தி.க.சி

 

மார்ச் முப்பது அன்று திருநெல்வேலி போகவேண்டிய வேலை. அதிகாலை நான்குமணிக்கெல்லாம் எழுந்து சட்டையை இஸ்திரி போட்டு குளித்து கிளம்பினேன். முந்தின நாள் தூங்கவே இரண்டுமணி ஆகியிருந்தது. ஆகவே நல்ல தூக்கக் கலக்கம். இளம்குளிர் நிறைந்த காலையில் நடந்து சென்றபோது இரண்டு தெருநாய்கள் எதிரே வந்தன. ஒன்று யாரு?” என்றதும் இன்னொன்று சும்மாரு, தெரிஞ்சவர்தான்என்றது. முதல் நாய் என்ன இந்நேரத்திலே…என்று முனகியபடி என்னை கூர்ந்து நோக்கியது. நாகர்கோயில் செல்லும் பஸ்ஸில் ஏறி வடசேரி பேருந்துநிலையத்தில் இறங்கினேன். திருநெல்வேலி பேருந்தில் அமர்ந்ததுமே தூக்கம்.

 

நடுவே அரைத்தூக்கத்திலேயே டிக்கெட் எடுத்திருக்கிறேன். நெல்லை பேருந்துநிலையத்துக்கு வந்தபோது ஆறரை மணிதான் ஆகியிருந்தது. அங்கே இருந்து பேருந்தில் ஏறி அரவிந்த் ட்ரஸ்ட் கண் மருத்துவமனைக்குப் போனேன். நான் கண் பரிசோதனைசெய்து கண்ணாடி போட்டு பலவருடங்கள் ஆகின்றன. அதற்காகவே வந்தேன். அரவிந்த் மருத்துவமனைதான் சிறந்தது என்றார் அ.கா.பெருமாள்.

 

 

என் கண்ணாடி உடைந்துபோய்விட்டது. அதன்மீது நானே அமர்ந்துவிட்டேன். ஒன்றைவருடங்களாக  ஒரு வாசிப்புக்கண்ணாடியை வைத்து சமாளித்துவந்தேன். முறைப்படி கண் பரிசேந்தனைசெய்யவேண்டும் என்று அ.கா.பெருமாள் சொன்னார். சொல்லிக்கொண்டே வந்தார் என்று சொல்ல வேண்டும். சரி, ஆஸ்திரேலியா வேறு போகிறோம்,செய்துவிடுவோம் என்று கிளம்பினேன்.

 

ஏழரை மணிக்குத்தான் டோக்கன் கொடுப்பதாகச் சொன்னார்கள். அங்கேயே கேண்டீனில் பொங்கல் காபி சாப்பிட்டுவிட்டு இந்தியா டுடே வாசித்தபடிக் காத்திருந்தேன்.முதல் டோக்கனையே வாங்கிவிட்டேன். அதன் பின் விதவிதமான பியாட்ரீஸ் தேவதைகள் என்னை அந்த இன்·பெர்னோ வழியாகக் கூட்டிச்சென்றுகொண்டே இருந்தார்கள். மீண்டும் மீண்டும் கண்பரிசோதனைக் கருவிகள் முன் முகத்தை அழுத்திஉள்ளே நகர்ந்த ஒளிப்பிம்பத்தை கூர்ந்து பார்த்தேன்.

 

ஒளியில் தெரிந்த தூரத்து எழுத்துக்களை தட்டித்தடுமாறி வாசித்தபோது அந்த இருபதுவயதுப்பெண் டீச்சராக ஆக, நான் எல்கேஜி படிப்பதான உணர்வு. டபிள்யூ-எஸ்-கே-ஆர்-ஈ- எஸ்…என்குரலில் மழலை கலக்கிறதா? அந்தப்பெண் என் முன் ஒரு கண்ணாடியை பிடித்தபடி என் நெற்றிப்பொட்டையே பாருங்கஎன்றாள். அதனால் என் கற்புக்கு ஏதேனும் பங்கம் விளையுமோ என்று சந்தேகம் கலக்க நான் பார்க்க முயன்றபோது கண்ணுக்குள் ஒளிவெள்ளம் புகுந்தது.

