சமகால வாசிப்பு என்பது…

ஜெ

உங்கள் பெரும்பாலான புனைகதைகளையும் ஓரளவு கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். பெரும்பலான கட்டுரைகளில் நீங்கள் ருஷ்ய நாவலாசிரியர்களான டால்ஸ்டாய் தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களைப்பற்றித்தான் பேசுகிறீர்கள். சமகாலல்  இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தைப்பற்றி அதிக குறிப்புகள் காணப்படவில்லை.   நான் எண்ணுவது தவறாகவும் இருக்கலாம். நீங்கள் சமகால இலக்கியத்தை வாசிக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.   பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியத்துக்கு அளவுக்கு இருபதாம் நூற்றாண்டு இலக்கியம் கவரவில்லையா? போர்கெஸ், ராபர்ட்டோ போலானோ போன்றவர்களைப்பற்றிய உங்கள் மனப்பதிவு என்ன என்று அறிய ஆர்வமாக இருக்கிறேன். அவர்களைப்பற்றிய உங்கள் கருத்துக்களும் அறிமுகங்களும் உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்

அன்புடன்
அஜய்

அன்புள்ள அஜய்

உங்கள் கேள்வியில் இருந்த உற்சாகமும் தன்னம்பிக்கையும் எனக்கு பிடித்திருந்தன. ‘உலக இலக்கியம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கும் விதத்தில் உள்ள நம்பிக்கை குறிப்பாக. நானும் கடந்து வந்த ஒரு பாதைதான். அந்த வினாவில் பிழை ஏதும் இல்லை.

வாசிப்பின் பல்வேறு படிநிலைகளைப்பற்றியும், நான் கடந்துவந்த வழிகளைப்பற்றியும் உங்கள் கேள்வியை ஒட்டி சிந்திக்க நேர்ந்தது. பொதுவாக இலக்கிய வாசகர் என்று சொல்கிறோம். ஆனால் அதில் ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு வகை. இதற்கும் மேலே சென்று பொதுமைப்படுத்தினால்கூட வாசகர்களை பல்வேறு வகையினராகப் பிரிக்கலாம். வாசகர்களாக மட்டுமே நின்றுகொள்பவர்கள், எழுத்தாளர்கள், விமரிசகர்கள், ஆய்வாளர்கள் என இலக்கிய வாசகர்கள் பலவகை. அவர்களுடைய வாசிப்புமுறைகளும் முற்றிலும் வேறுபட்டவை.

உதாரணமாக இலக்கியத்தளத்தில் ஆராய்ச்சி செய்யும் ஒருவர் அவரது ஆய்வுத்தளத்தில் மட்டுமே முழுமையான கவனத்துடன் இருக்க முடியும். அங்கே அவரது அறிதல் மிக விரிவாகவும் நுட்பமானதாகவும் இருக்கும். அந்த அளவுக்கு பிறவற்றில் அவரது கவனம் நிலைப்பது சாத்தியமல்ல. எழுத்தாளர்களும் அப்படித்தான். ஒரு கட்டத்தில் எழுத்தாளனுக்கு அவனது தேடலின் பார்வை நீண்டு தொடும் ஒரு எல்லை உருவாகிவிடுகிறது. அந்த எல்லைக்கு அப்பால் அவனது உலகம் விரிய முடியாது.  அந்த தேடலின் உலகை உருவாக்கிக்கொள்ளவே அவனது ஆரம்பகால வாசிப்புகள் உதவுகின்றன.

பொதுவான வாசகனின் பரிணாமத்தில்கூட வாசிப்பு எப்போதும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. ஆரம்பகால வாசிப்பு என்பது தன்னைக் கண்டடையும் ஆர்வத்தின் அடிப்படையில் அமைந்தது. பின்னர் தன் உலகம் சார்ந்த வாசிப்பு. ஒரு கட்டத்தில் அது தன் தளம் சார்ந்த அடிப்படைகளை மட்டுமே வாசிப்பதாக ஆகிவிடுகிறது. என் அனுபவத்தை வைத்து அதைப்பற்றி சில சொல்ல விரும்புகிறேன்.

நல்ல வாசகனுக்கு வாசிப்பு தொடங்கும் காலகட்டத்தில் அது ஒரு கட்டற்ற பாய்ச்சலாக இருக்கிறது. கையில் கிடைத்த அனைத்தையும் வாசிப்பது என்னும் முறைதான் அப்போது காணப்படும். ஒரு நூல் நல்ல நூல் அல்ல என்று தோன்றினால்கூட படித்துத்தான் பார்ப்போமே என்ற எண்ணம் வருகிறது. நூலகத்தில் நூல்களைத்தேர்வுசெய்வதில் கூட ஒரு குத்துமதிப்பான போக்கு காணப்படும். நான் அட்டையின் வடிவமைப்பை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு நூல்களை பொறுக்கி வாசித்த ஒரு பருவம் இருந்தது.

இந்தக்கட்டத்தில் சிலசமயம் நம்மை வழிகாட்டிச்செல்லும் சிலர் தற்செயலாக அமைகிறார்கள். அவர்கள் வாசிப்பதை நாம் வாசிக்கிறோம். அவர்களை வேகமாக பின்பற்றிச் செல்கிறோம். சில சமயம் அரசியலியக்கங்கள் இச்சமயத்தில் நம்மை கவர்ந்து உள்ளே இழுக்கின்றன. அந்த இயக்கங்களுக்கு ஒரு ‘பாடத்திட்டம்’ இருக்கும். அதுசார்ந்து நாம் வாசித்துக் குவிக்கிறோம். அதன் கோஷங்களையும் வாய்ப்பாடுகளையும் நாம் நம்முடைய சொந்தச் சிந்தனைபோல எல்லாரிடமும் சொல்ல ஆரம்பிக்கிறோம்.

ஓரளவு வாசிக்க வாசிக்க நாம் நம்மை இலக்கியவாசகன் என்று உணரும் கட்டம் வருகிறது. முதல்காலகட்டத்தின் பரிணாமத்தின் இரண்டாம் படிநிலை என இதைச் சொல்லலாம். தன்னம்பிக்கைமிக்க காலகட்டம் இது. உலகத்தின் ஞானச்செல்வத்தை முழுக்க அள்ளிவிடலாம் என்ற எண்ணம். எல்லாவற்றையும் படித்து முடித்துவிடலாமென்ற பிரமை. வாசிக்க வாசிக்க ‘நான் பெரிய வாசகன், அசாதாரணமானவன்’ என்னும் பெருமிதம். மெல்ல மெல்ல நாம் இயக்கங்கள் போன்றவற்றின் சாதாரணமாக உறுப்பாக இருக்க மறுக்கிறோம். நம்மை தனியாக அடையாளம் காண்கிறோம்.

இக்காலகட்டத்தில் நாம் நூலகத்தில் ஆகத்தடிமனான நூல்களை மட்டுமே தேர்வுசெய்வோம். எண்பதுகளில் நான் மிகப்பெரிய பத்திகளுடன் பொடி எழுத்தில் ஏராளமான பக்கங்கள் கொண்ட நூல்களை மட்டுமே எடுப்பேன். வாசித்தவற்றைப்பற்றி ஓயாமல் பேசிக்கொண்டிருப்போம். பிறரிடமும் நம்மிடமும். ஒருவன் தன் வாழ்நாளிலேயே மிக அதிகமாக இலக்கியவிவாதம்செய்வது இப்பருவத்தில்தான். எதையும் எவரிடம் மறுத்துப்பேச தயாராகிவிடுவோம். நானெல்லாம் சுந்தர ராமசாமியிடமும் ஆற்றூர் ரவிவர்மாவிடமும் எதையும் மூர்க்கமாக மறுத்துப்பேசுபவனாக இருந்தேன். எனக்கென்று ஒரு கருத்தை எங்கும் முன்வைக்க முயல்வேன். அது சரியாக இருக்க வேண்டியதில்லை. அது என்னுடைய கருத்தாக இருந்தாலே போதுமானது.

உண்மையில் இந்தக்காலகட்டத்தில் நம்முடைய வாசிப்புக்கான பயிற்சியை மட்டுமே நாம் எடுக்கிறோம். உள்வாங்கிக் கொள்வதற்கும் சிந்திப்பதற்கும் தொகுத்துக் கொள்வதற்குமான பயிற்சி. நம்முடைய சொந்த ரசனை எது என்று கண்டடைவதற்கான பயிற்சி. இக்காலகட்டத்தில் பெரிய கிளாசிக்குகளைக்கூட சமயங்களில் வாசித்தித்தள்ளிவிடுவோம். நான் பள்ளி இறுதி படிக்கும் காலகட்டத்திலேயே தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கியின்  நாவல்களை வாசித்திருக்கிறேன். அலக்சாண்டர் டூமாவின் பெரிய சாகஸநாவல்களையும் அதே காலகட்டத்தில் வாசித்து தள்ளியிருக்கிறேன்.

