பாரதி விவாதம்-7 – கநாசு


அன்புமிக்க ஜெயமோகன்

தனக்கு முன்னர் வாழ்ந்த கவிஞர்களை பாரதி வாசித்ததிலோ அதில் குறிப்பிடத் தக்கவர்களின் தாக்கம் பெற்றதிலோ எவ்வித மாற்றுக் கருத்தும்இல்லை.அவனை சுத்த சுயம்பு என்றும் நான் சொல்லவில்லை.
ஆவுடையக்காவின் சொற்செட்டுகள் மிகப்பழையவை.”சொல்புதிதாய் பொருள்புதிதாய்”நிற்கும் பாரதியின் வீச்சுக்கள் அவற்றில் இல்லை.

அதேபோல மந்திர தீட்சை உபாசனை போன்றவற்றால் ஆவுடையக்காள் மொழிகளில் தென்படும் சரணாகதித் தன்மை பாரதியிடம் இல்லை. கண்ணன் பாட்டிலே கூட நாயகி பாவம் என்னும் உத்தியை புதிது என்றுநான் சொல்லவில்லை.கடவுளை உறவுபடுத்திப்பாடும் எந்தக் கவிதையிலும் ஒரு பணிவும் சரணடைதலும் தென்படும்.

பாரதியின் பக்தித்தொனி அவற்றிலிருந்து முற்றாக மாறுபட்டது. “வீழ்வேன் என்று நினைத்தாயோ”என்று தனக்கெல்லாமாய் இருக்கும் கடவுளையே கேட்பது.

தன்னை முழுதாகத் தாழ்த்திக் கொண்டு தெய்வத்தை மேம்படுத்தும் மனநிலையில்தான்,விரக ஏக்கத்தில்தான் பெரும்பாலான நாயக நாயகி பாவக் கவிதைகள் எழுதப்பட்டன.”முன்னம் அவனுடைய நாமம்
கேட்டாள்”என்ற திருநாவுக்கரசரில் தொடங்கி,

“பைத்த அரவப் பணியணிவார்; பனைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்
மைத்த மிடற்றர்-அவர்தமக்கு மாலையிடவே நானுளத்தில்
வைத்த கருத்து முடிந்திடுமோ?வறிதே முடியாது அழிந்திடுமோ
உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரிநூல் உத்தமரே’’

என்று சிவனை மணக்க சோதிடம் பார்க்கும் வள்ளலார் வரை தாழ்வெனும் தன்மை சொல்லும் போது பாரதியின் பக்தி தனித்தும் தெரிகிறது.உருக்கமும் தருகிறது.அவனுடைய உள்நிலை அனுபவத்தையும் தருகிறது.

நீங்கள் ஆன்மீகத்தைப் புறவயமாகப் பார்ப்பதால் இந்தக் கோணம் உங்களுக்குப் பிடிபடவில்லையோ என்பது என் இப்போதைய எண்ணம்.

பாவபக்தி பழைய மரபில் இருந்தாலும் அதில் மிகப்புதிய முத்திரையை பாரதியே பதிக்கிறான். கண்ணனை சேவகனாய்க் காண்பதை நீங்கள் உபரியென்று தள்ளுவது நியாயமில்லை. இதற்குமுன் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனை தந்தை நிலையில் வைத்துப் பாடியிருக்கிறார்கள்.ஆனால் பாரதி கொள்ளும் உரிமை,பக்தியில் நடுநிலை கேலி,அதேநேரம் உரிமை மகன் போன்ற எக்காளம் எல்லாம் முந்தைய பக்தி இலக்கியங்களில் இல்லை.

பிரபந்தம் காட்டும் பாவபக்தியெல்லாம் பரவச நடுக்கத்தையே காட்டுகின்றன.ஆன்மீக நாட்டமும் சமூக வாட்டமும் ஒருசேர வார்க்கப்பட்ட பாரதியின் பாடல்கள் இதே தளத்தில் இருப்பினும் அவை முற்றிலும் புதிய வார்ப்புதான்.

இனி,பாரதியைப் படித்து இன்னின்ன உணர்ச்சிகளைப்பெற்றேன் என்று நான் சொல்லவேயில்லை. என் வாசிப்புகளையே பக்தி இலக்கியங்களில் தொடங்கியவன் என்ற முறையில் பாரதியின் தனித்தன்மையை அடையாளங் கண்டு விவாதத்தில் வைக்கிறேன்.

பாரதி மாயை பழைய மரபை மறைக்கவில்லை.பழைய மரபை அவன் உள்வாங்கிக் கொண்ட விதமும் அதிலிருந்து தனித்தொளிரும்அவனுடைய சுயமுமே பாரதியின் பலம் என்பது என்னுடைய வாதம்.

