பாரதி விவாதம்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ.மோ,

இக்கடிதம் ”பாரதி விவாதம்” பற்றியதே அன்றி ”பாரதி பற்றியது” அல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்திவிடுகிறேன்.

பாரதி பற்றிய விவாதத்தை மூன்று பேர் மட்டுமே முன் எடுத்து சென்றதாகவும் அது எதிர் பார்த்ததே என்றும் தெரிவித்திருந்தீர்கள். அது தொடர்பாக கீழ்க்கண்டவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

1. எதிராளியின் பலத்தில் பாதியை வாலியைப் போல் நீங்கள் வாங்கி கொண்டு விடுகிறீர்கள்? எதிராளிக்கு மூச்சு முட்டுகிறது. அசுர பலம் சார் உங்களுக்கு. எதிராளி எங்கே வாதத்தை எடுத்து செல்வது?

2. தாங்கள் விவாதத்தை எடுத்தும் செல்லும் விதம் சாதாரண வாசகனுக்கு புரிவதில்லை. ஆனால், உங்களுடன் எதிர் வினை புரிந்த மூவரின் எதிர்வினைகளும் ஒரு மிக சாதாரண வாசகனுக்கும் புரியும் விதத்தில் இருக்கிறது. மிக அதிகமான ஆழமான விவரங்களுடன் வாசகனை திணற அடிக்கிறீர்கள். அப்புறம் எப்படி சார், சாதாரண வாசகன் எதிர் வினை புரிவான்? உங்களை பார்த்தால் பயமாக இருக்கிறது சார்.

3. தாங்கள், பாரதி பற்றிய விவாதம் இலக்கிய ஆளுமை உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற முடிவுக்கு வந்து விவாதத்தை எடுத்து சென்றிருப்பதாக சொன்னால், அங்கே தங்களின் நோக்கம் அடிபட்டு போய்விடுகிறது. பாரதி பற்றிய விவாதமே பாரதியை மேலும் புரிந்து கொள்வதற்கும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் தான் என்பது என் தாழ்மையான எண்ணம்.

4. வெகு ஜன ஊடகத்தில் எல்லாம் எளிமையான வசனங்களை கையாலும் நீங்கள், உங்கள் இலக்கிய ஆளுமையை காட்டுவதற்காக அல்லது சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாக சொல்வதற்காக கடினமான மொழியை விவாதத்தில் தேர்ந்தெடுத்து விடுகிறீர்கள்.

5. பாரதி என்பவன் ஒரு பேரிலக்கிய மரபில் இலக்கியத்தின் அடுத்த தலைமுறைக்கான போக்கை நிர்ணயிக்கும் தொடக்க புள்ளியாக (Trend Setter) இருந்திருக்கிறான் என்பது தங்களால் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படி வைத்துப் பார்க்கும் போது பாரதி ஒரு பேரிலக்கிய மரபை அடுத்த தலைமுறைக்கு கடத்தி இருக்கிறான். தங்களின் பாரதி விவாதம் அதை செய்திருக்கிறதா? — அவையே தமிழ் இலக்கிய பாரம்பரியம் பாரதியிடத்து சங்கமிப்பது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை நவீன கவிகளுக்கும் வெகுஜன கவிகளுக்கும் தோற்றுவாயாய் இருக்கிறது — குமாரசாமி சார்

6. பாரதியே ஒரு பேரிலக்கிய மரபை கட்டுடைத்து இலக்கியம் சாதரண மனிதனை சென்றடைய செய்திருக்கிறான் தானே? அவனைப்பற்றிய விவாதம் ஒரு சாதரண வாசகனை சென்றடைந்து இருக்கிறதா? -பேசப்படும் பொருளுக்கு சம்பந்தமில்லாத அதிகப்படி தகவல்களையும் தவிர்ப்பது நல்லது – குமாரசாமி சார்

7. ஒரு பேரிலக்கிய மரபின் நீட்சியாக இருக்கும் நீங்கள் அடுத்த தலைமுறைக்கு இந்த இலக்கியத்தை கடத்த வேண்டாமா? அதிகப்படியான விபரங்களால் மூச்சு திணற அடிக்காமல், எல்லோருக்கும் புரியும்படி துல்லியமாக கேட்ட கேள்விகளுக்கு பதிலை எழுதுங்கள்.- இது நான் சொல்லலை சார். குமாரசாமி சார் சொல்லி இருக்காங்க.

8. வாதம் புரிபவர் ஒரு திறமையான வக்கீல் என்பதால் வாதம் ஒரு போதும் உண்மையாகிவிடாது. பாம்பு போன்று நீளும் தங்களின் கட்டுரைகள் தங்களின் இலக்கிய ஆளுமையை வேண்டுமானால் நிறுவலாமே தவிர பாரதியை சாதாரண வாசகனிடம் சென்று சேர்க்காது.

9. பாரதியை அடுத்த தலைமுறைக்கு(வெகு ஜனத்திற்கு) கடத்துபவர்களாக யாரை கருதலாம் சார்? நான் கீழ்க்கண்டவற்றை குறிப்பிடுகிறேன்.

  • பாரதி தமிழ் சங்கங்கள்
  • பள்ளி சிறுவர்களின் பாட நூல்கள்
  • மேடை பேச்சாளர்கள்

10.உலகத்தில் மிக மேன்மை அடைந்த விசயங்கள் எல்லாமே மிக எளிமையானதாகவும் அவை வெகு ஜனத்தை கவர்ந்ததாகவும் இருந்திருக்கிறது. காந்தியை விட எளிமையை நிரூபித்தவர் உண்டா?

அடுத்த முறை கம்பனை கட்டுடைக்கும் போதும், காந்தியின் காலை வாரும் போதும் தங்களின் கட்டுரைகளின் அடி நாதமாக ஒரு சாதாரண வாசகன் இருக்கட்டும்.

தாங்கள் எழுதும் வேகம் ஆச்சர்யப்பட வைக்கிறது சார்.

என்றும் அன்புடன்,
அ.லெட்சுமணன்

அன்புள்ள லட்சுமணன்,

பாரதி விவாதம் மட்டுமல்ல எந்த ஒரு விவாதமுமே நம்முடைய புரிதல்களை அகலப்படுத்திக்கொள்வதற்காகவே. அதற்காகச் சொல்லப்படும் வாதங்கள் , தகவல்கள் எல்லாமே முக்கியமானவை.

நான் என்னுடைய விவாதத்தில் பாரதியைப்பற்றி மட்டும் விவாதிக்கவில்லை. விவாதத் தலைப்பே பாரதி மகாகவியா என்பதுதான். தமிழ் மரபில், இந்திய இலக்கிய சூழலில், உலக இலக்கிய விவாதத்தில் அந்த மதிப்பீட்டுக்கு என்ன இடம் என்பதே என் முன் இருந்த வினா. அந்நிலையில் அந்த களங்களை எல்லாம் கருத்தில்கொண்டுதான் விவாதிக்க முடியும். அதுதான் முறை. அதையே செய்திருக்கிறேன்.

என்னுடைய விவாதத்தை புரிந்துகொண்டவர்கள் எவரும் நான் மிகையாக அல்லது தேவையில்லாமல் ஒரு தகவலை அல்லது ஒரு வாதத்தைச் சொல்லியிருப்பதாகச் சொல்லமாட்டார்கள். நான் ஒன்றைச் சொல்லவருகையில் முழுமையாக என் தரப்பை சொல்லி முடிப்பதையே விரும்புவேன்.

தெளிவான எளிய மொழியில் சீரான வாதங்களாகவே என் தரப்பைச் சொல்லியிருந்தேன் என்றே நினைக்கிறேன். ஆனால் அவை ஏற்கனவே இலக்கிய விவாதங்களை கவனித்து, கலைச்சொற்களையும் மொழியையும் அறிந்துகொண்டு, வாசிப்பவர்களுக்கானவை. எதையும் முன்னர் வாசித்திராமல் நடுவே வந்து சேர்பவர்களுக்கானவை அல்ல. அப்படி எந்த அறிவார்ந்த விவாதத்திலும் ஒருவர் நுழைந்துவிடமுடியாது

நீங்கள் சொல்ல வருவதுபோல எனக்கு எதிர்வினை ஆற்றியவர்களின் பேச்சுகள் பள்ளிப்பிள்ளைகள் புரிந்துகொள்ளும் அளவில் எளிமையாக இருந்தன என நான் நம்பவில்லை

பள்ளிசிறுவர்களும் பிறரும் பாரதி மகாகவி என சொல்லிக்கொள்வது அல்ல இங்கே பிரச்சினை. இலக்கியமறிந்தவர்களின் மதிப்பீடு பற்றியே பேசப்பட்டது. இலக்கிய முன்னோடிகள் சொன்ன கருத்துக்களே விவாதிக்கப்பட்டன.

எந்த பண்பாட்டிலும் எல்லா விஷயங்களும் எளிமையாகவும் அடித்தட்டிலும் மட்டுமே நிகழவேண்டும் என்ற விதி செயல்பட முடியாது. ஆரம்பக்கல்வி மட்டும் போதும் என சொல்வதற்கு நிகரானது அது. ஆரம்பப்பள்ளியில் வென்று தாண்டி வருபவர்களுக்காக உயர்நிலைக் கல்வியும் கல்லூரிக்கல்வியும் இருந்தாகவேண்டும். ஆரம்பக்கல்வி நிலையில் நின்றபடி உயர்நிலைக்கல்வி புரியாத மொழியில் இருக்கிறது, அது ’மக்களு’க்கானதல்ல என்றெல்லாம் சொல்வது சரியானதாக இருக்காது.

ஈராயிரம் வருட தொன்மை கொண்ட தமிழ்ப்பண்பாட்டின் அறிவுத்தளம் என்பது எளிமையாக பள்ளிக்கூட தளத்திலோ டீக்கடை தரத்திலோ பேசப்படக்கூடிய ஒன்று அல்ல. எளிமையான விஷயங்கள் மட்டுமே இங்கே எப்போதும் பேசப்பட்டன என்பதும் பிழை. இங்கே இதுவரை நிகழ்ந்த விவாதங்கள் மிகமிக நுட்பமானவை, பேரறிஞர் சபைகளில் நிகழ்ந்தவை. அந்த விவாதங்களின் அளவிலும் தரத்திலும் துளிகூட இப்போதில்லை. இது பெரிய வீழ்ச்சி.

அந்த வீழ்ச்சியை உணராமல் அதை ஒரு சிறப்பாக எடுத்துக்கொண்டு எல்லா விவாதங்களும் அந்த தளத்திலேயே நிகழவேண்டுமென கோருவதை அறிவார்ந்த கோரிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது. அது தமிழின் பெரிய அறிவுமரபை நிராகரிப்பது. உலக சிந்தனையை நிராகரிப்பது. ஏன் அறிவையே நிராகரிப்பது.

கடைசியாக காந்தியைப்பற்றி நீங்கள் சொல்வது. இதுவும் ஒரு பள்ளிக்கூடம் சார்ந்த மனப்பிரமையே. காந்தி பேசிய விஷயங்களில் ஒரு சிறு பகுதியே எளிமையானது. காந்தி தன் காலகட்டத்துச் சிந்தனைகளையும் பிரச்சினைகளையும் மிக விரிவாக எதிர்கொண்டு பேசிய தத்துவஞானி. பள்ளித்தளத்தில் எல்லாம் காந்தியின் சிந்தனைகளின் பெரும்பகுதியை விவாதிக்க முடியாது.

பள்ளிக்கூட பாடத்திலுள்ள சில கதைகளோ பொன்மொழிகளோ அல்ல காந்தியின் சிந்தனை. காந்தி பல்லாயிரம் பக்கம் எழுதிய எழுத்தாளர். உலக சிந்தனையாளர்களிலேயே மிக அதிகமாக எழுதியவர்களில் ஒருவர். காந்தியை வாழ்நாள் முழுக்க செலவிட்டு, மிக கூர்ந்து வாசித்து, ஆழமாக விவாதித்தே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். காந்திபற்றிய ஆழமான கட்டுரைகளுக்கு காந்தி இன்று தளத்தை வாசியுங்கள்.

உங்கள் மனநிலையை நான் தினமும் பலரிடமிருந்து கண்டுகொண்டிருக்கிறேன். அதை அறிவின் மீதான அச்சம் என சொல்லலாம். அந்த அச்சம் காரணமாக அறிவார்ந்த விவாதங்கள் மீதான ஒரு மனத்தடை உருவாகிறது. அதை தன்னிடமுள்ள குறையாக, அல்லது தன்னுடைய தகுதியின்மையாகக் காண அகங்காரம் மறுக்கிறது. ஆகவே அறிவார்ந்த விஷயங்களை குறைசொல்லும் மனநிலை உருவாகிறது.

இவ்வாறு குறைசொல்பவர்களில் சிலர் தங்கள் இயலாமையை நக்கல், கிண்டல் என ஆக்கிக்கொள்கிறார்கள். சிலர் எழுத்தாளர்களுக்கு அறிவுரை சொல்லுமிடத்தில் தங்களை அமர்த்திக்கொள்கிறார்கள்.

இதெல்லாம் ’மக்களுக்கு’ புரியுமா என்ற கேள்வியை எந்த தமிழ் எழுத்தாளனும் அடிக்கடி எதிர்கொள்வான். முதலில் உங்களுக்கு புரிகிறதா என்று பாருங்கள், புரியாவிட்டால் உங்களை தகுதிப்படுத்திக்கொள்ள என்ன செய்யலாம் என்று பாருங்கள் என்பதே பதிலாக இருக்கமுடியும்.

இதற்கான காரணம் நம் கல்விமுறை. எதையும் புரிந்து விவாதித்து வாசிக்க அவை நம்மை பயிற்றவில்லை. மேற்கோள்காட்ட தொகுத்துச்சொல்லவே பழக்குகின்றன. ஆகவே எளிய அறிவுத்தளம் கூட நமக்கு மிரட்சியை அளிக்கிறது

உலக அளவில் நிகழும் இலக்கிய விவாதங்கள் , தத்துவ விவாதங்களை நாமும் நிகழ்த்திக்கொள்ள நாம் இன்னமும் நுட்பமாகவும் செறிவாகவும் இன்னும் பலமடங்கு விரிவாகவுமே செல்லவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைஇறந்தவர்கள்
அடுத்த கட்டுரைகுற்றமும் தண்டனையும்