 

ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயத்துடிப்பு எல்லாம் பார்த்தார்கள். அந்தப்பெண் நீங்க அப்ஸல்யூட்லி நார்மல் சார்என்றாள். எழுத்தில் நான் அப்நார்மல் என்பது அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இன்னொரு பியாட்ரீஸ் வெள்ளை உடையுடன் வந்து என்னை பிறிதொரு கூடத்துக்கு அழைத்துச் சென்றார். சட்டென்று கதவைத்திறந்து புனித பீட்டர் வந்து யாரு இங்க ஜெயமோகன்?” என்று கேட்டிருந்தால்கூட ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.

 

அதன்பின் ஓர் இடத்தில் கண்ணில் சொட்டுமருந்து விட்டு உட்கார வைத்துவிட்டாள் இன்னொரு கரிய அழகி. நன்றாகச் சாய்ந்து அமர்ந்து தூங்கிவிட்டேன். கண்விழித்தபோது மொத்த உலகமும் ஒளிபெற்றிருந்தது கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா?” என்று எழுதிய கவிஞன் கண் பரிசோதனைசெய்துகொண்டிருக்க வேண்டும். இன்னொரு இளம் டாக்டர் என் கண்களை சோதனை செய்து ஒண்ணுமில்லை, நார்மல் சேஞ்சஸ்தான். கிளாஸ் வாங்கிக்குங்கஎன்றார்

 

கண்ணாடியை தேர்வுசெய்ய எனக்கு தெரியவில்லை. அந்தப்பெண்ணிடம் என் முகத்துக்குப் பொருத்தமா  நீயே தெர்வுசெய்என்றேன். அவள் என்னை பலகோணக்களில் கூர்ந்து நோக்கி ஆராய்ந்து இது நல்லாருக்கும் சார்என்று ஒன்றைக் கொடுத்தாள். வழக்கமாக எனக்கு இரட்டைக் கண்ணாடி. இது அப்படி இல்லாமல் ஒரே கண்னாடியாக இருந்தது. பன்னிரண்டரை மணிக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றாள்.

 

அப்போது ஒன்பதரைதான். எங்கே போவது என்று தெரியவில்லை. நான் வாசலுக்கு வந்ததுமே கண்ணுக்குள் நூறு சூரியன். திரும்பி உள்ளே பாய்ந்து ஒரு கறுப்புக்கண்னாடி வாங்கிக் கொண்டேன். அதைப்போட்டபின்னும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. நெல்லை தெருக்களில் இதற்கு முன் புதுமைப்பித்தன் தொடங்கி எத்தனை எழுத்தாளர்கள் கண்ணீர் சிந்தியிருப்பார்கள்!

 

கண்ணீரும் கம்பலையுமாக ஜங்ஷனுக்குச் சென்றேன். நடக்க முடியவில்லை. வண்டிகள் விம்ம்ம் விம்ம் என்று கடந்துசென்றன. ஓர் ஆட்டோக்காரரை நிறுத்தி நெல்லையப்பர் கோயிலுக்கு போகவேண்டும் என்றேன். கண்ணாஸ்பத்திரியா சார்?” என்றார் ஆமாம்என் கண்ணாடியை பிறர் வைக்கமாட்டார்கள் போல.

 

நெல்லையப்பர் கோயிலின் அரை இருட்டு கண்ணுக்கு இதமாக இருந்தது. சிலைகள் கொஞ்சம் பெரிதாக உப்பி தெரிந்தன. மோகினியும் குறத்தியும் கொஞ்சம் பூசினார்போல இருந்தார்கள். எனக்குப் பெண்கள் கொஞ்சம் சதைபோடால் பிடிக்கும். பிராகாரம் வழியாக நடந்தேன். சுற்றிவந்தபின் அமர்ந்துகோண்டேன். சுகாவை கூப்பிடேன். அவர் எங்கோ பேசிக்கோண்டிருந்தார். அதன்பின் ஷாஜியை கூப்பிட்டேன். மீண்டும் சுகா.

 

உங்க தலைநகரிலே இருக்கேன்என்றேன். அப்டியா? அடாடா…ஒரு குட் நியூஸ்.. இண்ணைக்கு பாட்டையா தி.க.சிக்கு ஹேப்பி பெர்த்டேல்லா…என்றார் போய்ப்பார்த்து பெரியவரை வாழ்த்தி ஆசிகளை பெற்றுவரலாம் என்று முடிவுசெய்தேன். ஆனால் உலகம் இரண்டுமடங்கு ஒளியுடன் இருக்கும்போது எப்படி செல்வது? துணிந்து இறங்கினேன், தெலுங்கு ஹீரோக்கள் கறுப்புக்கண்ணாடியுடன் நடனமெல்லாம்கூட ஆடுகிறார்களே.

