புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.

220px-Punathil_W
புனத்தில் குஞ்ஞப்துல்லா

 

 

‘ஆமாம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலையும் அதன் சுற்றுப்புறங்களையும் பற்றிய கதைதான் இது’ என்று புனத்தில் குஞ்ஞப்துல்லா தன்னுடைய மீசான் கற்கள் [மூலம். ஸ்மாரக சிலகள்] நாவலை தொடங்குகிறார். எவரிடம் அதைச் சொல்கிறார்? எதை அவர் ஆமோதிக்கிறார்?

கேரள நவீனத்துவ இயக்கம் ‘ஆதுனிகத’ என்று சொல்லப்படுகிறது. இதை நாவலில் தொடங்கிவைத்த முன்னோடிகள் ஓ.வி.விஜயன் [கசாகின்டெ இதிகாசம்] காக்கநாடன் [உஷ்ணமேகல ] எம்.முகுந்தன் [மய்யழிப்புழயுடே தீரங்களில்] சேது [பாண்டவ புரம்] ஆகியோரில் ஒருவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. நவீனத்துவத்தின் பிரச்சாரகராகவே விளங்கியவர். ‘எங்களுடையது ஒரே சம்ஸ்காரம்தான் – சவ சம்ஸ்காரம்’ [நினைவுகூர்க அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா. சம்ஸ்காரம் பண்பாடு, சவ அடக்கம் என்ற இருபொருள்வரும் சொல்] என்ற பிரபலமான சொற்றொடர் மூலம் பலரை அதிரச்செய்தவர்.

கேரள நவீனத்துவம் அதற்கு முன்னரே உருவாகி வலுப்பெற்றிருந்த யதார்த்தவாதத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. யதார்த்தவாததிற்கு இருமுகங்கள். தகழி சிவசங்கரப்பிள்ளை, பி கேசவதேவ், வைக்கம் முகமது பஷீர், உறூப், பொற்றேக்காட், பாறப்புறத்து போன்றவர்கள் கறாரான புறவயத்தன்மை கொண்ட சமூக யதார்த்தத்தை முன்வைப்பதில் அக்கறைகாட்டிய இலட்சியவாதிகள். அடுத்த மரபு உணர்ச்சிகரமான , அந்தரங்கமான யதார்த்தவாதம். கற்பனாவாதத்தின் விளிம்பில் நின்ற அவ்விலக்கிய மரபு டி.பத்மநாபன், எம்.டிவாசுதேவன் நாயர் முதலியவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இவ்விரு மரபுக¨ளையும் நிராகரித்து உருவானது கேரள நவீனத்துவம்.

நவீனத்துவத்திற்கு முன் ஓங்கியிருந்த எம்.டி.வாசுதேவன்நாயர் பாணி உணர்ச்சிகர யதார்த்தவாதம் ஒரு காலகட்டத்தின் அழிவை உணர்ச்சிமல்கிய நெஞ்சுடன் சொன்னது. எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘காலம்’ ‘நாலுகெட்டு’ ‘அசுரவித்து’ போன்ற நாவல்கள் அழிந்துவந்த நாயர் குடும்பங்களின் துயரை சொன்னவை. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தைச் சேர்ந்த பண்பாட்டின் இன்றியமையாத அழிவைப்பற்றிய இந்நாவல்களில் கூடவே கடந்தகால ஏக்கமும் முக்கியப் பங்குவகித்தது. பழமைவாய்ந்த நாயர் தறவாட்டு வீடுகள், நெற்புரைகள், இடிந்த கோயில்கள், சரிந்த குளங்கள் ஆகியவை அக்கால எழுத்தின் படிமங்கள். எம்.டி.வாசுதெவன் நாயரின் அதே காலகட்டத்தைச் சேர்ந்த வி.ஏ.ஏ.அஸீஸ்[ துறமுகம்] , என்.பி.முகம்மத்[எண்ணப்பாடம்] , யு.ஏ.காதர் [சங்ஙல] போன்றவர்களால் அதே சித்தரிப்பு இஸ்லாமிய வாழ்க்கைசார்ந்தும் அளிக்கப்பட்டது. தமிழில் தோப்பில் முகமது மீரான் இந்த மரபையே தன் முன்னுதாரணமாகக் கொண்டார்.

