அருகர்களின் பாதை 19 – படான், மேஹ்சானா, மோதேரா

இரவு தங்கிய ஊர் ரதன்பூர் எனக் காலையில் தெரிந்துகொண்டோம். பொதுவாக இந்தப் பயணத்தில் எங்கள் தங்குமிடங்கள் இருவகை. சமண தர்மசாலைகள் பெரும்பாலும். அவை நடுத்தர வசதி கொண்டவை. மெத்தை,கம்பிளிப்போர்வை,சுடுநீர் உத்தரவாதம். சில இடங்களில் கட்டில் இருக்காது. அறைகள் வசதியாகப் பெரியவையாக இருக்கும். பின்பக்கம் சமைக்கவும் வசதி இருக்கும். ஒரு சின்ன ஸ்டவ் கையோடு வைத்திருக்கலாமென ஒவ்வொரு முறையும் தோன்றுமென்றாலும் காலையில் அது என்ன புதிய சுமை என எண்ணம் ஏற்படும்.

பராமரிப்புச்செலவு என மிகச்சிறிய தொகையை சில இடங்களில் அளிக்கவேண்டியிருக்கும். பல இடங்களில் இலவசம். பொதுவாக எங்குமே வசதிக்குறைவான தங்குமிடங்கள் அமையவில்லை. எல்லா இடங்களிலும் உற்சாகமான வரவேற்பையே பெற்றோம். சமணம் என்றால் என்ன என்று புரியவைத்தவை இந்த தர்மசாலைகளே.

[ராணி கி வாவ்]

தர்மசாலைகள் கிடைக்கவில்லை என்றால் சாலையோர விடுதிகளில் தங்குவோம். பெரும்பாலும் புறநகர்களில் தான் இடம்பார்ப்போம். எட்டுப்பேர் தங்க இரண்டு அறை என்பது எங்கள் செலவுத்திட்டம். பேரம் பேசி எழுநூறு எண்ணூறு ரூபாய்க்குள் இரு அறைகளை முடிப்போம். பெரும்பாலும் எல்லா ஓட்டல்களிலும் ஒரு சோகப்பாடலைப் பாடுவோம். ‘Sir we are from Tamilnad, We are in a mission to see all jain temples in India’ என்று ராஜமாணிக்கம் அவரது பரிதாபக் குரலில் கல்லும் கரையும்படி பேச ஆரம்பித்ததுமே பெரும்பாலும் ஓட்டல்காரர்கள் இறங்கி வந்து விடுவார்கள். பாதிக்குப்பாதிகூட தள்ளுபடி கிடைத்திருக்கிறது. தாங்கமுடியாத விடுதி என ஏதும் நிகழவில்லை. விதிவிலக்கு ரதன்பூர்.

ரதன்பூரில் நாங்கள் நுழைந்ததே இரவு பத்து மணிக்கு. பல இடங்களில் விடுதிகளுக்காக விசாரித்தோம். பெரும்பாலான இடங்களில் அறை இல்லை. சில இடங்களில் வாடகை கட்டுப்படியாகாது என விட்டுவிட்டோம். இரவு ஏறிக்கொண்டே சென்றது. நல்ல களைப்பு. எங்காவது தங்கியே ஆகவேண்டும் என முடிவெடுத்து அந்த விடுதியை ஏற்றுக்கொண்டோம். ஓர் அறை, அது ஏசி அறை என்று பேச்சு. ஆனால் ஏசி வேலைசெய்யாது.

ஏசி என்றால் வெப்பத்துக்காக. ஆனால் கடும் குளிர் அப்படியே நீடித்தது. ஓர் அறை சாமான்கள் வைக்கும் இடம், ஓட்டல் பணியாளர்கள் தங்குவது. இரண்டுக்கும் சேர்த்து வாடகை ஆயிரத்து இருநூறு ரூபாய். வைப்பறையில் தங்கிய நான்குபேர் இரு கட்டிலை சேர்த்துப்போட்டு ஒன்றாகப் படுக்க வேண்டியிருந்தது. அவர்களில் நன்றாகத் தூங்கியவர் சீனு மட்டும்தான். அவர் படுத்திருந்த தரை கதகதவென இருந்தது. காரணம் காலையில் தெரிந்தது, கீழே உள்ள தளத்தில் தந்தூரி அடுப்பு இருந்திருக்கிறது.

