பத்தினியின் பத்துமுகங்கள்

வீடுதிரும்பும்போது அருண்மொழி சற்றேசோர்வுடன் காணப்படுவதுபோல இருந்தமையால் ”என்ன அருணா, எதாவது பிரச்சினையா?” என்று கவனமாகக் கேட்கப் போக ”ஒண்ணுமில்ல” என்று ஆமோதித்து ”அம்மா கூப்பிட்டிருந்தாங்க…” என்றாள்

”அப்டியா?”என்ற நிறமற்ற வசதியான சொல்லை விட்டுவிட்டு முகம் பார்க்காமல் நேரம் கடத்தினேன்.”…சும்மா கெடக்காம…போட்டுப் படுத்தறது. என்னால முடியாது” என்று மேலும் சொன்னாள்.”அப்டியா?”

”நீ என்ன நெனைக்கிறே?” இம்மாதிரி அபாயகட்டங்களை இலகுவாகத்தாண்டும் விற்பன்னனாகையால் ”பாத்து செய்யணும்”என்றேன் பொதுவாக’’என்னத்த செய்றது? கொழந்தைங்களோட இப்ப கெளம்பி திருவாரூர்வரை போய்ட்டு வாறதுன்னா சும்மாவா? எப்டியும் மூவாயிரம் ரூபா ஆயிரும். அஜிக்கு வேற டியூஷன் இருக்கு…”

இங்கே அப்டியா என்று சொல்லக் கூடாது. மேலும் நிதானித்து ”ம்” என்றேன்.”நான் வரல்லேண்ணு சொல்லியாச்சு…என்ன ஜெயன்?”
”இல்ல அவங்க அப்டி சொல்றப்ப நாம முடியாதுண்ணு சொன்னா நல்லா இருக்காது. போய்ட்டு வந்திடலாமே.செலவைப் பாத்தா நடக்குமா?” தயக்கமாக ”அதில்லே…அஜிக்கு டியூஷன்…” ”ஒருநாள்தானே .அவன் படிச்சுக்குவான்…. போகாம இருக்கப்பிடாது…”

”போய்ட்டு வந்திருவோம்கிறியா?” ”ஆமா.கண்டிப்பா போறோம்” ”உனக்கு லீவு ஒண்ணும் பிரச்சினை இல்லியா?” என்று ஆதுரத்துடன் அருண்மொழி கேட்டாள்.”எனக்கென்ன எப்ப கேட்டாலும் லீவு…நான் ஆபீஸ்ல இருக்கிரதும் இல்லாததும் சமம்தான்…” ”எனக்கு ரெண்டுநாள் லீவு போட்டா சண்டேயும் பக்ரீத்தும் சேந்துவருது….”என்றாள்.  ”பின்ன? இப்பவே லீவு போட்டிரு.. அப்றம் ஏதாவது சொல்லப்போறாங்க…”

”நான் சாயங்காலமே லீவு குடுத்திட்டுதான் வந்தேன்…..”

மிக மெல்ல வழுக்கும் பிராந்தியத்தை கடந்து ”ஹீரோவை வேற வெட்டினரி கென்னலிலே கொண்டுபோய் விடணும்… சொல்லிடறேன்…” என்றேன்.

அருண்மொழி, ”நான் இப்பதான் டாக்டரைக் கூப்பிட்டு சொன்னேன்…அப்றம் ரொம்பல்லாம் துணி வேண்டாம். மூணுநாள்தானே? முக்கியமானதை மட்டும் எடுத்து சூட்கெஸிலே வச்சாச்சு. அஜி டியூஷன் சார்ட்டே கூப்பிட்டு சொன்னேன். சரீன்னுட்டார்….எனக்கு ஜாக்கெட் தைக்க க் குடுத்திருக்கு அதை வாங்கணும்… நியூஸ்பேப்பர் மூணுநாள் போடவேண்டாம்னு சொல்லிட்டேன். பால்…” என்று ஆரம்பித்தாள்.

இதன் நடுவே சலிப்பு. ”இப்பதானே போய்ட்டு வந்தோம். வருஷத்துக்கு ரெண்டுதடவைக்குமேலே போறதுன்னா வெட்டிச்செலவு…சொன்னா கேக்கிறதில்லை…” அதன் பின் ஆறுதல் ”…சரி கெளம்பியாச்சு. இனி அதையெல்லாம் பாத்தா முடியுமா? என்ன ஜெயன்?”

