அருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட்

ஜுன்னார் நகரை நகர் என்று சொல்ல முடியாது. நம்முடைய தென்காசி அளவுள்ள ஊர். நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு எட்டுப் பேருக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் சொன்னார்கள். எங்கள் பயணத்தைப்பற்றி சொன்னதும் ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்கள். கல்லும் கரையும் இந்த கானத்தை எதிர்காலத்திற்கும் சேர்த்து வைக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

எப்போதும்நான் அறைக்குள் வந்ததுமே முதலில் குளித்துவிடுவேன். உடனே அமர்ந்து பயணக்குறிப்புகளை எழுதுவேன். பழங்கள் உண்பேன். உடனே தூக்கம். அனேகமாக தினமும் பதினொரு மணிக்குத் தூங்கிக் காலை ஐந்து மணிக்கு விழித்தோம். தேவையான அளவுக்கு மட்டுமே தூங்குவதனால் அனைவரும் படுத்ததுமே தூங்கிவிடுவோம். பயணங்களில் நல்ல தூக்கம் அமைந்தாலே நாள் அழகானதாக ஆகிவிடுகிறது.

காலையில் விடுதிக்காரர் வந்து எங்களைவழியனுப்பினார். அவரே அருகே லென்யாத்ரி குகைகள் இருப்பதைச் சொன்னார். லென்யாத்ரியை விசாரித்துச் சென்றோம். காலையில் குளிரும் இளவெளிச்சமும் விரிந்த கிராமங்கள் வழியாகச் செல்வது எப்போதுமே மனம் சிறகடித்தெழும் அனுபவம்.

குகாடி ஆற்றின் கரையில் அமைந்துள்ள லென்யாத்ரி குகைகள் ஒரு காலத்தில் பௌத்த குகைகளாக இருந்திருக்கின்றன. சில குகைகள் சமணக் குகைகளாக இருந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றன.   இப்பகுதியில் உள்ள குகைக் குடைவுக்கோயில்களிலேயே இங்குள்ள குகைகளின் எண்ணிக்கைதான் அதிகம். கீழே நின்று பார்க்கையில் மலையின் மடிப்பு முழுக்கத் தேனடைகளாகத் தெரிந்தன குகைகள். சிறப்பான படிகள் கட்டப்பட்டிருந்தன. இங்கும் மக்கள் நிறைய வந்து போகும் தடம் தெரிந்து. துணிப்பந்தல். ஒலிபெருக்கி பாடல் பிளிறும் கடைகள்.

மேலே சென்றோம். குன்றின் மீது உள்ள குகைகளில் மையக்குகை ஐம்பதடி அகலமும் அறுபதடி நீளமும் கொண்ட ஒற்றைக்கல்லில் குடையப்பட்டது. இது இன்று இந்துக்கோயில். இங்குள்ள கருவறைச் சிற்பத்துக்கு ஒரு சிறப்புள்ளது. அது பின்பக்கமாகத் திரும்பியிருக்கிறது. அது சுயம்பு சிலை என்கிறார்கள் அதை வழிபடும் கோலிகள். அதன்மேல் செந்நிறமாகக் குங்குமமும் சாந்தும் பூசப்பட்டுள்ளது. அது என்ன என்று கண்டுபிடிக்க முடிந்ததில்லை.

லென்யாத்ரி குகைகளின் உள்ளே பலவகையான குறியீடுகளும் எழுத்துக்களும் செதுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்றும் இன்றுவரை ஆய்வாளர்கள் அறிய முடியவில்லை. ஏதாவது குறிமொழியா அல்லது பழங்குடிமொழியா என தெரியவில்லை.

லென்யாதிரி கிரிஜாத்மகா என்றும் அழைக்கப்படுகிறது.மலைகளின் அரசி. குன்றுக்குமேலே செல்ல மேலும் 283 படிகள் ஏறவேண்டும். குறுகலான ஆபத்தான படிகள் அவை. இங்கே ஏராளமான குரங்குகள் உள்ளன. இப்படிகளில் ஏறும்போது குரங்குகள் கொஞ்சம் தாக்கவந்தால்கூட நிலைதடுமாறி ஆழமான பாறைமடிப்புக்குள் விழவேண்டியதுதான். 