null

[மெஹ்சானா சமண ஆலயம்]

கிர்நார் மலை ஏறிய அலுப்பு காலையிலும் மிச்சமிருந்தது. நேராக எதிரே இருந்த சிறிய கடைக்குச் சென்று டீ குடித்தோம். அங்கே ஒரு தமிழர் அறிமுகமானார். சென்னைவாசி. அங்கே ஏதோ வேலைக்காக வந்த அதிகாரி. அவருக்கு நாங்கள் சென்ற, செல்லவிருக்கிற எந்த ஊரைப்பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. வட இந்தியர்களைப்பற்றிய இகழ்ச்சிகளைச் சொன்னார், அவர்களிடம் இருந்து அவர் கற்றுக்கொண்ட ஒரே விஷயம், பான்பீடா. அதை வாங்கி வாயில்போட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

முந்தையநாள் எழுதிமுடிக்கத் தாமதமானதனால் நான் குளிக்காமல் படுத்துக் கொண்டேன். வழக்கமாகத் தூசிபோகக் குளித்துவிட்டுப் படுப்பேன், அது ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும். ஆனால் களைப்பில் ஒன்றுமே தெரியவில்லை. தூங்கியதும் தெரியாது. விடிகாலையில் ஒரு கனவு. கட்சின் அந்த பிரம்மாண்டமான வறண்ட ஏரி. அதன் தவிட்டு நிறமான சேற்றுப்பரப்பு பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிறது.

அதெல்லாமே பித்தளையால் ஆனவை என சட்டென்று கண்டு கொண்டேன். அமர்ந்து பெயர்க்க முனைகையில் இருவர் எதிரே வந்தார்கள். எங்களுக்கு டீ கொடுத்து உபசரித்தவர்கள். சிரித்தபடி ”அதெல்லாம் டோலாவீரா மக்களுக்குச் சொந்தமான பித்தளை, பெயர்க்கமுடியாது” என்று சொல்லி விட்டுச் சென்றார்கள். நான் திகைத்து நிற்க வெயில் பட்டு வெண்கல ஓடுகள் வேய்ந்த தரை மின்ன ஆரம்பித்தது. ஆம், சீனு விளக்கைப் போட்டு, சார் ஆறுமணி என்று கத்தினார்.

எட்டுமணிக்குத்தான் வண்டியை எடுக்க முடிந்தது. ஒன்பது மணிவாக்கில் படான் வந்து சேர்ந்தோம். படான் குஜராத்தின் தொன்மையான தலைநகரங்களில் ஒன்று. இந்துக்களுக்கும் சமணர்களுக்கும் முக்கியமானது. பெரும்பாலான சமணக் கோயில்களைக் கட்டிய மன்னர் குமாரபாலர் இந்த நகரையே தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்திருந்தார். சமணர்களின் வணிக மையமாக விளங்கிய படான் இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்ட பின்னரே வணிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகமதாபாதுக்குக் குடியேறினார்கள்.

படான் கிபி 745 வாக்கில் வன்ராஜ் சவ்டா என்ற மன்னரால் உருவாக்கப்பட்டது. சவ்டா அரசவம்சம் இருநூறாண்டுக்காலம் இந்நகரை ஆண்டிருக்கிறது. முன்பு அனஹில்வாடா என்ற பேர் இந்நகருக்கு இருந்தது. புராதன நகரங்களை ஆராய்ச்சி செய்தவரான அமெரிக்க வரலாற்றாசிரியர் டெரிஷியஸ் சாண்ட்லர் இந்நகரம் கிபி ஆயிரத்தில் உலகில் இருந்த நகரங்களில் பத்தாவது இடத்தில் இருக்கிறது என அடையாளப்படுத்தியிருக்கிறார்.

முகம்மது கோரி இந்நகர் மேல் படையெடுத்தார். அப்போது இந்நகரை ஆண்டிருந்தவர் இரண்டாம் மூலராஜா.அவர் அன்று பன்னிரண்டு வயதுச் சிறுவன். அவர் அன்னை நாயகிதேவி அவருக்காக இந்தகரை ஆண்டார். ராணி, முகமது கோரியைக் களத்தில் வென்று ஆப்கானிஸ்தானுக்குத் துரத்தினார். அதன்பின் கோரி குஜராத் மேல் படை எடுக்கவில்லை. காயத்ரா என்ற ஊரில் இந்தப் போர் நடந்தது.