ஆனால் அவள் அம்மா ·போனில்கூப்பிடும்போது வேறு தோரணை. ”… இல்லம்மா, அவங்க ஆ·பீஸிலே என்னமோ அர்ஜெண்ட் வேலையாம் ..லீவே இல்லேங்கிறார். எப்டியாவது ஒரு மூணுநாள் லீவு எடுங்கன்னு சொல்லியிருக்கு. பாத்து சொல்றேன்னு சொல்லியிருக்கார். இங்க ஏகப்பட்ட வேலை கெடக்கு…” அதாவது ஒரு பெரும்போராட்டத்துக்குப் பின்னர் தான் சம்மதிக்க வைத்திருப்பதாக.

கிளம்பும்நேரம் வர வர வீட்டில் எங்கெங்கு நோக்கினும் சக்தியடா. கட்டளைகள். ”வீட்டுச்செருப்பை எடுத்து பாலிதீன் கவர்லே மடக்கி பெரிய பேக்கிலே வச்சிரு. பிளாஸ்டிக் பாட்டிலைக் கழுவி வச்சியா? அஜி எங்க?” ஒரு கட்டளையை சிரமேற்கொள்வதற்குள் ஏழு கட்டளைகள் வந்து என் வன்வட்டு நிலைத்து நின்றுவிடுகிறது. திரையின் ஒளி மட்டும் மாறாமல். ”என்ன அங்க மந்தஹாசமும் புன்னகையும்? ஒரு வேலையச் சொன்னா செய்றதில்லை. பஸ்ல ஏறின பெறகு அதக்காணும் இதக்காணும்னு சொன்னா அப்றம் இருக்கு..”

பேருந்தில் அமர்ந்து வியர்வை ஒற்றும்போது நான் திடீரென எண்ணிக் கொண்டு ”அருணா ரிசர்வ்பண்ணின டிக்கெட்ட எடுத்தியா?” என வினவ பதறிக் கதி கலங்கிக் கைப்பையைத் துழாவி எடுத்து ‘…ஏன் ஜெயன் பைத்தியமா அடிக்கிறே? நாந்தான் அப்பவே எடுத்துவச்சு நாலுவாட்டி செக் பண்ணினேன்ல…ஒரு நிமிஷம் மனசே பதறிப்போச்சு” எடுத்துவைத்தவளுக்கு அந்தப் பதற்றம் இருந்தால் அதைப் பார்க்காதவனுக்கு எந்த பதற்றம் இருந்திருக்கும் என யோசிப்பதில்லை

பேருந்து கிளம்பியதும் மலரும் நினைவுகள். ”திருச்சியிலே ஹாஸ்டலிலே இருந்து கெளம்பறப்ப நான் ·போன் பண்ணுவேன்…அப்பல்லாம் செல் கெடையாதுல்ல? போன் பண்றப்பவே எங்கம்மா ஒரே சத்தமா பேசுவாங்க. பாப்பா பத்திரமா வா பத்திரமா வான்னு ஒரு பத்துவாட்டி சொல்லுவாங்க…”

மெல்லமெல்ல பேருந்தின் வேகத்துக்கு ஏற்ப உள்ளே ஆள் மாறிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். அங்கே இறங்கியதும் நான் பார்த்துப் பழகியிராத புதிய பெண் ஒருத்தி பஸ்ஸை விட்டு இறங்கி ”என்னங்க… பாத்து எறங்குங்க…அஜி அப்பா பைய வாங்கிக்கோ”.சட்டென்று என்னை மாற்றிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான், பழகிவிட்டது. ”கெளம்பறது வரைக்கும் இவங்களுக்கு லீவு கெடைக்குமாண்ணு ஒரே டென்ஷன்பா… அம்மா நல்லாஇருக்கியா? ஏன் எளைச்சுப் போயிட்டே?”