 

சந்தைவழியாகச் சென்றேன். தி.க.சிவசங்கரன் வாழும் சுடலைமாடசாமி கோயில் தெருவை விசாரித்து கொஞ்சம் வழிதவறினேன். ஒரு பிச்சைக்காரரிடம் வழிகேட்டேன். அவர் என்னை கூட்டிவந்து வழியைச் சுட்டிக்காட்டினார். அப்போது அவருக்கு பணம் கொடுத்தால் மிக அவமானமாக எண்ணுவாரென அவர்களுடன் சுற்றியவன் என்ற அனுபவத்தில் அறிவேன். சிவில் சமூகம் அவர்களை அங்கீகரிக்கும் கணம் அது. அது அவர்களுக்குப் பிடிக்கும்.

 

ரொம்ப நன்றி ஐயா. கண்ணுக்கு சொட்டு மருந்து போட்டிருக்கேன்..அதான் குழப்பம்என்றேன். ஆப்பரேசனா தம்பி?” என்றார். இல்லைய்யா…சும்மா டெஸ்ட் பண்ணி கண்ணாடி போடுறதுக்காகத்தான்…” ”அதானே பாத்தேன்.சின்ன வயசா இருக்கீங்கமகிழ்ச்சியாக இருந்தது. அவரைப்போன்ற பெரிசுகள் மட்டுமே இப்போது என்னை அப்படிச் சொல்கிறார்கள்.

 

சுடலைமாடன் தெருவின் நடுவே தி.கசி.யின் வீடு. குப்பைத்தொட்டி இருக்குல்லா அதுக்கு பக்கத்திலே  என்று சொல்லியிருந்தார் பிச்சைக்காரர். ஆச்சரியம்தான் பிச்சைக்காரர் அல்லாமல் யாராவது குப்பைத்தொட்டியை வீட்டுக்கு அடையாளமாகச் சொல்லியிருப்பாகளா?

 

தி.க.சி வீட்டில்தான் இருந்தார். பெரிய வீட்டின் ஓரத்துப் போர்ஷன். பழைய வீடு அது. சுதையாலானது. சன்னல்கள் இல்லை. ஆனால் வெப்பம் உள்ளே அவராதபடி கனத்த சுவர்களுடன் கட்டபப்ட்டது. சுவரில் புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன் ஆகியோரின் படங்கள். நிறைய புத்தகங்கள், பத்திரிகைகள்.

 

என்னைக் கண்டதும் திகைத்தார். ஒரு கணம் கழித்துத்தான் எனக்குப் புரிந்தது, என் கறுப்புக்கண்ணாடிதான் காரணம் என்று. கழற்றியபடி ஜெயமோகன்என்றேன். அட! அட! அட!என்றபடி தாத்தா வந்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தங்கள் போட்டார்.வாங்க வாங்க…என்ன, இப்பகூட உங்களைப்பத்தித்தான் பேசிட்டிருந்தோம்…ஏழாம் உலகத்தைப்பத்தி…

 

கூடவே ஒரு நண்பர் இருந்தார். தாராபுரத்துக்காரர். கன்னிவாடி க.சீ.சிவக்குமார், தாராபுரம் முருகானந்தம், என்.ஸ்ரீராம் ஆகியோரைத் தெரியும் என்றார். நான் தி.க.சியிடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்என்றேன் அது கெடக்கு என்னத்த பெரிசா”’ என்றார் வயசு எம்பத்தஞ்சு ஆயாச்சு…காலையிலே நெறையபேர் கூப்பிட்டுடாங்கஎன்றார் என்ன உடம்ப பாத்துக்க்றதில்லையா ? நரைச்சாச்சே?” நான் சிரித்தேன்

 

எப்டித்தான் எழுதிறீயளோ…ஒண்ணுமே புரியல்லை. அசுர உழைப்புல்லா…என்றவர் உடம்பைப் பாத்துக்கணும்ல…என்றார் என் கைகளைப் பிடித்துக்கோண்டு. நான் அதெல்லாம் ஒரு சிக்கலும் இல்லை. இப்பதான் எல்லாம் பார்த்தேன்என்றேன். ஆமா டிஸிப்ளினான ஆளுல்லஎன்றார் வண்ணதாசன் மெட்ராஸிலே இருக்கார். பையனுக்கு கல்யாணம் ·பிக்ஸ் ஆகியிருக்கு. சரி, அதை முதலிலே ஒழுங்கு பண்ணுங்கன்னு சொல்லீருக்கேன்என்றார். அப்பா மகனை  ர் போடுகிறார். காரணம் அந்தபுனைபெயரைச் சொல்வதுதான். கல்யாணி என்று சொல்லியிருந்தால் ன் போட்டிருபபரோ?

 

தி.க.சி உற்சாகமாக ஆரோக்கியமாக இருக்கிறார். சிறிய உடம்புள்ளவர்கள் பெரும்பாலும் முதுமையில் ஆரோக்கியமானவர்கள். பொய்ப்பல் காட்டிய உற்சாகமான சிரிப்பு. சின்ன மூக்குமேல் பெரிய கண்னாடி– வண்ணதாசனுக்கும் அதே சின்னமூக்குதான். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்து நா.முத்துநிலவன் கூப்பிட்டார். அவரிடம் பேசிவிட்டு எங்களிடம் என்னோட ஆசையெலலம் இடதுசாரிகள் ஒண்ணா சேர்ந்து ஒரு பெரிய முன்னணியா செயல்படணும்ங்கிறதுதான்.அதைத்தான் சொல்லிட்டே இருக்கேன். அரசியலிலே மெல்ல வரட்டும். கலாச்சார செயல்பாடுகளிலே ஒண்ணா இருந்தாலே போருமே

 

அப்போது வழக்கறிஞர் கெ.எஸ்.ராதாகிருஷ்ணன் வந்தார். ம.தி.மு.க தலைவர்களில் ஒருவர். ஐயா வணக்கம்என்றார் . தி.க.சி அடடே வாங்க வாங்க..என்றார் இண்ணைக்கு நம்ம பிறந்தநாள்” ”இண்ணைக்கா? நாளைக்குன்னுல்லா சொன்னாங்க…நான் நாளைக்கு வரலாம்னு இருந்தேன். இப்ப இந்தவழியா நாகர்கோயில் போறதனாலே சும்மா பாக்க வந்தேன்என்றார்.

 

நான் வைக்கோ எங்கே போட்டியிடுறார்?” என்றேன் போட்டியிடுற எண்ணம் இருக்கு. இண்ணைக்கு பதினொண்ணு மனிக்கு தெரிஞ்சிரும்என்றார்  கெ.எஸ்.ராதாகிருஷ்ணன். எப்டி வாய்ப்புகள் இருக்கு?” ”இந்தவாட்டி ரொம்ப நல்லா இருக்குஎன்றார். தி.க.சி இந்த பாருங்கய்யா வைக்கோவை இந்தவாட்டி எப்டியாவது பாராளுமன்றத்துக்கு அனுப்பிரணும்.அவரை மாதிரி ஒருத்தர் அங்கே இருக்கணும் இந்த நேரத்திலே…ஈழத்திலே நம்மாளுக அழிஞ்சிட்டிருக்கிரப்ப அவரு அங்க இருக்கணும்என்றார்.

 

கெ.எஸ்.ராதாகிருஷ்ணன் தி.க.சியை காலில் விழுந்து வணங்கிவிட்டுக் கிளம்பினார். மீண்டும் அழைப்புகள் வள்ளிநாயகம்…உங்காளு வந்திருக்காரு…ஜெயமோகன்…வாங்கஎன்றார். கொஞ்சநேரத்தில் சுகாவின் அன்புத்தம்பி வள்ளிநாயகம் வந்துசேர்ந்தார். சுகா அடிக்கடி வள்ளி வள்ளி என்று சொல்வதைவைத்து சில விஷமிகள் அவரை தவறாக நினைப்பதுண்டு. வள்ளிநாயகம் ஓவியர். நெல்லையின் தகவல் களஞ்சியம் சர்ரியான  நெல்லைத்தோற்றம். நான் அவரைப்பற்றி நிறையவே கேட்டிருந்தாலும் பார்ப்பது அதுதான் முதல்முறை. கொஞ்ச நேரத்தில் சுகாவின் இன்னொரு அன்புத்தம்பி பொன்னையன் வந்துசேர்ந்தார்..

 

தி.க.சி உற்சாகமாகப் பேசினார். என்ன அப்பப்ப வர்ரதில்லியே…என் மனைவி இறந்ததுக்கு துட்டி கேட்டு வந்ததுக்கு அப்றம் வந்ததே இல்லைன்னு இப்பதான் சொன்னேன்என்றார். நான் கடவுள்படத்தைப்பற்றியும் அதில் உள்ள நாத்திக வசனங்களைப்பற்றியும் பேசினோம். நம்ம புள்ளை அதிலே நல்லா நடிச்சிருக்கான்னு சொன்னாங்கஎன்றார் திகசி — விக்கி அண்ணாச்சியைப்பற்றி. அவனுக்கு வேற படம் கிடைக்குமா?” நான் விக்கி அங்காடித்தெருவில் நடித்திருப்பதைச் சொன்னேன். அதன்பின் மு.களஞ்சியம் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கிறார்.

 

இப்ப என்ன எழுதுறீங்க?” என்றார் தி.க.சி .நான் அசோகவனம்என்றேன். என்னைமாதிரி கண்ணுபோன வயசாளிகள் படிக்கிறமாதிரி சின்னதா ஏதாவது எழுதப்பிடாதா?” என்றார். பொன்னையன் தினமணி ஏஜெண்ட். தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் வந்தைச் சொன்னார் தி.க.சி. கலாரசிகன்ங்கிற பேரிலே அவர்தான் எழுதறார்…நல்லா இருக்கு…நல்ல வாசகர்…ஆனா நம்ம ஆளு இல்ல…இந்துத்துவம் கொஞ்சம் உண்டு. ஆனா இங்க வந்தா வந்து பாக்காமப்போகமாட்டார்…

 

பன்னிரண்டரை மணிக்கு நான் கிளம்பினேன். தி.க.சி பொன்னையனிடம் இவரைக் கூட்டிட்டுப்போயி சாப்பாடு வாங்கிக்குடுத்து அனுப்பு…சொல்லிட்டேன்…என்றார். வெளியே வந்து நானும் வள்ளிநாயகமும் பொன்னையனும் பேசிக்கொண்டிருந்தோம். வள்ளி நெல்லை மாவட்ட கோயில்களைப் பற்றிச் சொன்னார். நான் நெல்லைக்குச் செல்வதே அபூர்வம். ஆரல்வாய்மொழி தாண்டினாலே வெயில் காதுகளை எரியச் செய்துவிடும். டிசம்பர் நல்ல சீசன் என்றார் வள்ளி

 

அப்போது நாட்டுப்புற ஆய்வாறும் கி.ராஜநாராயணனின் பிரிய மாணவருமான கழனியூரன் வந்தார். நடுத்தெருவை மறித்து நின்று உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் சமரசம் இதழில்  எழுதிவரும் இஸ்லாமிய நாட்டுப்புறக் கதைகள்தொடர் நன்றாக இருக்கிறது என்றேன். பன்னிரண்டு மாதமாகிவிட்டதனால் தொடரை நிறுத்திவிட்டதாகவும் மேலும் சில கட்டுரைகளைச் சேர்த்து நூலாக ஆக்கப்போவதாகவும் சொன்னார். இஸ்லாமிய சிற்றிலக்கியங்களைப்பற்றி ஆய்வுசெய்து வருவதாகச் சொன்னார்.

 

கழனியூரன் வீரகேரளம்புதூர் என்னும் ஊரில் வேலைபார்க்கிறார். அங்கேதான் சுகாவின் தாத்தா வீரகேரளம்புதூர் உ.வினாயகம்பிள்ளை இருந்தார். எண்பது வயதுக்குமேல் ஆகி இறந்துவிட்டார். ஒருமுறை அவர் இசைரசிகர் விளாத்திக்குளம் சுவாமிகளைப்பற்றி மஞ்சரி இதழில் எழுதிய கட்டுரையை வாசித்து நான் சுகாவிடம் அதைப்பற்றி சொன்னபோது ”’சரியாப்போச்சு எங்க தாத்தால்ல அது?”என்றார்

 

