மாடல்ல மற்றையவை

நாகர்கோயில் பண்பலை வானொலியைக் காலையில் அருண்மொழி கேட்பாள். அதில் ஒரு வரி ஒரு வார்த்தைகூட அவள் காதில் விழாது. காரணம் அவள் அதைக்கேட்பதே நேரம் காட்டும் ஒலியாகத்தான். காலையில் அலுவலகம் செல்வதற்காக அவள் பதினாறு கைகளுடன் வேலை செய்துகொண்டிருக்கும்போது குறைந்து குறைந்து வரும் நேரத்தை அது அவளுக்கு ஒலித்துக்காட்டுகிறது. காலை எழுந்ததும் ‘ஏ ரீங்கா ரிங்கா’ போன்ற கனிவுகொடுக்கும் பாடல்கள். கீழே பேப்பர் வாசிக்க வரும்போது அதை நானும் கேட்பேன். அவ்வப்போது சில விஷயங்கள் காதில் நுழையும். மண்ணடிக்கோணம் அம்புறோஸ் அவர்களின் பேட்டி போல.

பேட்டியாளர் கனத்த ரேடியோக்குரலில் கேட்க மண்ணடிக்கோணத்தார் தன் முன்னால் மைக் இருப்பதை சில கணங்களில் மறந்து விட்டதாகத் தெரிந்தது. ‘வணக்கம் திரு மண்ணடிக்கோணம் அம்புறோஸ் அவர்களே. நீங்கள் பால்மாடுகள் வளர்ப்பதில் நீண்ட அனுபவம் உடைய மூத்தவிவசாயி என்றமுறையில் நாகர்கோயில் பண்பலை வானொலிக்காக உங்களை பேட்டி எடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’. ‘வோ…சேரி’ .

‘நன்றி. நீங்கள் இந்தமாதிரி பால்மாடுகளை எவ்வளவு வருடங்களாக வளர்த்துவருகிறீர்கள்?’. ‘அது கெடக்குல்லா ஒருபாடு காலம்…கொறே காலமாச்சு கேட்டியளா?’. ‘எவ்வளவு வருடம் என சொல்லமுடியுமா?’. ‘நான் சின்னபிள்ளையா இருக்கும்பம் தொடங்கினதாக்கும்.’. ‘உங்கள் வயது எவ்வளவு?’ ..‘எளுவது இருக்குமா? நீங்க என்ன நினைக்குதிய?’. ‘அப்படியென்றால் கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக நீங்கள் மாடு வளர்த்து வருகிறீர்கள் என்று சொல்லலாமா?’. ‘இல்ல பிள்ள, எனக்க அப்பனும் மாடாக்கும் வளத்தது..’

‘நன்றி…இந்த எழுபதுவருட அனுபவத்தில் நீங்கள் சில கருத்துக்களைச் சொல்ல முடியுமா?’. ‘வோ.’. ‘சொல்லுங்கள்.’ ‘மாடு வளக்கியது நல்லதாக்கும்.’ .’சரி…நீங்கள் எவ்வளவு மாடுகளை வளர்க்கிறீர்கள்?’. ‘நாலு…மூணு ஜேழ்சி ஒரு கூஸா…பிறவு ஒரு எருமையும் உண்டு…அதுகளுக்க கண்ணுகுட்டிகளை சேக்கபிடாதா சேக்கலாமா?’ . ‘நன்றி ஐயா…நீங்கள் மாடு வளர்க்கும் முறையை விளக்க முடியுமா?’ . ‘செம்மையா வளக்குதேன்..வோ’

