அருகர்களின் பாதை 15 – அகமதாபாத்,லோதல்

அகமதாபாத், சமணர்கள் அதிகம் வாழும் ஊர்களில் ஒன்று. பிரம்மாண்டமான வணிகநகரமாக இன்று அது உருவாகியிருக்கிறது. இந்தியாவில் மிக வேகமாக வளரும் நகரங்களில் ஒன்று இது.புறநகரிலேயே நகரின் பிரம்மாண்டமான வளர்ச்சியைக் காண முடிந்தது. சென்னையின் வளர்ச்சி என்பது எந்தவகையான திட்டமிடுதல்களும் இல்லாத கான்கிரீட் பெருக்கு. அகமதாபாத் நகருக்குப்பின்னால் திட்டமிடலும் எதிர்காலக் கற்பனையும் தெரிந்தது

சாலைகள் வழியாகச்சென்றபோது பொதுவாக சுத்தமாக பேணப்படும் நகரம் என்ற எண்ணம் ஏற்பட்டது. எங்கள் இந்தப்பயணத்தில் நாங்கள் நகரங்களைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் இந்திய நகரங்களில் சிலவே பாரம்பரியத்தொன்மை கொண்டவை. பெரும்பாலானவை பின்னாளில் நெடுஞ்சாலைகளை ஒட்டி உருவாகிவந்தவை. சரித்திர முக்கியத்துவம் உடைய நகரங்களையே பார்த்தோம். பிறவற்றை சுற்றுச்சாலைகளில் கடந்துசென்றோம்.

அஹமதாபாத், சுல்தான் அகமது ஷாவால் 1411ல் நிறுவப்பட்ட நகரம். அகமதாபாதில் சில நவீன ஜைனக் கோயில்களைப் பார்க்கலாமென நினைத்தோம். குஜராத் பண்பாட்டில் இரண்டு மதமரபுகள் ஆழமாக ஊறியவை. ஒன்று சமணம், இன்னொன்று புஷ்டிமார்க்க வைணவம். குஜராத்தின் சமணப் பாரம்பரியத்துக்கு எப்படியும் இரண்டாயிரம் வருட வரலாறு உண்டு. அகமதாபாதில் ஸ்வேதாம்பர சமணர்கள் பெருவாரியாக வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் பெருவணிகர்கள். அவர்களின் ஆலயங்களும் நிறையவே உள்ளன.

அகமதாபாதில் உள்ள முக்கியமான சமண ஆலயம் ஹதீசிங் ஆலயம் எனப்படுகிறது. அதைக் கட்டியவர் ஹதீ சிங் என்ற சமண வணிகர். சலவைக்கல்லால் ஆன கட்டிடம். காலையில் எழுந்து அந்த ஆலயத்தைப் பார்க்கச்சென்றோம். ஏழுமணிக்கும் அரை இருள். மொத்த ஊரே தூங்கிக்கிடந்தது. எங்கும் டீ கூடக் கிடைக்கவில்லை. நள்ளிரவு போல விளக்கைப் போட்டுக்கொண்டு வண்டிகள் சென்றன. ஹதீசிங் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் ஏதாவது கடை திறந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றோம். அகமதாபாதில் கடைகள் காலை பத்து மணிக்கு முன்னால் திறக்காது என்றார் ஒரு ஆட்டோ ஓட்டுநர்.

பட்டினியாக சமண ஆலயத்திற்குச் செல்வதும் புண்ணியம்தான்.டெல்லிகேட் பகுதியில் ஹதீசிங் ஆலயத்தின் நுழைவாயிலைக் கண்டால் உள்ளே ஒரு பெரிய கோயில் இருக்கும் தகவல் தெரியாது. ஹதீசிங்கின் வணிக மையம் இருந்த இடம் அது. அலயம் கட்டுவதற்கு முன்பே இருந்த அதே நுழைவாயில். அது பழமையாகி பாழடைந்து கிடந்தது.

அந்த வணிக வளாகத்துக்குள் ஸ்தூபவடிவமான பெரிய கோபுரம் கொண்ட ஒரு சிறிய கோயில் முகப்பில் இருந்தது. சட்டென்று பார்த்தால் சமண ஆலயங்களில் உள்ள துவஜ ஸ்தம்பம்தான் கொஞ்சம் பெரியதாக உள்ளது என்ற எண்ணம் ஏற்படும். அறுகோண வடிவமாக ஆரம்பித்துப் பல்வேறு ஜியோமிதிவடிவங்கள் வழியாக வட்டமாக ஆகும் வடிவம். அதுதான் கோயில் என புரிந்ததும் வியப்பு.

அழகிய சிறிய சிலைகள், கைகூப்பிய பக்தைகள், மலர் ஏந்திய தேவதைகள், யானைகள். உள்ளே பெரிய வஜ்ரகிரீடத்துடன் தீர்த்தங்கரர்கள் அமர்ந்திருந்தனர். முற்றும்துறந்த அருகர்களின் தலையில் அமைந்துள்ள வைரமுடிகூட மலைச்சிகரங்கள் சூடிய செந்நிற முகில் என்றுதான் தோன்றுகின்றன. மெல்ல ஒளி விரியத்தொடங்கியதுகாலை ஒளியில் அந்த மஞ்சள் நிற கோபுரம் மின்னுவதைக் காண மனநிறைவு ஏற்பட்டது.

ஆலயத்தின் இடதுபக்கம் ஹதீசிங் கோயில் இருந்தது. ஹதீசிங் அகமதாபாதிலும் மேஹ்சானா போன்ற இடங்களிலும் முக்கியமான சமண ஆலயங்களைக் கட்டினார். தன் மொத்த பொருளையும் ஆலப்பணிக்காகச் செலவிட்டார்.1850இல் அவர் கட்டிய கோயில் இது. பதினைந்தாவது ஆவது தீர்த்தங்கரரான தாராநாதருக்கு உரியது. எங்கள் பயணத்தில் தாராநாதருக்கான முதல் கோயில் இதுவே.

வெள்ளை சலவைக்கல்லால் நுணுக்கமான சிற்ப அலங்காரங்களுடன் கட்டப்பட்டது இந்தப் பெரிய கோயில். சலவைக்கல் மிக மிக நெகிழ்வாக, ஒரு பூப்போலத் தன்னை சிற்பியின் கைகளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதைக் கண்டோம். லக்ஸ் சோப்பால் ஆன சிறிய சிலைகள் என எண்ணம் மயங்கியது. முகர்ந்து நோக்கத்தூண்டியது.

