அருகர்களின் பாதை – ஓர் அனுபவம்

உண்மையில் சொல்லித்தீராத அனுபவமாகவே எனக்கு இருக்கிறது. இப்படி ஆரம்பிக்கவா..?

நாற்பத்தைந்திற்கும் மேற்பட்ட பயண இலக்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட புராதனச்சின்னங்கள், முப்பது நாட்கள், 8800 கிலோமீட்டர்கள், ஒரு பயணம். ஒரு முறை கண்ட வழியோரக் காட்சிகள், பின்னர் பார்க்க நேராமல் அந்தத் தருணத்திற்கு மட்டுமேயாகி, அமரத்துவம் பெற்றன. கணம் தோறும் மாறும் காட்சிகள். அள்ளிப்பருக முயன்ற இரு கண்கள், அவற்றின் இயலாமை கூறி பின்வாங்க, என் சிறுமையை நான் உணர்ந்து தனிமையில் நின்ற மண்டபங்கள், என்னைக் கண்டு, ஏன் இத்தனை நாள் தாமதமானாய்? என்று காதோரம் ரகசியமாய் கிசுகிசுத்து, நாட்டிய பாவனையில் நிலைத்த சிற்பங்கள். இளவெயிலில் ஜொலிக்கும் அவளது புருவத்தீற்றல்கள், காதோர குறுமயிர்கள், விரல்களின் குழைவு, ஒரு கணம் சிறு புன்னகைத்து, திடுக்கிட்டு விழிக்கையில் மறுபடியும் சிலையாகி உறைந்த விஷமத்தனம். ஒரு வாழ்க்கையில் இவ்வாறு எத்தனை தினங்கள் சாத்தியமாகும்..?

எந்த முன்னேற்பாடும் இல்லை. ஒரே சிந்தனை அடுத்த இலக்கின் அழகை குறித்த கற்பனை மட்டுமே. தினம் ஒரு தங்குமிடம், எவ்வித மனத்தடையும் இல்லை. கலை காணும் இடைவெளியில் பசி உணரும் வேளை கிடைப்பது எதுவோ அதுவே உணவு. எவ்வித ஒவ்வாமையும் இல்லை. ஒரு சிறு காய்ச்சல் கூட காணாத நாட்கள். உற்சாகம் அல்ல. என் இயல்பை நான் கண்டு கொண்ட நாட்கள் அவை. விடியலில் கண்விழித்தாலும் கடலுர் சீனு வரும்வரை எழுதலை ஒத்திப்போட்டு போர்வைக்குள் ஒடுங்கியிருப்பேன். குளிரில் மேலும் சில நிமிடங்கள் நீளும் அரைத் தூக்கம். சீனுவின் உற்சாகமான காலை வணக்கம் அந்த நாளை தொடங்கிவைக்கும். சிறிய கண் கண்ணாடிக்குள் ஒளிரும் ஜீவன்!

நாம் பார்ப்பவை கல்வடிவங்கள் என்று நம்ப இயலாமலிருந்தது. வெண்ணையின் குழைவில் வெண்பளிங்கு அரங்குகள், சந்தனத்தில் செதுக்கியது போல், செம்பொன் வேலைப்பாடு போல் வந்த கற்களின் தேர்வு தீராமல் வியக்க வைத்தது – இன்று கண்டதே மிசக்சிறந்தது என்று நாள்தோறும் நம்மைக் கூவவைத்தது. கரும் சலைவைக்கற்களில் வடிக்கப்பட்ட கருநாடகக் கோவில்கள், சுழற்சியினிடையே திடும் என்று நின்றது போன்று தோற்றமளிக்கும் அவற்றின் தூண்கள், அவற்றில் நூற்றாண்டுகள் தாண்டியும் மழுங்காத கூரிய வளைவுகள். கல்தரை, கல்தூண்கள், கல்கூரை – பளபளக்கும் அந்தக் கருமை நிறம் என்னை இப்போதும் பித்து கொள்ள வைக்கிறது. ஒற்றைக்கல்லில் எழுந்து நிற்கும் எல்லோராவின் கைலாசநாதர் ஆலையத்தின் பிரம்மாண்டத்தை அண்ணாந்து பார்த்து விழிவிரித்தோமென்றால், அதற்கு முரணாக, பூமியின் கீழே கொத்து கொத்தாக சிற்பங்கள் குலைத்து இருளில் மெல்ல மறையும் ராணி உதயமதியின ராணி-கி-வாவ் குனிந்து தலை வணங்க வைத்தது. உட்கிணற்றின் இருளில் தேடிக் காணும் சவாலைத் தந்தன அந்தச் சிற்பங்கள். பெண்ணின் மன ஆழத்தில் பிடிதராமல் பூத்திருக்கும் அன்பு போல.

பல்லாயிரம் முகங்கள். நம்மை அதட்டி உணவருந்தச் செய்த ஷிண்டே முதல், நமது தோற்றத்தால் வெருண்ட கேந்திராவின் துறவி வரை. தனித்தனி மனிதர்கள், தனித்தனி நியாயங்கள்! இளமஞ்சள் முதல் மென் கருப்பு வரை சருமங்கள், ஆனால் யாருக்கும் நாம் அன்னியர்கள் அல்ல. நமக்கு வழி சொல்லி, நிறைய கரும்பும் தந்த, குறும்புக் கண்களும், வேடிக்கைப் பேச்சும் கொண்ட கன்னட அக்கா.., உலர்ந்த ஏரிக்கரையில் வழி தொலைத்து நாம் நின்ற ராஜஸ்தானின் செந்நிற சமவெளிப்பரப்பு. அங்கும் நிலமும் வானும் சிவப்பில் இணைய, அஸ்தமனம் கண்டு மௌனமாகி நின்ற நாம். பிறகு, குளிர் ஏறிய அந்த முன்னிரவில் தேனீரைப் பகிர்ந்துண்ண நம்மை உபசரித்த ஒட்டக மேய்ப்பர்கள். ஒருவர் தவறாமல் அனைவருக்கும் நாம் இனிய விருந்தாளிகளானோம். ஒரே பேருயிர் நிலமெங்கும் வேரோடிப் பூத்த சிறு உயிர்களானோம்.

உள்வாங்கும் அவகாசம் தராமல் ஜன்னலில் பின்னிட்டது நிலம். ஒருநாள், வெயில் தகித்து பளபளக்கும் ராஜஸ்தானின் மணல்மேடுகள், அதில் ஆங்காங்கே சிறு நிழல் தரும் ஒற்றைக் கருவேல மரங்கள். வளைந்த கழுத்தும், குட்டை வாலும், முரட்டு உடலும் கொண்டு, தலையை அசைக்காமல் நிதானமாக ‘ எனக்கு என்ன குறை?’ என்ற பாவனையில் செல்லும் ஒட்டகங்கள். மறுநாள், நிழலில் உறைந்து வெயிலுக்கு ஏங்கிநிற்கும் நானேகட் மலையிடையின் நூற்றாண்டு நிழல்வெளிகள். மற்றொரு நாள் சுற்றிலும் உப்பு பூத்து வெள்ளொளி கண்கூசச் செய்யும் கழிமுகக் கரை. நிலம் இவ்வாறு தினமொரு அழகில் மலர்ந்து நின்றது. முன்வேனில் மாதமாகையால் மெல்ல பச்சை மறையத்தொடங்கி, செம்பொன் நிறங்கொண்டு பரவி விரிந்திருக்கும் புல்வெளிகள். சுழல்காற்று மணல் வாரி இறைத்துச் சென்றது போல் தவிட்டு நிறம் மாறியிருந்த மலைச்சரிவுகளின் புதர்க்காடுகள். அனேகமாக மேகங்களற்று, எங்கும் தெளிந்திருந்த நீல வானம். தொடுவானம் வரை இட்டுச் செல்வதைப் போன்ற கட்ச் பகுதியின் பல கிலோ மீட்டர் நீளும் நேரான பாதைகள். நான்காயிரம் வருடம் கண்ட லோத்தல் இடிபாடுகள் முதல் புதுப்பொலிவுடன் கம்பீரமாக நிற்கும் பிக்கானீர் அரண்மனை வரை.. நான்கு வாரங்கள் – கடந்த காலத்தில் மின்னல் போல் ஒரு குறுக்கு வெட்டுப்பயணம்.

