அருகர்களின் பாதை 26 – பிக்கானீர்

ஜெய்சால்மரில் இருந்து ஜெய்ப்பூருக்குப் பயணமாக முடிவெடுத்தோம். இந்த முடிவு கொஞ்சம் சிக்கலானது. எங்கள் திட்டத்தில் இருந்த இரு முக்கியமான சமண ஊர்கள் ஒன்று ஓசியான், இன்னொன்று அர்துனா. இரு ஊர்களுமே முக்கியமானவை. அர்துனா ஒரு காலகட்டத்தில் ராஜபுத்ர வம்சமான பாரமாரா மன்னர்களின் தலைநகரமாக இருந்தது . பாரமாராக்கள் மாளவத்தைப் பதினொன்றாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள். பாரமாரா வம்சத்தின் புகழ்பெற்ற மன்னர் என்றால் போஜராஜன்தான்.


[பிக்கானீர் அரண்மனை]

அர்துனாவைச்சுற்றி ஏராளமான இந்து சமணக் கோயில்கள் இடிந்து கிடக்கின்றன என்று ராஜஸ்தான் தொல்பொருள்துறை குறிப்பிடுகிறது. இவை 11 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை.அவற்றில் நீலகண்ட மகாதேவ் கோயில் பெரியது, நிறைய சிற்பங்கள் கொண்டது என்றும் அந்தேஸ்வர் காலிஞ்சாரா போன்ற சமண ஆலயங்களும் உள்ளன என்றும் தகவல்கள் சொல்கின்றன.

இங்குள்ள மண்டலேஸ்வர் கோயில் பாரமாரா மன்னராகிய சாமுண்ட ராஜனால் 1088இல் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கான ஆலயம் இது. மத்தியப்பிரதேசமும் ராஜஸ்தானும் சந்திக்கும் இப்பகுதியின் பண்பாடும்சரி கட்டிடக்கலையும்சரி இந்தியாவின் தனித்தன்மை கொண்ட மரபுகள்

ஓசியான் சமணர்களுக்கு முக்கியமான ஒரு தலம். ராஜஸ்தானின் ஓஸ்வால் இனக்குழுவின் பிறப்பிடம் இது என்று சொல்கிறார்கள். ஓஸ்வால்கள் இன்று துணி வணிகத்தில் ஓங்கியிருக்கிறார்கள். அவர்களின் ஓசியா மாதாஜி கோயில் இங்குள்ளது என்று குறித்து வைத்திருந்தேன்.

இந்தக் கோயில் ஒரு மலைமேல் உள்ளது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில். 12ஆம் நூற்றாண்டில் விரிவாக்கிக் கட்டப்பட்டது. இங்குள்ள இரு கோயில்கள் சண்டி கி மாதா கோயில் மற்றும் அம்பா மாதா கோயில் ஆகியவை 1178இல் கட்டப்பட்டவை.

இந்த ஊர் பற்றிய ஒரு ஆர்வமூட்டும் தகவல் வாசித்தேன். இவ்வூருக்கு ஒரு காலகட்டத்தில் உப்கேஸ்பூர் என்று பெயர் இருந்தது. இங்குள்ள சாமுண்ட மாதாவுக்கு ஒரு காலகட்டத்தில் எருமைகளை பலிகொடுத்தார்கள். ஸ்ரீ ரத்ன பிரபா சூரி என்ற ஆச்சாரியார் அதை நிறுத்தினார். ஆகவே தேவி கோபம் கொண்டு ஆச்சாரியாரைக் கடும் நோவுக்கு ஆளாக்கினார். ஆனால் அந்த வலியைத் தாங்கிக் கொள்வதையே ஒரு பெரும் தவமாக ஆச்சாரியார் செய்தார்.

தேவி மனமிரங்கி ஆச்சாரியாரிடம் மன்னிப்புக் கோரினாள். ஆச்சாரியார் தேவிக்கு நல்லுரை சொன்னார். பக்தர்கள் கொடுக்கும் உயிர்ப்பலிகளின் பாவம் முழுக்க தேவிக்கே வரும் என்றும் விளைவாக அவளே நரகத்தில் உழலவேண்டியிருக்கும் என்றும் சொன்னார். தேவி அந்த நல்லுரை கேட்டு மனம் திருந்தி இனிமேல் பலி தேவையில்லை, சிவப்புநிறமான பூக்கள் கூடத் தேவையில்லை என்று முடிவெடுத்தாள். அதன் பின் ஆச்சாரியார் சாமுண்டிதேவிக்கு சாச்சி மாதா என்று பெயர் சூட்டினார்.