முகப்பு வாயிலின் மலர் அலங்காரங்களும் பிரமிப்பூட்டும்படி செய்யப்பட்டிருந்தன. சிறிய கோபுரங்கள் சூழ அமைந்த பிராகாரத்துக்குள் மையக்கோயில் இருந்தது, இதழ்களுக்குள் புல்லிவட்டம் போல. கஜுராகோ பாணியில் சிறிய சிகரங்கள் இணைந்து உருவான பெரிய கோபுரம். கோபுரத்தின் கடைசி நுனிவரை சிற்பஅலங்காரங்களுடன் ஒரு பெரிய நகை போலிருந்தது.

சிற்ப அலங்காரங்கள் காரணமாகவே கோயிலை அதன் அளவுகளை மறந்து சின்னஞ்சிறியதாக எண்ணிக்கொள்ளும் மனப்பிரமை எனக்குண்டு. கஜூராகோ காந்தரிய மகாதேவர் ஆலயம் எத்தனை பிரம்மாண்டமானது என ஒவ்வொரு முறையும் அதன் முன் நிற்கும்போதுதான் உணர்வேன். மற்றபடி அது நினைவில் என் கைக்குள் அடங்கும் சிறிய செப்பு என்றுதான் தோன்றும். அந்த மாயையைக் களைந்து களைந்து கோயிலின் பிரம்மாண்டத்தை கவனிக்க வேண்டியிருந்தது.

கோயில் சாலை ஓரமாக இருப்பதனால் போக்குவரத்துப் புகை வந்து படிந்து கையெட்டா தொலைவில் இருந்த சலவைக்கல் மேல் கருமை படர்ந்திருந்தது. கோயிலே கொஞ்சம் பாழடைந்தது போலிருந்தது. சாரம் கட்டிக் கோயிலை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். சலவைக்கல் துண்டுகளால் கோயிலை சுரண்டியபடி நிறையப் பெண்கள் சாரம் மீது அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். ஏராளமான கிளிகள் கோபுரம் மேல் அமர்ந்திருப்பது போலிருந்தது.

உட்குடைவாக வளைவுக்கூரை கொண்ட பெரும் மைய மண்டபத்தில் ஏறிக் கருவறைக்குள் அமர்ந்திருந்த தாராநாதரை தரிசித்தோம். பொதுவாக இந்த ஆலயத்துக்கு அதிகம் பேர் வருவதில்லை எனத் தோன்றியது. தாராநாதர் ப்தனிமையில் அமர்ந்திருந்தார். மக்கள் நெரியும் கோயில்களில்கூட அருகர்களிடம் கலைக்கமுடியாத தனிமை உள்ளது.

நண்பர் செந்தில்குமார் தேவன் சென்னையில் இருந்து விமானத்தில் வந்து அகமதாபாதில் இறங்கினார். அந்தத் தகவல் வந்தது. காலையில் ஒரு டீமட்டும் குடித்தபின் விமானநிலையம் சென்று செந்தில்குமார் தேவனைக் கூட்டிக்கொண்டோம். அறிவிப்புகளை கவனிக்காமல் ஓட்டுநர் தவறான திசையில் நிறுத்திவிட்டார். உடனே வந்த காவலர் உரிமத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓரமாகக் கொண்டு சென்றார். முந்நூறு ரூபாய் அபராதம் கட்டு, மேலே நூறு ரூபாய் தள்ளு என்றார்.

முத்துக்கிருஷ்ணன் நாங்கள் அண்ணா ஹசாரே குழு, மொத்த அபராதத்தையும்தான் கட்டுவோம் என்றார். உடனே அந்தக் காவலர் உருமாறி நட்புடன் பேசி கையெல்லாம் குலுக்கினார். ஆனால் நூறு ரூபாய் அபராதமும் போட்டு ரசீது கொடுத்து அனுப்பிவிட்டார். அவரது அந்த மாற்றத்தைப்பற்றி சிரித்துக்கொண்டே சென்றோம்.

அக்‌ஷர்தாம் கோயிலுக்குச் செல்வது அடுத்த திட்டம். புஷ்டிமார்க்கம் பெற்றெடுத்த இரண்டாவது குழந்தை என சுவாமிநாராயண் மடத்தைச் சொல்லலாம். ஹரேகிருஷ்ணா இயக்கம் முதல் குழந்தை. இரண்டும் புஷ்டிமார்க்கத்தை பலவையில் உதறியும் மீறியும் தனித்துவம் கொண்டு வளர்ந்தவை என்றாலும் வேர்க்களம் அதுதான். இரண்டுமேஇரு இயக்கங்களுமே சர்வதேசப்புகழ் கொண்டவை. உலகளாவியவை. பல பொதுக்கூறுகள் கொண்டவை.

புஷ்டிமார்க்கம் என்றால் கனிவின் வழி என்று பொருள். ஆந்திரத்தில் கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் பிறந்த வல்லபாச்சாரியார் உருவாக்கியது இந்த வைணவ மரபு. வல்லபர் இரண்டு வைணவ ஞானிகளால் கவரப்பட்டவர். ராமானுஜர், நிம்பார்க்கர்.

ராமானுஜரின் தத்துவ சிந்தனைகளைப் பெரிதும் வல்லபர் எடுத்துக்கொள்கிறார். ராமானுஜர் முன்வைத்த பரிபூரண ஆத்மசமர்ப்பணம், கைங்கரியம் ஆகிய இரண்டு அடிப்படைப் பண்புகளை மீட்புக்கான வழிகளாகப் புஷ்டிமார்க்கமும் முன்வைக்கிறது. ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவுடனான உறவென்ன என்ற வினாவில் ஜீவாத்மா என்ற ஒன்றே இல்லை, பரமாத்மா மட்டுமே உள்ளது என வாதிட்டார் வல்லபர். ஆகவே அவரது வைணவசிந்தனை சுத்தாத்வைதம் எனப்பட்டது.

மாயையால் பரமாத்மாவில் இருந்து பிரிந்து நிற்கும் ஜீவாத்மா தன் சிந்தனையாலும் செயல்களாலும் பரமாத்மாவை இறைஞ்சி மாயையைக் களைவதே முக்தி என்பது என்றார் அவர். புஷ்டிமார்க்கம் களியாட்டம் கொண்டாட்டம் ஆகியவற்றினூடாக இறைவழிபாட்டை முன்வைத்தது.

ராதா-கிருஷ்ண உறவை ஒரு பெரும் குறியீடாக அது வளர்த்தெடுத்தது. கிருஷ்ணன் பரமாத்மா. ராதை ஜீவாத்மா. ராதை கிருஷ்ணன் மீது கொண்ட காதலே ஜீவாத்மாவுக்குப் பரமாத்மா மீது உருவாகவேண்டிய சமர்ப்பணத்துக்கும் பக்திக்கும் சிறந்த உதாரணமாகும். பரமாத்மாவை எண்ணி ஆடிப் பாடிக் கண்ணீர்விட்டுக் கசிந்துருகிக் கரைதலே அதற்கான வழி.

வல்லபர் அவரது வாழ்நாளில் பெரும்பகுதியை பிருந்தாவனத்தில்தான் கழித்தார், அங்கேயே மறைந்தார். ராதாகிருஷ்ண பக்தியை ஒரு பிரம்மாண்டமான மதமரபாக ஆக்கியவர் முதன்மையாக வல்லபரே.

புஷ்டிமார்க்கம் ராகம் [கண்ணனைப் பாடி ஆடுதல்], போகம் [கண்ணனின் பிரசாதமாக உணவுண்ணுதல்], சிங்காரம் [கண்ணனை எண்ணித் தன்னை அலங்கரித்துக்கொள்ளுதல்] என மூன்று நெறிகளை பக்தர்களுக்கு அளிக்கிறது.
கண்ணனைப் பாடிப் பதினாறுவகையான உபச்சாரங்கள் செய்து பூஜைசெய்தல் முக்திக்கான வழியாகும். புஷ்டிமார்க்கிகள் ஒருநாள்கூட கிருஷ்ண பூஜைசெய்யாமலிருக்கக்கூடாது. ஆகவே அவர்கள் சிறியபெட்டியில் கிருஷ்ண விக்ரகங்களை எப்போதும் வைத்திருப்பார்கள். சேவை, கைங்கரியம் இரண்டும் புஷ்டிமார்க்கத்தின் முக்கியமான கட்டளைகள்.

புஷ்டிமார்க்கம் சமணத்துக்கு நேர் எதிரானது. சுவையான உணவு, இசை, நடனம், களியாட்டம் எல்லாவற்றையும் புஷ்டிமார்க்கம் இறைவழிபாட்டுக்கான வழிகளாகக் காட்டுகிறது. சமணம் அவற்றைப் புலனின்பம் நோக்கிய பயணங்கள் என விலக்குகிறது. ஆனால் சமணமும் புஷ்டிமார்க்கமும் சந்திக்கும் புள்ளிகள் உண்டு. உண்மையில் அவையே ஆதாரமானவை. இரண்டுமே ஆத்மசமர்ப்பணம், எளிமை, சேவை ஆகியவற்றை முன்வைக்கின்றன.

இந்த அம்சத்தையே காந்தி இரு மதமரபுகளில் இருந்தும் எடுத்துக்கொண்டார். சமணத்தில் இருந்து விரதங்களை, புலன் ஒடுக்குதலை, சத்யாக்கிரகத்தை காந்தி எடுத்துக்கொண்டார். புஷ்டிமார்க்கத்தில் இருந்து காந்தி எடுத்துக்கொண்டது கிருஷ்ணபக்தியை மட்டுமே. குஜராத்தில் மட்டுமல்ல, பொதுவாக வட இந்தியாவிலேயே சமணமதத்தைப் புஷ்டிமார்க்கம்தான் விழுங்கியது. அது மேலைநாட்டு ஆய்வாளர்கள் சொல்வதுபோல மதப்பூசலின் வழி அல்ல, ஒரு மதம் முந்தையதை விஞ்சிச்செல்வதன் வழி.

கஜபாத தீர்த்தத்தில் நாங்கள் சந்தித்த பெரியவர் அதைத்தான் முக்கியமாகச் சொன்னார். சமணம் தொடர்ந்து வைணவத்திடம் தோற்றுக்கொண்டே இருக்கிறது என்றார். அர்ப்பணம், சேவை, பக்தி ஆகியவற்றில். சமணத்துக்கும் வைணவத்துக்கும் நடுவே உள்ள சில மதமரபுகள் வட இந்தியாவில் உள்ளன. அவற்றில் ஒன்று சுவாமிநாராயண் இயக்கம்.

குஜராத்தில் உருவான நவீன மதமரபுகளில் ஒன்று சுவாமிநாராயணர் இயக்கம். நான் அமெரிக்கா சென்றிருந்தபோது நியூயார்க் அருங்காட்சியகத்தில் ஐமாக்ஸ் அரங்கில் சுவாமிநாராயணரின் வாழ்க்கையைப்பற்றி எடுக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான படத்தைப்பார்த்தேன். அதன்பின்னரே அவரைப்பற்றி அறிந்துகொண்டேன்.

சகஜானந்தர் என்றும் அழைக்கப்பட்ட சுவாமிநாராயணர் வைணவத்துக்குள் சுவாமிநாராயண இயக்கம் என்ற தனி குறுமத இயக்கத்தை உருவாக்கியவர். நாராயணனின் அவதாரமாகவே அவர் அவரது பக்தர்களால் எண்ணப்படுகிறார். உத்தரப்பிரதேசத்தில் சாப்பையா என்ற கிராமத்தில்1781இல் பிறந்தார். அவரது இயற்பெயர் கனசியாம் பாண்டே. பத்தொன்பதாம் வயதிலேயே துறவுபூண்டு நீலகண்டவர்ணி என்ற பெயருடன் இந்தியாவெங்கும் பயணம் செய்தார். கன்யாகுமரியில்கூட சிலமாதங்கள் தங்கியிருக்கிறார்.

தன் இருபத்தொன்பதாம் வயதில் குஜராத்துக்கு வந்த நீலகண்டர் தன் குருவான ராமானந்தரைக் கண்டார். அவர் வைணவத்தில் உள்ள ஒரு வழிபாட்டுமுறையான உத்தவ சம்பிரதாயத்தை சேர்ந்த மடம் ஒன்றின் தலைவர். 1802இல் குருவிடமிருந்து அந்த மத அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சகஜானந்தர் என்று குருவால் பெயர் சூட்டப்பட்டார். சுவாமிநாராயண மந்திரத்தை குரு அவருக்கு உபதேசித்தார். அதன்பின் மக்களால் அவர் சுவாமிநாராயணர் என்றே அழைக்கப்பட்டார்.

உத்தவ் சம்பிரதாயம் மெல்ல மெல்ல சுவாமிநாராயண மரபு என அழைக்கப்படலாயிற்று. சுவாமிநாராயணர் ஆறு கோயில்களை குஜராத்தில் கட்டினார். 500 பிரச்சாரகர்களைத் தேர்வு செய்து தன்னுடைய சிந்தனைகளை மக்களிடையே பரப்ப ஏற்பாடுசெய்தார். 1826இல் சுவாமிநாராயணர் அவரது உபதேசங்கள் அடங்கிய ஷிக்‌ஷாபத்ரி நூலை எழுதினார். 1830இல் மறைந்தார்.

