்றனர்; அதை ‘சலுகை ‘ என சொல்ல முடியாது. பிரிட்டிஷர் காலத்தில் வங்கி, வணிகத் துறையில் செட்டியர்கள் பிரபலமாக இருந்தனர் – அதுவும் சலுகை இல்லை. மரபினால் கொடுக்கப் பட்ட வல்லமைகள் சில சரித்திர காலங்களில் சில சமூகங்களுக்கு மிகவும் உதவியாக இருந்து, அந்த சமூகங்களின் பொருள்நிலை உயர்ந்தது. அது அரசாங்க நிர்வாக தீர்ப்பினால் ஏற்பட்டது அல்ல. அப்படிப்பட்ட ‘சரித்திர உதவிகளும்’ சாஸ்வதம் இல்லை.
 
அதனால் ” வெள்ளைய ஆட்சியின்கீழ் சலுகையும் அதிகாரமும் பெற்று வல்லமையுடன் விளங்கிய பிராமண ஆதிக்கத்துக்கு எதிரானதாக அது உருவானது. ” என்பது சரியில்லை.
 
மதிப்புடன்
 
வன்பாக்கம் விஜயராகவன்


 

அந்தக்கோணம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. பிராமணர்கள் மேல் வெள்ளைய ஆட்சியாளர்களுக்கு இருந்த தனிப்பட்ட கரிசனத்துக்கு ஆதாரமாக அவர்களுக்கு சலுகையும் முன்னுரிமையும் கொடுக்க வேண்டும் என ஏராளமான வெள்ளை ஆட்சியாளர்கள் எழுதி வைத்த குறிப்புகள் கிடைக்கின்றன. தேவர், நாயர், டாக்கூர், வொக்கலிக, நாயக்கர் போன்ற பெரும்பாலான சாதியினர் ஒருங்கிணைந்த முறையில் பிரிட்டிஷ் ஆட்சியினர் மேல் தக்குதல் தொடுத்து கலகம் செய்து தோற்கடிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த வகையான எந்த எதிர்ப்பையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மேல் பொதுவாக பிராமணர் காட்டவில்லை– விதிவிலக்கு மராட்டிய பிராமணர்கள். பின்னர் பிராமணர்கள்  ஆங்கிலக் கல்வி வழியாக உலகப்புரிதல் அடைந்தபோது அவர்களில் தேசிய உணர்வும் எதிர்ப்பும் உருவாகி வந்தது– இதுவே வரலாறு
ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி ஏ.பி.சந்தானராஜ்
அடுத்த கட்டுரைசாருவுக்கு ஒரு கடிதம்