இந்த ஆச்சரியமான கதை நாட்டார் வழிபாட்டுமுறையை எப்படி சமணம் மாற்றியமைத்தது என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும். இந்தியா முழுக்க இந்த மாற்றத்தை சமணம் செய்திருக்கிறது. இது ஒரு பெரிய பண்பாட்டு மாற்றம். உயிர்ப்பலி இல்லாமலாவதென்பது உண்மையில் அந்த இனக்குழுவின் அடிப்படை மனநிலையையே மாற்றியமைக்கிறது. வன்முறைநீக்கம் செய்யப்பட்ட சமூகத்தில் உள்மோதல்கள் குறைகின்றன. அந்தச்சமூகம் பிறசமூகங்களுடன் சுமுகமான உறவுகொள்ள ஆரம்பிக்கிறது. வணிகத்திலும் பிற சமூகச்செயல்பாடுகளிலும் வெற்றி அடைய ஆரம்பிக்கிறது. தமிழகத்திலும் சாதிகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் இந்த அம்சத்தைக் காணலாம்.

ஓசியானில் உள்ள மகாவீர் கோயில் அதிகமாக வணங்கப்பட்டுவரும் இடம். சாச்சிமாதா மகாவீரருக்குப் பணிவிடை செய்யும் தெய்வமாக ஆனாள் என்று சொல்லப்படுகிறது. அவள் ஆணைப்படியே அங்கே இந்த ஆலயம் கட்டப்பட்டது. நம்மூரில் உள்ள பல அன்னைதெய்வங்கள் சமண யட்சிகளாக ஆனது அவ்வாறுதான் என சொல்லலாம்.

ஆனால் ஓசியான் பரமாரா என்னும் இரு ஊர்களையும் தவிர்க்க முடிவெடுத்தோம். ஏனென்றால் பயணம் அனேகமாக முடிவுக்கு வந்துவிட்டது. ஒரு மாதம் பயணம் என்பது திட்டம், இன்னும் ஐந்து நாட்கள் மிச்சம். ராஜஸ்தானின் எல்லையில் உள்ள லொதுர்வா சென்றதுமே எங்கள் பயணம் அதன் உச்சத்தையும் தொட்டுவிட்டது. அதுதான் இந்தியாவின் மேற்கெல்லையில் சமணர்களின் கடைசித்தலம். அங்கிருந்து திரும்பும் வழியில் பெரிய திசை திரும்பல்கள் சாத்தியமில்லை என்ற நிலை. ஆகவே ஓசியான், அர்துனா இரண்டையும் தவிர்த்தேயாக வேண்டும்.

இத்தனை பயணம் செய்து இத்தனை ஊர்களைப் பார்த்தபின்னரும் இரு ஊர்களைத் தவிர்ப்பது பெரிய இழப்புணர்வை உருவாக்குவதாகவே இருந்தது. ஆனால் இத்தகைய மனக்குறை தேவைதான். எந்த ஒரு பயணத்திலும் எஞ்சும் மனக்குறைதான் அடுத்த பயணத்துக்கான தூண்டுதல். நாவல் எழுதும்போதும் இதே குறையை உணர்வோம்.

ஜெய்சால்மரில் இருந்து பிக்கானீர் வழியாக ஜெய்ப்பூர் வருவதாகத் திட்டம். பிக்கானீர் வந்துசேர மாலை ஆகிவிட்டது. வரும் வழி முழுக்கப் பாலைவனம். குறும்புதர்கள் நிரவிய பொட்டல் வெளி. தார் பாலைவனம் என்பது பெரும்பாலும் இந்தப் பொட்டல்தான். பெரும்பாலும் ராஜஸ்தானிலும் கொஞ்சம் பாகிஸ்தானிலுமாகப் பரவிக்கிடக்கிறது இது. வடமேற்கே சட்லஜ் நதி முதல் தென்கிழக்கே ஜெய்ப்பூர் வரை பரவிக்கிடக்கும் நிலத்தை ஒட்டுமொத்தமாக தார் என அழைக்கிறார்கள்.

தார் பாலைவனத்தின் மண் பிற பாலைநிலத்து மண்களில் இருந்து வேறுபட்டது. தொடர் காற்றரிப்பால் பாறைகள் உடைந்து உருவாகும் பருபருப்பான மணல் பிற பாலைவனங்களில் காணப்படும். தார் பாலைநில மண் ஆற்றுவண்டல் உலர்ந்தது போல. நீர் ஊற்றினால் சேறு போலக் குழையும். உலர்ந்ததும் முற்றிலுமாக உதிர்ந்து விடும்.

தார் பாலைவனம் எப்படி உருவானது என்பது பற்றிப் பலவகையான கொள்கைகள் உள்ளன. இயற்கை மாறுபாட்டினால் நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் இது உருவாகியிருக்கலாம் என்கிறார்கள். சிலர் இப்பாலைவனம் இன்னும் பிற்காலத்தில் உருவானது என்கிறார்கள். இந்தப் பாலைநிலத்தில் அகழ்வாய்வுகள் மூலம் தொடர்ந்து காலிஃபங்கன் போன்ற தொல்நகரங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. இப்பகுதி ஒரு பெரும்பண்பாட்டுவெளியாக இருந்துள்ளது.

தார் பாலையில் ஏராளமான ஆறுகள் ஓடிய தடங்கள் விண்வெளிப்படங்கள் மூலம் கண்டடையப்பட்டுள்ளன. ஆகவே ஹரப்பா நாகரீகம் நிலவிய காலகட்டத்தில் இது வளமான வண்டல் நிலமாக இருந்தது என்று சொல்கிறார்கள். பொதுவான கருத்தின்படி இங்கே ஓடும் காக்கர்-ஹக்ரா ஆறு ஒரு காலத்தில் மிகப்பெரிய ஆறாக ஓடியிருந்தது. அது பூகம்பம் போன்ற ஏதோ காரணத்தால் நின்று போய் அதன் நீர் சிந்துவிலும் கங்கையிலும் ஓட ஆரம்பித்தது. அதுதான் சரஸ்வதி என்று சொல்லும் ஆய்வாளர்கள் உண்டு.

எதுவாக இருந்தாலும் தார் பாலைவனம் தெளிவாகக் காட்டும் ஓர் உண்மை, அது பாலைவனம் அல்ல என்பதுதான். மழை குறைவான நீரற்ற நிலம்தான் அது. அங்குள்ள மண் சத்தற்ற பாலைமணல் அல்ல, வளமான வண்டல் மண். ஆழ்துளைக்கிணறுகள் வந்தபோதே ராஜஸ்தானின் கணிசமான நிலம் விவசாயத்துக்கு வந்துவிட்டது. நாங்கள் பயணம்செய்த இடங்களில் ஏராளமான நிலங்கள் உழுது போடப்பட்டிருந்தன. சூரியகாந்தி வயல்களும் எள் வயல்களும் ஏக்கர் கணக்கில் உருவாகியிருந்தன. இன்னும் ஐம்பதாண்டுகளில் பெரும்பாலும் தார்பாலைவனம் விளைநிலமாக ஆகிவிடும்.

பாலைவனத்தைப் பார்த்தபடி காரில் சென்றுகொண்டிருப்பது ஓர் அரிய அனுபவம். வறண்ட நிலத்தை முதலில் காணும்போது ஒரு மனச்சோர்வு உருவாகிறது. அகம் தனிமை கொள்கிறது. நம்முடைய உள்ளுக்குள் உறையும் ஆதிக்குரங்கு துயரமடைகிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நாம் அந்த நிலத்தின் உயிரை அடையாளம் காண்கிறோம். உயிரற்ற நிலம் என மண்ணில் ஏதும் இல்லை என உணர்கிறோம். அந்த திறந்தவெளியில் மனம் பறந்தலையத்தொடங்குகிறது

இங்குள்ள மரங்களின் இலைகள் கூரியவை, முட்கள் மண்டிய தண்டுகள். ஆனால் எல்லா மரங்களிலும் சிறிய குருவிகள் இருக்கின்றன.மண் முழுக்க நூற்றுக்கணக்கான வளைகள். முயல்களும் எலிகளும் இருக்கக்கூடும். சாம் மணல்பரப்பிலேயே வாழும் நாய்களைப் பார்த்தோம். மனிதர்களிடம் மிகப் பிரியமாக வாலாட்டிக் குழைந்து வரவேற்றன. இரவில் கூடவே வந்து ஆதரித்தன. எல்லா நாய்களும் நன்றாக சாப்பிட்டு கிண் என்றுதான் இருந்தன. வேட்டை நிறையவே கிடைக்கிறது போல.

இங்குள்ள எல்லா ஒட்டகங்களும் நன்றாகத்தான் இருந்தன. வரும் வழியில் ஓர் இடத்தில் மான்கூட்டங்களைப் பார்த்தோம். எத்தனை பட்டினி கிடந்தாலும் தாயின் முலைப்பால் குறையாது என்று உயிரியல் சொல்கிறது. பாலைவனம் உயிர்களை ஊட்டிக்கொண்டேதான் இருக்கிறது

மாலையில் பாலைநிலத்தில் கடைசி சூரிய உதயத்தை இறங்கி நின்று பார்த்தோம். நேர் பின்னால் குளிர்கால முழுநிலவு வந்து நின்றிருந்தது. வெள்ளி நிலவையும் பொற்சூரியனையும் இணைக்கும் மாபெரும் வளையமாகத் தொடுவானம். கவிழ்ந்த கண்ணாடிக்கிண்ணம் போலத் துல்லியமான நீலவானம். எரிந்தணையும் சூரியனைப் பார்த்தபின் நிலவின் அழகில் கொஞ்சநேரம் நின்றோம்.

நாங்கள் பிக்கானீரை வந்தடைந்தபோது ஏழு மணி. இங்குள்ள சமண தர்மசாலையைத் தேடி நகரின் மிகச்சிக்கலான தெருக்களில் மாட்டிக்கொண்டோம். பெரும்பாலான தெருக்களில் ஆட்டோக்கள்தான் புக முடியும். கார் பின்னுக்கும் வர முடியாமல் முன்னுக்கும் போக முடியாமல் சிக்கி செயலற்றது. ஊரே கூடிக் கூச்சலிட்டுக் கத்தி எங்களை வெளியே எடுத்தார்கள். ஒரு மணிநேரம் மூச்சுத்திணறி விட்டோம். கடைசியில் தர்மசாலா அங்கே இல்லை. வேறு வழி இல்லாமல் ஓட்டலில் அறை போட்டோம்.

காலையில் ஒன்பது மணி ஆகிவிட்டது நாங்கள் கிளம்ப. அருகில்தான் பிக்கானீர் அரண்மனை இருந்தது. பிக்கானீர் அரசகுலம் 1488இல் ராய் பிக்கா என்ற சிற்றரசரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நிலம் மக்கள் குடியேற்றம் குறைவான தரிசாகவே கிடந்திருக்கிறது. இது ஜங்க்ளாதேஷ் – பொட்டல்நிலம் – என அழைக்கப்பட்டது. ஜோத்பூர் மன்னர் ராய் ஜோதாவின் இரண்டாவது மகனான ராய் பிக்கா தனக்கென ஒரு நாடு தேவை என்பதற்காக இந்தப் பொட்டல் நிலத்தில் தன் ஆதரவுப்படைகளுடன் குடியேறி இந்நகரை உருவாக்கினார். பிக்காநகர் என்பதே பிக்கானீர் ஆக மருவியது.

பிக்கா இங்கே ஏரிகளை வெட்டிக் குடியிருப்புகளை உருவாக்கினார். பிக்கானீர் தார் பாலைவன வணிகப்பாதையில் இருந்தமையால் விரைவிலேயே பெரிய நகரமாக ஆகியது. பழைய பிக்கானீரில் இருந்துஇன்றைய பிக்கானீர் கொஞ்சம் தள்ளி உள்ளது. பிக்கா கட்டிய கோட்டை ஜூனாகர் என்ற பேரில் பிற்கால மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது.ஜூனாகர் கோட்டை இந்தியாவின் முக்கியமான ராணுவத்தளமாக இருந்தது

பிக்கானீர் முகலாய மன்னர்களுடன் சமரசம் செய்துகொண்டு கப்பம் கட்டி வாழ்ந்த சிற்றரசு. பிக்கானீரை இன்றைய வடிவில் கட்டியமைத்தவர் ராஜா ராய் சிங்ஜி. அவர் முகலாயப் பேரரசின் படைத்தலைவர்களில் ஒருவராக இருந்தார். அக்பர் , ஷாஜகான் ஆகியோரின் சேவையில் இருந்தார். அவர்களுக்காக மேவார் மன்னரை வென்று பல பரிசுகளையும் பதவிகளையும் பெற்றார். அந்தப் பெரும் செல்வத்தைக் கொண்டுதான் ஜுனாகர் கோட்டையைக் கட்டினார். பிக்கானீர் அரண்மனையைப் பொன்னாலும் வெள்ளியாலும் அலங்காரம்செய்தார்.

பின்னர் பிக்கானீர் வெள்ளைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டது. வெள்ளையர் ஆட்சியில் பிக்கானீரை ஆண்ட மகாராஜா கர்ணி சிங் முக்கியமானவர். அவர்தான் பிக்கானீர் அரண்மனையை இன்றைய கோலத்தில் பெரும் செலவுசெய்து மாற்றியமைத்தவர். லண்டனில் பயின்ற மகாராஜா, பிக்கானீருக்கு ரயில், மின்சாரம், தொலைபேசி போன்றவற்றைக் கொண்டு வந்தார் என்றும் ஆங்கிலக்கல்விக்கான பாடசாலைகளை அமைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. வெள்ளையர்களுக்காக இரு உலகப்போர்களிலும் மகாராஜா பங்கேற்றிருக்கிறார்.

பிக்கானீரின் அரண்மனைக்குப் பத்து மணிக்குச் சென்று சேர்ந்தோம். அப்போதும் குளிர் இருந்தது. இரவில் நான்கு டிகிரி குளிர் இருந்ததாகச் சொன்னார்கள். சிவந்த மணல்கல்லால் கட்டப்பட்ட அழகிய அரண்மனை இது. பிரிட்டிஷ் பாணி கட்டிடக்கலையும் முகலாயக் கட்டிடக்கலையும் ராஜபுத்திரக் கட்டிடக்கலையும் இணைந்த கட்டுமானம். அரண்மனையின் பெரும் தூண்களிலும் சுதை வளைவுகளிலும் பிரிட்டிஷ் பாணி. சாளரங்களில் முகலாய வளைவு. உப்பரிகைகளில் ராஜஸ்தானிய அழகு.

இந்தியாவின் அழகிய அரண்மனைகளில் ஒன்று இது. கண்ணைப்பறிக்கும்படியான அலங்காரங்கள். பொன்னும் வெள்ளியும் அள்ளி இழைத்த பூவேலைப்பாடுகள். மிகப்பெரிய உள் அரங்கு. அங்கே மன்னர் அமரும் பளிங்கு சிம்மாசனம். மன்னரின் அத்தாணி மண்டபம் முழுக்கமுழுக்கப் பொன்வேலைப்பாடுகள் நிறைந்தது. ஆடம்பரம் கண்ணைப்பறித்து அழகை இல்லாமலாக்குவதை அங்கே காணமுடிந்தது

வழிகாட்டி நூற்றைம்பது கிலோ பொன் பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சொன்னார். கொஞ்சம் கொஞ்ச்மாக அது பொன் என்பதை மறந்தோம். அது மஞ்சள்நிற ஒளி மட்டுமாக ஆகியபோது அழகு தெரியத்தொடங்கியது. தரையில் காஷ்மீர் ரத்தினக்கம்பளங்கள். தொங்கு விளக்குகள். பிரம்மாண்டமான சிவப்பு மண்டபம் இந்த அரண்மனையின் மிக அழகிய இடம்.

ஆனால் மீண்டும் திகட்டத்தொடங்கியது.ஓர் ஆலயத்தில் நிறைவை அளிக்கும் கலையழகு அரண்மனையில் நேர் மாறாக ஆடம்பரமாகக் கண்ணைக்குத்தியது. கலைக்குப்பின்னால் இருக்க வேண்டிய மன எழுச்சி ஆன்மீகமானதாகவே இருக்கவேண்டும். அகங்காரம் என்றால் அழகிய மலரில் துர்நாற்றம் வீசுவது போலத் தோன்றி விடுகிறது. பிக்கானீரின் மற்ற அரண்மனைகளைப் பார்க்க வேண்டியதில்லை என முடிவெடுத்தோம்.

பிக்கானீரில் ஏராளமான சமணர்கள் வாழ்கிறார்கள். இங்குள்ள முக்கியமான சமண ஆலயம் என்பது பந்தாசர் சமண ஆலயம். இந்த ஆலயத்தை முந்நூறாண்டுகளுக்கு முன்னர் பந்தா ஷா என்ற சமண வணிகர் கட்டினார். அவரது மரணத்துக்குப் பின்னர் அவர் மகள் முடித்தார். வெண்சலவைக்கல்லால் கட்டப்பட்ட அழகிய கோபுரம் கொண்ட ஆலயம். ஆனால் உள்ளே உள்ள சிற்பங்கள் சாதாரண சுதைச்சிற்பங்கள் போலிருந்தன. மொத்தக் கோயிலையும் வண்ண ஓவியங்களால் நிறைத்திருந்தனர். உள் மண்டபத்தில் உள்ள ஓவியங்கள் ராஜஸ்தானி சிற்றோவிய பாணியில் அமைந்தவை. அழகானவை.

இந்த ஆலயம் இன்றும் வாழும் சமண ஓவிய- சிற்பக்கலைக்குச் சிறந்த உதாரணம். தென்னகத்தில் திகம்பர சமணர்களின் குடைவரைகளுக்குள் இருந்து தொடங்கிய பயணத்தை இங்கே முடித்திருக்கிறோம்.

மேலும்…

மேலும் படங்கள்

முந்தைய கட்டுரைஅன்னா ஹசாரே – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 27 – சங்கானீர், ஜெய்ப்பூர்