சுவாமிநாராயண மடம் இன்று உலகமெங்கும் கிளைகள் கொண்ட மாபெரும் மதமரபாக வளர்ந்துள்ளது. ஏராளமான மாபெரும் ஆலயங்களை அவர்கள் கட்டியிருக்கிறார்கள். குஜராத்திகள் நடுவே பெரும் செல்வாக்குள்ள இயக்கம் இது. சிகாகோவில் சுவாமிநாராயண இயக்கத்தின் ஆலயம் ஒன்றை கண்டிருக்கிறேன், இந்திய சிறக்கலையின் உச்சங்களில் ஒன்று அக்கோயில்

சுவாமிநாராயண இயக்கத்தை சமணத்துக்கும் புஷ்டிமார்க்கத்துக்கும் பிறந்த மிகச்சிறந்த குழந்தை என்று சொல்லலாம். இவர்களுடைய வழிபாட்டுமுறை, கோயில்கள் எல்லாமே சமணச்சாயல் கொண்டவை. இந்து மதத்துக்கு எல்லா திசைகளில் இருந்தும் தாக்குதல் வந்த ஒரு காலகட்டத்தில் சுவாமிநாராயண் இயக்கம் கல்விப்பணி, சமூகப்பணி மூலம் பெரும் சேவை செய்திருக்கிறது. நவீன குஜராத்தின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இந்த மடம்.

சுவாமிநாராயண மரபுக்கு அகமதாபாதில் இரு கோயில்கள் உள்ளன. பழைய சுவாமிநாராயணர் கோயில் ஒன்று. அக்‌ஷர்தாம் கோயில் என அழைக்கப்படும் புதிய கோயில் இன்னொன்று. அக்க்ஷர்தாம் கோயில் இன்று இந்தியாவெங்கும் அனைவரும் அறிந்த இடம். அக்‌ஷர்தாம் கோயிலில் 2002 செப்டெம்பர் 25 ஆம் தேதி மாலை நாலரை மணிக்குக் காரில்வந்த இரு ஆயுததாரிகள் பக்தர்களை நோக்கிச் சுட்டதில் 29 பேர் கொல்லபப்ட்டனர். 60 பேருக்குக் காயம்பட்டது.

இந்தத் தாக்குதல் லஷ்கர் இ தொய்பாவால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இந்தியாவிலுள்ள சில முற்போக்கு ‘சிந்தனையாளர்கள்’ அந்தத் தாக்குதல் இந்திய ராணுவத்தால் மாறுவேடத்தில் செய்யபப்ட்டது என ஆய்வுசெய்து கண்டுபிடித்தனர். இஸ்லாமிய இதழ்கள் அதை நகல் செய்து வெளியிட்டன

2010ல் டேவிட் ஹெட்லி என்ற கற்பனைப்பெயர் கொண்ட இஸ்லாமியத் தீவிரவாதி அமெரிக்காவில் கைதானார். அவரது வாக்குமூலத்தில் அக்‌ஷர்தாம் தாக்குதல் எப்படி லஷ்கர் இ தொய்பாவால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என விளக்கியிருந்தார். ஆனால் முற்போக்காலர்க்ள் அதை கண்டுகொள்ளவில்லை, அடுத்த விஷயங்களுக்குச் சென்றுவிட்டிருந்தனர்.

அக்‌ஷர்தாம் கோயில் முன்னால் உள்ள கார் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சாலையெங்கும் நடந்து உணவு கிடைக்குமா என்று பார்த்தோம். அப்போதும் மெல்லிய குளிர். நல்ல வெளிச்சமான வெயில் இருந்தாலும் காலை விடியாத உணர்வை அது அளித்தது. அப்போதும்கூட அகமதாபாத் துயிலெழவில்லை. சில கடைகளே திறந்திருந்தன. சாலையிலேயே ஷாமியானா பந்தல் போட்ட ஒரு கடையில் ரொட்டி சப்ஜி சாப்பிட்டோம். அந்தக்கடையின் முதல்வாடிக்கையாளர்கள் நாங்களே.

அக்‌ஷர்தாம் மிக மிகக் கெடுபிடிகள் கொண்ட கோயிலாக மாறிவிட்டிருந்தது. விமானநிலையத்துக்கு நிகரான பாதுகாப்பு ஏற்பாடுகள். உள்ளே சென்றபோதுதான் கோயிலின் பிரம்மாண்டம் தெரிந்தது. பண்டைய கோயில்கள் பலவற்றிலும் சூழல் பலராலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக் கட்டிடம் முழுமையான பார்வைக்குக் கிடைக்காதபடி ஆக்கப்பட்டிருக்கும். அக்‌ஷர்தாம் கோயிலின் முக்கியத்துவமே அதைச்சுற்றி உள்ள திறந்த வெளிதான்.

அக்‌ஷர்தாம் கோயில் நவீன காலகட்டத்தில் பண்டைய கட்டிடக்கலையை ஒட்டிக் கட்டப்பட்ட இந்தியக் கோயில்களில் முதன்மையானது. 1992இல் கட்டப்பட்டது இந்தக் கோயில். இங்குள்ள சமண ஆலயங்களைப் போலவே இதுவும் சலவைக்கல்லால் செய்யப்பட்டது. ஆனால் இளஞ்சிவப்பு சலவைக்கல். மிகப்பெரிய முகப்பு மண்டபம் மற்றும் உள்ளே வளைவுமுகடு கொண்ட நடு மண்டபம்தான் கோயில். மிக நுட்பமாகவும் அழகாகவும் செதுக்கப்பட்ட தூண்களால் ஆனது.

இக்கோயில் தூண்களில் உள்ள யானைச்சிலைகளும் பலவிதமாக நடமிடும் கணபதி சிலைகளும் அழகானவை. நவீனகாலகட்டத்தில்கூட இத்தனை நுண்ணிய சிற்பங்களைச் செதுக்குவதற்கு மரபார்ந்த சிற்பிகள் இருப்பது வியப்பளிப்பதே. மிக உயரமான மைய மண்டபத்துக்குள் ஒலி முழக்கமிட்டது. கல் குளிர்ந்திருந்தது. வெண்கல், ஒருவகை பனிக்கட்டி என தோன்றியது.

இது சுவாமிநாராயணருக்காகக் கட்டப்பட்டது. சுவாமிநாராயணரின் ஏழு அடி உயரமான பெரிய வெண்கலச் சிலை ஒன்று கோயிலின் கருவறைக்குள் உள்ளது. மண்டபத்தின் நான்கு மூலைகளிலும் வெண்சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட சிலைகளாக சுவாமிநாராயணரின் சீடர் மரபில் வந்த நான்கு தலைமுறையின் மடாதிபதிகள் கையில் அன்றைய மலர்களுடன்அமர்ந்திருக்கிறார்கள்.