அதைப்புரிந்துகொள்ளலாம், பயணம் முழுக்க ஒருகணம் கூடக் கண்விழிக்காமல் வந்த சைதன்யா மாறியிருப்பதை அறிவது திகிலூட்டும் அனுபவம். ”பாத்தி..எனக்கூ இங்க அரிக்குது பாத்தீ..இவேன் எம்மேல சாஞ்சு கனமா இருந்தான் தெரீமா?” பதினொருவயது கைக்குழந்தையின் மழலை. ”இங்கியா பாப்பா? பாட்டி தடவி விடுவேனாம்…எஞ்செல்லக்குட்டி நல்லா தூங்கிச்சா? எங்க பாப்பா நல்ல எச்சி மணமா இருக்கே…ம்ம்ம்” ”அப்பா இவ ஏம்பா இப்டி மாறியிருக்கா?”என்று சகிக்க முடியாமல் அஜிதன் என் தோளைப்பிடிக்க ”விடுடா…லேடீஸ்லாம் அப்டித்தான்”

ஆனால் வீட்டுக்குள் சென்று சேர்வதற்குள் அருண்மொழியும் மாறி மழலைபேச ஆரம்பிப்பதை என்னாலும் தாங்க முடியாது. ”ஆபீஸ்லே ஒரே வே…லைம்மா…எப்ப பா…த்தாலும் ஒரே மா…திரி….போ”. இரு பாப்பாக்களும் மாறி மாறிக் கொஞ்சுகின்றன. பெரிய பாப்பா ”அம்மா காபிய இங்க கொண்டாயேன். காலு வலிக்குது…” சின்ன பாப்பா ”பாத்தீ எனக்கு காப்பி வேணாம். ஆர்லிக்ஸ் குதுப்பியா?”. ”அப்டியே சாப்பிடுவேன்னு சொல்லுடீ போடி…நாயி நாயி, மழலை பேசுறா பாரு…”. ”போடா அப்டித்தான் பேசுவேன்.உங்கிட்டயா பேசறேன்? பாத்தீ அடிக்கான்…”. ”அஜீ பாப்பாவ அடிக்காதே அவ கொழைந்தைதானே?”. ”அப்பா நான் இப்பவே இந்த வீட்ட விட்டுப் போறேன்.இனி ஒரு நிமிஷம் இங்க இருக்க முடியாது”. ”டேய் விடுடா. லேடீஸ்லாம் அந்த மாதிரித்தான்…எல்லாத்தையும் தாங்கித்தானே ஆகணும்? இப்பவே பழகிக்கோ” ”போப்பா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்..”

வந்து அரைமணிநேரத்துக்குள் நான் என்னையறியாமலேயே கடும்சினமும் கொல்வேலும் கொண்ட கொற்றவனாக உருமாறியிருப்பதை அரைமணிநேரம் கழித்துத்தான் உணர்வேன்.”அஜீ இந்த லுங்கியக் கொண்டாந்து உங்கப்பாவுக்குக் குடு…இருங்க இந்தா காப்பி கொண்டறேன்…கோவிச்சுக்காதீங்க…” உள்ளே குரல்கள் ”காலைல எந்திரிச்சா உடனே காப்பி வேணும். இல்லெண்ணா சிங்கம்புலி கணக்கா நிப்பாங்க… காலம்பற நான் ஓடுற ஓட்டத்துக்கு என்ன பண்றது, எட்டுக் கையா இருக்கு?”

எங்கள் வீட்டில் நானேதான் எழுந்து முகம் கழுவிப் பாலில்லா டீ போட்டுக் குடிப்பேன். ”எப்டியும் அடுப்பு பத்தவச்சு டீ போட்டாச்சுல்ல? அப்டியே எனக்கும் ஒண்ணு போட்டா என்ன?”.ஆகவே அதையும் போட்டுத் தர ”சக்கரை அளவாப் போட எண்ணைக்குத்தான் கத்துக்குவியோ?” என்று சொல்லிக் குடிப்பாள். இங்கே பால்கனக்கும் காபிதான். ”சும்மா இரு. பாலில்லா டீண்ணா எங்கம்மா தரித்திரம்ணு நெனைச்சுக்கப் போறாங்க. இங்க அதெல்லாம் யாரும் குடிக்கமாட்டாங்க. ஏற்கனவே எங்கம்மா மலையாளத்தாளுங்க கஞ்சித்தண்ணிய குடிக்கிறாங்கன்னு கேவலமா நெனைச்சிட்டிருக்கு…”