பின்னர் முகமது கோரியின் தளபதி குத்புதீன் ஐபக் கிபி 1200 இல் படானைத் தாக்கினார். கிட்டத்தட்ட எட்டுமாதம் நீடித்த முற்றுகை மற்றும் போரில் குத்புதீன் ஐபக் மூலராஜாவைத் தோற்கடித்தார். டெல்லி சுல்தான்களுக்குக் கப்பம் கட்டும் நாடாக படான் நீடித்தது. அதன் செல்வ வளமும் படைபலமும் குறைந்தது. கப்பம் கட்டுவதனால் அது நலிந்தபடியே வந்தது. மேலும் இப்பகுதி வணிகத்தால் செழிப்பது. கொள்ளையை மட்டுமே ஆட்சியாக நடத்திய சுல்தான்களின் காலத்தில் இந்தியவணிகமும் வீச்சியடைந்தது.

டெல்லியில் அடிமை வம்சம் வலுவிழந்த போது சோலங்கி மன்னர்கள் தனியரசை அறிவித்தனர். ஆனால் பின்னர் ஜலாலுதீன் கில்ஜியின் தளபதியாக இருந்த அலாவுதீன் கில்ஜி 1298 இல் படான் மேல் பெரும் படையுடன் வந்து தாக்கித் தோற்கடித்தார்.

[ராணி கி வாவ் ]

அலாவுதீன் கில்ஜி படானைப் பூரணமாக அழித்தார். எல்லாக் கோட்டைகளையும் கோயில்களையும் இடித்தழித்தார். கிட்டத்தட்ட முந்நூறு இந்து சமண ஆலயங்களை இப்பகுதியில் அவர் அழித்ததாக அவரது வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.

இடுகாடாக ஆன படான் மக்களால் கைவிடப்பட்டு நூறாண்டுக்காலம் இடிபாடுகளாகக் கிடந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மீண்டும் உயிர்பெற்றெழுந்தது. இடிந்து கிடந்த படான் அருகே முகாமிட்ட முகலாயப்படை அங்கே ஒரு படானை உருவாக்கியது. குஜராத்துக்கான டெல்லி சுல்தானின் பிரதிநிதி படானைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். படானைச்சுற்றிப் புதிய கோட்டை கட்டப்பட்டது. அதுவே இன்றைய படான்.

பழைய படான் இன்று நகருக்கு வெளியே. கோட்டையின் சில எச்சங்கள் இன்றுமுள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் படான் பரோடா மன்னரின் ஆட்சிக்கீழ் இருந்தது. பின்னர் இந்தியக் குடியரசின் பகுதியாக ஆகியது. நாங்கள் புதிய படானை மிக வேகமாகத் தாண்டிச்சென்றோம். பழைய படானின் பெரிய கோட்டைவாசல் இடிந்த நிலையில் சாலையோரமாக நின்றது. சோலங்கி மன்னர்களின் தலைநகரில் அவர்களின் அடையாளமாக எஞ்சியிருப்பது அதுவே.

ஆனால் ஒரு மகத்தான நினைவுச்சின்னம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு கிணறு. கிணறு என்றால் நம் நினைவில் வரும் எதுவும் அல்ல இது. பிரம்மாண்டமான ஒரு நிலத்தடி மாளிகை எனச் சொல்லலாம். இந்தியாவின் அற்புதங்களில் ஒன்று என எந்த சந்தேகமும் இல்லாமல் இதைச் சொல்லிவிட முடியும்.

நெருங்கிச்செல்லும் வரை இந்தக் கட்டுமானத்தின் அளவும் அழகும் நம் கண்ணுக்குப்படாது. அலாவுதீன் கில்ஜியால் இடித்துத் தள்ளப்பட்ட இந்தக் கலை அற்புதம் மேலே மேலே செங்கல் குவியல்கள் விழுந்து மண்மூடிப் புதைந்து கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் எவருக்கும் தெரியாமல் கிடந்தது. அந்த இடம் மக்களால் ராணி கி வாவ்-ராணியின் கிணறு என அழைக்கப்பட்டது.