240 அடி நீளமும் 131 அடி அகலமும் 108 அடி உயரமும் கொண்ட ஆலயம் இது. சகஜானந்தவனம் என சொல்லப்படும் ஓர் அழகிய தோட்டத்தின் நடுவே அமைந்துள்ளது இந்தக் கோயில். கோயிலுக்குள் சுவாமிநாராயணரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒலி ஒளிக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலை விட்டு வெளியே வரும்போது ஏதோ வெளிநாட்டு இந்து ஆலயத்தைப் பார்த்துவந்த உணர்வு. வெளியே நேராக நினைவுப்பொருள் கடை நோக்கி வழி திறந்தபோது அந்த எண்ணம் உறுதிப்பட்டது .

எங்கள் அடுத்த இலக்கு ஹரப்பா காலகட்ட நகரமான லோதல். அஹமதாபாதில் இருந்து நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த ஊர். இருபுறமும் கோதுமை பயிர் பச்சையாக சிலுசிலுத்து விரிந்த வயல்வெளிகள் நடுவே காரில் செல்வது உற்சாகமானதாக இருந்தது. அருகே அவ்வப்போது சபர்மதி ஆறு வந்து கொண்டிருந்தது. சபர்மதி அத்தனை பெரிய நீர்ப்பெருக்குள்ள ஆறு என நான் நினைத்திருக்கவே இல்லை. மதியம் மூன்று மணிக்கு லோதல் சென்று சேர்ந்தோம்.

நம்முடைய பாடப்புத்தகங்களில் விரிவாகப் பேசப்பட்டிருக்கவேண்டிய, ஆனால் பெரும்பாலும் காணப்படாத ஓர் ஊர் லோதல். மொகஞ்சதாரோ ஹரப்பா என்றால் தெரியாதவர்கள் இல்லை. இந்தியப்பண்பாட்டின் முதல் ஊற்றுமுகங்கள். ஆனால் மொகஞ்சதாரோ காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று அடையாளம் காணப்பட்டுவிட்ட பல ஊர்கள் இந்தியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை மொகஞ்சாதாரோ ஹரப்பா என்ற இரு நகர்களை மட்டுமே ஆதாரமாக கொண்டு புனையப்பட்ட ஆரியப்படை எடுப்பு – திராவிட வீழ்ச்சி என்ற கதையை முழுமையாக மறுப்பவையாக நின்றுகொண்டிருக்கின்றன.

மொகஞ்சதாரோ இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்த் பகுதியில் உள்ளது. கிமு 26 ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் புதைநகரம் உருவாகியிருக்கலாம் என்றும் கிமு 18 ஆம் நூற்றாண்டில் கைவிடப்பட்டிருக்கலாமென்றும் சொல்லப்படுகிறது. 1922ல் இந்தியத் தொல்லியல்துறையைச் சேர்ந்த ராக்கல்தாஸ் பந்தோபாத்யாய அதைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தினார். 1930இல் அங்கே அகழ்வு ஆராய்ச்சிகள் முறைப்படி தொடங்கின. சர்.ஜான் மார்ஷல், கெ.என் தீக்‌ஷித் போன்றவர்களால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் பதினைந்து வருடம் கழித்து மார்ட்டிமர் வீலர், அகமது ஹஸன் போன்றவர்கள் அகழ்வை விரிவாக்கம் செய்தனர்.

ஆனால் மேலைநாட்டு ஆய்வாளர்களும் சரி, இந்திய ஆய்வாளர்களும் சரி, சர் ஜான் மார்ஷல் மற்றும் மார்ட்டிமர் வீலர் ஆகியோரையே மொகஞ்சதாரோ பற்றிய ஆய்வாளர்களாக எடுத்துக்கொண்டனர். காலப்போக்கில் பெரும்பாலான பள்ளிக்கல்வி நூல்களில் சர் ஜான் மார்ஷலும் மார்ட்டிமர் வீலரும் அந்நகரைக் கண்டுபிடித்தார்கள் என்றே பதிவாகிவிட்டிருக்கிறது. நான் அப்படித்தான் உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். இந்திய ஆய்வாளர்களின் பெயர்களே வரலாற்றில் இல்லை.

மார்ட்டிமர் வீலர் தான் இன்று நம் பாடப்புத்தகங்களில் உள்ள சிந்துசமவெளி நாகரீகம் பற்றிய கருத்துக்களை உருவாக்கியவர். அவர் மொகஞ்சதாரோ ஹரப்பா இரு நகரங்களையும் மட்டும் வைத்து அந்தமுடிவுகளுக்கு வந்தார். அவை இரண்டும் தனித்த நிகழ்வுகள் என அவர் நினைத்தார். அந்நகரங்கள் அப்பகுதியில் உயர்ந்த நகரநாகரீகம் ஒன்றை உருவாக்கிய மக்கள்கூட்டத்தினருக்குரியவை என்றும், அவர்கள் ஆரியர்கள் அல்லர் என்றும் அவர் சொன்னார். ஆரியர்களின் படையெடுப்பால் அந்நகர நாகரீகம் அழிந்தது என்பது அவரது கொள்கை.

ஏற்கனவே இந்தியாவில் இரு மொழிக்குடும்பங்கள் இருக்கின்றன என்று எல்லிஸ், கால்டுவெல் போன்றவர்கள் சொல்லியிருந்தார்கள். சிற்ப சாஸ்திரங்களில் தென்னிந்தியாவை திரமிளம் என்றும் திராவிடம் என்றும் குறிப்பிட்டிருந்ததில் இருந்து திராவிடம் என்ற சொல்லை எடுத்து அந்த மொழிக்குடும்பங்களில் தென்னக மொழிக்குடும்பத்தை அடையாளப்படுத்தப் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த அடையாளம் எப்போதோ ஒரு தருணத்தில் ஓர் இன அடையாளமாக, எந்தவிதமான ஆய்வும் நிகழாமல், எந்தவித விவாதமும் நிகழாமல், ஏற்கப்பட்டது.

அதற்குக்காரணம் இந்தியக் கல்வித்துறை அன்று பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததுதான். இந்திய அறிவுத்துறை சுய அடையாளம் இல்லாமல் ஐரோப்பிய நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே அன்றும் இன்றும் உள்ளது. ஆரியர்-திராவிடர் என்ற இனப்பிரிவினைக் கருத்தை விவேகானந்தர் முதல் அம்பேத்கார் வரை இந்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து சுயமாக சிந்தித்த எந்த சிந்தனையாளரும் ஏற்றுக்கொண்டதில்லை.