பால்விட்ட காபி குடித்தால் எனக்குக் காலையுணவு சாப்பிட முடியாது. வயிற்றுக்குள் ஒலிகள் அசைவுகள். ”எட்டுமணிக்கு டிபன் சாப்பிட்டிருவாங்கம்மா…”என்று உள்ளே ஒலி. உடனே என்னிடம் வந்து என் மாமனார் கேட்கும்படி பணிவும் பதற்றமும் கலந்து ”இப்ப ரெடியாயிரும். அம்மா இப்பதான் பூரி சுடுறாங்க…கோவிச்சுக்காதீங்க” பூரி சாப்பிட்டால் நான் இரவுணவையே தவற விட வேண்டும். எங்கே? மத்தியான உணவுக்கு மீன்வாங்க என் தமிழறிஞரான மாமனார் சகதமிழறிஞர்களுடன் நெய்தல் திணையை விவாதித்தபடி செல்வார். அவரைத் தெருவரை துரத்திச் சென்று கட்டளைகள். நுணுக்கமான ஆலோசனைகள். இருநூறு ரூபாய்க்கு அவர் மீன்வாங்கி வருவதைக் கண்டு சக தமிழறிஞர்கள் என் உணவுப்பழக்கத்தைப்பற்றி என்ன வகையான மனப்பிம்பம் கொண்டிருப்பார்கள்?

இரவுக்குள் நானே ஒரு கூண்டுப்புலியாக உருமாறி அறைக்குள் சுற்றிச் சுற்றி வரவும் கோபமும் அதிருப்தியும் கொள்ளவும் பழகியிருப்பேன். ”எங்கே என் நீலஜட்டி?”என்று முணுமுணுத்தால் வீடு அதிரும். ஜட்டி தேடி எட்டு பேர் எட்டுத்திசைகளில் பறப்பார்கள். அருண்மொழி உள்ளே வந்து ”போட்டுப் படுத்தாதே…ஜட்டி உன் இடுப்பிலதான் இருக்கு” என்று பல்லைக் கடிப்பாள்.

மாமனார் திராவிட இயக்க ஆதரவாளர். நாத்திகமணி. அண்ணாத்துரை மேல் மரியாதை உண்டு. கருணாநிதிமேல் ஈடுபாடு உண்டு என்பதை வெளியே சொல்லமாட்டார். ”…இந்த கனிமொழி கவிதைகள்லாம்…?” என இழுப்பார். கருணாநிதி கவிதைகள் மேல் அவருக்கே கருத்து உண்டு ”அரசியலிலே எல்லாம் அப்டி தெளிவா பாக்க முடியாதுல்ல? பலவகையிலயும் முன்னபின்னதானே இருக்கும்?” நான் போட்டு விளாசி முடிக்கும்போது ”அப்டீங்கிறீங்க” என்பார். அது அவரது வழக்கமான சொல்லாட்சி. ‘நீ அப்படிச் சொல்கிறாய், எனக்கென்ன’ என்ற உட்பொருள். வெளியே நின்று கேட்கிறவர்களுக்கு மாப்பிள்ளைக்கு அளிக்கும் மரியாதையாகவும் தோன்றும்.

பேசி மூச்சுவாங்கும்போது அருண்மொழி பெருமிதத்துடன் வந்து ”போதும் போதும் சொற்பொழிவு….பக்கத்துவீட்டிலே ஆளு இருக்காங்க…”. ஆனால் முடிவதற்கு முன் ஒருபோதும் சொல்லமாட்டாள். ”சும்மா போட்டு மட்டையடி அடிக்கிறது…எல்லாம் அவங்களும் நல்லாத்தான் எழுதியிருக்காங்க….ஒரு மிடில்கிளாஸ் பொண்ணோட சென்ஸிபிலிட்டி அவங்களுக்கு இருக்கிறது எவ்ளவு பெரிய விஷயம். அது அவங்களுக்கு தனியான ஒரு கிரியேட்டிவ் செல்·ப் இருக்குங்கிறதுக்கான ஆதாரம்… ” என்று அப்பாவுக்கு எடுத்துக் கொடுப்பாள். ”அப்டியா பாப்பா?” என்று அவர் முகம் மலர்வார். தோற்கும் தரப்புக்கு ஆதாரமாகத் தாங்கி நிற்கும் பெருங்கருணை!