மரபின்மைந்தன் முத்தையா

அன்புள்ள முத்தையா

நான் என் கருத்துக்களை இந்த விவாதத்தைப்பொறுத்தவரை ஒருவாறாக தெளிவுபடுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன். இப்போது நான் சொல்லிக்கொண்டிருப்பதிலும் நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பதிலும் சாராம்சமான முரண்பாடுகள் ஏதுமில்லை. தமிழில் இருந்த நீண்ட பக்திக் கவிமரபின் நுனியிலேயே பாரதி இருக்கிறார் என்பதையும், தன் காலகட்டத்துப் பொதுமொழிபில் இருந்தே அவரும் பேச ஆரம்பித்திருக்கிறார் என்பதிலும் நமக்குள் வேறுபாடு இல்லை.

கடைசியாக பாரதியில் இருக்கும் மேலதிகமான தனித்துவமென்று நீங்கள் சொல்ல வருவது அதற்கு முன்னிருந்த பக்திக் கவிஞர்களிடம் இல்லாத ஒரு நேசபாவம் இறைவனுடன் பாரதிக்கு இருந்தது என்பதை மட்டும்தான். முதல் விஷயம் நான் அதை நம்பவில்லை. ஆழ்வார்பாடல்களில் பாரதி கொண்டிருந்ததாக நீங்கள் சொல்லும் அதே சகஜமான நட்பும், கொஞ்சலும், அதட்டலும் எல்லாம் இன்னும் தீவிரத்துடன் வெளிப்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.அதற்கான உதாரணங்களை விரிவாக எடுத்துச் சொல்லலாம். பாவபக்தியில் புற உலக யதார்த்தம் அழிந்த லயநிலைக்கு தமிழில் என்னளவில் மிகச்சிறந்த உதாரணம் நம்மாழ்வாரும் ஆண்டாளும் பெரியாழ்வாரும்தான்.

மேலதிகமாக கண்ணனை நண்பனாகவோ வேலைக்காரனாகவோ உருவகித்தார் என்பது மட்டுமே உள்ளது என்றால் தமிழ் மரபின் பெருங்கவிஞர்களின் வரிசையில் பாரதியை வைப்பதற்கான வலுவான ஆதாரங்களாக அவற்றைக் கொள்ளமுடியாது, அவை வாசகனாகவும் திறனாய்வாளனாகவும் எனக்குப் போதாது என்பதை மட்டும் வலுவாகச் சொல்ல விரும்புகிறேன்.

இந்தத் தளத்தில் நான் முன்னிறுத்த விரும்பும் பாரதி கவிதைகள் இவை அல்ல. நீங்கள் சொல்வது சரி, நான் இந்த பக்தி மனநிலையை ஒரு நவீனகால கவிஞனின் இயல்பான அகநிலையாகக் கொள்ளவில்லை. ஒரு பக்திக் கவிதையை, எந்தத் தளத்தில் நிற்பதாக இருந்தாலும், இந்த நூற்றாண்டின் கவிதையாக மதிப்பிடத் தயங்குகிறேன். அதை சென்ற யுகத்தின் நீட்சியாக மட்டுமே என்னால் பார்க்கமுடிகிறது. அவற்றின் கவித்துவத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த யுகத்தின் மகாகவி ஒருவன் அதை மட்டும் எழுதினால் எனக்கு போதாது. பக்தியின் பல்வேறு பரிமாணங்கள் மிகப்பிரம்மாண்டமாக வெளியான இந்தியக் கவிதையுலகில் பாரதியை இந்த முகத்துடன் கொண்டு நிறுத்தும்போது அவனுடைய ஆகிருதி மேலும் சிறிதாகவே ஆகுமென நினைக்கிறேன்.

க.நா.சுவைப்போலவே நான் பாரதியில் முக்கியமாகக் காண்பது அவரது தனிக்கவிதைகளை. அவற்றிலேயே இந்த யுகத்தின் கவிதைக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அவற்றின் மொழி பழையதாகவே நீடிக்கிறது என்றாலும் கூட அவற்றை நான் நவகவிதை என்றே சொல்வேன். க.நா.சு சுட்டிய மழை ஓர் உதாரணம். அந்தக்கவிதையில் க.நா.சு என்ன சிறப்பு கண்டார்? நான் க.நா.சுவிடம் பேசிய ஒரேசந்தர்ப்பத்தில் அவர் ’அதிலேதான் அவர் யாரோ அது டிரெடிஷனோட தடை இல்லாம வெளிப்பட்டிருக்கு…’ என்றார். அதை நான் இன்று இப்படி விளக்குவேன்.