இக்குகைகள் அனைத்திலும் உள்ள அமைப்பு மிகப்பெரிய நீர்த்தேக்கங்கள். அருகே உள்ள குக்கடி ஆற்றின் அருவியில் இருந்து உள்ளே பாறைஇடுக்கு வழியாக ஊறிவரும் நீரைப் பெரிய பிலங்களிலும் செயற்கையாக வெட்டப்பட்ட நீர்த்தொட்டிகளிலும் சேமிக்கிறார்கள். அவை அன்று குடிநீர்த் தேக்கங்களாக இருந்திருக்கலாம். மேலே இருந்த கல்வி
நகருக்கான தேவைகள் அந்த தொட்டிகளாலேயே தீர்க்கபப்ட்டிருக்கின்றன

லென்யாத்ரி குடைவரைக்கோயில்களை சுற்றிபபர்த்துக்கொண்டு வந்தோம். மலைகளின் துளைகள். அல்லது கங்காருவின் பைகள். இன்று மலைக்குடைவே இல்லாமலாகிவிட்டது. ஒருகாலத்தில் நாம் கட்டும் கட்டிடங்கள் அனைத்தும் அழியும். அப்போதும் இக்குடைவுக்குகைகள் எஞ்சியிருக்கும்

லென்யாத்ரியில் இருந்து நானேகட் கிளம்பினோம். சென்றுசேர மூன்று மணி நேரமாகியது. மிக மோசமான ஜல்லி பரவிய சாலை. வழிகேட்டபோது ஒருவர் வந்து தன்னை ஏற்றிக்கொண்டு செல்லும்படி கோரினார். அந்தச்சாலையில் எந்த வண்டியை எதிர்பார்த்து அவர் நின்றிருந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. ஏற்றிக்கொண்டோம். மராட்டி பேசுபவர். காந்திகுல்லாய், பைஜாமா ஜிப்பா அணிந்த மெல்லிய மனிதர். 

நாங்கள் கிளம்பிப் பத்துநாளாகிறது. இன்றுவரை சந்தித்த அத்தனை மனிதர்களிடமும் நட்பார்ந்த மனநிலையை, உபசரிப்பை, எதிர்பார்ப்பில்லாத அன்பை மட்டுமே கண்டோம். முற்றிலும் அன்னியர்களைக் கண்டதும் இந்த மனிதர்களின் முகம் மலர்வது மனநிறைவளிப்பது. எத்தனையோ பேர் வழிசொன்னார்கள், உணவளித்தார்கள். நான் மட்டும் தனித்துப் பயணம் செய்து வந்து இதைச்சொன்னால் கற்பனை என்றே நம்மவர் சொல்வார்கள். நண்பர்கள் அதை வியந்து வியந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். விதிவிலக்கான அனுபவம் பெல்காம் ராமகிருஷ்ண மடத்தில் மட்டும்தான்.

இப்பயணக்குறிப்புகளில் ராமகிருஷ்ண மடம் பற்றி எழுதியிருந்ததற்கு சில எதிர்வினைகள் வந்தன. அவர்கள் எவருமே நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே சரி. மிகமிகக் குறுகிய சுயநல வட்டத்துக்குள் வாழ்ந்து வேறொன்றும் அறியாத நடுத்தர வர்க்க மனிதர்கள். எந்த அன்னியனைப் பார்த்தாலும் அவனால் என்னென்ன தீங்குகள் நிகழக்கூடும் என்று மட்டுமே எண்ணக் கூடியவர்கள். ராமகிருஷ்ண மடம் எப்படி அன்னியர்களை நம்ப முடியும், அன்னியர்கள் குடித்துக் கூத்தடித்தால், இல்லை குண்டு வைத்தால் என்ன செய்வது என்றெல்லாம் கேள்விகள். அந்தக் கேள்விகளே எழாத ஒரு மனிதாபிமான நிலையை நான் உத்தேசிக்கிறேன். அதுவே இந்தியாவின் ஆன்மா.