சொந்தக்காரர்கள் வருகிறார்கள். ”வாங்கத்தை…வாங்க சித்தி…உமா சௌக்கியமா? கார்த்திக் எப்டி இருக்கான்? பெரிய பாட்டிக்குக் கால் சரியாயாச்சா?”.தஸ்தாயெவ்ஸ்கி படிக்கிறவளுக்கு இந்தப் பெயர்களும் ஊர்களும் எல்லாம் எப்படி நினைவிருக்கின்றன? ” அருணா, நீ ரெண்டுல ஒண்ணுதான் நிஜம். ஒண்ணு நீ படிக்கிற புஸ்தகம் உண்மை. இல்லேண்ணா இங்க நீ காட்டுற முகம் உண்மை…” ’’ஆமா பெரிசா கண்டே…சும்மா கெட” என்று போய்விடுவாள்.

”உள்ளதான் இருக்கார். படிக்கிறார். எப்ப பாத்தாலும் படிப்பு. அப்டி என்னத்த படிப்போ? படிச்சு படிச்சுக் கண்ணே குழிவிழுந்து போச்சு…சொன்னா கேக்கிறதில்ல….” வீட்டில் நான் யாருடனாவது அரைமணிநேரம் தொலைபேசினால் ”என்ன அப்டி பேச்சு? நீ கிரியேட்டிவ் ரைட்டர். அரட்டை அடிக்கிற ரைட்டர் உருப்பட மாட்டான். வார்த்தைகள விரயம் செய்றது அது… பேசிப்பேசி படிக்கிற நேரமே கொறைஞ்சாச்சு…படி, எழுது இல்லேண்ணா வாக்கிங் போ. என்னத்துக்கு வெட்டிப்பேச்சு? கிக்கிக்கீண்ணு சிரிப்பு?” என்று எரிந்து விழுபவள்! நல்ல வேளையாக சிங்கம்புலி படிமம் இருப்பதனால் என்னிடம் உறவினர்கள் ஒரு புன்னகை செய்து பீதியுடன் நகர்ந்துசென்றுவிடுவார்கள்

ஒருவழியாக இரண்டுநாள் கழித்து வீடு திரும்பும்போது பேருந்தில் ஏறும்கணம்வரை நெகிழ்ச்சி கண்ணீர். ”அம்மா உடம்பப் பாத்துக்கோ…வாக்கிங் போ. எப்ப பாத்தாலும் சீரியல பாத்துட்டு இருக்காதே.. போனதுமே போன் பண்றேன்… சித்த —” கண்ணீருடன் வண்டியிலேறி ஒருமணிநேரம் அதே மனநிலை. ”எங்கம்மாவுக்கு இப்பல்லாம் முடியலை…” ”ஆமாமா முன்னல்லாம் ஏழு சீரியல் பாப்பாங்கள்ல?” மெல்ல மெல்ல சுமுக நிலை திரும்பிப் பழைய அருண்மொழி மீள்கிறாள். ”டெட்டிக்கு பக்கத்துவீட்டுத் தாத்தா சாப்பாடு வச்சிருப்பாரோ என்னமோ….ஹீரோவ போனதுமே கூட்டிட்டு வந்திரு…பாவம் ஏங்கிப்போயிருப்பான்…”

”அருணா சிவராம காரந்த்தோட பயாக்ரபி பேரு தெரியும்ல?” ”பித்தனின் பத்துமுகங்கள்தானே?” ”ஆமா. அதே மாதிரி நான் ஒண்ணு
எழுதப்போறேன்…” ”என்னது முட்டாளின் எட்டுமுகங்கள்னா?” ”இல்ல, பத்தினியின் பத்தாயிரம் முகங்கள்!” ”ஆமா…பெரிசா கண்டே” ”நிஜம்மாவே உன்னைப்பத்தி ஏகப்பட்டது எழுதறதுக்கு இருக்கு”

”தெரியும்ல, நான் மத்த ரைட்டர்ஸ் வைஃப் மாதிரி இல்ல. கிட்டத்தட்ட உன்னை மாதிரியே என்னாலும் எழுத முடியும். பேசாம இரு. ஒழுங்கா இல்லேண்ணா உன் பயாக்ரஃபிய எழுதிருவேன், ஆமா” .அந்தக் கடைசி அச்சுறுத்தலுக்கு நான் எப்போதுமே அடிமை.

 

முந்தைய கட்டுரை‘யூத்து’
அடுத்த கட்டுரைஉவேசாவும் ஃபெட்னா அவதூறும்