இந்த யதார்த்தவாத மரபை நோக்கியே புனத்தில் குஞ்ஞப்துல்லா பேசுகிறார். ஆம், இதுவும் இன்னொரு வீழ்ச்சியின் கதைதான். பழைமையான பள்ளிவாசல் சென்றகால மனிதர்கள் எல்லாரும் இதிலும் உள்ளனர். ஆனால் தான் சொல்லப்போவது ஒரு புதிய கதையை என்ற எண்ணமும் ஆசிரியரிடம் உள்ளது. முதல் அத்தியாயமே நாவலின் அடிப்படை இயல்பைச் சொல்லிவிடுகிறது. பழைமையான பள்ளிவாசலின் முக்ரியான எரமுள்ளான் நெஞ்சுவெடிக்க வாங்குவிளிக்கும் அந்தக்காலத்தைச் சேர்ந்தவர். பாலப்புறம் மம்முது ஹாஜி இறந்த தகவல் வருகிறது. பையிலிருந்து மூன்று ரூபாய் பணம் எடுத்த மருமகனை வீட்டைவிட்டு துரத்திய, தன் ஐம்பத்தியாறு வயதில் பத்¢னாறுவயது பீயாத்துவை மணம்செய்து ஒருமாதம்கூட ஆகாத ஹாஜியார்.

பிணத்தின் வாயைப் பார்க்கும் எரமுள்ளான் திடுக்கிடுகிறார். வாய் திறந்திருக்கிறது, ஆசை அடங்காத வாய். கதிமோட்சம் இல்லாத ஆத்மா! பிணத்தைக் குளிப்பாட்டி மய்யத்து எடுத்து கபரடக்கம் முடிந்தபின் எரமுள்ளான் குளிப்பாட்டிய கூலிக்காக காத்து நிற்கிறார். மகன் ஒன்றும் சொல்லக்காணோம். எரமுள்ளான் மரபை மீறி கேட்டே விடுகிறார். ‘நாளைக்கு’ என்ற ஒற்றைச்சொல்லில் வெறுப்புடன் மறுத்து மகன் சென்றுவிடுகிறான். இதுதான் நாவலின் மையம். ஆசை அடங்காமல் திறந்த வாயுடன் செத்த நிலப்பிரபுத்துவம், அதை வெறுப்புடன் பார்த்து நிராகரித்து செல்லும் அடுத்த தலைமுறை. மம்முது ஹாஜியின் அந்த திறந்தவாய்தான் இந்நாவலின் மையப்படிமம் என்றால் அது மிகையல்ல.

index
குளச்சல் மு யூசுப்

 

கான்பகதூர் பூக்கோயா தங்ஙளின் கதை என்று இந்நாவலைச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். அவரது தோற்றம் அவரது வழக்கங்கள் ஆகியவற்றை விரிவாகச் சொல்லி மிக அழுத்தமாக அக்கதாபாத்திரத்தை நிலைநாட்டுகிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. ”ஜப்பான் சில்க் முழுக்கை குப்பாயம் அணிந்து அதன்மேல் அணில்கோடுகள் உள்ள சிங்கப்பூர் கைலி அணிந்து அதற்குமேல் கோட்டும் அணிந்து விரித்துவிடப்பட்ட மீசையுடன் சிவந்து துடுத்த முகமும் முகத்தைவிட துடுத்த ஷூவும் அணிந்து நடந்த தங்ஙளை ஊரிலுள்ளவர்கள் அபிமானத்துடன் பார்த்து நின்றார்கள்”. அவர் தங்ஙள் குலத்தவர் [ அரேபியாவிலிருந்து நேரடியாக வந்த முஸ்லீம்களின் குடும்பவழி தங்ஙள் எனப்படுகிறது. இவர்களுக்கே ஸுன்னிகள் நடுவே மதமேலாண்மை உள்ளது. இப்போதும் பாணக்காட்டு தங்ஙள் குடும்பமே கேரள முஸ்லீம் லிக் கட்சியின் மாறாத தலைமை கொண்டது. மதம் மாறியவர்கள் ஒட்டுமொத்தமாக மாப்பிள்ளைகள் எனப்படுகிரார்கள். இவர்கள் இரண்டாம் தரத்தவர். இவர்களுக்கு தனி கல்லறைத்தோட்டம்]

தங்ஙளின் மூதாதையர் கபரடக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசல் பழைமையானது. அதற்கும் தங்ஙளின் அரண்மனைக்கும் இடையே ஒரு புராதனமான சுவர் மட்டுமே. மய்யத்தான தங்ஙள்மாருடைய கபரிடங்களில் சந்தனத்திரி கொளுத்தி வணங்க மக்கள் வருகிறார்கள். தங்ஙள் ஊரார் மத்தியில் வாழும் புனிதராகவே கருதப்படுகிறார். ஆனாலும் இவர் சிங்கப்பூர் வணிகம் செய்தவர். சிங்கப்பூரிலிருந்து புத்தமத ஆசாரியைக் கூட்டிவந்து கட்டிய பெரும் பங்களாவில் மன்னரைப்போல வசிக்கிறார். சிங்கப்பூரிலிருந்து குதி¨ரைக்காரனைக் கொண்டுவந்து வைத்திருக்கிறார். அத்ராமான் பௌத்தன் என்று அழைக்கப்படுகிறான்.

பூக்கோயா தங்ஙளின் மனைவி ஆற்றபீவி கர்ப்பமாக இருக்கிராள். நீண்டநாட்களுக்குபின்னர் அடைந்த கர்ப்பம். தங்ஙள் மனைவியை விலைமதிப்புமிக்க முத்துச்சிப்பி போல பாதுகாத்துவருகிறார். சொத்து பராமரிப்பும் ஊருக்குள் நீதிநிர்வாகமும் தங்ஙளின் அன்றாடப்பணிகள். தங்களின் குணச்சித்திரத்தை மேலும்மேலும்விரிவாகச் சொன்னபடியே செல்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா . தங்ஙள் அபாரமான தன்னம்பிக்கையாலேயே உருவான ஆளுமை. தான் செய்வதெல்லாம் எப்போதும் சரி என்ற உறுதியான எண்ணமும் நினைப்பதைச் செய்யும் பணவலிமையும் சேர்ந்து உருவாக்கிய தன்னம்பிக்கை அது. அவருக்கென ஒரு நீதிபோதம் உள்ளது. அதை எளிதில் பிறர் வகுத்துவிட முடியாதென்றாலும் அவரைப்பொறுத்தவரை அவர் அதை முழுதாக நிறைவேற்றுவார். பிறரை தனக்காகப் பயன்படுத்திக் கொள்வது தங்ஙளைப் பொறுத்தவரை இயல்பான ஒன்றே.

ஆகவேதான் கற்பிழந்து கருவுற்று நதியில் ஒழுகிவரும் நீலியை காப்பாற்றவும் அடைக்கலம் அளிக்கவும் அவர் தயங்கவில்லை. யாருமற்றவர்களுக்கு அடைக்கலமளிப்பது தன் பணி என்றே அவர் எண்ணினார். ஆற்றபீவிக்கும் நீலிக்கும் ஒரேநாளில் குழந்தை பிறக்கிறது. ஒன்று புனிதமும் செல்வமும் நிறைந்த வீட்டின் இளவரசி. இன்னொன்று அனாதைக் கா·பிரின் சோரக்குழந்தை. ஆனால் தங்ஙளின் பார்வையில் இரண்டுமே படைத்தவனின் கொடைதான். நீலி இறக்க அக்குழந்தையை கொண்டுவந்து தன் பீபியிடம் கொடுத்து முலைகொடுக்கச்சொல்கிறார் தங்ஙள். திருவாய்க்கு எதிர்வாய் இல்லை. பீபிக்கு அக்குழந்தை தன் முலையை தொடும்போது அவள் உடலே எரிகிறது. ஆனால் வேறுவழியில்லை. நீலியின் மகனுக்கு குஞ்ஞாலி என்று பெயரிடுகிறார் தங்ஙள். அவன் அரண்மனையிலேயே வளர்கிறான்.

குஞ்ஞாலிக்கும் தங்ஙளின் மகளான பூக்குஞ்ஞிக்கும் உள்ள உறவைப்பற்றி விரிவாகப்பேசியபடி நாவல் விரிகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்தே வளர்ந்தவர்கள். ஆனால் குஞ்ஞாலி அனாதை. ஹராமாகப் பிறந்தவன். அந்த எண்ணம் அவனிடம் நீங்காமலிருக்க அந்த அரண்மனையில் உள்ள அனைவருமே முயல்கிறார்கள். ஆனால் தங்ஙளுக்கு அவன் தன் மகனேதான். மதக்கல்விக்குப் பதிலாக இரு குழந்தைகளையும் ஆங்கிலம் படிக்கக் கொண்டுசென்று சேர்க்கிறார் அவர். முதலில் பூக்குஞ்ஞியை எழுத்தறிவிக்க ஆசான் அழைக்கும்போது ”ம்ம் ஆம்பிளை முதலில” என்று தங்ஙள் திடமாகச் சொல்கிறார். குஞ்ஞாலிக்கு சுன்னத்து கல்யாணம் நடக்கும்போது அவன் அஞ்சி ‘தங்ஙளுப்பா1”என்றுதான் அழுகிறான். அவனருகே வரும் தங்ஙள் கட்டியணைத்து ” மக்கள் கரையாண்டாம் .உனக்கு தங்ஙள் மாருக்க அனுகிரகம் உண்டு”

விசித்திரமான ஒரு கலவையாக தங்ஙளின் முகம் நம்மில் விரிந்து வருவதே இந்நாவலின் வெற்றியாகும். அனேக பத்தினி விரதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் தங்ஙள். தினமும் குதிரை மீதேறி ‘உலா’ போய் கடற்கரை மீனவக்குடிகளுக்குள் புகுந்து ‘பொழுதுபோக்கு’ நடத்தி மீள்பவர். மனைவிக்கு பிரசவம் பார்க்க வரும் அலமேலுவையை அப்படியே மாடிக்குக் கொண்டுபோகிறவர். நாவல்முழுக்க தங்ஙளின் லீலைகள் நிறைந்திருக்கின்றன.ஆகவே வாசகமனத்தில் குஞ்ஞாலி அவரது சோரமகனாக இருக்கலாமென்ற எண்ணம் ஏற்படுகிறது. அவர் காட்டும் அன்பும் சமத்துவ உணர்வும் அந்த ரகசியத்தின் வெளிப்பாடுகளே என்று தோன்றுகிறது.

ஆனால் தன் மகளுக்கு குஞ்ஞாலியை மணமகனாக அவர் முன்வைக்கும்போது அந்த ஐயம் முற்றிலுமாக அடிபடுகிறது. அப்படியானால் தங்ஙளின் அன்பும் சமத்துவ உணர்வும் அவரது அடிப்படை இயல்பே என்றாகிறது. இநத இடத்தில் தெளிந்துவரும் தங்ஙளின் குணச்சித்திரமே இந்நாவலின் மையமாகும். தங்ஙள் நிலப்பிரபுத்துவத்தின் தூண். புனிதமான ஆதிக்கம் கொண்டவர். ஆட்கொள்ளும், அடிமைப்படுத்தும், சுரண்டும், பாதுகாக்கும், தண்டிக்கும் கருணை நிறைந்தவர். அந்த ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அதன் நிழலில் வாழும் மனநிலை உடையவர்களுக்கு அவர் நிழல்மரம். மீறிச்செல்லும்போதுதான் அவரது வன்முறையை உணர முடியும். நாவலில் மீறிச்செல்ல முனைபவன் குஞ்ஞாலி மட்டுமே.

நாவலில் தங்ஙள் எப்போதும் ஊரின் பொதுவான அற உணர்வுக்கும் கால உணர்வுக்கும் ஒரு அடி முன்னல் செல்பவராகவே காட்டப்படுகிறார். ஊர் நம்பிக்கையை மீறி ஊருக்குள் இஸ்லாமிய சீர்திருத்த நாடகம்போடுமிடத்திலும் சரி, காலரா கண்டு ஊரே அழியும்போது நிமிர்ந்த நெஞ்சுடன் முன்னால்நின்று சேவைசெய்யும்போதும் சரி தங்ஙளின் ஆண்மையும் தன்முனைப்பும் கொண்ட ஆளுமை விரிந்தபடியே செல்கிறது

மாளிகையில் ‘ ஹராமி ‘ பட்டத்துடன் வாழ்ந்து அவமானங்களையே உண்டு வாழ்கிறான் குஞ்ஞாலி. அந்த மொத்த அமைப்பின் உள்ளுறைந்துள்ள குரூரத்தை அறிபவன் அவனே. அங்கே பிறப்பே அனைத்து தகுதிகளையும் உருவாக்குகிறது. அந்த எல்லையை எப்போதும் எவருமே மீற முடியாது. பூக்குஞ்ஞியின் இனிய நட்பு மட்டுமே அவனை அங்கே கட்டிவைத்திருக்கிறது. உள்ளே கசப்பு ஊறி நிறைந்து கெட்டிப்பட அவன் அந்த அமைப்புக்குள்ளே அதற்கு எதிரானவனாக உருவாகிறான். நாவலின் முக்கியமான இரண்டாம் சரடு இது. தங்களால் அவருக்கு எதிராகவே உருவாக்கப்பட்ட ஒரு சக்தி. இவ்விரு சக்திகளின் முரணியக்கமாக நாவல் இயங்கும் காலகட்டத்தை ஆசிரியர் காட்டுகிறார் எனலாம்.

மீனவப்பெண்கள் தன் காமத்துக்கு இரையாவதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் என்று நம்புகிறார் தங்ஙள். ஆகவேதான் கடற்கரையில் கண்ட இளம் புதுமணப்பெண்ணை அவர் அள்ளிப்பிடிக்கிறார். ‘உன் அரையன் ஒன்றும் சொல்லவில்லையா?’ என்றுதான் கேட்கிறார். அச்சம் மீதூர நடுங்கும் அப்பெண்ணால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அழுவதைத்தவிர. அவள் கணவன் பெரச்சன் வந்து அவரை குத்திச் சரிக்கிறான். புனிதமே அதிகாரமாக ஆன பூக்கோயா தங்ஙளின் கதை அவ்வாறு முடிகிறது.

புதிய கதை தொடங்குகிறது. தங்ஙள் இறந்தகனமே அவரது ஆதிக்கம் மீதான கசப்பு மகக்ள் நெஞ்சில் மேலெழுகிறது. எந்தப்பெயர் குஞ்ஞாலிக்கு கௌரவச்சின்னமாக இருந்ததோ அதுவே அவனுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. அவனுடைய சான்றிதழில் தங்களின் பெயரைக்கண்ட ஆண்டி வாத்தியார்  ”ஓ அவரது மகனா நீ?” என்கிறார், குஞ்ஞாலி தலைகுனிகையில் ‘நீ தலை குனியத்தான் வேண்டும். திமிருக்கும் ஒரு அளவுவேணும்’ என்கிறார்

அதன் பின் ஒரு சரிவு. அந்த அமைப்பு அப்படியே தன்னை சிதைத்துக்கொண்டு நோயுற்றுச் சரியும் கொம்பன் யானைபோல மண்நோக்கி வரும் காட்சி. பட்டாளம் இபுறாகி அந்த வீட்டை மெல்லமெல்ல கைப்பற்றுகிறான். ஆற்றபீபிக்கு இரண்டாம் கணவனாக அவர் ஆகும்போது குஞ்ஞாலி அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறான். இதுவும் இந்நாவலின் ஒருநுண்ணிய அம்சம். தங்ஙளின் பீபியாக செல்வத்திலும் அதிகாரத்திலும் மூழ்கி வாழ்ந்த பீபிக்குள் பாடகனாகிய பட்டாளம் இபுறாகியிடம் உள்ள ரகசியக் காமம்.

செல்வமும் சிறப்பும் இழந்து அரண்மனை குன்றுகிறது. அதிகமாக விவரிக்காமல் அந்த சரிவை காட்டி நாவலை முடிக்கிறார் ஆசிரியர். தங்ஙளின் இறுதி விருப்பத்தை மீறி பீபியை ஒரு நோயாளிக்கு கட்டிவைக்கிறான் இபுறாகி. அவள் தற்கொலைசெய்துகொள்கிறாள். குஞ்ஞாலி ஊரைவிட்டே செல்கிறான். அந்த அமைப்பால் உமிழப்பட்டவனாக.

*

நாவல்முழுக்க நுண்ணிய கதாபாத்திரச்சித்தரிப்புகள் மூலம் உறவுகள் உருவாகி விரிவதன் வலையை விரித்துசெல்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. இந்நாவலின் முக்கியமான கவர்ச்சியே அதுதான். தலைமை சமையற்காரி குறைஷி பாத்துமா குதிரைக்கார அதுராமானின் லாயத்துக்குள் இரவு சென்று மீளும் போது தங்ஙள் கையோடு பிடிக்கிறார். உயிர்பயத்துடன் நடுங்கி நிற்கும் அவர்களிடம் ‘நாளைக்கு உனக்கு அவளுக்கும் நிக்காஹ். எனக்கு விபச்சாரம் பிடிக்காது’ என்று சொல்லி மறுநாளே மணம் செய்விக்கிறார் – நாள்முழுக்க விபச்சாரம் செய்பவரும் அவரே.

குதிரைக்காரன் பாத்துமாவுடன் இருக்கும் இரவில் பக்கத்து மசூதியில் எறமுள்ளான் இரவுமுழுக்க ஏற்றமிறைக்கிறார். அவர்தான் அவளைமுதலில் மணம்செய்தவர். அன்று அவர் ஒரு மீன் வியாபாரி. முதலிரவில் ‘மீன் நாறுகிறது’ என்று முகம் சுளித்த அவள் அவரை நெருங்கவே விடவில்லை. மறுநாள் பொன்னானிக்குப்போய் ஓதிமுடித்து மசூதியில் மோதினாராக வந்துசேர்ந்தவர்தான் அவர். அந்திராமானுக்கு குதிரை அருகே படுத்தால்தான் தூக்கம் வரும். அவன் பின்னிரவில் எழுந்து லாயத்தில் சென்று படுத்துக் கொள்கிறான். இரவெல்லாம் வெறிகொண்டு ஏற்றம் இறைத்து எரமுள்ளானின் கைகளில் தோலுரிந்து ரத்தம் வழிந்தது. சித்திரங்களை இயல்பாக, அதிக தகவல்கள் இல்லாமல். இணைத்து ஆழமான கவித்துவத்தன்மையை உருவாக்குகிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா.

வாங்குவிளித்தே தொண்டையை இழந்து அன்னியமாகி இறக்கும் எரமுள்ளான், குதிரையை தேடித்தேடி பித்தெடுத்து மறையும் அந்துராமான் கெஸ் பாட்டு பாடும் பட்டாளம் இபுராகி என நாவலின் கதாபாத்திரங்கள் ஏராளமானவை. ஒவ்வொன்றும் வாழ்வின் சாரமாக ஒன்றைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. அதை இழக்கும்போது அழிகின்றன. வாழ்க்கைக்குப் பொருள்கொடுப்பதற்காக மனிதர்கள் கொள்ளும் ஓயாத போராட்டத்தை ஆசிரியர் மீண்டும் மீண்டும் நாவல் வழியாக காட்டுகிறார்.

மெல்லிய நகைச்சுவை நிறைந்த நுண் விவரிப்புகள் இந்நாவலை நவீனப்பிரதியாக்குகின்றன. குதிரைக்கு வயிற்றுப்போக்கு வரும்போது கோமப்பன் வைத்தியர் சொல்லும் ‘எளிமையான’ கைவைத்தியம் : ‘கடுக்கா தானிக்கா நெல்லிக்கா வெதைநீக்கி இஞ்சி பொடலங்கா வகைக்கு அரையரைக் களஞ்சி வீதம், கற்பூரம் ரஸ்னாதி செந்தெங்கின்வேரு மட்டை பாரிஜாதப்பூவு அரசங்கொட்டை , எலநீக்கிய தெற்றிப்பூவு வகைக்கு ஒரு களஞ்சி ,ஆடாதோடை குறுந்தோட்டி வகைக்கு ஒரு களஞ்சி எல்லாம் சேர்த்து அரைச்சி ஒண்ணாக்கி பின்னும் சேர்த்தரச்சு, மொதக்குட்டி போட்ட கழுதப்பாலில கலந்து, மூணு தடவை முறையா பின்னும் அரைச்சு நல்லபடியாகலந்துகொள்ளணும். பின்ன இந்த சேருவைய சுத்தம் செய்யப்பட்டதான ஊமத்தங்காய்க்குள்ள நெறைச்சி பனையோலையில சேத்து கட்டி கோமூத்திரத்தில நெறைச்சி மூணுமணிநேரம் வேகவைகக்ணும் . வெந்தபிறகு எறக்கி ஒவ்வொண்ணா அரைச்சு வயநாடன் செறுதேனில கலக்கி ரெண்டுவேளையா குடுக்கணும்….”

கிராமவாழ்க்கையின் அசட்டுத்தனத்தியும் முரட்டுத்தனத்தையும் போகிறபோக்கில் சொல்லிச்செல்லும்போது உருவாகிவரும் குரூரமான நகைச்சுவை இந்நாவலை நவீனத்துவத்திற்குரிய இருண்டபுன்னகை கொண்டதாக ஆக்குகிறது. அபத்தம் நோக்கி கொண்டும் செல்கிறது. ‘தொப்புள் கொடியை யாரு அறுத்தா?’ அலமேலு டாக்டர் கேட்டாள். ”நாந்தான் ” பொக்கி சொன்னாள். ”எதவச்சு அறுத்தது?” ”அருவா வச்சு” ” அருவாளு வச்சா?” கோபமும் ஆத்திரமும் மேலிட அலமேலு நடுங்கினாள். மன்னிப்பு கேட்பதைப்போல பொக்கி சொன்னாள் ”வயலுக்கு கொண்டுபோற அரிவாள் இல்லை. மீனறுக்குத அரிவாள்தான்” பொக்கி அனாதையாக தன்னிடம் வந்த நீலியை சொந்தக்குழந்தைக்கும் மேலாகப் பாதுகாத்தவள். அரிவாளால் தொப்புளை அறுத்து டெட்டனஸ் வரவழைத்து அவளைக் கொல்வதும் அவளே.

மிக எளிதாக கிராம மக்கள் நவீன வாழ்க்கைக்குள் செல்கிறார்கள். ஐந்தாம் வகுப்பும் ஓத்தும் படித்து ஆசிரியர் ஆன முசலியார் சார் ” பூமி உருண்டதா பரந்ததா? ”என்ற வினாவை எழுப்ப மாணவன் ” பரந்ததுதான் சார்” என்கிறான். ”அது நம்ம தீன் பிரகாரம். சயன்ஸ் பிரகாரம் பூமி உருண்டை” என்று உலகில் உருவாகிவிட்ட இருவகை உண்மைகளை இயல்பாக விளக்குகிறார் மௌலவி. அதைப்புரிந்துகொள்ள மறுக்கும் மாணவனின் மொட்டைத்தலையில் சாக்பீஸால் முட்டை போட்டு மகிழ்கிறார்.

உரையாடல்களிலும் நுட்பமாக நகைச்சுவை ஊடாடிச்செல்கிறது. வைக்கம் முகமது பஷீருடன் ஒப்பிடத்தக்க பிரியம் கொண்ட கிண்டல். மொட்டைத்தலையுடன் கிழிந்த துணித்துண்டு உடுத்து வகுப்பில் நிற்கும் நாலாம்கிளாஸ் மாணவனிடம் ஸ்கூல் இன்ஸ்பெக்டர் கேட்கிறார் ”உன் பேரென்னடா?”. பையன் மூக்கை உறிஞ்சி பதில் சொல்கிறான்.”கம்பிவேலிக்குள் அசன்” [ வீட்டுபெயரை முன்னால் சேர்ப்பது கேரள வழக்கம். கம்பிவேலிக்கல்வீடு ] அடுத்த தடவை வருவதற்குள் கம்பிவேலியில்ருந்து வெளியே வந்துவிடவேண்டும் என்கிறார் இன்ஸ்பெக்டர். அதற்குள் பையனின் இடுப்பில் கிழிந்த லுங்கி ஈரமாகிவிட்டது

நாவலெங்கும் அற்புதங்கள் நடந்தபடியே இருக்கின்றன. தங்ஙள் சாகேப் ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று மந்திரம் ஜபிக்கும்போது அவர் ஏறுவதற்காக நடுத்தண்டவாளத்தில் ரயில் நிற்கிறது. அவர் ஏறியபின் மீண்டும் மந்திரம் போட்டதும் ரயில் செல்கிறது. கன்னாரனும் வண்டியோட்டியும் மிளகு விற்ற பணத்துடன் வரும்போது ஜின்னுகள் நடத்தும் டீக்கடையில் இரவு உறங்குகிறார்கள்.டீக்கடைக்காரரிடம் மிளகு விற்ற பணத்தையும் கொடுத்து வைக்கிறார்கள். காலையில் அங்கே கட்டிடமே இல்லை. நடுக்காடு. ”அது ஜின்னின் வேலை, அடுத்தவருசம் இதே நாள் போய் கேள், நேற்று கொடுத்த பணம் எங்கே என்று. கிடைத்துவிடும் ” என்கிறார் தங்ஙள் .”டே மடையா, ஜின்னுகளுக்க ஒரு நாள் நமக்கு ஒருவருஷம்”

ரிபாய் ரத்தீ·ப் கொண்டாட்டத்தின்போது கத்தியால் வயிற்றைக்கிழித்து உடனடியாக அதை குணப்படுத்திக் கொள்கிறார்கள். கண்ணைத்தோண்டி தட்டத்தில் போட்டபின் மீண்டுமெடுத்து பொருத்திக் கொள்கிறார்கள். அற்புதங்களுக்கு ஒரு யதார்த்த விளக்கம் அளிப்பது யதார்த்தபாணி நாவல்களின் இயல்பு. புனத்தில் குஞ்ஞப்துல்லா அதற்கு முயல்வதில்லை. எல்லாமே கதைதான் இதிலேது தர்க்கம் என்ற பாவனையில் சொல்லிச்செல்கிறார்.

*

நிலப்பிரபுத்துவத்தின் சரிவைச் சொல்லும் நவீனத்துவ நாவல் இது. நவீனத்துவத்திற்குரிய கசப்பு நிறைந்த நகைச்சுவை, இருண்ட வாழ்க்கை நோக்கு, கனகச்சிதமான வடிவம் கொண்டது. ஒரு இருண்ட யுகத்தின் மறைவையும் இன்னொரு ஒளிமிக்க யுகத்தின் பிறப்பையும் சொல்லும் ஆக்கம் அல்ல இது. ஒரு அலை போய் இன்னொரு அலை வரக்கூடிய கடல் ஒன்றை காட்டுவது. அதன் மாறாத இயல்பு, அதன் புரிந்துகொள்ள முடியாத பிரம்மாண்டம். அந்த ஆழத்தைக் காட்டுவதனாலேயே இந்நாவல் முக்கியத்துவம் கொண்டதாகிறது. இந்திய மொழிகளில் மிக இளம்வயதிலேயே ஆசிரியருக்கு சாகித்ய அக்காதமி விருதை பெற்றுத்தந்தது இந்நாவல். இன்றும் மலையாளத்தின் நவீனத்துவப் பேரிலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

குளச்சல் மு யூசுப்பின் மொழியாக்கம் மிகச்சிறப்பாக உள்ளது. தோப்பில் முகமது மீரான் எழுதிய கடலோர மீனவர்களின் வாய்மொழித்தமிழை இந்தக்கதாபாத்திரங்களுக்கு அளிப்பதன் மூலம் வித்தியாசமான ஒரு அசல்தன்மையை மொத்த நாவலுக்கும் அளித்துள்ளார் அவர்.

[மீசான் கற்கள். புனத்தில் குஞ்ஞப்துல்லா .தமிழாக்கம் குளச்சல் மு.யூசுப். காலச்சுவடு பதிப்பகம்]

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Feb 3, 2007

 

முந்தைய கட்டுரைகாடு என்னும் மீட்பு
அடுத்த கட்டுரைஅஞ்சலி- நா.முத்துக்குமார்