அந்த ஆன்மா இந்த எளிய மக்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. முற்றிலும் அன்னியர், மொழியே தெரியாதவர்கள் வந்து கேட்கும்போது எதை நம்பி வழி சொல்கிறார்கள்? எதை நம்பிக் கூட்டிச்சென்று காட்டுகிறார்கள்? அந்த நம்பிக்கையே இந்த தேசம். காவியணிந்து கான்கிரீட் கோபுரத்தில் அமர்ந்திருக்கும் குமாஸ்தாவுக்கும் சரி, அதே மனநிலையில் தன் திண்ணையில் சகமனிதனை வெறுத்து ஐயப்பட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் மனிதர்களுக்கும் சரி, இது புரியாது. இந்த ஆன்மாக்களுக்காகத்தான் ஆங்கில இதழாளர்கள் இந்திய எதிர்ப்புக்கட்டுரைகளை எழுதித்தள்ளுகிறார்கள்.

நானேகட் செல்லும் வழியில் இருந்த காட்கர் கிராமத்தில் சகபயணியை இறக்கிவிட்டு விட்டுச் சென்றோம். செல்லும்வழியில் மேலே செல்லத் தெரியாமல் நின்றோம். ஒரு வீடு இருந்தது, உள்ளே யாருமே இல்லை. பூட்டப்படவும் இல்லை. வினோத் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தார்.  அதுதானா பாதை என்று தெரியவில்லை. ஒருவரை தூரத்தில் கண்டு அருகே போய் விசாரித்தோம். விரிவாக மராட்டியில் சொன்னார். எங்களில் கிருஷ்ணனும் முத்துக்கிருஷ்ணனும் ஓரளவு இந்தி பேசுவார்கள். அதுதான் சாலை என்பதை உறுதி செய்துகொண்டோம்.  

அவர் எங்களை உள்ளே வந்து சாய் சாப்பிட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு வீடே இல்லை. அவரே கட்டிய தொழுவத்துக்குள் நாலைந்து காளைகள், பசுக்கள், கன்றுக்குட்டிகள் நின்றன. அவர் தன் வீட்டை இடித்துத் தானே கட்டிக்கொண்டிருந்தார். அருகே சின்னக் கூடாரம் ஒன்றைக் கைக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு கட்டியிருந்தார். ‘மலை ஏறிவிட்டு வருகிறோம், சாப்பாடு தயார் செய்து வையுங்கள்’ என்று கேட்டுக்கொண்டோம். இருநூறு ரூபாய் பணமும் கொடுத்தோம். 

நானேகட் எங்கிருக்கிறது என தெரியவில்லை. கொஞ்சதூரம் சென்றால் சாலை ஒரு மலையருகே முட்டிநின்றது. மலையின் நடுவே ஒரு இடுக்கு தெரிந்தது. இறங்கிப்பார்த்தால் பெரும் வியப்பு. எட்டடி அகலமான ஒரு சாலை மலையிடுக்கு வழியாக சுழன்று சுழன்று இறங்கி பல கிலோமீட்டர் ஆழத்தில் கிடந்த சமவெளிநோக்கிச் சென்றது. பழங்காலத்தில் சரிவான கல்படிகளாக இருந்திருக்கலாம். கற்கள் இளகிக் குவிந்து கிடந்தன. மொத்தம் பதினாறு கிலோமீட்டர். இதுதான் உண்மையில் சஹ்யாத்ரி மலையின் வாசல்.

இரண்டாயிரம் வருடத்துக்கு மேல் பழைமை கொண்ட கணவாய்ப்பாதை இது. சாதவாகனர் காலகட்டத்தில் இந்தப் பாதை கல்யாணுக்குச் செல்லும் முக்கியமான பாதையாக இருந்தது எனக் கல்வெட்டுகள் சொல்கின்றன. நான் என்றால் நாணயம், கட் என்றால் வழி. இது ஒரு சுங்கமுனையாக இருந்திருக்கிறது. இங்குள்ள குகைகளில் கிடைக்கும் கல்வெட்டுகள் மௌரியர் காலத்திலேயே இந்தப் பாதை பயன்பாட்டில் இருந்ததாகச் சுட்டுகின்றன.

வட இந்தியாவில் இருந்து தென்னகத்துக்கு வரும் வழிகளில் இது முக்கியமானதாக இருந்திருக்கலாம். ஏனென்றால் இதற்குக் கீழே உள்ள பகுதிகள் எல்லாமே வளமானவை. நீர் வசதி கொண்டவை. அன்றெல்லாம் குறைந்தது பத்து கிலோமீட்டர் தூரத்தில் உணவும் நீரும் இல்லையேல் பயணம் செய்ய முடியாது.

நேர்மாறாக, மத்தியப்பிரதேசம் வழியாகத் தெக்காணத்துக்கு இறங்கும் பாதை அன்று வறண்ட ஆளற்ற நிலம் வழியாக வரக்கூடியதாக இருந்திருக்கும். தண்டகாரண்யக் கொடுங்காடுகளும் அதற்குப்பின் பிரம்மாண்டமான அரைப்பாலைவெளியுமாக இருந்த அந்த வழி மிகப்பிற்காலத்திலேயே பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது . வழியெங்கும் சத்திரங்களும் அருகே குளங்களும் அமைந்தபின்னர். அதற்கு முன்னால் இந்தப்பாதையே வணிகர்களுக்குரியது. வழியெங்கும் வணிகர்களுக்கான கிராமங்களும் பண்டகசாலைகளும் இருந்திருக்கின்றன.

சாதவாகனர்களின் வலுவான அரசியான நாகனிகா இந்தப் பாதையை விரிவாக்கம் செய்திருக்கிறாள் எனக் கல்வெட்டுகள் சொல்கின்றன. இவள் கிமு 180 முதல் 170 வரை ஆண்ட சதகர்ணி என்ற மன்னரின் விதவை. இந்தியாவின் மையநிலத்தை வணிகம் மூலமும் வேளாண்மை மூலமும் நாகரீகத்துக்குக் கொண்டுவந்ததில் முக்கியமான பங்களிப்பாற்றியவள் இந்த அரசி. இந்தியாவின் பேரரசிகளில் இவளுக்கே முதலிடம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வதுண்டு.

நாயனிகா என்றும் அழைக்கப்பட்ட இந்த அரசி, மராத்தாவின் சிற்றரசர் ஒருவரின் மகள். சதகர்ணி சுங்க வம்சத்தைச்சேர்ந்த மகத மன்னர் புஷ்யமித்ர சுங்கருக்கும் கலிங்கத்தை ஆண்ட காரவேலருக்கும் சமகாலத்தவர். புஷ்யமித்ர சுங்கரைப்பற்றிய முக்கியமான பல கல்வெட்டுகள் இந்தப் பாதையில் கிடைக்கின்றன. இவர் மால்வா, அனுபா, நர்மதா சமவெளி மற்றும் விதர்ப்பத்தை வென்றார் என்றும் ஓர் அஸ்வமேத யாகத்தையும், ஓர் ராஜசூய யாகத்தையும் செய்தார் என்று தெரிகிறது.

அஸ்வமேதம் செய்தமையால் தன்னை சாம்ராட் என்றும் தென்னகத்தை வென்றமையால் தன்னை தட்சிணபதி என்றும் அழைத்துக்கொண்டார். அவர் இறக்கையில் வேதஸ்ரீ என்ற இளவரசன் குழந்தையாக இருந்தான். ஆகவே அவரது மனைவி நாயனிகா இருபதாண்டுக்காலம் நாட்டை வெற்றிகரமாக ஆண்டார்.

நாயனிகா இப்பகுதியெங்கும் வளர்ச்சிப்பணிகளுக்குப் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்தார்.   இங்குள்ள கல்வெட்டு நாயனிகாவின் முழுக் குடும்பத்தையும் குறிப்பிடுகிறது என்கிறார்கள்.

குக்காடி ஆறு இங்கே ஓடுகிறது. இங்கே இன்று அதிக மனிதவாசமில்லை. பெரும்பாலும் அடர்காடுகள்தான். வைஷாகெரே என்ற கிராமம் கொங்கணப் பக்கத்திலும் காட்கர் என்ற கிராமம் மகாராஷ்டிரப் பக்கத்திலும் இந்தக் கணவாய்க்கு இருபக்கத்திலும் காணப்படுகின்றன.

நாங்கள் காட்கரில் இருந்து கணவாய் வழியாக இறங்க ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி உயரமான செங்குத்தான ஒற்றைக்கருங்கல் மலைகள் இருபக்கமும். நடுவே அந்த சிறிய கணவாய்ப்பாதை பிரம்மாண்டமான படிக்கட்டு போல சுழன்று சுழன்று இறங்கியது. கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட அந்தக் கால அமைப்பு இன்றும் அப்படியே உள்ளது.

இந்தப் படிகளில் வெயிலே பட்டிருக்காது.  ஏனென்றால், கிழக்கும் மேற்கும் இரு செங்குத்தான பாறைமலைகளும் வெயிலை மறைக்கின்றன. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி இறங்குகிறது இந்தப் பாதை. தென்னிந்தியாவின் தக்காணப் பீடபூமியின் விளிம்பு. வட இந்தியப்பெருநிலம் நோக்கி இரண்டாயிரத்தைநூறு அடி செங்குத்தாக இறங்கிச் செல்வதென்பது ஒரு மெய்சிலிர்க்கச்செய்யும் அனுபவம். கிட்டத்தட்ட எட்டு கிமீ அளவுக்கு இறங்கிச் சென்றோம். அதன் பின் கீழே விரிந்த நிலத்தைப்பார்த்துக் கொஞ்சநேரம் அமர்ந்திருந்தோம். பின்பு மேலேற ஆரம்பித்தோம்.

இன்றையப் பொழுதை முழுக்க விழுங்கிய மலையேற்றம். மூச்சுவாங்க வியர்த்து களைத்து அமர்ந்து அமர்ந்து மேலேறி வந்தோம். கிட்டத்தட்ட பூட்டான் புலிக்குகை விகாரத்துக்கு ஏறிய அனுபவத்துக்கு நிகர்.  மேலே வந்து அமர்ந்து கீழே விரிந்துகிடந்த நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நூற்றாண்டுகள் தாண்டிப் பின்னால் சென்றது போல. சாதவாகனர் காலகட்டத்தில் அவ்வழியாகச் சென்ற வணிகர்களின் காலடி ஒலிகளைக் கேட்க முடியும் போல…

மேலே வந்து எழுந்து உயர்ந்திருந்த மலைமேல் ஏறினோம். காய்ந்த புல்லால் ஆன மலைச்சரிவு பொன்வேய்ந்த கோபுரம் போலிருந்தது. மேலே மலையுச்சிவரை அங்கிருந்து காணும் காட்சியை ஊகிக்க முடிந்திருக்கவில்லை. அந்தக் கணவாய்க்கு இருபக்கமும் மலை மிகச்செங்குத்தாகக் கீழிறங்கிச்சென்றது. அமெரிக்காவின் கிராண்ட் கான்யன் மலைவிளிம்பில் நின்று கீழே பார்ப்பது போல் இருந்தது. இந்தியாவில் எங்கும் இப்படி ஒரு கால்நடுங்கச்செய்யும் செங்குத்தான சரிவை நான் கண்டதில்லை, இமயமலைகளில் கூட. சஹ்யாத்ரியின் விளிம்பு.

நாங்கள் திரும்பிவந்தபோது ஷிண்டே சாப்பிட அழைத்தார். அவரது கூடாரத்துக்கு வெளியே வயலில் சாக்கையும் கம்பளியையும் விரித்து அமரச்செய்து சூடான சப்பாத்தி, பருப்புக்குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் பரிமாறினார். அவரே தன் கையால் பரிந்து வற்புறுத்திப் பரிமாறினார். சோறு வந்தது. உளுந்து சேர்த்து வடிக்கப்பட்ட சுவையான சோறு. போதும் என மறுத்த ஓட்டுநரை ஷிண்டே ஓர் அதட்டல் போட்டு சாப்பிடச் செய்தார். சட்டென்று ஓர் மன எழுச்சி என் கண்களைக் கசியச்செய்தது.