ஆனால் ஐரோப்பிய நூல்கள் வழியாக இந்தியாவை அறிந்த நேரு அந்த இனவாதத்தை ஏற்றார். ஆகவே அது சுதந்திர இந்தியாவில் பாடப்புத்தகங்களில் நீடிக்கிறது. தமிழகத்தில் ஓர் அரசியல் இயக்கமே அதை நம்பி இருப்பதனால் அந்த இனவாதம் வலுவாக வாதாடி நிலைநாட்டப்படுகிறது.

ஐம்பதுகளில் இந்தியத் தொல்லியல்துறை சிந்துசமவெளி நாகரீகத்தின் தடயங்களை இந்திய நிலப்பகுதிகளில் தேடும் பெரும் பணியை ஆரம்பித்ததது. பல பகுதிகளாக நிகழ்ந்த அகழ்வாய்வுகளில் மொகஞ்சதாரோவுக்குச் சமகாலத்தைச் சேர்ந்த ஏராளமான நகரங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஆறு நகரங்கள் முக்கியமானவை. கனேரிவாலா, ராக்கிகார்ஹி, காலிபங்கன், ரூபர், தோலாவீரா மற்றும் லோதல்.

இவை போக குஜராத்திலும் ராஜஸ்தானிலும் ஹரப்பா காலகட்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட ஆயிரம் சிறு குடியிருப்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராலமான தொல்நகரங்கள் கேளா ஒலியால் அடையாளம் காணப்பட்டுள்ளன

இந்நகரங்களின் கண்டுபிப்பு மார்ட்டிமர் வீலரின் விளக்கங்களை நொறுக்கிவிட்டது. சிந்துசமவெளி நாகரீகம் என்ற பேரே பிழையானது. ஏனென்றால் மொகஞ்சதாரோ ஹரப்பா நகரங்கள் மட்டும் சிந்துநதிக்கரையில் உள்ளவை. பிற நகரங்கள் சிந்துநதிக்கரையில் இல்லை. தொல்லியல் ஆய்வுகள் லோதல் முதல் தோலாவீரா வரையிலான குஜராத் நிலப்பகுதியில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட புராதன நகரங்களைக் கண்டுபிடித்துள்ளன. இந்நகரங்கள் ஹரப்பாவின் நாகரீகத்தைப் பல ஆயிரம் சதுரகிலோமீட்டர் அகலத்துக்கு விரிவாக்கியிருக்கின்றன.

இந்நாகரீகம் தெற்கு குஜராத்தில் நர்மதா மற்றும் தப்தி நதியின் உற்பத்தியிடம் வரை விரிந்து கிடந்திருக்கிறது. தெற்கு குஜராத்தில் பரூச் மாவட்டத்தில் முனைவர் எஸ்.ஆர்.ராவ் அகழ்ந்தெடுத்த ஃபாகத்ராவ் புதைநகரம் ஹரப்பாவின் அதே காலகட்டத்தைச் சார்ந்தது. அது ஹரப்பாவில் இருந்து ஏறத்தாழ ஐநூறு கிமீ தூரத்தில் உள்ளது.

இந்நகரங்கள் பல ஆயிரம் சதுர கிலோமீட்டர் தூரத்துக்குப் பரவிக்கிடந்த மிகமிக விரிவான ஒரு தொன்மையான நாகரீகத்தைக் காட்டுகின்றன. அது இரு சிறுநகரங்களைக்கொண்ட ஒரு சிறிய நாகரீகம் அல்ல. மாறாக பிரம்மாண்டமான ஒரு இந்தியப் பண்பாட்டுவெளி. அது ஒரு போரில் அல்லது சில போர்களில் எவராலும் கைப்பற்றப்பட்டு இது அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகமே பிழையானது.

மார்ட்டிமர் வீலர் ஹரப்பாவில் கிடைத்த சில எலும்புகளில் இருந்த வெட்டுக்காயத்தழும்புகளை வைத்துத்தான் ஆரியர்கள் படையெடுத்துவந்து சிந்துசமவெளிநாகரீகத்தை அழித்தார்கள் என்று சொன்னார். இன்றைய நவீன ஆய்வுகள் அந்த வெட்டுக்காயங்கள் அந்த நபர் உயிருடனிருக்கையிலேயே ஆறிவிட்டவை என்று நிரூபித்துள்ளன.

சிந்து சமவெளி நாகரீகம் போரினால் அழிந்திருக்க நியாயமில்லை என்றால் எப்படி அழிந்திருக்கும்? பொதுவாகவே பண்டைய நாகரீகங்களைப் போர்களின் கதைகளாக விளக்குவதை இன்றைய நவீன ஆய்வாளர்கள் நிராகரித்து வருகிறார்கள். அது காலனியாதிக்க காலகட்ட நம்பிக்கை மட்டுமே. பெரும்பாலான பெரும் நாகரீகங்கள் புவியியல் காரணங்களால்தான் அழிந்திருக்கும் என்பதே இன்றைய பொதுவான கொள்கை.

ஜாரேட் டயமண்ட் அவரது பிரபலமான நூலான துப்பாக்கிகள் கிருமிகள் இரும்பு [Guns, Germs and Steel] என்னும் அய்வுப்படைப்பில் அதைப்பற்றி பேசுகிறார். புவியியல் காரணங்கள் என்பதற்குள் சூழியல் காரணங்களும் அடக்கம். எகிப்திய நாகரீகத்தின் வீழ்ச்சி என்பது கடுமையான வெயிலில் பாலைநிலத்தில் நீரைத் தேக்கி வேளாண்மை செய்ததனால் ஆவியாகிய நீரின் உப்பு மண்ணில் தங்கி மண் களர்நிலமானதனால்தான் நிகழ்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஹரப்பா முதல் லோதல் வரை விரிந்திருந்த அந்த நாகரீகமும் புவியியல் காரணங்களால் அழிந்திருக்கும் என்பதே இன்றைய கருத்து. இந்த நாகரீகங்கள் இருந்த நிலப்பகுதி இன்று வளமற்ற அரைப்பாலைநிலமாக இருப்பதனால் சூழியல் அழிவு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாமென சொல்லப்படுகிறது. மழை இல்லாமலாகியிருக்கலாம். இப்பகுதி, பூகம்பங்கள் மண்டியதாகையால் பூகம்பங்களையும் காரணமாகக் காட்டுகிறார்கள்.

இன்னொரு காரணமும் உண்டு. இந்த பெருநிலப்பகுதியில் ஓடியிருந்த சரஸ்வதி நதி மிகப்பழங்காலத்திலேயே பூகம்பத்தால் வழி அடைபட்டு நின்றுவிட்டிருந்தது. அதன் நீர் கங்கையிலும் சிந்துவிலும் செல்ல ஆரம்பித்தது. நின்றுபோன சரஸ்வதி சிறுசிறு குளங்களாக மேலும் பல ஆயிரமாண்டுக்காலம் நீடித்தது. சரஸ்வதி என்றாலே குளங்களால் ஆனவள் என்றுதான் பொருள்.

