பகடி

 

கேரளத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று பகடி. எதையும் எபோதும் பகடி செய்யலாம். பகடியை கிட்டத்தட்ட ஒரு குடிசைத்தொழில் போலவே ஆக்கியிருக்கிறார்கள். பகடிக்கலைஞர்களாக இருந்து திரைக்கு வந்த புகழ்பெற்ற நடிகர்கள் பலர். முக்கியமானவர்கள் ஜெயராம்., திலீப், கலாபவன் மணி. இப்போதும் கலாபவன் மணி பகடிப்பாடல்களை வெளியிட்டு வருகிறார். சங்கர…சங்கரா ஆஆ போத்தினே தல்லாதடாஎன்ற பாடல் மூலப்பாடல் மறைந்த பின்னரும் இப்போதும் ஒலிக்கிறது

 

மறைந்த மலையாள நடிகர் திக்குறிச்சி சுகுமாரன் நாயர் பிரபலமெட்டுகளில் ஆபாசமான பகடிப்பாடல்களை புனைவதில் வல்லவர். அவரது பல பாடல்கள் வாய்மொழியாகவே பரவி சாகாவரம் பெற்றவை. பலபாடல்களை நாம் பாட மனைவி கேட்டால் விவாகரத்து உறுதி. பிரபலமான கவிதைகளுக்கும் அவ்வாறு அவர் பகடி எழுதியிருக்கிறார்.

 

மகாகவி குமாரன் ஆசானின் வீணபூவு‘ [உதிர்ந்த மலர்] என்னும் சாகா வரம் பெற்ற கவிதைக்கு அவர் எழுதிய பகடியை வாசித்தால் ஆசான் சொற்கத்தில் சிரித்து உருள்வார். புகழ்பெற்ற பக்திக்கவிதையான பூந்தானம் நம்பூதிரியின் ஞானப்பானையின் பகடியை குருவாயூரப்பன் ரசிப்பார், பக்தர்கள்தான் புண்படுவார்கள். அல்லாவையும் நபி¨யையும் கிண்டல் செய்யும் முஸ்லீம் மாப்பிள்ளைப்பாடல்கள்கூட உண்டு.

 

ஆபாசமான பகடிப்பாடல்களை அக்கணமே புனைவதில் இன்னொரு நிபுணர் ஞானபீடபரிசு பெற்ற தகழி சிவசங்கரப்பிள்ளை. அதனாலேயே அவரை எல்லா சபைகளிலும் விரும்புவார்கள். தகழியின் பகடிகளின் முதன்மை ரசிகர் பஷீர். அவற்றை பஷீர் குறித்து வைத்திருந்தார் என்பார்கள். தகழியின் குருநாதர் கேரள மறும்லர்ச்சி சிந்தனையாளரான கேஸரி பாலகிருஷ்ணபிள்ளை. அவரும் நடராஜகுருவின் ஆபாச பகடிப்பாடல்களை பாடிச்சிரிப்பதை அப்போது அதிர்ச்சியுடன் கேட்டு நின்ற ஒரு சீடர் பிற்பாடு அதை ஆதங்கத்துடன் பதிவுசெய்திருக்கிறார்.

 

பகடி உண்மையில் கருத்தியல் அதிகாரத்துக்கு எதிரான ஒரு சமூகத்தின் எதிர்வினை. புனிதம் உன்னதம் மகத்துவம் என்றெல்லாம் வழிபடு பிம்பங்களை உருவாக்கும் செயலை பகடி தலைகீழாக்குகிறது. ஒரு சமூகம் பக்தியையும் விசுவாசத்தையும் மனநோய் அளவுக்குக் கொண்டுபோவதில் இருந்து காப்பாற்றுகிறது. பகடி ஒரு மகத்தான சமநிலை எடை.. சமூகத்தில் கல்வி பரவும்போது சொல்லப்பட்டவற்றை அப்படியே ஏற்க மக்கள் தயங்கும்போது இயல்பாகவே பகடி உருவாகி வலிமை பெறுகிறது.

