இந்தப்போராட்டத்தில்…

சமகால அரசியலைப் பற்றிப் பேசக்கூடாது என்பது,என் சுயக் கட்டுப்பாடுகளில் ஒன்று. அதை மீறிய முதல் தருணம் இந்த அண்ணா ஹசாரே போராட்டம்.  அது தன்னிச்சையாக நடந்தது.  தொடக்கத்திலேயே அந்த நிகழ்வு ஒரு முக்கியமான வரலாற்றுத்திருப்புமுனை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை சற்றும் புரிந்துகொள்ளாத மேலோட்டமான எள்ளலும் உள்ளீடற்ற தர்க்கங்களும் அதிகமாகக் காதில் விழுந்தபோது எதிர்வினையாற்றினேன். அது ஒரு தொடர் செயல்பாடாக இன்றுவரை நீண்டு வந்துவிட்டது. அவ்வாறு உடனடி எதிர்வினை ஆற்றலாகாது என்ற என் எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

என் குழுமத்தில் கிட்டத்தட்ட 450 பேர் இருக்கிறார்கள். வழக்கமாகக் கடிதம் எழுதும் அனைவரும் அங்கேயே நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மிக அதிகமாக விவாதம் நடக்கும் குழுமம் அது. அதற்கு அப்பால் எனக்கு வழக்கமாக வரும் கடிதங்களின் எண்ணிக்கை முன்பிருந்ததில் பாதிதான். ஆனால் இந்தப் போராட்டம் பற்றி எழுத ஆரம்பித்தபின்னர் மீண்டும் என் மின்னஞ்சல்பெட்டி நிறைந்து வழிய ஆரம்பித்தது. நெடுநாட்களுக்கு பகலிரவாக பதில்களை எழுதிக்கொண்டிருக்க நேரிட்டது.

காரணம் இணையத்தில் இலகுவாக அகப்படும், எதிர்வினையாற்றும் எழுத்தாளன் இன்று நான் மட்டுமே என்பதுதான். ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கும்போது உணர்ச்சிகள், சஞ்சலங்கள் உச்சநிலையில் உள்ளன. எங்கும் எல்லாரும் அதையே விவாதிக்கிறார்கள். அதே வேகத்துடன் தான் விரும்பும் எழுத்தாளனுடன் பேச விரும்புகிறார்கள். ஆனால் எந்த எழுத்தாளனும் பல்லாயிரம்பேருடன் விவாதிக்கமுடியாது. விவாதிக்க ஆரம்பித்தால் அது வளர்ந்து வளர்ந்து அது அவன் ஆற்றலை உறிஞ்சி காலியாக்கிவிடும்.  நான் தனிப்பட்ட பதிலளிக்காத மின்னஞ்சல்கள் ஆயிரத்திஐநூறுக்கும் மேல் உள்ளன. அவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.வரும் நாட்களின் வேலையே அவற்றுக்கு பதிலெழுதி முடிப்பதுதான்.

இந்த நாட்களில் அண்ணா ஹசாரே போராட்டம் பற்றி நான் கிட்டத்தட்ட 60 கட்டுரைகள் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன்.  என் இணையதளமே அண்ணா ஹசாரேவுக்கான தளமாக ஆகிவிட்டது. அதன் கொள்ளளவும் வருகையாளர்களும் அதிகரிக்கவே வேகம் குறைந்து வேறு சர்வர் தேடவேண்டியிருந்தது.ஒருநாள் முழுக்க தளம் இயங்காமல் போனது/எதிர்வினைகளையும் பிரசுரித்திருந்தால் இன்னும் ஐந்தாறு மடங்கு இடம் தேவைப்பட்டிருக்கும். வேறு எந்த விஷயமும் இடம்பெறாது போயிற்று.

அந்தக் கட்டாயம் என்னுடன் விவாதிப்பவர்களால்தான் எனக்கு ஏற்பட்டது. ஐயங்கள் நேர்மையானவை என்பதனால் என்னால் விலக்க முடியவில்லை. அந்த எழுத்துக்கு தமிழ்ச்சூழல் சார்ந்து ஒரு தேவையும் இருந்தது. தொடர்ச்சியாக அண்ணா ஹசாரே பற்றிய விரிவான விளக்கங்களை அளித்த தளம் என்னுடையதுதான். ஆனால் வேறு எதுவுமே செய்யமுடியாமலாகியது. சமகால அரசியல் சார்ந்து உடனடியாக இணையவிவாதங்களில் ஈடுபடுவதன் அபாயம் இது. அந்நிகழ்ச்சி முடிந்தபின் என்றால் எல்லாப் பக்கங்களையும் தொகுத்துப்பார்த்து அதிகபட்சம் இரு கட்டுரைகள் எழுதியிருந்தால் தெளிவாகவே எல்லாவற்றையும் பேசிவிடலாம். ஆகவே இனிமேல் சமகால அரசியல் நிகழ்வுகளை உடனுக்குடன் விவாதிக்கப்போவதில்லை.

இந்த விவாதங்களில் என் நண்பர்களும் தீவிரமாக ஈடுபட்டது நிறைவளிக்கிறது. இதையொட்டி அண்ணா ஹசாரே பற்றிய என் எழுத்துக்களின் ஆங்கில மொழியாக்கம்  http://thesabarmati.wordpress.com   என்ற தளத்தில் பிரசுரமாகிவருகிறது. அண்ணா ஹ்சாரே பற்றிய கட்டுரைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட  http://annahazare-tamil.blogspot.com/ என்ற வலைமனை நண்பர்களால்    http://www.gandhitoday.in/ என்றபேரில் ஒரு வலையிதழாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காந்தி, காந்தியப்போராட்டங்கள் பற்றிய எல்லாத் தகவல்களையும் ஒரே இடத்தில் தொகுப்பதே அதன் நோக்கம்.நண்பர்கள் மொழியாக்கம் செய்து உதவலாம்.

அண்ணா ஹ்சாரே பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு கிழக்கு பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. ‘அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான காந்தியப்போராட்டம்’

சிறிய அளவிலேனும் இதில் பங்கெடுத்த நிறைவு எனக்குள்ளது. இப்போதைக்கு இது போதும்.

தளங்கள்

காந்தியம் இன்று இணையதளம் காந்திய கட்டுரைகள்

சபர்மதி இணையதளம்  ஆங்கில மொழியாக்கங்கள்

முந்தைய கட்டுரைஅண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைதூக்கு-எதிர்வினைகள்