இந்தக்காலகட்டத்து ரசனை என்றும் ஒன்று உண்டு. அது பெரும்பாலும் நம் தன்னம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. சிக்கலான படைப்புதான் நல்ல படைப்பு என்ற எண்ணம் இப்போது உருவாகிறது. நம்முடைய மூளையால் உள்ளே புகுந்து முட்டி மோதி உடைத்து உள்ளே போனால் மட்டுமே படைப்பு நம்மை கவர்கிறது. அது நமக்கு ‘சவால்’ விடவேண்டும் என எதிர்பார்க்கிறோம். நம்மை ஓர் அறிவாளி என்று அந்தப்படைப்பு நிரூபிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

இந்த ஆரம்பகாலகட்டத்தின் மூன்றாவது பரிணாமநிலைதான் ‘சமகால உலக இலக்கிய’த்தின் ஓட்டத்துடன் கூடவே ஓடமுயலும் நிலை. நாம் நிறையப் படிக்கிறோம் என்பதுடன் நம் படிப்பு முக்கியமானது என்றும் நாம் எண்ணியிருக்கும் ஒரு நிலை இது. உலக இலக்கிய ஓட்டம் ஒன்று உண்டு என்றும் அதன் எல்லா முக்கியமான படைப்புகளையும் அவ்வப்போது நாம் படித்துவிடவேண்டும் என்றும், அவ்வாறு படிப்பதன்மூலம் நாம் ஓர் உலக இலக்கியவாசகனாக செயல்படுகிறோம் என்றும் தோன்றுகிறது. இதற்காக நாம் தீவிரமாகப் படித்துக் கொண்டுமிருக்கிறோம்.

உண்மையில் இக்காலகட்டத்தில் நாம் பொதுப்போக்கை அப்படியே பின்பற்றுகிறோம்.  இந்த பொதுப்போக்கு ஊடகங்களால் உருவாக்கப்படுவது. உலக இலக்கியம் என்ற ஒன்று உண்மையில் ஒரு மன உருவகமே. சென்ற நூற்றாண்டுகளில் ஐரோப்பா உலகைவென்றபோது உலகம் முழுக்க இருந்து குறிப்பிடத்தக்க நூல்கள் ஐரோப்பியமொழிகளுக்கு வந்தபோது  அப்படி ஒரு மன உருவகத்தை ஐரோப்பிய அறிஞர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். உலக இலக்கியம் என்னும் சொல்லாட்சியே கவிஞரும் தத்துவமேதையுமான கதே உருவாக்கியது என்கிறார்கள்

உலகம் முழுக்க உள்ள நூல்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக உலக இலக்கியம் என்று சொல்லலாம்தான். ஆனால் ஒரு மனிதனின் அல்லது ஒரு சிந்தனைமரபின் வாசிப்புக்குள் ஒருபோதும் உலக இலக்கியம் என்பது அடங்காது. ஆகவே உலக இலக்கியம் என்பது  உருவகித்துக்கொள்ளவே முடியாத ஓரு கருத்துருவம் என்றுதான் சொல்லவேண்டும். மார்ஸ் முதல் இன்றையா தெரிதா வரை ஐரோப்பிய சிந்தனையாளர்களுக்கு அவர்களின் தளம் சார்ந்த கீழைச்சிந்தனைகள் எளிய அறிமுகமாகக் கூட இல்லை. அவர்களை ஐரோப்பிய சிந்தனையாளர் என்றே சொல்ல வேண்டும்.

இந்நிலையில் இன்று ஊடகங்களால் உருவாக்கப்படும் உலக இலக்கிய உருவகம் என்பது எத்தனை மேலோட்டமானது என்று சொல்லத்தேவையில்லை. பல காரணங்களால் ஐரோப்பிய -அமெரிக்க ஊடகங்களின் கவனத்துக்கு வந்துசேரும் நூல்களை மட்டுமே நாம் இன்று உலக இலக்கியமென்ற வட்டத்துக்குள் அடக்குகிறோம். இவை வருடத்துக்கு அதிகபட்சம் நூறு நூல்கள் மட்டுமே. அவற்றில் தொண்ணூறு சதவீதம் ஐரோப்பிய-அமெரிக்க நூல்கள் என்பதும் இயல்பே. அவ்வட்டத்துக்கு வெளியே உள்ள எத்தனையோபடைப்புகள் கவனிக்கப்படுவதே இல்லை.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த வட்டம் எப்படி உருவாகிவந்திருக்கிறது என்பதை கடந்த பல ஆண்டுகளாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். பல சக்திகள் இந்த வட்டத்தைத் தீர்மானிக்கின்றன. மேலைநாட்டு ஊடகங்களில் உள்ள தனிநபர்வட்டங்களின் செல்வாக்கு ஒரு முக்கியமான கூறு. உதாரணமாக எண்பதுகளில் சால் பெல்லோ  இலக்கிய கவனத்தைத் தீர்மானிக்கும் தனிநபர்களில் ஒருவராக இருந்தார். தொண்ணூறுகளில் ஜான் அப்டைக் அந்த இடத்தை வகித்தார். இதழ்களுடனான தொடர்பும் தொடர்ச்சியாக எழுதும் தன்மையும்தான் அதற்குக் காரணமாக இருந்தன.