நான் சீனுவிடம் கேட்டேன், சிங்கப்பூரில் நான் ஆற்றிய உரையை வாசித்திருக்கிறீர்களா என. நானும் அதையேதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் சார் என்றார் அவர்.   நான் இந்தியா என்று ஆரம்பித்துப் பேசும்போது என்னிடம் பேசவருபவர்கள் ஒரு அரசியல் கட்டமைப்பை, ஒரு வரைபடத்தை இந்தியா என எண்ணிப் பேசவருகிறார்கள். இந்த தேசத்து நிலப்பரப்பில் அலைய ஆரம்பித்து முப்பதாண்டுகளாகின்றன. நான் இந்தியா என நினைப்பது எனக்கு அன்னமிட்ட ஆயிரக்கணக்கான கைகளை. நான் மிக அபூர்வமாகவே பட்டினி கிடந்திருக்கிறேன். அனேகமாக எங்கும் இல்லறத்தாரால் கனிவுடன் மட்டுமே உணவிடப்பட்டிருக்கிறேன். எனக்கு என் தேசம் மனித உள்ளங்களில் குடியிருக்கும் அன்னபூரணிதான்.

 

இன்று நான் எழுதுவதை வாசிப்பவர்கள் இருக்கும் தமிழிலும் மலையாளத்திலும் என் உணர்வை, என் தரிசனத்தைப் புரிந்து கொள்ளும் திராணியுள்ளவர்களே குறைந்துவிட்டார்கள். வெற்று லௌகீகமும் அதற்கான நியாயங்களும் மட்டும் இங்கே ஒவ்வொரு உள்ளத்திலும் நிறைந்துள்ளன. இங்குள்ள அரசியலும் வெறும் உலகியல் வெறியின் அரசியலே, எந்த இலட்சியவாதத்தின் அரசியலும் அல்ல. இங்கே எல்லா விவாதங்களிலும் ஒலிப்பது அந்த ஆன்மா வறண்ட அரசியல் தர்க்கங்களே. இடதுசாரிகளும் இந்துத்துவர்களும் ஒரே உலகியல் அற்பத்தனத்தையே இரு மாறுபட்ட தரப்புகளாக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் எப்படி ஒரு வறட்டு மார்க்ஸியரால் இந்த ஆன்மீகத்தை, விவேகானந்தரும், நாராயணகுருவும், இன்றும் இந்த மண்ணில் அலையும் பல்லாயிரம் துறவிகளும் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமுகம்கொண்ட ஆன்மீகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லையோ அப்படித்தான் வெறும் மத அமைப்பை, கட்சியமைப்பை வெறித்தனமகா நம்பி தங்கள் சடங்குகளையும் ஆசாரங்களையும் அனைவருக்குமென ஒற்றைப்படையாக வலியுறுத்தும் வலதுசாரிகளாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் ஷிண்டேக்களை விளைய வைக்கும் வலிமை இந்த மண்ணுக்கு எப்போதுமிருக்கும் என்றே நினைக்கிறேன். அவரது மெலிந்த உறுதியான கரங்களைப் பற்றிக்கொண்டு என் நன்றியை, வணக்கத்தை, நெகிழ்ச்சியை சொன்னேன். அவரைப் போன்றவர்களிடம் இருந்து அண்ணா ஹசாரேக்கள் உருவாவார்கள். நம்மிடம் அண்ணாவை ஏளனம் செய்யும், நாறும் நாக்குகள் மட்டுமே பிறக்கும். ஷிண்டே என் தேசத்தின் முகம்.

மேலும்…

சிங்கப்பூர் உரை

படங்கள் இங்கே

 

 

 

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 9 – கார்லே, ஃபாஜா, ஃபெட்சா
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா