அண்ணா ஹசாரே- அவதூறுகள்

அன்பின் ஜெ..

ஸ்வாமிநாதன் அய்யர் ஒரு புத்திசாலியான பத்தி எழுத்தாளர். மரபான பொருளாதார விஷயங்களை எழுதும் நிபுணர். அண்ணா ஹஸாரேயின் குழு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய அவரது பத்தி. இதில், முரண்பாடான பல விஷயங்கள் இருந்தாலும், அடிப்படையான பிரச்சினை ஒன்று – ஹஸாரேயின் இயக்கத்துக்குக் கறை சேர்ப்பது –

கிரண் பேடியும், கேஜ்ரிவாலும் நடந்து கொள்ளும் முறை. “நாங்கள் தவறு செய்திருந்தால், எங்களைத் தூக்கில் போடுங்கள்; ஆனால், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுங்கள்” என்னும் கேஜ்ரிவாலின் பேச்சு மிக முட்டாள்தனமான ஒன்று. Confession statement போல இருக்கிறது.

என்கவுண்டர் காவலர்கள் என்று ஒரு குழு உண்டு. அவர்கள் சமூக எதிரிகளை சுட்டுக் கொல்வது, ஒரு பெரும் cleansing என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கொஞ்சம் அருகில் சென்றதும் தான் தெரிகிறது – அதுவும் ஒரு தொழில்தான். (மும்பையில்). எடுத்துக் காட்டாக, ஒரு செல்வந்தருக்கு, பணம் கேட்டு மிரட்டல் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அவர், அகில உலகப் பிரசித்தி பெற்ற போக்கிரியாக இருந்தார், மரியாதையாகக் கொடுத்து விடுவார். லோக்கலாக, இருந்தால், ஒரு பொருளாதார அளவீடு செய்வார். கேட்கும் தொகை அதிகமாக இருந்தால், என்கவுண்டர் காவலரிடம் செல்வார். அவர்கள், அந்த லோக்கல் போக்கிரியைக் குறைந்த செலவில் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிடுவர். (கொஞ்சம் அருகில் இருந்து பார்த்த ஒரு சம்பவமே இதன் மூலம்).

அப்படி எதுவும் ஆகிவிடாமல், பாரதத்தையும், அண்ணா ஹஸாரேயையும் எப்போதும்போல் இறைவன் காப்பாற்றுவாராக..

பாலா

அன்புள்ள பாலா,

ஆம், அண்ணா ஹசாரே குழுவினர் ஊடகங்களை எதிர்கொள்ளும் முறை அப்பாவித்தனமாகவே உள்ளது. அரசியல்வாதிகளின் தேர்ந்த நடவடிக்கைகளை, ஊடகநரித்தனங்களை எதிர்கொள்ள இதெல்லாம் போதாது.

அண்ணாஹசாரே ஊடகங்களின் உருவாக்கம் என்று கூவியவர்கள் இப்போது ஊடகங்கள் எந்த உருப்படியான குற்றச்சாட்டும் இல்லாதபோது, வெறும் வதந்திகளையும் அவதூறுகளையும் ஆயுதமாக்கி, அண்ணா ஹசாரே குழுவினரை அவமதிக்க முயல்வதை எப்படி விளக்குகிறார்கள்?

இந்த வகையான அவதூறுகள் மூலம் அவர்களின் தலைவர்கள் சிறுமைப்படுத்தப்பட்டிருந்தால் என்ன சொல்வார்கள்? அண்ணா ஹசாரே முதலாளித்துவ ஊடக உருவாக்கம் எனப் பேசிய எல்லா இடதுசாரிகளும் தீவிர இடதுசாரிகளும் அதிதீவிர இடதுசாரிகளும் அந்த முதலாளித்துவ ஊடகங்களில் சென்று அமர்ந்து அவரை அவதூறுசெய்கிறார்கள்.

அண்ணா ஹசாரேயின் இயக்கம் இந்திய ஊடக முதலாளிகள் விரும்பாத ஒன்றாகவே இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு நாடெங்கும் ஆதரவு அலை கிளம்பியபோது அவர்கள் அதைக் காசாக்கிக்கொண்டார்கள். அதாவது அண்ணா ஹசாரே ஊடக உருவாக்கம் அல்ல. அவர் தன்னைத் தியாகம் மூலம் உருவாக்கிக்கொண்டவர் . ஊடகங்களால் அவரைப்போன்ற ஒருவரை ஒருபோதும் உருவாக்க முடியாது. அப்படி ஒருவர் உருவாகி வரும்போது அவரை அவர்கள் விற்க முயல்வார்கள்

ஆனால் அவர் என்றுமே அவர்களுக்கு எதிரி தான். ஆகவே இப்போது அந்த அலை அடங்கியதும் அவரை அழிக்க முயல்கிறார்கள்

அவர்களை வெல்ல அண்ணா ஹசாரேவால் முடியவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைராமாயணம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமாநில உணர்வுகள்