நடுவே ஒரு தகவல். விளாத்திக்குளம் சுவாமிகள் நெல்லையில் வாழ்ந்த புகழ்பெற்ற இசை மேடஹி. நன்றாக பாடுவார், ஆனால்  தொழில்முறையாக பாடமாட்டார். இசை விற்பன்னர். மறவர் சாதியைச் சேர்ந்தவர். இசைகககவே தன் வாழ்க்கையை அர்பப்ணித்து துறவியாக இருந்தார். அவரைப்பற்றி கி.ரா நிறைய எழுதியிருக்கிறார். அவர்தான் கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள்நாவலில் சுவாமிகளாக வருகிறார். அந்தக் கதாபாத்திரத்தை படத்தில் ஔவை டி.கெ.சண்முகம் நடித்தார் என நினைக்கிறேன்

 

வீரகேரளம்புதூர் உ.வினாயகம்பிள்ளை கழனியூரனுக்கு நெருக்கமாக இருந்தார். இசை விற்பன்னர், ரசிகர். ஓர் ஒற்றைத்தந்தி வாத்தியத்தை அவரே உருவாக்கி அதை வாசிப்பாராம். இலக்கிய ரசிகர். குறிப்பாக குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரைமேல் மிகுந்த பற்று கொண்டவர். மொத்த உரையையும் சொல்லுவார். குறளை மனப்பாடம்செய்தவர்கள் உண்டு, உரையை மனப்பாடமாகக் கற்றவர் அவர். பரிமேழலகரடிப்பொடி என்றபேரிலேயே எழுதியிருக்கிறார் என்றார் கழனியூரன்.

 

அப்படி பலர் இங்கே இருந்திருக்காங்க. நெல்லையிலே உவேசா வந்து தங்கி பத்துபாட்டு சுவைகளை சேகரிச்சார்…இங்கே ஒருத்தர் எல்லீஸ் துரைக்கு முன்னாலேயே திருக்குறளை அச்சிட்டார். அப்ப அச்சுத்தடைச்சட்டம் இருந்ததனால அவரது புச்தகத்தை கைப்பற்றிட்டாங்க. எல்லிஸ் துரைக்கு முதல் பதிப்பாளர்ங்கிற இடம் கிடைச்சுதுஎன்றார் வள்ளி. ‘1920 முதல் 1960கள் வரை சைவம் தமிழ் இரண்டிலும் பெரிய அலை ஒன்று அடித்தது. ஏராளமான நூல்கள் வெளிவந்தன. பெரும்பாலான நூல்கள் இப்போது மறக்கபப்ட்டுவிட்டனஎன்றேன்.

 

கழனியூரனின் மகன் பிரவின்ஸ்கா என்ற பேரில் உயிரோசையில் கவிதைகள் எழுதிவருவதைச் சொன்னார் அவர். நல்லா வாசிக்கிறாங்க இப்ப உள்ள பையங்க…படிச்சு விரிவா எழுதறாங்க…மகன் ஏதோ ருஷ்ய கதாபாத்திரத்தின் பெயரை சூட்டிக்கொண்டிருக்கிறாராம் . ஆட்டோ வந்தது. அதில் ஏறி சரவண பவன் வந்தோம். அங்கே சாப்பிடுவிட்டு  கழனியூரனிடமும் வள்ளிநாயகத்திடமும் விடைபெற்றேன் பொன்னையன் என்னை மீண்டும் அரவிந்த் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்து விட்டார்

 

கண்ணாடி வாங்கிக்கோண்டு கண்ணாடியில் பார்த்தால் யாரோ ஒருவர் என்னைப் பார்ப்பதுபோல இருந்தது. சர்தார்ஜி அப்படித்தான் தலைப்பாகை இல்லாமல் ரயில் பாத்ரூம் கதவைத்திறந்து கண்ணாடிப்பிம்பத்தைப் பார்த்தபின் ஸாரி…பூட்டியிருக்கலாமேஎன்று சொல்லி விட்டு திரும்பிவிட்டாராம். பாவம், அமிர்தசரஸ் முதல் டெல்லிவரை அவர் சிறுநீர்கழிக்கவில்லை. எல்லா ரயில் கக்கூஸ்களிலும் அதே தலைப்பாகை இல்லாத சர்தார்ஜி கதவைப்பூட்டாமல் உள்ளே இருந்தால் இவர் என்ன செய்வார்?

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1125

http://nadaivandi.blogspot.com/2007/09/blog-post_16.html

முந்தைய கட்டுரைஆதிச்சநல்லூர்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைசினிமாவுக்கு ஒரு களப்பலி