சுற்றிலும் வறண்ட நிலச்சூழலில் நவீன பாசன வசதிகள் பச்சைக் கட்டங்களாக விவசாயத்தை சாத்தியப்படுத்தியிருந்தன. கரும்பச்சையில் குட்டையாக அடர்ந்த கோதுமை வயல்கள், மஞ்சள் பூத்து விரிந்திருக்கும் வெந்தய வயல்கள், காய்ந்த செடிகளில் கண் திறந்தது போல் வெடித்து நிற்கும் பருத்தி வயல்கள். அறுவடை கண்டு வைக்கோல் போர் எழுந்து நிற்கும் களங்கள். நாம் கடந்து சென்ற பகுதிகளில் பெரும் பங்கு விவசாய நிலங்களே.

இன்றும் மாறாமல் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாய் வாழ்க்கை நடத்தும் சமகால சமணர்கள் நிஜ நாயகர்களாக நம்முன் நிற்கின்றனர். களையான முகமும், பூப்போன்ற மேனியும் கொண்டவர்கள். ஒரு கலைநினைவாக தான் காலத்தில் எஞ்சிநிற்க வேண்டும் என்னும் ஏக்கம் ஒவ்வொரு சமணருக்கும் உள்ளதோ என்று வியக்க வைக்கின்றன மிகச் சமீபத்தில் எழுந்த அவர்களின் கோயில்கள். ஹஸ்தகிரி, ஹதீசிங் ரணக்பூர் போன்ற கலை உன்னதங்கள் தனி நபர்களின் பங்களிப்பால் சாத்தியமாகியிருக்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக புலால் உண்ணாமல், அதிர்ந்து பேசாமல், கோயிலில் பாடி வழிபடும் இந்தக் கோடீஸ்வரர்களின் எளிமையான வாழ்கை பிரமிக்க வைக்கிறது. பொதுவாக பிரம்மாண்டங்கள் ஓசையெழுப்புவதில்லை.

லென்யாரி குகைகளின் மெல்லிய இருளில் வசித்து, உதயம் கண்ட உயர் மனங்கள் முதல் பீரங்கி தாங்கும் கோட்டைகளை நிறுவிய ரஜபுத்திர வீரம் என வாழ்ந்துள்ளது எனது பாரம்பரியம். கண்டு அனுபவித்தவற்றை பகிரத் தவிக்கிறது மனம். உள்வாங்க எதிர்த்தரப்பு இல்லாமல் போகும் போது சிறிதாகக் கண்கள் பனிப்பதை உணர்கிறேன்.. வார்த்தைகள் வெற்றுச் சுழல் முடித்துத் திரும்பிவந்து கனமாக நிலைகொள்கின்றன. இது அல்ல இடம் என்ற ரீங்காரம் எங்கும். காணும் பெண் முகத்தில் கதம்ப சிற்பியின் கலை நேர்த்தியைத் தேடுகிறேன். வாசிக்கவோ சிந்திக்கவோ இயலாத நிலை.

இப்போது காலை விழித்ததும் மோட்டுவளையில் தொங்கி சுற்றும் மின்விசிறி அயர்வூட்டுகிறது. பார்க்கப் புதுமையான கலைப்படைப்புகளும், ஏற ஒரு மலையும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஒரு பேரிடியின் எதிரொலி முழங்குவது போல நீளும் பயண நினைவுகள் அதிர்ந்தடங்குகின்றன. தீராமல் வரும் பிம்பங்கள் – மனம், உழுது விட்ட நிலம் போல. கலைந்த சதுரக்கட்டத்தின் நிறங்கள் போல ஒருமையற்று நிற்கிறது! எதிலும் எஞ்சி நிற்கும் போதாமை..

பரிநிர்வாணத்திற்கு முந்திய நிலையான அருகர் நிலை பற்றி நீங்கள் கூறியவற்றை எண்ணிப்பார்க்கிறேன். சிறியவை என்று ஒவ்வொன்றையும் உணரவைத்த, செறிவான ஒரு துண்டு வாழ்க்கை நமக்குத் தந்த இப்பயணத்திற்கு, “அருகர்களின் பாதை” என்பதைவிடச் சிறப்பான பெயர் அமையுமா என்ன..?

கெ.பி.வினோத்

முந்தைய கட்டுரைஇலக்கியமும் அறிவியலும்
அடுத்த கட்டுரைகீதையைச் சுருக்கலாமா?