இரு கட்டுரைத்தொடர்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

தமிழ் ஹிந்து என்னும் இணையதளத்தை வாசிக்கிறீர்களா? அது என்னுடைய மிகப்பிடித்தமான இணைய இதழ். அதில் நீங்கள் ஏன் எழுதக்கூடாது?

ஜெயச்சந்திரன் ஏர்வாடி

அன்புள்ள ஜெயச்சந்திரன்,

அந்த இணைய இதழை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். இரு கட்டுரைத்தொடர்கள் அதில் மிக முக்கியமானவை. ‘ஓடிப்போனானா பாரதி?’ என்ற கட்டுரைத்தொடர் மிகமிகச் சமநிலையுடன், முழுக்க முழுக்க தகவல்களுடன், ஓர் ஆய்வுக்கட்டுரை எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கிறது. ஆங்கிலேயர் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தபோது இந்தியா இதழின் ஆசிரியராக இருந்த பாரதி அப்பொறுப்பில் இருந்து நழுவி ஓடினார் என்ற அவதூறு முக்கால் நூற்றாண்டுக்காலத் தொன்மை உடையது. பாரதி ஆய்வாளர் பலர் அந்தக்குற்றச்சாட்டை மறுத்த போதிலும் இந்த அளவுக்கு அந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக  விரிவாக பதில்சொல்லி மறுக்க அவர்கள் முற்படவில்லை. அதை திறம்படச் செய்கிறார் ஆசிரியரான ஹரிகிருஷ்ணன்

திராவிட இயக்கம் குறித்த புனைவுகளை இப்போது வரலாற்றாசிரியர்கள்  உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ஆ.இரா.வேங்கடாசலபதி போன்ற பிரச்சாரகர்கள் ஆய்வென்னும் பேரில் அதைச்செய்கிறார்கள். அதற்கு வெளிநாட்டு நிதி பெறும் அமைப்புகளான தென்னிந்திய ஆய்வுமையம் போன்றவை ஆதாரமாக அமைகின்றன. சுப்பு அவர்கள் தமிழ் ஹிந்து தளத்தில் எழுதிவரும் கட்டுரைத்தொடர் திராவிட இயக்கம் குறித்து பொதுவாக அறியப்படாத தகவல்களை அளிக்கிறது. இதற்கு எதிரான கோணத்தில் வார்த்தை இதழில் கோ.ராஜாராம் சி.என்.அண்ணாத்துரை குறித்து எழுதிவரும் கட்டுரைத்தொடரும் முக்கியமான ஒன்று.  

நான் என் இணையதளத்தில் எழுதவே மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறேன்.

http://www.tamilhindu.com/

முந்தைய கட்டுரைகதைத்தொழில்நுட்பம்:ஒருபயிற்சி
அடுத்த கட்டுரைஅறிவியல்கதைகள்:கடிதங்கள்