அடுத்தபடியாக செல்வாக்குமிக்க திறனாய்வாளர்கள். இவர்களின் கருத்துக்கள் படைப்புகளைப்பறிய பொது அளவுகோல்களை வலுவாக உருவாக்கிவிடுகின்றன. இவர்கள் விரிவான திறனாய்வுகளை எழுதியிருந்தாலும் உதிரி வரையறைகளாக அவர்களின் கருத்துக்கள் அனைவரையும் சென்றடைந்து சிந்தனைகளை தீர்மானிக்கின்ரன. நூல்மதிப்புரைகள் பெரும்பாலும் இந்தத்திறனாய்வாளர்களின் அளவுகோல்களையே பயன்படுத்தி எழுதப்படும். அவையே நூல்களை தேர்வுசெய்து நம் முன் நிறுத்தும் . எழுபதுகளில் கிளிந்த் புருக்ஸ் மற்றும் அவரது புதுத்திறனாய்வுக்குழுவினர் அப்படி நிர்ணாயகமான பங்களிப்பைச் செலுத்தினர். எண்பது தொண்ணூறுகளில் ஹெரால்ட் ப்ளூம்.

மூன்றாவதாக, கல்விப்புலம். மேலைநாட்டுக்கல்விப்புலம் மிக வலுவான ஒரு கருத்துத்தரப்பு. உலகளாவிய முறையில் விரிந்துள்ள ஆய்வுகள் மூலம் மேலைநாட்டுக் கல்விப்புலத்துக்குள் தகவல்கள் வந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இந்தத் தகவல்களில் இருந்து அவர்கள் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலும் இந்தக் கோட்பாடுகள் விதவிதமான மூளைப்பயிற்சிகள். எழுதாத பேராசிரியனை வேலையை விட்டு தூக்கும் போக்கு காரணமாக எழுதிக்குவிக்கிறார்கள். இவ்வாறு உருவாகும் கோட்பாடுகளில் ஒரு பகுதி வெளியே வந்து பொதுவான சிந்தனையில் அழுத்தமான பாதிப்பைச் செலுத்துகின்றது. மேலைநாட்டுச் சிந்தனையில் பதினைந்தாண்டுகளுக்கு ஒரு புதிய கோட்பாட்டு அலை அடிப்பதைக் காணலாம்.

ஒரு கோட்பாடு அல்லது சித்தாந்தம் எப்படி புகழ்பெறுகிறது என்று பார்த்தால் பலசமயம் வேடிக்கையாக இருக்கும். பெரும்பாலும் எளிய வாய்ப்பாடுகளாக சட்டென்று சுருக்கக்கூடிய கோட்பாடுகளே புகழ்பெறுகின்றன. அத்துடன் விசித்திரமான சொற்றொடர்களாக தங்களை முன்வைக்கும் கோட்பாடுகள் அதன்மூலம் கவனத்தைக் கவர்ந்து சட்டென்று புகழ்பெறுகின்றன. ‘நரகம் என்பது மற்றவர்தான்’ போன்ற வரிகள் மூலமே இருத்தலியல் புகழ்பெற்றது. ”ஆசிரியன் இறந்துவிட்டான்” ‘பிரதி இல்லை,சூழலே உள்ளது’ [No text,only context]; போன்ற வரிகள் மூலம் அமைப்பியல். அதன் பின் அந்தக்கோட்பாடு அல்லது சித்தாந்தம் கொஞ்சநாள் அளவுகோல்களை தீர்மானிக்கிறது

இதைவிட சர்வ சாதாரணமான ஓர் அளவுகோல் மேலை ஊடகங்களில் உள்ளது. ஏற்கனவே வேறு காரணங்களினால் பிரபலமாகும் நிலப்பகுதியின் இலக்கியமும் பிரபலமாகும் என்பதே அது.  போர்கள் இனக்கலவரங்கள் பஞ்சங்கள் போன்றவற்றால் செய்தியில் அடிபடும் ஒரு தேசத்தின் இலக்கியமும் கவனிக்கப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் ருஷ்ய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய செக்,ஹங்கேரி,போலந்து போன்ற நாடுகள் மேல் ஊடகக் கவனம் குவிந்திருந்தது. அவர்களின் எழுத்துக்கள் பேசப்பட்டன. அக்காலகட்டத்தில் ராணுவப்புரட்சிகள் மூலம் லத்தீனமேரிக்கா கவனம்பெற்றது. பின்னர் கலவரம் மூலம் செர்பியா பேசப்பட்டது.  பஞ்சம் மூலம் ஆப்ரிக்கா. மததீவிரவாதம் மூலம் அரேபியா. இன்று ஆதிக்கவல்லமை மூலம் சீனா பேசப்படுகிறது. ஐரோப்பா எந்த நாட்டை அறிய விரும்புகிறதோ அந்த நாட்டு இலக்கியம் உலக இலக்கிய வட்டத்துக்குள் வருகிறது.

இவ்வாறெல்லாம் உருவாகும் ஒரு வட்டமே இன்று உலக இலக்கியம் எனப்படுகிறது. இதை ஒரு பொதுப்போக்கு -டிரெண்ட்- என்றே சொல்லவேண்டும். அதன்மீதான ஒரு கவனம் வாசகர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் முழுக்க முழுக்க இந்தப்பொதுப்போக்கின் கூடவே ஓடும் ஒருவாசகர் தன் தனித்தன்மையை இழந்து ஒரு சராசரியாக மட்டுமே ஆகிவிடக்கூடும். வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் நாம் பொதுப்போக்கின் கூடவே விரைவது இயல்பே. அப்போதுகூட அதில் நமக்குரிய தனித்தேர்வு செயல்பட்டாகவேண்டும்.

நான் இளம் வாசகனாக உள்ளே வந்த காலகட்டத்தில் இருத்தலியல்தான் பொதுப்போக்கு.  அதை நானும் ஆவேசமாக நம்பி வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் கண்டபடி வாசிக்கும் ஒரு இயல்பும் எனக்கிருந்தது. அப்போது நான் தற்செயலாக தாமஸ் மன்னின் ‘புடன்புரூக்ஸ்’ என்ற நாவலை வாசிக்க எடுத்துவந்தேன். என் வாசிப்புத்தோழரான ரசாக் குற்றிக்ககம் ‘இதெல்லாம் பழசாகிப்போன சரக்குகள். இதை எதுக்கு படிக்கிறே?’ என்றார். நான் ஒருமாதம் தயங்கியபின் தூக்கம் வராத இரவில் அதை வாசித்தேன். என்னை மிகவும் கவர்ந்தது அந்த ஆக்கம். அது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது எப்படி காலாவதியாக முடியும்? இருத்தலியல் காலாவதியாகாத நிரந்தரக் கொள்கையா என்ன? அது காலாவதியாகுமென்றால் அதை படிப்பதற்கு என்ன பொருள்?

உண்மையில் மிக விரைவில் இருத்தலியல் பின்னகர்ந்தது. அந்த கொள்கை சார்ந்த பெரும்பாலான எழுத்தாளர்களை நான் முழுக்க நிராகரித்தேன். ஆனால் தாமஸ் மன் எனக்கு இன்றும் பிரியமான எழுத்தாளர். பொதுப்போக்குகளை நம்பாமல் நான் விலகிச்சென்று வாசித்த நூல்கள்தான் என் ஆளுமையை உருவாக்கின. நான் வாசிக்க ஆரம்பித்தபின் இரண்டு பொதுப்போக்குஅலைகள் நிகழ்ந்து முடிந்து விட்டன. இருத்தலியல்,பின் நவீனத்துவம். என் வாசிப்பையும் தேடலையும் எழுத்தையும் இவற்றை நம்பி நான் அமைத்துக்கொள்ளவில்லை.

ஒரு காலகட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட தேர்வு ஒன்றை நான் பின் தொடர ஆரம்பித்தேன்.  என் கேள்விகளுக்கு விடைதேடிய பயணத்தில் யார் என்னுடன் உரையாடுகிறார்களோ அவர்கள் என் எழுத்தாளர்கள். அவர்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பது எனக்குப் பொருட்டே  அல்ல. இலக்கியம் மின்னணுப் பொருட்களை போல புதிய வடிவங்களில் முன்னகர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று அல்ல. ஒரு புது மாடல் வந்ததும் பழையது காலாவதியாவதில்லை. இலக்கியத்தின் பெறுமதிக்கு , அதன் உரையாடலுக்கு காலம் இல்லை. பத்தாம் நூற்றாண்டுக் காவியகர்த்தன் நம் ஆத்மாவுக்குள் அமர்ந்துகொண்டு நம் சமகால வாழ்க்கையை நமக்கு விளக்க முடியும்.

இவ்வாறு தேடலைச்சார்ந்து வாசிக்கும் ஒருவனே பொருட்படுத்தும்படி எதையாவது சிந்திக்க முடியும். பொதுப்போக்கு சார்ந்து செல்பவர்கள் பெயர்களை மட்டுமே சொல்ல முடியும். சமீபத்தில் வாசிக்க நேர்ந்தவை சார்ந்து சில அனுபவப்பரவசங்களை பதிவுசெய்ய முடியும். அவ்வளவுதான். அது சிந்தனையின் பரிதாபகரமான தேக்கநிலை– மாதம் இரு நூல்களை வாசித்தாலும்கூட.

*

பொதுபோக்குக்கு அப்பால்சென்று வாசிக்கவேண்டியவற்றைப் பற்றி நான்  பத்துவருடம் முன்பு சதங்கை இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஒரு ‘நல்ல’ தமிழ் வாசகனிடம் எதிர்பார்க்கத்தக்க வாசிப்பு எது என்பதைப்பற்றி. நம்மில் நல்ல வாசகர் எனப்படும் பலர் பொதுபோக்கு சார்ந்த சில நூல்களை மட்டுமே படித்திருப்பார்கள். ஒரு விவாதத்தில் ஆகப்புதிய நூலையும் ஆகப்புதிய கோட்பாட்டையும் சொன்னால் மட்டுமே போதும் என்று நினைப்பார்கள். என்னைப்பொருத்தவை அப்படி ஒரு நூலையோ கருத்தையோ சொல்லும் ஒருவர் மீது உடனடியாக ஏமாற்றம் உருவாகி விடுகிறது. தன்னுடையதென ஒரு அசல் வரியை சொல்லும் ஒருவர், தான் மட்டுமே சொல்லக்கூடிய ஒரு எழுத்தாளரை குறிப்பிடக்கூடிய ஒருவரே என் மனதில் முக்கியமானதாகப் படுவார்

அதற்கு அடிப்படைகள் சார்ந்த ஒரு வாசிப்பு தேவை. ஒரு தமிழ் வாசகனுக்கு முதல் தளத்தில் கீழ்க்கண்ட புரிதல்கள் இருக்க வேண்டுமென நான் எதிர்பார்ப்பேன்

1.இதுவரைக்குமான நவீனத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கு பற்றிய ஒரு மனவரைபடம்

2. பழந்தமிழ் மரபு பற்றிய ஒரு புரிதல்

3. தமிழ் வரலாறு சார்ந்த ஒரு மனவரைபடம்.

4.. இந்திய இலக்கியத்தைப்பற்றிய ஒரு பொதுப்புரிதல்

5. இந்திய செவ்விலக்கிய மரபைப்பற்றிய ஒரு மனச்சித்திரம்

6. இந்திய சிந்தனை மரபைப்பற்றிய ஒரு  புரிதல்

8. இந்திய வரலாறு சார்ந்த ஒரு மனவரைபடம்.

9. ஐரோப்பிய சிந்தனைமரபு குறித்த ஒரு பொதுப்புரிதல்

10. ஐரோப்பிய இலக்கியமரபு குறித்த ஒரு பொதுப்புரிதல்

11. உலகவரலாறு சார்ந்த ஒரு மெல்லிய மனவரைபடம்.

12. சமகால இலக்கியப் பொதுபோக்கு குறித்த கவனம்

ஆக நான் எதிர்பார்க்கும் பன்னிரண்டு தளங்களில் ஒன்று மட்டுமே உலக இலக்கியப் பொதுப்போக்கு சார்ந்தது. இந்த ஒவ்வொரு தளத்திலும் ஒருசில நூல்கள் சார்ந்த அறிமுகமே போதும்– அதை ஒரே சமயம் எல்லா தளங்களிலும் விரிவாக்கிக் கொண்டே செல்லலாம். அப்படி ஒரு சீரான வளர்ச்சி மூலமே சிந்தனைத்தளத்தில் ஒரு முழுமை நிகழ் முடியும். நான் என் ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் இது. எனக்குச் சிலப்பதிகாரம் அறிமுகமில்லை, தல்ஸ்தோய் படிப்பேன் என்பது அர்த்தமற்ற ஒன்று. என் மாவட்டத்தின் வரலாற்றில் அறிமுகமில்லை ஆனால் செர்பிய இலக்கியம் படிப்பேன் என்பதும் அப்படியே.

இலக்கியம், தத்துவம், வரலாறு மூன்றையும் ஒன்றில் இருந்து ஒன்று பிரித்துவிட முடியாது. கடந்த இருபது வருடங்களில் என் வாசிப்பு என்பது இம்மூன்று தளங்களிலும் ஒரே சமயம் விரிவதாகவே இருந்துகொண்டிருக்கிரது

*

ஓர் எழுத்தாளனாக என்னுடைய வாசிப்பு மேலும் சிக்கலானதாக ஆகிறது. சென்ற வருடங்களில் நான் வாசித்தவற்றில் மிக அதிகமான பங்கு என் நாவல்களுக்கான ஆராய்ச்சி என்றுதான் சொல்ல முடியும். விஷ்ணுபுரம் நாவலுக்காக பழைய மரபுகள் மற்றும் பண்பாடு சார்ந்து ஆராய்ச்சி. பின் தொடரும் நிழலின் குரலுக்காக அரசியல் கோட்பாடுகள் சார்ந்து. கொற்றவைக்காக பழந்தமிழ் இலக்கியம் சார்ந்து. இப்போது அசோகவனத்துக்காக பதினேழாம் நூற்றாண்டு வரலாறு சார்ந்து. இந்த ஆய்வுகளுக்கு அப்பால்தான் நான் வாசிக்க வேண்டியிருக்கிறது

என் வாசிப்பை நான் முறைப்படுத்திக் கொண்டபின் எனக்குரிய ஆசிரியர்களைத் தேர்வுசெய்தே நான் வாசிக்கிறேன். நீங்கள் என் எழுத்துக்களை அதிகமாக வாசிக்கும் வாசகர் அல்ல என நினைக்கிறேன். வாசித்திருந்தால் நான் அதிகமாகக் குறிப்பிடும் ஆசிரியர்களை கவனித்திருப்பீர்கள்.  தாமஸ் மன், ஹெர்மன் ஹெஸ், நிகாஸ் கசந்த்சகீஸ், ஐசக் பாஷவிஸ் சிங்கர்  உம்பர்த்தோ எக்கோ என…அவர்கள் அனைவருக்குமே பொதுவான அம்சங்கள் பல உண்டு. வழ்க்கையை தத்துவ- மெய்யியல் தளத்தில் வைத்து ஆராயக்கூடியவர்களாக அவர்கள் இருப்பார்கள். மதம் அவர்களுக்கு ஒரு பேசுபொருளாக இருக்கும்

ஆனால் எப்போதும் நான் சமகாலப்போக்குகளை விட்டு விலகுவதில்லை. தமிழில் இலக்கிய விமரிசகனாக இருப்பதனால் ஒவ்வொருவருடமும் தமிழில் வெளிவரும் குறிப்பிடத்தக்க எல்லா நூல்களையும் படித்துவிடுவேன். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வாசிக்கும்போது அவ்வாறு அனைத்தையும் வாசிப்பதில்லை. என்னுடைய ரசனையுடனும் தேடலுடனும் ஒத்துப்போகும் பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் நேரடியாக வலுவாக சிபாரிசு செய்யும் நூல்களை மட்டுமே வாசிப்பேன். எஸ்.ராமகிருஷ்ணனின் சிபாரிசுகள் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.பல நூல்கள் அவர் சொல்லி வாசித்தவை.  இன்று என் வாசிப்பில் நேரத்தை எப்படி பங்கிடுவது என்பது முக்கியமான ஒரு விஷயம்.

தொண்ணூறுகளுக்குப் பின்னர் இவ்வாறு நூல்களை மிகக் கவனமாகத் தெரிவுசெய்து மட்டுமே படித்து வருகிறேன். ஒரு எழுத்தாளரின் ஒரு நூலை மட்டுமே வாசிப்பேன். அதில் அவர் மேலும் வாசிக்க வேண்டிய ஆசிரியர் என்று தோன்றினால் மட்டுமே அடுத்த நூல்கள்.  அவ்வாறு எல்லா அலையையும் கூர்ந்து வாசித்துவருகிறேன். நான் அறியாத இலக்கிய அலை எதுவும் என்னைக் கடந்து செல்வதில்லை. மார்க்யூஸ்,கார்லோஸ் புயண்டஸ், லோசா, போர்ஹெஸ் என அனைவரையும் வாசித்திருக்கிறேன். எனக்கு மார்க்யூஸ் முக்கியமானவராக தோன்றினார். போர்ஹெஸ் முக்கியமானவராகப் படவில்லை. [அதற்கான காரணங்களை எழுதி தமிழில் விவாதத்துக்கும் உள்ளாகியிருக்கிறேன்]

இந்திய ஆங்கில இலக்கியம், அறிவியல் புனைகதைகள் , சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் சீனமொழியாக்கங்கள் ஆகிய போக்குகளில் எல்லாம் குறிப்பிடத்தக்க நூல்களை  வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.  ஆனால் இவை என் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடனும் இருக்கிறேன். ஏனென்றால் இவற்றை பெரும்பாலும் அறிந்துகொள்வதற்காகவே வாசிக்கிறேன். என் தேடல் தத்துவம்,மெய்யியல் சார்ந்ததுதான்.

இதேபோல அமெரிக்க பொழுதுபோக்கு எழுத்தையும் கூர்ந்து நோக்குவதுண்டு. அனேகமாக ஒரு எழுத்தாளரின் ஒரு நூலை வாசிப்பேன். ஒரு காலத்தில் பேசப்பட்ட ஃப்ரடரிக் ஃபோர்ஸித், ஆர்தர் ஹெய்லி, இர்விங் வாலஸ்  முதல் இன்று டான் பிரவுன் வரை… மிகச்சமீபமாக ஜான் கிருஷாமின் ‘த டெஸ்டமெண்ட்’ வாசித்தேன். என்ன நடக்கிறது என்று அறிவதற்காக.

இதற்கிணையாகவே சமகாலக் கோட்பாடுகளையும் கவனித்து வருகிறேன். ஒருபோதும் மூல நூல்களை முழுக்க படிக்க அமர்வதில்லை. அது எழுத்தாளர்கள் செய்யக்கூடாத காரியம் என்று நித்யா சொல்வதுண்டு. அவர்களின் சிந்தனைகளை தொகுத்தளிக்கும் நூல்களே போதுமானவை. உதாரணமாக தெரிதாவின் எழுத்துக்களை படிக்க ஒரு முழுவருடம் செலவிடுவதைவிட பெக்கி காம்ப் எழுதிய த தெரிதா ரீடர் என்ற ஒரே நூலை படித்தால் போதும். இதேபோல உளவியல், நரம்பியல் போல தத்துவத்துடன் தொடர்புள்ள துறைகளில் என்ன நடக்கிறது என்று அறியும்  அளவுக்கு வாசிப்பதுண்டு

இவ்வாசிப்புகளுக்கு அனேகமாக தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை செலவிடுகிறேன். கிட்டத்தட்ட முழுநேர எழுத்தாளனாக இருப்பதனால் இது சாத்தியமாகிறது. ஆனாலும் கூட மிகமிகக் கவனமாக நேரத்தை ஒதுக்காவிட்டால் அதன் இழப்புகள் அதிகம்.

வாசிக்கும் நூல்களை அவ்வப்போது முன்வைக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அவற்றை ஒட்டிய என் சிந்தனைகளை மட்டுமே முன்வைக்கிறேன். தமிழில் ஐரோப்பிய ஆசிரியர்களை சொல்லிக்கொண்டே இருக்கும் ஒரு போக்கு எண்பதுகளில் சிற்றிதழ்களில் இருந்தது. ஆகவே அவர்களைச் சொல்லவேகூடாது என்று முடிவெடுத்தேன். தமிழ் எழுத்தாளர்களை முடிந்தவரை குறிப்பிடவேண்டும், அதன் பின் இந்திய எழுத்தாளர்களை என்று. நான் குறிப்பிடும் எழுத்தாளர்கள் தவிர்க்க முடியாமல் வருபவர்கள்.

தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரும் இலக்கியவாதிகள் மட்டுமல்ல, அவர்கள் தத்துவஞானிகளும் கூட. அவர்கள் எழுதிய பின் இரு இலக்கியக் காலகட்டங்கள் கடந்துசென்றுவிட்டன. நவீனத்துவமும் பின்னவீனத்துவமும். இன்றும் உரைநடை இலக்கியத்தின் சிகரங்கள் அவர்களே. பேரிலக்கியவாதிகளை காலம் எளிதாகக் கடந்து செல்ல முடியாது. உங்கள் வாசிப்பின் ஒரு கட்டத்தில் அதை உணர்வீர்கள்

இப்போதெல்லாம் ஒரு முழுமையான சிந்தனையின் சிறு பகுதிகளாகவே நான் எழுதுபவை அமைகின்றன. அந்த சிந்தனையின் வட்டத்துக்குள் வரும் விஷயங்கள் மட்டுமே பேசபப்டுகின்றன. கடந்த நாலைந்து வருடங்களாக நாவல்கள் போன்றவற்றில் ஆர்வம் முழுமையாகவே விலகி வருகிறது.செவ்விலக்கியத்தகுதி கொண்ட படைப்புகளை தவிர எதிலுமே மனம் ஒன்றவில்லை. ‘அஞ்செலாஸ் ஆஷஸ்’ என்ற நாவலை ஒருவருடம் முன்பு வாசித்துக்கொண்டிருந்தபோது சட்டென்று கசப்பு ஏற்பட்டு தூக்கி போட்டேன். இதையெல்லாம் ஏன் இனி நான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக ஏற்பட்டது. இந்த நூல்களில் இருந்து நான் பெறுவதற்கு ஏதுமில்லை. அதை நான் காப்பியங்களிலேயே தேடமுடியும். கம்பனிலும் வள்ளுவரிலும் கீதையிலும் பைபிளிலுமே என் மனம் குவிகிறது. ஆனாலும் சமகால இலக்கியத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு புள்ளியில் அது இயல்பாக நின்றுவிடவேண்டும்.

ஜெ

மறுபிரசுரம்- முதற்பிரசுரம் May 5, 2009

முந்தைய கட்டுரைபட்டுக்கோட்டை பிரபாகர்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி -தூரன் விருதுவிழா இன்று மாலை