கயாவும் தர்மஸ்தலாவும்

அன்புள்ள ஜெ,

விரிவான பதிலுக்கு நன்றி.

நிர்வாகக் கமிட்டியில் உள்ளவர்கள் சரியில்லை என்றால் வேறு இந்துக்களை நியமிக்கக் கோரி பௌத்த தலைமை பீடங்கள் கேட்கலாம் அல்லவா? நிர்வாகத்தில் இந்துக்கள் இருப்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது என்று வழக்குத் தொடுப்பதன் பின்னால் ஒரு தீவிர பிரிவினை / பிளவு மனோபாவம் உள்ளதாகவே கருதுகிறேன்.

திபேத்திய பௌத்தர்களுக்கு இந்துமதம் மீது மரியாதை உள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அங்காரிக தர்மபாலர் வழியைப் பின்பற்றும் சிங்கள பௌத்த தலைமை பீடங்கள் இந்துமதம் மீது வெறுப்பு கொண்டவர்களாகவே உள்ளார்கள் என்று நினைக்கிறேன். இலங்கையில் பல நூற்றாண்டு பெருமை வாய்ந்த சிவாலயங்கள் சிங்கள இனவெறியர்களால் அழிக்கப்படும்போது மறைமுக ஆதரவும் கள்ள மௌனமுமே அவர்கள் வழிமுறையாக உள்ளது.

கர்நாடகத்தின் புகழ்மிக்க சிவாலயங்களில் ஒன்று தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி ஆலயம். இதன் பரம்பரை தர்மகர்த்தாவாக சமணர்களே பல காலமாக இருந்து வருகிறார்கள். தற்போதுள்ள வீரேந்திர ஹெக்டே என்ற தர்மகர்த்தா அந்தப் பிரதேசம் முழுவதிலும் உள்ள மக்களால் மிகவும் மரியாதையுடன் மதிக்கப்படுகிறார். நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் பல வழக்குகள் அவர் முன்னிலையிலேயே சுமுகமாக தீர்கின்றன. வரலாற்றின்படி, வீரசைவமும் சமணமும் ஒன்றுக்கொன்று பல நூற்றாண்டுகள் தீவிர சமய மோதலில் ஈடுபட்டிருந்த இடம் கர்நாடகம்.

இது போன்ற ஒரு தீர்வுதான் கயை விஷயத்தில் வர வேண்டும் என்று நினைக்கிறேன். இந்துக்களை விரோதிகளாகக் கருதி ஒதுக்கி வைப்பதன் மூலம் அது சாத்தியமில்லை.

இந்துமதம் சார்ந்த குறுகிய பார்வையுடன், இந்து அரசியல் சார்ந்த பிரிவினைக் கண்ணோட்டத்திலேயே நீங்கள் சுட்டும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இல்லை. அந்தக் கட்டுரையின் ஆசிரியரான சந்தியா ஜெயின் ஒரு சமணர். இந்திய சமய மரபுகள் அனைத்தையும் ஒரு ஆழி வட்டமாகப் (oceanic) பார்க்க வேண்டும், தனித்தனியாக அல்ல என்று தான் அந்தக் கட்டுரையும் கூறுகிறது.

// By admitting the plea on the Mahabodhi temple, the bench has taken a narrow view of the oceanic nature of native Indian tradition. In the 1920s itself, renowned archaeologist R.P. Chanda noted the Indus roots of Yogic tradition (possibly India’s most significant spiritual dimension), particularly the meditation forms that came to be associated with Bauddha and Jaina practice. He observed that the discoveries at Indus sites show that both traditions are indebted to the Indus civilization for some of their cardinal ideas. Scholars now believe that what were later identified as distinct Hindu, Jaina and Bauddha spiritual streams, had common roots in the Indus civilisation. //

அன்புடன்,
ஜடாயு

வீரேந்திர ஹெக்டே, தர்மஸ்தலா

அன்புள்ள ஜடாயு,

நான் வாதிட விரும்பவில்லை. இது வாதிட்டு நிறுவுவதற்குரிய பிரச்சினை அல்ல, மனசாட்சியின் பிரச்சினை.

நீங்கள் செய்யும் வாதங்களின் உள்ளீடு உங்களுக்கே தெரியும். நிர்வாகக் குழுவில் வேறு இந்துக்களைச் சேர்க்கலாமே என்கிறீர்கள். கயாவில் பௌத்தர்கள் அந்த நிர்வாகக்குழுவில் இருக்கும் சிலருக்கு எதிராக மனவிலக்கம் கொள்ளவில்லை. இந்துக்களின் பிரதிநிதிகளாக வந்து கயாவைக் கைப்பற்ற முனைபவர்களைக் கண்டு, அவர்களுக்கு எதிரான குரல்களே இல்லை என்பதைக் கண்டுதான் மனவிலக்கம் கொள்கிறார்கள்.

அந்த மனவிலக்கத்தை இந்துக்கள் தங்கள் பெருந்தன்மை மூலம், இந்துப்பண்பாட்டை ஒட்டுமொத்தமாகக் காணும் பார்வை விரிவுமூலம் நீக்குவதே சரியான பதில் நடவடிக்கை. ஆனால் அவர்களிடம் அடிதடிப்பூசலில் ஈடுபட்டு மேலும் மனக்கசப்பையே இந்துக்கள் அங்கே உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதை மட்டுமே நான் சுட்டிக்காட்டினேன்.

