குயில்:கடிதங்கள்

ஜெமோ சார்,

உங்கள் குயில் கட்டுரையைப் படித்தேன்

.

அக்கூ பட்சி என்று முன்பு பாட்டி சொல்லுவார்

. அது வேறு என்று நினைக்கிறேன். வசந்தம் வந்தால் குயில் கூவ வேண்டும்.

எங்கள் வீட்டுப் பழைய விளாமரத்தில் குயில்கள் நிறைய இருந்தன

.காலை நான்கு மணியிலிர்ந்தே கூவ ஆரம்பிக்கும்.

இப்போது மரமில்லை

. ஊரில் மரங்கள் மறைந்து வீடுகள் வந்துவிட்டன. எப்போதாவது குயிலைக் கேட்கும்போது சோகமாக இருக்கும். உங்கள் ஊரிலாவது குயிகள் கூவித் துயிலெழுப்பட்டும்.

பெண் குயில் பதில் கொடுக்காது என்று எனக்கு இது நாள் வரை தெரியாது




அன்புடன்,
ரேவதி.
http://naachiyaar.blogspot.com

 

அன்புள்ள ரேவதி,

 

பெண்குயில் அபூர்வமாக கூவும் என்று அஜிதன் சொல்கிறான்.பானால் அது குயில்நாதம் அல்ல. பெரும்பாலான சமயங்களில் அது வாய்கொப்புளிக்கும் ஓசையை அளிக்கும். சிலசமயம் காகம் அக்காக்குருவி போன்ற பிற பறவைகளின் ஓசையை திருப்பி ஒலிக்கும் என்பது பயலின் நிபுணர் கருத்து 

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

குயிலின் குரலைப்பறிய உங்கள் கட்டுரை மனதில் ஏக்கத்தை உருவாக்கியது. இங்கே நான் உட்பட பலர் செல்போனில் குயிலின் குரலை வைத்திருக்கிறார்கள். அதுதான் அடிக்கடி காதில் விழுகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார், அதென்ன கதவு க்ரீச்சிடுவதுபோல ஒரு சத்தம் வைத்திருக்கிறாய் என்று. குயிலின் சத்தம் என்று சொன்னேன். அவருக்கு ஆச்சரியம் ஏன் பறவைச்சத்தத்தை வைக்கவேண்டும் என்று. சொல்லிப்புரியவைக்க முடியவில்லை. நண்பர் வைத்திருக்கும் ஒலி பீரை கோப்பையில் ஊற்றும் ஓசை

 

சரவணன்

 

 

அன்புள்ள ஜெ.,

குயில் குறித்த தங்கள் கட்டுரை படித்தேன்… இதுவரை நானும் குயிலைப் பார்த்த நினைவு எதுவுமில்லை. சென்னை வந்த பிறகு குயிலின் குரல் கூடக் கேட்பதில்லை.

சின்ன வயதில் எங்கள் பாட்டி அக்கா குருவி என்று ஒரு கதை சொல்வதுண்டு. திருச்செந்தூர் திருவிழாவுக்குப் போன அக்கா மற்றும் தங்கை குருவிகளில் தங்கை குருவியைத் தொலைத்த அக்கா குருவி இன்னும் விடாமல் தங்கையைத் தேடிக் கொண்டிருப்பதாக அமைந்த கதை. எனக்குக் காகத்தின் குரல் ஏக்கத்தின் எதிரொலிப்பாக சில சமயங்களில் தோன்றுவதுண்டு. எதையாவது எண்ணி ஏங்கி அலையும் மனித மனம், இயல்பாகவே பறவைகளை ஏக்கத்தின் உருவாகக் காண்கிறது போலும்.

ஆனால் ஒன்று… குயிலின் குரல் இனிமையா இல்லையா என்பதில் அறிவாளிகளுக்கு வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம். குயிலின் ஓசையோடு பிறந்து,வாழ்ந்து மடியும் நம் நாட்டுப்புறக் கதைகளில் அந்த சந்தேகம் இருப்பதேயில்லை. குயிலின் ஓசை கேட்டு, சரஸ்வதியே வீணையை வெட்கிக் கீழே வைத்ததாக ஒரு கதையும் என் பாட்டி சொன்ன கதைகளில் அடக்கம்.

அன்புடன்
ரத்தன் 

 

 

அன்புள்ள ரத்தன்

 

அக்காக்குருவி வேறு. அதைத்தான் இங்கே இன்டியன் குக்கூ என்கிறார்கள். குயில் வேறு. ஆனால் நம் கவிஞர்களுக்கு குயிலைப்பற்றிய ஞானம் குறைவுதான். புள்ளிக்குயிலே பாடுவாய் என்றெல்லாம் கவிஞர்கள் எழுதியிருக்கிறார்காள். புள்ளிக்குயில் குழறுமே ஒழிய பாடாதாம்

 

ஜெ

 

 

பறக்கும் புல்லாங்குழல்

முந்தைய கட்டுரைகுடி.கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருவண்ணாமலை