1958 இல் இந்த இடம் அகழ்வாராய்ச்சிக்கழகத்தின் கவனத்துக்கு வந்தாலும் 1972இல்தான் முறையான அகழ்வு-மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1984இல்தான் இது பொதுப்பார்வைக்கு முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் சுற்றுலாப்பயணிகள், கலையார்வலர் பெரும்பாலானவர்களுக்கு இந்த இடம் பற்றி ஒன்றுமே தெரியாது. மிகமிகக் குறைவாகவே இங்கே பயணிகள் வருகிறார்கள்.

மிகுந்த கவனத்துடன் இந்த ஆழமான கிணற்றில் இருந்து சிற்பங்கள் மீட்கப்பட்டு உரிய இடம் கண்டடையப்பட்டுப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பில் முப்பது சதம் மீட்கப்பட்டுள்ளது. அதுவே பிரமிக்கச்செய்கிறது. இதைப்போன்ற ஒரு மகத்தான கட்டுமானம் இன்னொன்று உலகில் உண்டா என்பதே ஐயம்தான்.

சிவந்த மணல்கல்லால் ஆனது இது. எட்டடி ஆழத்தில் படி இறங்கிச்சென்றால் இக் கட்டுமானம் ஆரம்பிக்கிறது. படிகள் பல நிலைகளை இறங்கிச்செல்கின்றன. ஒவ்வொரு நிலையும் பெரும் அரண்மனை போலத் தூண்களும் மாடிகளும் உப்பரிகைகளுமாகக் கட்டப்பட்டுள்ளன. இரு சுவர்களிலும் தூண்களிலும் அடர்ந்து செறிந்து சிற்பங்கள். பெரும்பாலும் விஷ்ணுவின் வடிவங்கள். கிருஷ்ணலீலையே அதிகமும் செதுக்கப்பட்டுள்ளது. ராமனின் சிலைகளும் உள்ளன.

பல்வேறு நளின நிலைகளில் நின்றுகொண்டிருக்கும் பேரழகிகளான தேவதைகளை இளவெயிலின் செவ்வொளியில் காண்பது ஒரு கனவனுபவம். கலை ஏன் நம்மைக் கனவுக்குள் கொண்டுசெல்கிறது என்பது எப்போதும் எழும் வினா. நமக்கு நிகழும் நிஜமும் சலிப்பூட்டுவதனால்தான், போதாதவையாக இருப்பதனால்தான் கலையை நாடுகிறோமா?

அத்துடன் வினோதமான ஒன்று, அது ஆழத்தில் இறங்கிச்செல்வதனால் உருவாவது. ஆழம் என்பது நம்முள் இறங்கும் உணர்வை அளிக்கிறது. நம் கனவில் சுஷுப்தியில் ததும்பி நின்றிருக்கும் சிலைகள் இவை. இலைநுனிகளில் ஒளிவிடும் பனித்துளிகள் போல கனிந்து உதிரப்போகும் கணத்தில் உறைந்த கலைவடிவங்கள்.

சிதையாத சிற்பங்களின் நுணுக்கமும் அழகும் மூச்சடைக்க வைப்பவை. சுட்ட மண்ணால் ஆனவையோ என தோன்றும செந்நிறக் கல்லால் ஆன சிலைகள் . அனைத்துமெ நடனநிலையில் உயிரசைவின் அழகின் உச்சதருணத்தில் நின்றன. பெரும்பாலும் வைணவச்சிற்பங்கள் என்றாலும் மகிஷாசுரமர்த்தனி, துர்க்கை போன்ற தெய்வங்களின் சிலைகளும் உள்ளன.

குறிப்பாக இங்குள்ள மகிஷாசுரமர்த்தனி சிலையை இந்த வகைச் சிற்பங்களில் ஒரு பெரும் படைப்பு என்றே சொல்லவேண்டும். மகிஷம் நாக்குத் தள்ளி சரிந்திருக்க தாய்மை நிறைந்த முகத்துடன் அதை வதம் செய்கிறாள் தேவி. மென்மையான கல், ஆகையால் மிகமிக நுணுக்கமாக, குழைவாக செதுக்கப்பட்ட சிலைகளின் முகங்களின் பேரருளும் பேரழகும் கலை கடவுளை கண்ணெதிரே காட்டும் வல்லமை கொண்டது என்பதற்கான சான்றுகள்.

படிகளாக இறங்கிச்செல்லும் இந்த நிலத்தடி மாளிகை ஒரு ஆழமான கிணற்றில் சென்று முடிகிறது. பாதிக்குமேல் செல்ல இன்று அனுமதி இல்லை. உள்ளே எல்லா இடங்களிலும் இடைவெளி இல்லாமல் சிற்பங்கள். இதை சிற்பங்களை அள்ளிநிறைத்த ஒரு கலம் என்று சொல்லத்தோன்றுகிறது

இந்த நிலத்தடிக் கிணறு 64 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இந்தக் குளத்தின் வடிவ நேர்த்தியை எந்தக் கோணத்தில் நின்று நோக்கினாலும் பரவசத்துடன் அல்லாது உணர முடியாது. 1998 முதல் இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது.

கிபி 1050ல் மன்னர் சோலங்கி வம்சத்து நிறுவனரானமுதலாம் பீமதேவரின் நினைவாக அவர் மனைவி உதயமதி இதைக் கட்டினார். படானை ஆண்ட முதலாம் மூலராஜாவின் மைந்தரான பீமதேவர் குஜராத்தின் வரலாற்றில் முக்கியமானவர். பல கோயில்களைக் கட்டியவர். இந்திய வரலாற்றில் மனைவிக்காகக் கணவன் கட்டிய தாஜ்மகால் முக்கியமான ஒரு கட்டிடம். ஆனால் கணவனுக்காக மனைவி கட்டிய இந்த நினைவகம் அதைவிடக் கலையழகில் பலமடங்கு மேலானது.

உதயமதி இதைக்கட்ட ஆரம்பித்தாலும் கட்டிமுடித்தவர் அவள் மகன் முதலாம் கரன்தேவ். உதயமதி இதைக்கட்டிய செய்தியை வைணவக்கவிஞரான மெருங்க சூரி அவரது பிரபந்த சிந்தாமணி என்ற நூலில் குறிப்பிடுகிறார். இந்தக்கிணற்றில் இருந்து கிட்டத்தட்ட 30 கிமீ தூரத்துக்கு ஒரு சுரங்கவழி உள்ளது. கல்லால் ஆன குழாய்கள் போடப்பட்டு அருகே உள்ள சித்பூர் என்ற நகர் வரை சென்றிருக்கிறது. இது தண்ணீர் செல்லும் வழியா, தப்பிச்செல்லும் வழியா என்று சொல்லமுடியவில்லை. இந்தியாவின் மிக நீளமான சுரங்க வழியும் இதுவே.

ராணி கி வாவில் இருந்து செல்லும் வழியில் ஓர் அகழ்வைப்பகம் உள்ளது. அது இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. அங்கு இப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ஏராளமான சிலைகளின் உடைசல்கள் வைக்கப்பட்டுள்ளன.

படான் நகருக்குள் நுழைந்து அங்குள்ள சமண ஆலயமான பஞ்சநாத் தீர்த்தத்தை தேடிச் சென்றோம். மிகமிகக் குறுகலான தெருக்கள். எங்கள் கார் குடலுக்குள் கவளம்செல்வதுபோல செல்ல நேர்ந்தது. ஆனால் எவருக்கும் அசௌகரியமேதும் இல்லை. ஊரே கூடி இடம் வலம் பார்த்துச் சொன்னார்கள்.

பஞ்சநாத் கோயில் சிவந்த சலவைக்கல்லால் ஆனது. மராட்டியர் கட்டிய பூரி, காசி போன்ற கோயில்களின் அதே கல், அதே வடிவம். அழகான கோயில். கோயில் சுவர்களில் அப்சர கன்னியர்களின் அழகிய சிலைகள். இச்சிலைகளில் அடிக்கடி வரும் சில வடிவங்கள் குறிப்பிடத்தக்கவை. அம்பை வில்லில் பொருத்தி நாணேற்றி நிற்கும் அப்சரகன்னி, முதுகை நன்றாகத் திருப்பி நின்று காலில் முள் எடுப்பவள், இருகைகளையும் தலைக்குமேல் தூக்கி சோம்பல் முறிப்பவள். எல்லா தோற்றங்களுமே மார்பகத்தின் அழகைக் காட்டும் நோக்கம் கொண்டவை.

அது ஸ்வேதாம்பர மரபைச்சேர்ந்த கோயில். மூலவரான ஆதிநாதர் பெரிய ரஜதகிரீடத்துடன், புஜகீர்த்திகளுடன் அமர்ந்திருந்தார். கோயிலில் இருந்த ஒருவர் நாங்கள் சிற்பங்களைப் பார்ப்பதைக் கண்டு நாங்கள் சிற்பிகளா என்று கேட்டார். அதேபோல ஒரு சமணக் கோயிலில் எங்களூரில் நாங்கள் கோயில் கட்டுகிறோமா என ஒருவர் விசாரித்தார் என்பது நினைவுக்கு வந்தது. எங்கள் சிற்பக்கலை ஆர்வத்துக்கான சான்றாக அதை எடுத்துக்கொண்டோம்.

மேஹ்சானா எங்கள் அடுத்த இலக்கு. அகமதாபாதுக்கும் காந்திநகருக்கும் அடுத்தபடியாக மேஹ்சானாதான் குஜராத்தின் பெரிய ஊர். பால்பொருட்களின் உற்பத்திக்குப் புகழ்பெற்றது இது. மேஹ்சானா எருமைகள் வட இந்தியாவெங்கும் புகழ்பெற்றவை. கட்ச் எருமைகளில் இருந்து உருவாக்கப்பட்ட உயர்தர எருமைகள் இவை.

மேஹ்சானாவில் நுழைந்து சிமாந்தா சுவாமி பிரவேஷ்துவார் எனப் புகழ்பெற்ற சமண ஆலயத்தைத் தேடிச் சென்றோம். அதிகம் சுற்றாமலேயே கோயிலை அடைய முடிந்தது. கேட்டவர்களெல்லாம் வழி சொன்னார்கள். மேஹ்சானாவின் முக்கியமான அடையாளம் இக்கோயில்.

புதியதாக வெண்பளிங்குக்க்கல்லில் கட்டப்பட்ட இந்த ஆலயம் மிக அழகியது. 49 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் 33 மீட்டர் உயரமும் கொண்ட இக்கோயில் சுத்தமான பளிங்கினால் ஆனது. கோயிலைப் பார்த்து நின்றபோது அது ஒரு அழகிய குழந்தையின் முதல் பல் என்ற எண்ணம் எனக்கேற்பட்டது. பளிங்குப்பெண்கள். பளிங்கு தேவர்கள்.

வள்ளுவர் போன்ற தோற்றத்துடன் இருந்த ஒரு சிலையைச் சுட்டிக்காட்டிய சீனு அது விஸ்வகர்மா சிலை என்றார். ஆமாம் என எல்லாருமே வியந்தோம். கையில் முழக்கோல், வஜ்ராயுதம், கோணக்கோல், கமண்டலம் ஆகியவற்றுடன் சமபங்க நிலையில் நின்றுகொண்டிருந்தது சிலை. சமணர் ஆலயங்களில் விஸ்வகர்மர் இருப்பது வியப்பூட்டியது.

தேவர்கள் பலரை அடையாளம் காணவே முடியவில்லை. சங்கு சக்கரம் கதாயுதம் ஏந்திய பெண்சிலை, விஷ்ணுவின் பெண் தோற்றம் போல இருந்தது. இரு கைகளிலும் சக்கரம் ஏந்திய தேவர்கள். சக்கராயுதம் கட்கம் ஏந்திய தேவதைகள். இப்பகுதியின் சிற்பக்கலை என்பது கூடவே இருந்தாகவேண்டிய புராணங்கள் இல்லாத நிலையில் வெறும் வடிவங்கலாக தனித்துவிடப்பட்டிருக்கிறது. நம்மூரின் தலபுராணங்கள் நம் சிற்பக்கலையை புரிந்துகொள்ள எத்தனை முக்கியமானவை என தெரிந்தது

பளிங்கு என்ற ஊடகம் சிலைக்கு இன்னொரு அழகைக் கொடுக்கிறது. கருங்கல் ஊடகம் சிலைகளை ஆழமும் உறுதியும் கொண்டதாக, மண்ணுடன் தொடர்புடையதாக ஆக்குகிறது. பளிங்குச் சிலைகளை மென்மையானதாக மேகங்களுடன் தொடர்புடையதாக ஆக்குகிறது. கருங்கல்சிலை அது என்றுமுள்ளது என எண்ணச்செய்கிறது. பளிங்குச்சிலை நாம் கண்ணிமைத்தால் அது கலைந்து மறைந்துவிடும் என எண்ணச்செய்கிறது.

கோயிலின் மூலவராக ஆதிநாதர். மிக அபூர்வமான பளிங்கினால் ஆன சிலை. பளிங்குக்குள் உலோகங்கள் கலந்தால் அழகிய வண்ணத்தீற்றல்கள் உருவாகும். நீலம் சிவப்பு பொன்வண்ணத் தீற்றல்கள் கொண்ட கண்ணாடிபோல ஒளி ஊடுருவும் அற்புதமான கல்லில் செதுக்கப்பட்ட சிலை. பொன்னிறம் சுடரும் வஜ்ரகிரீடம், புஜகீர்த்திகள் அதன் மேல் அணிவிக்கப்பட்டிருந்தன. அருள் நிறைந்த, நம்மைப் பார்க்காத தியானவிழிகள்.

கோயிலைச் சுற்றி அழகிய பூங்கா உள்ளது. கோயிலின் பக்கவாட்டில் உலோகத்தால் ஆன தீர்த்தங்கரர் சிலைகள் நான்கு பக்கமும் அமர்ந்த மேரு உள்ளது. அதன் மேல் கண்ணாடிப் பாதுகாப்பு. அதற்குப் பொன்முலாம் பூசப்பட்டிருக்கலாம். அதன் மேல் ஒரு கண்ணாடிக் கூரை செய்கிறார்கள். அந்த நவீனக் கட்டுமானம் மொத்தமாகக் கோயிலின் அழகைக் குறைக்குமோ என எண்ணச்செய்தது.

மேஹ்சானாவின் முக்கியமான கவர்ச்சி என்பது அருகே மோதேரா என்ற ஊரில் இருக்கும் சூரியனார் கோயில்தான். சோலங்கி வம்சத்து மன்னர் பீமதேவரால் கிபி 1026 இல் இக்கோயில் கட்டப்பட்டது. பீமதேவரின் மரணத்துக்குப்பின்னர் அவருக்காகத்தான் ராணி கி வாவ் கட்டப்பட்டது. சோலங்கி மன்னர்கள் அடிபப்டையில் சௌரமதத்தினர், பின்னர் வைணவர்களாக ஆனவர்கள்.

புஷ்பவதி என்ற ஆற்றின் கரையில் உள்ளது இக்கோயில். இது சோலங்கி மன்னர்களைத் தோற்கடித்த குத்புதீன் ஐபக்கால் இடித்துத் தள்ளப்பட்டது. இடிபாடுகளாக நெடுங்காலம் கிடந்து மீட்கப்பட்டது. இப்போதும் மீட்புவேலைகள் நடந்தபடி உள்ளன. கோபுரம் இல்லை. கோயிலை நெருங்க நெருங்க ஒரு கல் அடித்தளம் மட்டுமே கண்ணுக்குப்படும். ஆனால் நெருங்கியதும் ஏற்படும் வியப்புக்கு அளவே இல்லை.

[சூரியனார் கோயில், சூரியன். ]

இந்தக்கோயில் ஒரு மாபெரும் கலைச்சாதனை. மீண்டும் மீண்டும் இந்த வரிகளைச் சொல்ல நேர்கிறது, வேறு வழியில்லை. குஜராத்தின் கலைச்சிகரங்களை மட்டுமே தேர்வுசெய்து இந்தப் பயணத்திட்டம் அமைக்கப்பட்டது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கலை என் எதிர்பார்ப்பைத் தட்டி எறிந்து நிமிர்ந்து நிற்கிறது.

இந்தியாவின் சிற்பக்கலை பற்றிப்பேசும் எவரும் இந்தக் கோயிலைப் பாராமல் பேசமுடியாது. ஒரு கட்டிடம் செங்கற்களுக்குப்பதிலாக முழுக்கமுழுக்க சிற்பங்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டதெனக் கொண்டால் அதுதான் இந்தக் கோயில். கோயிலின் எல்லா அணுவும் சிற்பங்கள்தான். சிற்பங்களே தூண்கள், உத்தரங்கள், வளைவுகள், மடிப்புகள், திண்ணைகள், ஏன் அடித்தளமே கூட ஒரு சிற்பக்குவியல்தான்.