 

பகடி ஒரு ஜனநாயகச்செயல்பாடு. கருத்தியல் அதிகாரம் நேரடி வன்முறையை இழந்து உரையாட முன்வரும்போது அது பகடியை அனுமதிக்கிறது. புன்னகைக்கும் அதிகாரமே ஜனநாயகம் காணும் ஆகப்பெரிய கனவு. அது பகடி மூலம் நிறைவேறுகிறது என்று சொல்லலாம். மிக மோசமான அதிகாரம் சுமத்தப்பட்ட சமூகங்களில்தான் பகடி கொந்தளிப்பை உருவாக்குகிறது. தமிழ்நாட்டில் சாதித்தலைவர்கள், மதபிம்பங்கள், நடிகர்கள் பகடிக்கு எதிராக வன்முறை மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். 

 

பகடி இளம் வயதில் இயல்பாகவே உருவாகி வருகிறது. குறிப்பாக பதின்வயதுகளில். அப்பா, ஆசிரியர், அரசு போன்ற அமைப்புகளை எதிர்க்க இளம் மனம் கண்டுபிடிக்கும் உத்தி இது. பள்ளிகளில் பகடியை அனுமதிப்பது அல்லது குறைந்தப்ட்சம் கண்டும் காணாமல் போய்விடுவது அவசியம். இல்லையேல் பையன்கள் மனநோயாளிகளாகவே ஆவார்கள். பள்ளி கல்லூரிகளில் உள்ள பகடியும் நக்கலும் மெல்லமெல்ல இல்லாமல் ஆகின்றன. காரணம் நாம் அதிகாரத்துக்குப் பழகிவிட்டிருக்கிறோம். அதிகாரத்தின் பகுதியாக ஆகிவிட்டிருக்கிறோம்.

 

பள்ளிப்பையன்களின் பகடியில் கொள்கைகள், புனித உருவங்கள்,  அதிகார அமைப்புகள் எப்போதும் தலைகீழாகக் கவிழ்க்கப்படுகிறார்கள்.  என் பையனின் நண்பனின் அப்பா பெயர் ஆரோக்கியம். அவன் தந்தையை ”arrow சொல்லிச்சுஎன்றுதான் சொல்வது. என் பையன் அப்பா என்பதற்குப் பதிலாக திருவிளையாடல் படத்தின் ஒரு துறவி சொல்வதுபோல அப்பனேஎன்று கட்டைக்குரலில் அருள்ததும்ப அழைப்பதுண்டு

 

எல்லா பாடல்களையும் உடனடியாக பகடி ஆக்கிவிடுகிறார்கள். எங்கே எனது கழுதை? நான் இரவில் அவிழ்த்துவிட்ட கழுதை?” என்று தூய செவ்வியல் பண்பும் உண்டு தாடி மீசை முகத்தில் இல்லை, கத்திக்கு வேலை இல்லை, மொழுமொழுண்ணு அம்மாபுள்ளை. சரவணாஅ–ஆஎன்று நவீனத்துவமும் உண்டு.

 

நா.முத்துக்குமாரின் ஒரு தனிச்சிறப்பு அவர் மனதுக்கு இருபது தாண்டுவதே இல்லை என்பதே. என் ஆபீஸ¤க்கு ஒருமுறை அவர் வந்தபோது அவரது பாடலுக்கு பையன்கள் போட பகடிகளைச் சொன்னேன். உற்சாகமாக நகைத்து தன் பாடலுக்கு தானே போட்டுவைத்த பகடிகளை பாடினார். கடும் உழைப்பில் எல்லாவற்றுக்கும் அவரே பகடி எழுதி சேமித்து வைத்திருக்கிறார்!