‘அதில்லை…நீங்கள் காலையில் எழுந்ததும் மாடுகளை கவனிப்பீர்களா?’. ‘வோ…நான் காலத்த ஒரு நாலுமணிக்கு எந்திரிப்பேன்…ஒடனே பாலுகறவையாக்கும்…கறந்து தீர எப்பிடியும் அஞ்சு ஆவும்…..பாலைக்கொண்டுசெண்ணு கடைகளிலே குடுத்திட்டு ஆறரைக்கு வந்திருவேன்…’ ‘வந்ததும் என்ன செய்வீர்கள்?’. ‘பளஞ்சி குடிப்பேன்’. ‘இல்லை ஐயா…மாடுகளுக்கு என்ன செய்வீர்கள்? “. ‘மாடுகள குளிப்பாட்டுவேன்….மாடுகள காலம்ப்ற குளிப்பாட்டுகது நல்லதாக்கும்…சாணமெல்லாம் இருக்கும் பாத்தியளா? எல்லாம் நல்லா வைக்கப்பிரி இட்டு தேச்சு களுவினா நல்லா மேயும்..இல்லேண்ணா அதில ஈச்சயும் உண்ணியும் கடிச்சு மேயாது பாத்துக்கிடுங்க’

‘எத்தனை மணிக்கு குளிப்பாட்டி முடிப்பீர்கள்?’. ‘ஆத்தில கொண்டுபோயி குளிப்பாட்டி வாறதுக்கு எப்பிடியும் எட்டாயிடும்…’. ‘பிறகு என்ன செய்வீர்கள்?’. ‘உடனே மாடுகளுக்கு வெள்ளம் குடுக்கணும்லா? நல்லா புண்ணாக்கும் கஞ்சிவெள்ளமும் எல்லாம் இட்டு கலக்கி குடுப்பேன்…எள்ளுப்புண்ணாக்கு நல்லது. தேங்காப்புண்ணாக்கு வெல கூடுதலாக்கும்.’. ‘அரிய கருத்து ஐயா…அதன்பின் என்ன செய்வீர்கள்?’ .‘மாடுகள கொண்டு போயி வயலிலயோ இல்லேண்ணா வெளையிலயோ கெட்டுவேன்…மேயணும்லா?’

‘சரி, நீங்கள் என்ன செய்வீர்கள்?’. ‘நான் கடவத்த எடுத்துகிட்டு புல்லு பறிக்க போவேன்லா?’. ‘எப்போது திரும்பி வருவீர்கள்?’. ‘அது ஆவும், ஒரு மூணு நாலு மணி…நாலுமாட்டுக்கும் புல்லு வேணும்லா? கறக்குத மாட்டுக்கு நல்லா பச்சப்புல்லு வேணும்…உணக்க வைக்கலு தின்னா அது பீச்சும்.. பாலு அம்பிடும் பீச்சலாட்டு போயிரும்லா?’. ‘முக்கியமான கருத்து ஐயா…அதன்பின்னர் என்ன செய்வீர்கள்?’. ‘பருத்திக்குரு ஊறவச்சுகிட்டாக்கும் நான் புல்லறுக்க போறது…அதை ஆட்டுக்கல்லிலே இட்டு ஆட்டி பாலெடுப்பேன்…பசுவுக்கு பருத்திப்பால் நல்லதாக்கும்…பாலு ஊறும்’

‘முக்கியமான தகவல் ஐயா…அதை கொடுத்து முடித்ததும் என்ன செய்வீர்கள்?’ ‘சாயங்காலம் பாலுகறக்கணுமே? அதை கறந்து கொண்டு கடையிலே குடுத்திட்டு ஒரு அஞ்சரைக்கு வந்திருவேன்…. வந்ததும் மாடுகள பின்னயும் குளிப்பாட்டுவேன்.’.’இரண்டுமுறை குளிப்பாட்டுவீர்களா?’. ‘ மேயும்பம் சாணம் பட்டிருக்கும்லா…அப்டியே கெட்டினா கொசு கடிக்குமே..’ . ‘சரி ஐயா.’. ‘கொசுவும் ஈச்சயும் கடிச்சு ரெத்தம் உறிஞ்சினா பசு தீனி எடுக்காம நிக்கும்.. அதனால சாயங்காலம் அதுக்க ஒப்பம் தொளுத்தில இருப்பேன்…’