கோயிலுக்கு முன்னால் சூரியகுண்டம் என்ற பேரிலான ஒரு பெரும் குளம் உள்ளது. நான்கு பக்கமும் விதவிதமான ஜியோமிதி வடிவங்களில் சரிந்திறங்கும் படிகள். ஒவ்வொரு படியிலும் கோயில்கள். சிறிய கோயிலுள் சின்னஞ்சிறு கோயில்கள். நூற்றுக்கணக்கில். அந்த ஒவ்வொரு கோயிலின் சுவரிலும் சின்னஞ்சிறிய சிற்பங்கள். சப்த கன்னியர், விஷ்ணு, துர்க்கை. ஆச்சரியமாகத் தீர்த்தங்கரர் சிலைகள்.

கோயிலின் முகப்பில் இருபக்கமும் சிற்பங்களால் ஆன சிற்பமாக இரு தூண்கள். முக மண்டபத்தை ஒரு வானளாவிய ஒரு நகைக்குவியல் என்றுதான் சொல்லவேண்டும். இந்தக்கோயில் மஞ்சள்நிறமான மணல்கல்லால் செதுக்கப்பட்டது.

சிற்பங்கள் எல்லாமே காற்றில் மழுங்கிவிட்டன. ஏராளமான சிலைகள் உதிர்ந்து விட்டன. முழுமையான எச் சிலையும் இல்லை என்றே சொல்லவேண்டும். ஆனால் இந்த அளவுக்கு சிலைச்செறிவுள்ள இன்னொரு ஆலயம் இந்தியாவில் இல்லை. சிலைச்செறிவுக்குப் பெயர்போன கஜுராஹோ கூட இதை விட ஒரு மாற்று குறைவுதான்.

இக்கோயிலின் அடித்தளக் கட்டுமானங்களில் பலவகையான பாலியல் சிலைகள் உள்ளன. பல கோணங்களிலான உடலுறவுக்காட்சிகள். சூரியன் வீரியத்தின் அடையாளம். ஆகவே இச்சிலைகள் எல்லா சூரிய சன்னிதிகளிலும் இருக்கும். தமிழகத்தில் சில விஷ்ணு கோயில்களில் சூரியன் சன்னிதி உண்டு, அங்கும் இச்சிலைகள் சில இருக்கும். கொனார்க் சூரியக் கோயிலில் இந்த வகையான சிலைகள் ஏராளமாக உள்ளன.

சுற்றிச்சுற்றிப் பார்த்துக்கொண்டே இருந்தோம். ஒரு பெரும்காவியம் கண்ணெதிரே முடிவிலாது கிடப்பது போல. அல்லது ஒரு மழைமாறாக் காடு போல. பார்க்கப்பார்க்க வகைமை. ஒட்டுமொத்தமாக ஒருமை. அழகு என்பது மனிதனை இத்தனை பித்துக் கொள்ளச்செய்யுமா என்ன? அழகுக்காக இந்த அளவுக்கு மனிதன் உழைப்பானா என்ன? அழகுக்காக இந்த அளவுக்கு வாழ்க்கையை அர்ப்பணிப்பானா என்ன?

வேறெதற்காக மனிதன் இந்த அளவுக்கு உழைத்திருக்கிறான்? இந்த அளவுக்கு அர்ப்பணித்திருக்கிறான்? இந்நாள் வரையிலான மானுட வரலாறே அழகை மேலும் அழகை மேலும் மேலும் அழகை நோக்கி மானுடப்பிரக்ஞை கொண்ட தாவல் மட்டும்தானே?

ஆம், உடைக்கும் பிரக்ஞை இருந்திருக்கிறது. ஆணவம், அதிகாரம், குரூரம்… ஆனால் அழகுதான் எஞ்சியிருக்கிறது. அழகும் ஆக்கமும், ஆணவத்தையும் அழிவையும் வென்று முன்செல்லத்தான் செய்கிறது. அதுவே வரலாறு உலகமெங்கும் காட்டும் உண்மை.

ஆனால் இந்த அழகு… பிதற்றச்செய்கிறது இந்த பிரம்மாண்டம். இத்தனை பேரழகையும் மனிதன் எதற்காகத் தேடுகிறான்? அவனுள் இருக்கும் அழகுக்கான தாகம் இத்தனை பிரம்மாண்டமானதா என்ன? இத்தனை கட்டிய பின்னும் அது அப்படியே இன்னும் எஞ்சுகிறதா என்ன?

மேலும்…

படங்கள் இங்கே

முந்தைய கட்டுரைமலர்கள்
அடுத்த கட்டுரைகாலத்துயர் – கடலூர் சீனு