 

பகடி எளிமையான, ஒடுக்கப்பட்ட, அடித்தள மக்களின் ஆயுதமும் கூட. அதனால்தான் கிராம மக்கள் எப்போதும் பகடி செய்கிறார்கள். எம்.ஜி.ஆர்,சிவாஜி எதையுமே விட்டு வைப்பதில்லை. அதை எழுதப்போய் நான் பஞ்சமாபாதகம்செய்துவிட்டதாக அறிவுஜீவிகளே பொங்கியது நினைவுக்கு வருகிறது. ஒப்புநோக்க தலித்துகளின் பகடி தீவிரமானது. அதை தமிழில் சொ.தருமன், ராஜ்கௌதமன் போன்றோர் எழுதியிருக்கிறார்கள்.

 

நான் என் நேரடி அனுபவத்தில்தான் பிச்சைக்காரர்களின் பகடியைக் கேட்டு அதை ஏழாம் உலகத்தில் மறு ஆக்கம்செய்து எழுதினேன். அம்மா தாயே, சோதிலட்சுமிஎன்று கூவும் குய்யன் என்ற பழனிப் பிச்சைக்காரர் இருக்கிறாரா தெரியவில்லை. அவர்களின் பகடியில் சிலசமயம் குரூரமும் சுயவெறுப்பும் கலந்து ஒலிக்கும். மணிக்கட்டுடன் கை முடிந்துவிட்ட ஒரு ஆசாமி பக்கத்தில் கால் இல்லாத பெண்ணுடன் அமர்ந்திருக்க  ஒரு அம்மாள்  நான்கு இட்டிலியைப்போட்டுவிட்டு கல்யாணம் ஆயாச்சாடா உனக்கு?” என்றார். அவன் கையிருக்க கவலை என்னத்துக்கம்மா? இன்னும் பத்துகூட கெட்டிக்கிடுவேன்என்றான்.

 

பகடி இல்லாவிட்டால் வன்மங்கள் வளர ஆரம்பித்துவிடும்.  ஆகவேதான் அதிகாரத்தைக் கட்டி எழுப்ப எண்ணுபவர்கள் மட்டுமல்ல மாற்று அதிகாரத்தை கட்டி எழுப்ப எண்ணுபவர்கள்கூட பகடியை அஞ்சுகிறார்கள்.

 

நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் இது 

 

தேர்தல் 2009 – சிறப்பு பாடல் !

 

(தேர்தல் பிரசாரத்தில் எந்தக் கட்சியினரும் இந்தப் பாடலை இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம்.)

 

 

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே என் மக்களே!
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!
தேர்தல் என்னும்
பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய
ஓட்டு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

 

அன்னையும் அம்மாவும் தந்ததா
இல்லை ஜாதியின் வல்லமை சூழ்ந்ததா
கூட்டணி நான் அறியாததா
புது டெல்லியில் எம்நிலை எம்.பி.யாய் உயர்ந்திட
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

 

அத்தனை ஓட்டுகள் உம் இடத்தில்
யாம் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்
வெறும் சின்னம்தான் உள்ளது எம் இடத்தில்
அதை அழுத்திடும் விரலோ உம்மிடத்தில்
ஒரு முறையா இரு முறையா
பலமுறை தேர்தலில் ஜெயிக்க வைத்தாய்
பல பதவி பல லகரம்
ருசி கண்ட நாக்கினை அரிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
அரசியல் வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள்
என்று அரிக்கின்ற மனம் கரம் கூப்புதே!
வாக்குறுதி தருகிறேன்
வாழ்வளிக்க வருகிறேன்
உன் ஒருவிரல் பெரும் வரமளித்து ஜெயம் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே என் மக்களே!
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!
தேர்தல் என்னும்
பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய
ஓட்டு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
மக்களே எம் மக்களே!

 

கவிஞர் ஓட்டாண்டி

மாத்திச்சொல்லு கேரளப்பகடி

 http://sreepathypadhman.blogspot.com/2008/12/2.html

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைநெல்லை