ஒரு நல்ல கவிதையில் அக்கவிஞனுக்கே உரிய ஆளுமையும் மொழியின் தனித்தன்மையும் வெளிப்படவேண்டும். அதில் இருந்து வாசகன் வாசித்து முன்னால் செல்ல இடமிருக்கவேண்டும். அதாவது அது கருத்தைச் சொல்லக்கூடாது , கருத்தை வாசகன் உருவாக்கிக்கொள்ளச் செய்யவேண்டும். மாறி வரும் அரசியல், சமூக, மத உண்மைகளுக்கு அப்பல் சென்று அது நிரந்தரமான ஒரு மெய்த்தரிசனத்தை அளிக்கவேண்டும்.

பாரதியின் ஆளுமை என்பது வேகமே தன்னியல்பாகக் கொண்டது. மொழி அந்த வேகத்தைப் பின்தொடரதுடிப்பது. சம்பிரதாயமான யாப்பு வடிவில் அவர் அந்த வேகத்தை நிகழ்த்தமுடியாமல் மூச்சுத்திணறுவதே வழக்கம். அந்த இரும்புச்சட்டையை மீறி சில வரிகளே தெறித்து மேலே வரும். இந்தக்கவிதை முழுச்சுதந்திரத்துடன் கொப்பளிக்கிறது. வேகமே இதன் அழகு.

இந்தக் கவிதையில் மழை எதைக்குறிக்கிறது? வெறுமொரு படிமம் மட்டுமே இதில் உள்ளது. மழைமேல் கவியும் பாரதியின் மனம் கொடுக்கும் அர்த்தம் என்ன? ’திசை வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர் செண்டு புடைத்திடுகின்றார்’ என்ற வரி பாரதி அந்த மழையை ஒரு பிரம்மாண்டமான அகநிகழ்வாகக் காண்பதன் தடையம். வாசகன் அவனுடைய கற்பனையின் துணைகொண்டு வெகுதூரம் செல்லக்கூடிய கவிதை இது. கவிதை வாசிப்பை விமர்சகன் விளக்கக்கூடாது. இருந்தாலும் ஓர் உதாரணமாகச் சொல்கிறேன். அந்தக் காலகட்டத்தின் அரசியல் கொந்தளிப்புக்கான பாரதியின் எதிர்வினையாக இருக்கலாம். அல்லது அவரது ஆன்மீகக் கொந்தளிப்பின் சித்திரமாக இருக்கலாம்.

இந்தக் கவிதையில் உள்ள மரபின் நுட்பங்களையே நான் முக்கியமாகக் கருதுவேன். நவ கவிதையில் இப்படித்தான் மரபு வெளிப்படவேண்டும், உள்நுழைந்து அக் கவிஞனின் அகமனமாக ஆகி அவனுக்கே உரிய படிமங்களாக. இதை ஊழித்தாண்டவத்துடன் தொடர்புபடுத்தலாம். ’ஆயிரந் தலை தூக்கிய சேடனும் பேய்போல் மிண்டிக் குதித்திடு கின்றான்’ காளியின் தாண்டவமாகக் கொள்ளலாம். இந்திய மெய்யியல் மரபில் இருந்து உருவானதென்றாலும் முற்றிலும் புதியதாக பாரதியின் அந்தரங்கத்திற்குள் நிலைகொள்கிறது இக்கவிதை.

இந்தக் கொந்தளிப்பு எதைக்குறிக்கிறதென இருபத்தைந்தாண்டுகளாக மீளமீள வாசித்துக்கொண்டிருக்கிறேன். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் ஒரு யுகப்புரட்சியை அகக்கண்முன் கண்ட கவிஞனின் தாண்டவம் என நினைத்தேன். கண்டத்தட்டுகள் உரசிக்கொள்வது போல இரு யுகங்கள் உரசுவதன் பூகம்பம் என்று. இன்று, இதை இன்னும் ஆழமான ஒரு அகக்களிப்பு நிலை என நினைக்கிறேன். அதில் உள்ளது இக்கவிதை அளிக்கும் மெய்மை.

