அதிர்வு – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

அண்மையில் வீட்டு விழாவுக்காக இரு இயேசு படங்களை வாங்க நகரின் முக்கிய கிறித்துவ வெளியீடுகளை விற்கும் கடை ஒன்றிற்குச் சென்றேன். ஒரு படம் செபம் செய்யும் இடத்துக்கும் ஒன்று வரவேற்பறையிலும் மாட்ட‌. வரவேற்பறையில் இயேசு குழந்தைகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்றோ அல்லது மேய்ப்ப‌ராக‌ இருப்ப‌தைப்போன்றோ ஒரு படம் மாட்டிக்கொள்ள எனக்கு ஆசை. புன்னகைக்கும் இயேசுவின் படம் ஒரு அபாரமான அனுபவத்தை எனக்கு அளிக்கிறது. அது ஞான இயேசு என்று நான் கருதுகிறேன்.

ஆனால் அப்படி ஒரு படம் கிடைக்கவேயில்லை. இப்போது வழிபாட்டு கிறிஸ்து மட்டுமே இருக்கிறார். கிறிஸ்துவ ஞானம் என்பது அறவே அற்றுப் போய்விட்டது என்பதை உணர்ந்தேன். எல்லாக் கோவில்களும் த‌ங்களைப் புதுமை நிகழும் கோவில்களாக விளம்பரப்படுத்திக்கொள்கின்றன. கத்தோலிக்கமும் அற்புத குணமளிக்கும் கூட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. ப‌ல‌ பாதிரியார்க‌ளும் த‌ங்க‌ளை வெறும‌னே ச‌ட‌ங்குகளை ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளாக‌வும், நிர்வாகிக‌ளாக‌வும் ம‌ட்டுமே மாற்றிக்கொண்டுள்ள‌ன‌ர்.

உங்க‌ள் ‘ஏதோ அதிர்வு இருக்குதுங்க‌’ க‌ட்டுரையைப் ப‌டித்த‌தும் இதுதான் நினைவுக்கு வ‌ந்த‌து.

அன்புட‌ன்,
சிறில்

அன்புள்ள சிறில்,

ஏசுவை இந்திய முகத்துடன் பல கோணங்களில் வரையும் ஓர் இந்திய ஓவியரைப்பற்றி நண்பர் போதகர் காட்சன் ஒருமுறை சொன்னார். அவரது படங்களை சேமித்திருந்தேன். ஒரு கட்டுரை எழுத நினைத்தேன். ஆனால் கணிப்பொறிப்பிரச்சினையால் படங்கள் அழிந்துவிட்டன.

‘பிரார்த்தனை எல்லையற்ற வல்லமை கொண்டது’ என்று ஒரு கட்டுரையில் புலிக்குந்நேல் எழுதுகிறார். ‘ஆனால் சுயநலமில்லாத பிரார்த்தனைகளுக்குத்தான் அந்த வல்லமை கைகூட முடியும்.’ அவர்களைப்பார்த்து மட்டுமே ஏசு புன்னகை செய்கிறார்.

ஜெ

அன்புள்ள ஜெ,

இன்று காலை “ஒரு அதிர்வு இருக்குதுங்க “ கட்டுரை படித்தேன். முக்கால் பகுதி முழுக்க பக்தி, ஞான மற்றும் தாந்திரீக மார்க்கங்கள் பற்றித் தெளிவாகச் சொல்லி மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிப்பூரகம் அனாகதம் பற்றி அந்தக் குறியீடுகளின் அடிப்படைக் காரணங்கள் பற்றி விளக்கியது பெரும் பிரமிப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியது. மிக்க நன்றி. விசுத்தி, ஆக்கினை மற்றும் சகஸ்ஹரம் ஆகிய மற்ற குறியீடுகளுக்கும் விளக்கம் தரமுடியுமா? இவ்வாறு இதைத் தங்களிடமே கேட்பது தவறெனில் மன்னிக்கவும்.

பா.சதிஷ்

அன்புள்ள சதீஷ்,

பார்ப்போம். இவைபற்றி ஒரு கற்பனை இல்லாமல் இவற்றை வெறும் தகவல்களாக அறிந்துகொள்வது மேலும் பிழைகளுக்குக் கொண்டு செல்லலாம். இன்னொன்று, இப்படி எதைப்பேச ஆரம்பித்தாலும் யாரோ சிலர் அதற்கு சொந்த விளக்கங்களுடன் வந்துவிடுகிறார்கள்.

ஜெ

திருமிகு ஜெயமோகன்,

உங்கள் கட்டுரையினை வாசித்தேன். குண்டலினி மார்க்கத்தைப்பற்றி நீங்கள் எழுதியிருந்தீர்கள். அருமையாகச் சொன்னீர்கள். வாசியை அடக்கும் வாசிவித்தை வழியாகவே குண்டலினியைத் தொட முடியும். அதற்கு நாற்பத்தியொன்று மூல மந்திரங்கள் உள்ளன.

குண்டலினி எழுந்தால் மூலாதாரம் எழுபத்திமூவாயிரத்து முந்நூறு முறை சுழலும். அதன் பின் மண்புழு போல லலனை மேலே ஏற ஆரம்பிக்கும். அப்போதுதான் நாம் உலகத்தைத் தெளிவாகப் பார்க்க ஆரம்பிக்கிறோம். திரைபோட்டு மறைத்த விஷயங்களைப் பார்க்க முடியும். மாண்டவர் தெரிவார். முக்காலமும் தெரியும். முக்கண்ணன் அறிவான்.

இதைப்பற்றி உங்களிடம் நிறைய பேச ஆசை. உங்கள் மொபைல் எண்ணை அனுப்பவும்.

ஸத்யநாராயணன்

அன்புள்ள சத்யநாராயணன்,

கிட்டத்தட்ட இருபதுபேர் இதேபோலக் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் பேசி முடிந்ததும் அனுப்புகிறேன். அடுத்த வருடம் வரை நேரமில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரத்தின் வாசலில்…
அடுத்த கட்டுரையானைப்பலி – கடிதம்