‘இருந்து என்ன செய்வீர்கள்?’ ‘பொகை போடுகது…பலசரக்கு கடையிலே போயி நல்லா உள்ளித்தோலு கொண்டுவருவேன்…அதை தீயில போட்டாக்கும் பொகையிடுகது…’ ‘உள்ளித்தோல் என்றால் என்ன என்று சொல்ல இயலுமா?’. ‘உள்ளிண்ணா சவாளாவாக்கும்.’ .‘சவாளா என்றால்?’. ‘சவாளாண்ணா இந்த இது இருக்குல்லா… பெல்லாரி…’. ‘மன்னிக்கவேண்டும், பெல்லாரி என்றால் என்ன?’ .‘பெல்லாரிண்ணாக்க … பெரியவெங்காயம்ணு பாண்டியில சொல்லுவானுகள்லா?’. ‘பெரிய வெங்காயம்…சரி…அதன் தோலைப் போட்டு புகை போடுவீர்கள்…பிறகு?’. ‘பிறவு ஒரு சுருளு கொசுமருந்தும் கொளுத்தி வைக்கணும்…’ . ‘ஏன்?’ .‘பொகைத்தீ அணஞ்சிரும்லா?’

‘இப்படி எவ்வளவு நேரம் செய்வீர்கள்?’ .’எவ்வளவு நேரம்ணு இல்ல…ஒறக்கம் வாறது வரைக்கும் செய்யிலாம்.’ .‘எப்போது உறக்கம் வரும்?’ .‘மேஞ்ச பசுவில்லா? ஒரு பத்துபத்தரைக்கு உறங்கிரும்…அதுக்குப்பிறவு நான் போயி வெந்நி போட்டு குளிச்சிட்டு இம்பிடு சுக்கும்வெள்ளம் குடிச்சிட்டு படுப்பேன்…காலத்த எந்திரிக்கணும்லா?’ .‘பசுக்களை அருமையாக வளர்க்கிறீர்கள் ஐயா.’.  ‘வோ, நான் அதுகள பெத்த பிள்ளையள மாதிரியாக்கும் வளக்குதது…’

‘நன்றி ஐயா…மாடுகளை பராமரிப்பது பற்றி அருமையாக விளக்கினீர்கள்…இந்த பால்மாடு வளர்ப்பால் உங்களுக்கு எவ்வளவு வருடாந்தர நிகர ஆதாயம் கிடைக்கிறது?’ . ‘என்ன சொன்னிய?’. ‘அதாவது உங்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன?’. ‘வோ?’. ‘லாபம்? என்ன லாபம் ?’ . ‘லாபமா? நட்டம்! ’

‘மன்னிக்கவும் ஐயா…பசுக்களை வளர்ப்பதனால் உங்கள் நிகர லாபம்..’. ‘மாசம் ஒரு ரெண்டாயிரம் ரூவா வரை கைநட்டம் வரும். அத எனக்க மவன் குடுப்பான்…அவன் பள்ளிக்கொடத்திலே வாத்தியாராக்கும்…பணம் தாறப்ப நாலு கடுத்தவார்த்த சொல்லுவான்…ஆனா தருவான். நல்ல பயலாக்கும்…’

‘விவசாயிகள் பால்மாடு வளர்ப்பதில் உள்ள நிகர லாபம்.. அதாவது..’ .’பிள்ள இஞ்ச பாக்கணும்…லாபம் பாத்தா பசுவ வளக்கமுடியாது… லாபத்தக் கண்டா நாம பிள்ளையள வளக்கோம்? என்ன சொல்லுதிய?’. ‘வணக்கம் ஐயா. அருமையான கருத்துக்களை சிறப்பாக எடுத்துச்சொன்னீர்கள். நன்றி. வணக்கம் நேயர்களே. இதுவரை பால்மாடு வளர்ப்பதைப்பற்றி தெரிந்துகொள்வதற்காக விவசாயி மண்ணடிக்கோணம் அம்புறோஸ் அவர்களைச் சந்தித்தோம்…’

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைபயணம்: கடிதங்கள்