நான் சொல்லும் கால இடம் கடந்த தூய கவிதை இதுவே. க.நா.சு இக்கவிதையைச் சுட்டிக்காட்டியதை நான் முதன் முதலில் வாசித்த நாள்முதல் அவரை என் ரசனையின் குருவாகவே எண்ண ஆரம்பித்தேன். இன்றும், பாரதியின் வாசகர்களில் சிறந்தவர் க.நா.சுவே என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு படைப்பாளியின் உச்சகணங்களை, அவனுடைய மிகச்சிறந்த பங்களிப்பைத் தொட்டறிய முயல்பவனே ஆதர்ச வாசகன். பாரதியின் அத்தனை கவிதைகளில் இருந்தும் இந்த மாபெரும் கவிதை நோக்கி வந்து சேர்ந்த அந்த அதி துல்லிய ரசனை என்னை பிரமிப்பிலாழ்த்துகிறது. சம்பிரதாயமாக எல்லா வரிகளுக்கும் பொழிப்புரையும் நயவுரையும் அளித்து பாரதிமேல் குவிக்கப்பட்ட பல்லாயிரம் பக்கங்களை ஊடுருவி இக்கவிதைக்கு க.நா.சு வந்தாரென்பது அவரை அறிந்தவர்களுக்கு ஆச்சரியமூட்டுவதல்ல.

இக்கவிதைக்கு மறுபக்கமாக அமையும் ஒரு கவிதை ‘பிழைத்த தென்னந்தோப்பு’. நேரடியான கருத்துப்பிரச்சாரமோ அல்லது வர்ணனைகளோ இல்லாததால் அதிகம் பேசப்படாது போன கவிதை. அடித்துச்சுழற்றி வீசி அடங்கும் பெரும்புயலில் ஒரு தென்னந்தோப்பு பிழைத்தது. ’வறியவ னுடைமை அதனை வாயு பொடிக்க வில்லை’ அந்த தோப்பில் ஒரு மரத்தின் அடியில் சிறியதோர் நிழலில் அமர்கிறார். தனிமையின் சாரமாக கவிதை.. ’என்றும் கவிதையிலே நிலையாம் இன்பம் அறிந்து கொண்டேன்’

பாரதியின் இன்னொரு இயல்பான அந்தரங்கக்குரல் ஒலிக்கும் கவிதை இது. வேகத்தின் மறுபக்கம். எந்தப்புயலில் இருந்து தன் சின்னஞ்சிறு தோப்பு தப்பிப்பிழைத்தது என்கிறார்? அன்றைய அரசியல் புயலா? லௌகீக வாழ்க்கையின் கொந்தளிப்பா? உறவுகளின் அலைக்கழிப்பா? மரணமா? அதிலிருந்து கையில் கொஞ்சம் கவிதையுடன் மீண்டதைத்தான் சொல்கிறாரா? ஆம் என நான் எண்ணிய காலங்கள் உண்டு. ஆனால் அந்த மரம்பிடுங்கி வீசும் பெரும்புயலை இன்று நான் இன்னும் ஆழத்தில், யோகம் மட்டுமே சென்று தொடும் தளத்தில்,அடையாளம் கண்டுகொள்கிறேன். அணுவைப் பிளந்தால் அண்டம் வெளிப்படும் புயல் அது.

கொந்தளிப்புடன் தாண்டவமாடிய கவிஞன் அமைதியின் சின்னஞ்சிறு தீவில் எப்படி அடைக்கலம் புகுந்தான்? அங்கே அவனுக்குக் கவிதை மெல்லிய காற்றாக ஆறுதல் கொடுத்ததா என்ன? புயல் அந்த வறியவனுக்கு உண்மையிலேயே கருணைகாட்டியதா?

சம்பிரதாயமான பக்திக்கவிதைகளில், மரபு ஏற்கனவே அடைந்த நுட்பத்தை சற்றே வேறுபாடுகளுடன் அடைவதை நான் நவீன யுகத்தின் கவிஞனின் ஆன்மீகமாக நினைக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் விளிம்பில் நிற்கும் கவிஞனுக்கு முழுமையான பாவபக்தி என்பது ஒரு சிறப்பும் அல்ல. பாரதியின் ஆன்மீகம் என்பது இத்தகைய கவிதைகளில் ஒரு பக்கம் பெரும்கொந்தளிப்பாக மறுபக்கம் அந்தக்கொந்தளிப்புக்குள் சிறு சுடரைக் காக்கும் உள்ளங்கை அரணாக மாறிமாறிக்கொள்ளூம் மாபெரும் நாடகத்திலேயே உள்ளது.

அந்தக்கவிதைகளை அவன் அடைந்த காலகட்டத்திலேயே அவனுடைய கவிதை அவன் மட்டுமே செல்லக்கூடிய அவனுடைய உச்சத்தை அடைந்தது. அங்கே அவன் அடைந்தவையே ’எந்நாளும் அழியாத மாகவிதை’. அக்கவிதைகளே சாத்தியப்பட்டிருக்கக்கூடிய ஒரு மகாகவியை நமக்குக் காட்டுபவை.

ஜெ

முந்தைய கட்டுரைபாரதி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசேட்டையும் பரிணாமமும்-கடிதம்