இப்போது கயாவுக்காகக்குரல் கொடுப்பவர்கள் அநகாரிக தம்மபாலாவின் அடிப்பொடிகள் அல்ல. உலகமெங்கேயும் உள்ள ஒட்டுமொத்த பௌத்த மதத்தின் பிரதிநிதிகள்தான். அதுவும் கயாவுக்குள் பண்டாக்கள் புகுந்து அடிதடியில் ஈடுபட்ட பின்னர்தான். உங்களை ஏற்காதவர்கள் என்பதற்காக அவர்கள் இந்துமத எதிரிகள் எனப் பேச ஆரம்பிக்கவேண்டாம்.

கடைசியாக தர்மஸதலா. ஏற்கனவே என் பயணக்கட்டுரையில் நான் எழுதியவைதான். தர்மஸ்தலாவின் இந்து கோயிலான மஞ்சுநாதசுவாமி ஆலயத்துக்கு டிரஸ்டியாக இருப்பதற்கு இந்துக்களால் ஹெக்டே ‘பெரிய மனதுடன்’ அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தொனி உங்கள் பேச்சில் இருக்கிறது.

தர்மஸ்தலா கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே புகழ்பெற்றிருந்த ஒரு சமண ஸ்தலம். இது முன்பு குடுமா, மல்லார்மடி என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் கைவிடப்பட்டபின்னர் வெறும் இடிபாடுகளாக இருந்தது.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் இதனருகே உள்ள பெல்தங்காடி என்ற ஊரின் ஆட்சியாளராக இருந்த பிர்மண்ண பெர்கடே என்ற சமணரைத் தேடிவந்த சமணத்துறவி இந்த ஊரைப்பற்றிச் சொல்லி இங்கே ஒரு சமண ஆலயமும், அன்னதான நிலையமும் உருவாக்கும்படி ஆணையிட்டார்.

பிர்மண்ண பெர்கடேயும் அவர் மனைவி அம்மு பல்லத்தியும் இங்கே முன்னர் இருந்து பின் அழிந்த அன்னதான சாலையை மீண்டும் ஆரம்பித்தனர். பிர்மண்ண பெர்கடேயின் குடும்பம் நெல்லியாடி வீடு எனப்படுகிறது. அவர்களின் ஆட்சியில் இந்த ஊர் இருந்தது.

பெர்கடே காலத்திலேயே பல உள்ளூர் தெய்வங்களும் இங்கே நிறுவப்பட்டுவிட்டன. பெர்கடே இங்கே களராகு, கலர்காயி, குமாரசாமி, கன்யாகுமரி தெய்வங்களை நிறுவி வழிபட்டுவந்தார். அந்த நாட்டார் தெய்வங்கள் பொதுவாக கர்நாடகாவில் சமணர்களாலும் வழிபடப்படுபவை.

அவர் பிராமணர்களைப் பூஜைக்காக அழைத்தபோது அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கே சிவலிங்கம் அமைக்கப்பட்டது. இதை உள்ளூர் காவல்தெய்வமான அன்னப்பா என்ற தெய்வமே கொண்டுவந்து அறங்காவலர் ஹெக்கடேக்கு அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த லிங்கம் அருகே உள்ள கதரி என்ற ஊரைச்சேர்ந்தது.

பதினாறாம் நூற்றாண்டில் அன்றைய அறங்காவலர் தேவராஜ ஹெக்டே அழைப்பின் பேரில் இங்கே வந்த உடுப்பி மடாதிபதி வாதிராஜ சுவாமியால் அந்த லிங்கம் ஆலயமாக இங்கே நிறுவப்பட்டது. அதுவே மஞ்சுநாத சுவாமி கோயிலாக உள்ளது.

தர்மஸ்தலா பாகுபலி

அதாவது ஒரு சமணப் புனித தலத்தில்தான் மஞ்சுநாத சுவாமி ஆலயம் சமணர்களால் உருவாக்கப்பட்டது. அந்த சமணர்களே அதற்கு அறங்காவலர்களாகவும் இருக்கிறார்கள். பிர்மண்ண பெர்கடேயின் இன்றைய வாரிசாக வீரேந்திர ஹெக்டே இருக்கிறார். அவர் சமணர். ஆனால் சைவ வைணவக் கோயில்களுக்கும் சிறுதெய்வக் கோயில்களுக்கும் அவரே புரவலராக இருக்கிறார். எல்லா வழிபாடுகளிலும் அவர் கலந்துகொள்கிறார்.

சமணம் எப்போதுமே இந்துப் பெருந்தெய்வங்களையும் சிறுதெய்வங்களையும் தன்னகத்தே கொண்டதாகவே இருந்துள்ளது. அதையே நாம் தர்மஸ்தலாவிலும் காண்கிறோம். இன்று அங்கே வரும் கோடிக்கணக்கான எளிய இந்துக்கள் அங்குள்ள சமணக் கோயிலிலும் வணங்கிவிட்டே செல்கிறார்கள். பாகுபலிக்கும் மஞ்சுநாதருக்கும் அவர்களைப் பொறுத்தவரை வேறுபாடில்லை.

ஆம், நீங்கள் சொல்வது உண்மை. நாம் இந்து, சமண, பௌத்தப் பண்பாடுகள் ஒரே பண்பாட்டு ஊற்றுமுகத்தைச் சார்ந்தவை என்பதைப் புரிந்துகொள்ள தர்மஸ்தலாவை முக்கியமான முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். ஆனால் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் முதலில் இந்துத்துவம் பேசுபவர்கள்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைகலங்கியநதி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொதுப்பிரச்சினையும் புரிதலும்