ரிக்வேதத்தில் சரஸ்வதி அந்தர்யாமியாக, கண்ணுக்குத்தெரியாத ஓட்டமாக மண்ணுக்குள் ஓடுகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே சரஸ்வதி மறைந்துவிட்டிருக்கிறது. சரஸ்வதி நதியை ஒட்டி உருவாகி வந்த இந்த நாகரீகம் நெடுங்காலம் குளங்களை நம்பி நீடித்திருக்கலாம். குளங்கள் மறைய மறைய மெல்லமெல்ல அழிந்திருக்கலா என்பதே இன்றுள்ள ஊகம்.

இன்று சிந்துசமவெளிநாகரீகம் என்று சொல்லப்படுவதில்லை. ஹரப்பன் நாகரீகம் என்ற சொல்லே புழக்கத்தில் உள்ளது. ஆய்வாளர்களில் முக்கியமான ஒரு சாரார் சிந்துசரஸ்வதி நாகரீகம் என்று சொல்கிறார்கள். சொல்புதிது இதழை நானும் நண்பர்களும் நடத்திவந்தபோது சிந்து-சரஸ்வதி நாகரீகம் பற்றி சில முக்கியமான கட்டுரைகளை வெளியிட்டோம். அதைத்தவிர தமிழ் சிற்றிதழ்களில் பெரிதாக ஏதும் எழுதப்படவில்லை.

அப்படியென்றால் ஆரிய திராவிட படையெடுப்பு? அப்படி ஒரு படையெடுப்பு நிகழ்ந்திருக்கலாமென்பதற்கு ஒரு ஆதாரம் கூட இன்றுவரை அளிக்கப்பட்டதில்லை. அது அன்றைய ஐரோப்பிய ஆய்வாளர்கள் சிலருக்கு அன்றைய தொல்லியல் சான்றுகளை விளக்குவதற்கான கொள்கையாக இருந்தது. ஓர் முன்ஊகம் மட்டும்தான் அது. அதை அன்றைய கிறித்தவ சிந்தனையாளர்களும் பிரிட்டிஷ் கல்வியாளர்களும் ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாக பிரச்சாரம் செய்து நிலைநாட்டினர். இன்று கிடைத்துள்ள தொல்லியல் தடயங்களை அந்தக்கொள்கை விளக்குவதில்லை. அதற்கு இன்னும் விரிவான கொள்கைகள் தேவைப்படுகின்றன.

ஆனால் அவ்வாறு புதியகொள்கைகளை உருவாக்கிக்கொள்ள இந்திய சிந்தனையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் உள்ள ஏராளமான ஐரோப்பிய இனவாத ஆராய்ச்சியாளர்கள் களத்தில் உள்ளனர். பெரும்பாலும் மூர்க்கமான முன்முடிவுகளுடன் இந்த ஆய்வுகள் இன்று நடத்தப்படுகின்றன

ஆரியர் திராவிடர் என இரு இனங்கள் இந்திய நிலத்தில் இருந்தனர், இன்றும் உள்ளனர் என்பதை எவ்வகையிலும் ஓர் அறிவார்ந்த கொள்கையாக ஏற்றுக்கொள்ள இன்றைய சிந்தனையாளர்களால் முடியாது. இந்திய நிலப்பகுதியில் வேளாண்மை- வணிகம் சார்ந்த பண்பாடு ஆரம்பித்தது ஹரப்பா-லோதல் நாகரீகத்துக்கு மேலும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னராக இருக்கலாம். அன்று முதல் கடைசியில் ஆப்கானியர் படையெடுப்பு வரை இந்திய நிலத்துக்குள் வெவ்வேறு மனிதக்கூட்டங்கள் வந்தபடியே இருந்தன. அவர்கள் கலந்து கலந்து உருவான ஒரு பெரும்பண்பாடு இது. இதை ஒட்டுமொத்தமாக ஆதிக்க இனம்-அடக்கப்பட்ட இனம் என இரட்டைப்படுத்துவது வெறும் பிரிவினையரசியல் மட்டுமே.

1954ல் லோதல் பற்றிய முதல் தடயம் கிடைத்தது. 1955இல் பெப்ருவரி 13 ஆம் தேதி லோதல் எஸ்.ஆர்.ராவ் தலைமையிலான குழுவால் முதல்முறையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. ஐந்தாண்டுக்கால ஆராய்ச்சிக்குப்பின் 1960 இல் இந்தியத் தொல்லியல் துறை அந்நகரைப் பாதுகாக்க ஓர் அமைப்பை உருவாக்கியது. அதைப்பற்றிய ஆய்வேடுகள் வெளியிடப்பட்டன. ஆனால் இன்னமும்கூட நம் கல்வித்துறை இந்த புதைநகரங்களைப்பற்றிய ஆய்வுகளுக்கும் பாடங்களுக்கும் பெரிய அளவில் இடமளிக்கவில்லை.

கிமு இருபத்துநான்காம் நூற்றாண்டைச்சேர்ந்த தொல்நகரம் இது. லோதல் என்றால் மரணமேடு என்று குஜராத்தி மொழியில் பொருள். மொகஞ்சதாரோவுக்கு சிந்தி மொழியில் அதே பொருள்தான். இன்று ஒரு மேடாக இருக்கும் இந்த இடம் வரை சமீபகாலம் வரை கடல் இருந்திருக்கிறது. லோதல் நெடுங்காலம் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது.

லோதலில் ஒரு அகழ்வைப்பகம் உள்ளது. லோதலில் எடுக்கப்பட்ட முக்கியமான பலபொருட்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. லோதல் கல்மணிகளைத் தீட்டி மாலைகளாக ஆக்கி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக இருந்துள்ளது. லோதலில் ஒரு கல்மணித் தொழிற்சாலையே இருந்துள்ளது. அழகிய கல்மணிமாலைகளைப் பார்த்தோம். சங்கு, சிப்பி முதலியவற்றால் ஆன நகைகள். வெண்கல நகைகள். ஆச்சரியமாக சுடுமண்ணால் செய்யப்பட்ட நகைகள். சுடுமண் கைவளைகளையும் நெக்லஸ்களையும் பார்க்கையில் அவற்றை அணிந்த பெண்களைக் கற்பனையில் கொண்டுவரவே முடியவில்லை.

லோதலின் ஆச்சரியங்களில் முதலானது அங்குள்ள நுட்பமான சுடுமண் முத்திரைகளும் எழுத்துக்களும். பாடநூல்களில் மட்டுமே கண்ட சிந்துசமவெளி எழுத்துக்களை நேரில் கான்பது பிரமிப்பூட்டும் அனுபவம். சுடுமண் முத்திரைகள் மிகமிக நுட்பமானவை, துல்லியமானவை. அவை குடைவானவை. களிமண்ணில் அழுத்தினால் புடைப்புச் சித்திரமும் எழுத்துக்களும் உருவாகும். மிகச்சிறிய முத்திரைகள் கூடத் துல்லியமான கைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான முத்திரைகளில் சிந்துவெளிக்காளையும் ஒற்றைக்கொம்பு மிருகமும் இருந்தன.

லோதல் வெண்கலக்காலகட்டத்தைச் சேர்ந்தது. அம்புநுனிகள், கத்திகள் மட்டும் அல்ல, அரங்கள் கூடச் செம்பு மற்றும் வெண்கலம்தான். ஏராளமான கல்லாயுதங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பலவகையான வீட்டு உபயோகப்பொருட்கள். சாப்பிடுவதற்கான சட்டிகள் சமீபகாலமாகக் கூட இந்தியாவில் புழக்கத்தில் இருந்தவை. கோருவைகள் என்று சொல்வோம் எங்களூரில். பெரிய பானைகள். மண் கரண்டிகள்.

அகழ்வைப்பகத்தில் சங்குகளை வெட்டிச்செய்த அகப்பைகளைப் பார்த்தோம். அவை உயர்குடிகளுக்குரியவையாக இருக்கலாம். இங்குள்ள நாகரீகம் எத்தனை உயர்ந்தது என்பதைக் காட்டும் சான்று இங்குள்ள பொம்மைகள். தலை தனியாக ஆடும் பொம்மைகள். பலவகையான மிருகங்களின் பொம்மைகள். காண்டாமிருகம், எருது, பன்றி இருக்கிறது. ஆனால் ஒட்டகம் இல்லை. அத்துடன் யூனிகார்ன் என மேலைமரபில் சொல்லப்படும் விசித்திர மிருகத்தின் பல சிலைகள் உள்ளன.

ஆம், குதிரை இருக்கிறது – குதிரை என்றே எழுதி வைத்திருக்கிறார்கள். குதிரையின் தலை தனியாக செய்யப்பட்ட சிலையும் உள்ளது. லோதல் சிந்துவெளி நகரங்களின் அதே நாகரீகத்தைச் சேர்ந்தது எனப் புதைபொருளாய்வுகள் ஐயம் திரிபற நிரூபித்துள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஹரப்பாவுக்கு முந்தைய நகரம் இது. ஹரப்பா அழிந்த பின்னரும் ஐநூறு வருடம் நீடித்தது என்கிறார்கள்.

லோதல் நகருக்குள் நடந்தோம். உறுதியான சுட்டசெங்கற்களால் ஆன அடித்தளங்கள். சுவர்கள். அவை நாலாயிரத்தைநூறு வருடம் முந்தையவை எனக் கற்பனை செய்யவே பிரமிப்பாக இருந்தது. உயர்ந்த நகர்மையம். அங்கே பெரிய மாளிகைகளுக்கான அடித்தளங்கள். சுட்டசெங்கல்லால் ஆன குளியலறைகள். அங்கிருந்து நீர் வழிந்தோடும் கச்சிதமான சாக்கடை அமைப்புகள். நகர் நடுவே சதுக்கபீடங்கள்.

லோதலின் முக்கியமான அமைப்பு என்பது அங்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய துறைமுகக்குளம்தான். ஒரு பெரிய படகுத்துறை இது. அறுபதடி நீளமான படகுகளைக்கூட லோதல் மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் ஏறி நெடுந்தூர கடற் பயணங்களைச் செய்திருக்கிறார்கள். சுமேரியாவுடன் வணிகம் செய்திருக்கிறார்கள்.

அந்தப்படகுகள் கடலில் இருந்து நீரோடைகள் வழியாக ஏறி நகருக்குள் வந்து அந்தத் துறைக்கு வந்து சேரும். ஏறுகடல் ஓதம் அதற்கு உதவும். இறங்குகடலோதத்தில் படகுகள் மீண்டும் கடலுக்குச் செல்லும். சிறிய படகுகள், கரைப் பகுதி ஊர்களில் இருந்து சபர்மதி ஆறுவழியாக இந்தத் துறைக்கு வந்து சேர வாய்க்கால்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் கடல் மிக அருகே இருந்தது, கடல்பாசிகளின் புதைவடிவத் தடம் வழியாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் குளம் அப்படியே அகழ்ந்து எடுக்கப்பட்டு நீர் நிறைந்து கிடக்கிறது. பெரிய செங்கல் விளிம்புகள் கச்சிதமாக நூல் பிடிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன. பொதுவாக எல்லா செங்கல் கட்டுமானங்களும் மிகமிகத் தேர்ந்த கொத்தனார்களால் கட்டப்பட்டவை. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் செங்கல் கருங்கல் போன்ற இறுக்கத்துடன் உள்ளது. நகருக்கு அப்பால் பாசிமணி தொழிற்சாலை. தொழிலாளர் குடியிருப்புகள், அப்பால் ஓர் இடுகாடு. லோதல் மக்கள் சடலங்களைப் புதைத்தவர்கள்.

லோதல் பெருவெள்ளத்தால் பயனிழந்துபோய்க் கைவிடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். லோதலின் முக்கியமான புதிர்களில் ஒன்று, இங்குள்ள வேள்வி பீடங்கள். நகரின் நடுவே அவை உள்ளன. அவை சமூகவேள்விச்சடங்குகளுக்குரியவை. அவை வேள்வி பீடங்கள் என்றால் வழக்கமான ஆரிய திராவிடக் கோட்பாட்டில் மேலும் அடி விழுகிறது. சிந்து சமவெளி மக்களும் வேள்விகளைச் செய்திருந்தார்களா என்ன?

காலம் சட்டென்று நீண்டு வெளிறிவிட்டது. நாட்களுக்கும் வருடங்களுக்கும் எந்த அர்த்தமும் இல்லை. கட்டைவிரலும் சுட்டுவிரலும் தொட்டுக்கொள்வதுபோல இரு யுகங்கள் சந்திக்கின்றன. நான் இதன் மேல் நடக்கும்போது, மண்ணுக்கு அடியில் உள்ள என் மூதாதையின் எலும்புகள் என்னை அறிகின்றன.

மேலும்…

படங்கள் இங்கே

முந்தைய கட்டுரைகலையறிதல்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 16 – பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா