தூக்கு-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

இது குறித்து ஏற்கனவே நண்பர்ளுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களும் நீங்கள் வைக்கும் வாதங்களையே வைத்திருக்கிறார்கள். நான் உங்கள் முதல் பகுதியை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

இளம் வயதில் செய்து விட்டது. ஆகவே தவறிழைத்தவர்களாகக் கருதப் பட வேண்டும் என்ற அதே நியாயத்தையே நாளைக்கு இவர்களையெல்லாம் விட இள வயதில் பலரையும் கொன்ற கசாப்பும் வைக்கக் கூடும் அல்லவா? மனிதாபிமானத்தில் இதைச் சொல்லலாம் சட்டப் படி இதை சொல்ல முடியாது. இன்று இந்த அடிப்படையில் இவர்களுக்கு மன்னிப்பு வழங்கினால் நாளைக்கே இதே அடிப்படையில் கசாபுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். இப்படியே நீட்டித்தால் யாருக்கும் மரண தண்டனை என்றே வழங்கி விட முடியாது. நன்கு வளர்ந்த கல்மாடி கூட எனக்கு அல்சைமர் ஆகவே நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறார். ஆக இளம் வயதில் செய்தவர்களுக்கு எல்லாம் தவறிழைத்தவர்கள் நியாயமும் முதிய வயதில் செய்பவர்களுக்கு எல்லாம் ஞாபக மறதி நோயைக் காரணம் காட்டியும் மன்னிப்பு வழங்கி விடலாம் என்ற கோரிக்கை பின்னாளில் வலுவாகி விடும்.

அடுத்ததாகச் சொல்லப் படுவது இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் இன்றும் வலுவோடு இயங்கி வருகின்றன,ஆகவே அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் மன்னிப்பு வழங்க முடியாது ஆனால் புலிகள் இயக்கம் அழிந்து விட்டது ஆகவே இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் ஏதும் அபாயம் இருக்க முடியாது என்பது. இதை நீங்கள் சொல்கிறீர்கள்,ஆனால் தமிழ் நாட்டிலும் இணையத்திலும் வெளிநாடுகளிலும் இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போராடும் எவரும் அவ்வாறு பேசவில்லையே. புலிகள் இயக்கம் மீண்டும் முன்னெப்பொழுதையும் விட வலுவாக மீண்டும் எழும்,அது தமிழ் நாட்டைத் தனியாகப் பிரிக்கும் என்றுதானே வை கோபாலசாமி, சீமான் இவர்களுக்கு ஆதரவாக அயல்நாடுகளில் செயல்பட்டு வருபவர்கள் வரை மேடைக்கு மேடை இந்திய ஒருமைப்பாடுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இன்று இவர்களுக்கு மன்னிப்புக் கொடுக்கா விட்டால் நாளைக்கு இந்திய வரை படத்திலேயே தமிழ் நாடு இருக்காது என்றெல்லவா மிரட்டல் விடுக்கிறார்கள். ஆக இவர்கள் ஈடுபட்ட வன்முறை இயக்கம் அழிந்து விட்டது நாளைக்கு மீண்டும் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக எழாது என்பதற்கான எந்தவொரு அறிகுறியையும் இவர்கள் எவரது நடவடிக்கையிலும் நான் காணவில்லையே. இந்த சூழலில் எப்படி இந்த அமைப்பே அழிந்து வரலாற்றின் பக்கங்களில் ஒன்றாக ஆகிப் போனதாக உறுதியாகச் சொல்கிறீர்கள்? அதை அவர்களில் எவருமே சொல்லவில்லையே? மாறாக இந்த இயக்கம் இன்னும் பெரிய இயக்கமாக மாறும் என்றுதானே சொல்லி வருகிறார்கள்? அழிந்து விட்டது இனி இவர்களால் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை நீங்கள் சொல்வதை விட இவர்களுக்கு மன்னிப்பு கேட்ப்பவர்கள் அல்லவா உறுதியாகச் சொல்ல வேண்டும். அவ்வாறான ஒரு உறுதி மொழியையும் இது வரையும் அவர்கள் தரப்பில் இருந்து நான் கேட்கவில்லையே. ஆகவே இந்தக் கருதுகோளையும் ஏற்றுக் கொள்ள என்னால் இயலவில்லை.

மரண தண்டனை என்பது வருத்தத்திற்குரியதுதான். இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாமா மன்னிக்கலாமா என்பதை ராஜீவுடன் தேவையில்லாமல் உயிரிழக்க நேர்ந்த மக்களின் குடும்பங்கள் முடிவு செய்யட்டும். இளம் வயதில் செய்த தவறு என்பதை ஏற்றுக் கொண்டால் அது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். இயக்கம் அழிந்து விட்டது ஆகவே அபாயம் இல்லை என்பதை உறுதி செய்யும் வண்ணம் அந்த இயக்கத்தை ஆதரிப்பவர்களின் நடவடிக்கை இல்லை. ஆகவே இதற்கு ஒரே வழி பாதிக்கப் பட்டவர்களிடம் கேட்பது மட்டுமே. அதற்கு சட்டத்தில் இடமிருக்காது. கசாப்பையும், அப்சல் குருவையும் சிறையில் நீண்ட காலம் வைப்பது இந்தியர்களின் பாதுகாப்புக்குப் பெருத்த அச்சுறுத்தலாகவே முடியும். நாளைக்கு ஒரு விமானக் கடத்தலிலோ இன்னும் பல பயங்கரவாத தாக்குதல்களிலும் மிரட்டல்களிலும் கொண்டு போய்ச் சேர்க்கும். ஜெயலலிதா இன்று தமிழர்கள் என்பதினால் இன ரீதியாக மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் நாளைக்கே இன்னும் ஒரு முதல்வரிடம் மத ரீதியாக மன்னிப்பு வழங்கச் சொல்லும் கோரிக்கையும் எழும்.அதுவும் ஒரு தவறான முன்னுதாரணத்தையே ஏற்படுத்தும்.

அன்புடன்
ராஜன்

 

அன்புள்ள ஜெ,

தூக்குத்தண்டனைக்கு எதிரான உங்கள் உணர்ச்சிகளை வாசித்தேன்.இதைப்பற்றி இணையத்திலும் டிவிட்டரிலும் எழுதுபவர்களை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் தூக்குத்தண்டனைக்கு எதிரான மனிதாபிமானப் பிரச்சாரம் என்றுதான் ஆரம்பித்தார்கள். ஆனால் மூன்றுபெரும் அப்பாவிகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டைனையே தப்பு, அதையெல்லாம் வைகோ போன்றவர்கள் நிரூபித்துவிட்டார்கள் என்று இப்போது சொல்கிறார்கள். அன்னா ஹசாரே சர்வாதிகாரி என்று சொன்னவர்கள், கருத்து சுதந்திரம் என்ற பேரில் அவரை வசைபாடினவர்கள் இவர்களுடைய இந்த வாதங்களை சந்தேகப்பட்டால்கூட திட்டுகிறார்கள். மன்னிப்பு கொடுக்கப்படவேண்டும், ஆனால் குற்றவாளி இல்லை என்று சொல்வது தப்பு என்று சொன்னாலும் கூட ஆவேசமான திட்டுதான். ஒரு சின்னமாற்றுக்கருத்தைக்கூடக் கேட்க ரெடியாக இல்லை. நான் பெரிய போராளியாக்கும் என்று காட்டுவதற்காக ஆபாசமான சத்தம்போடுகிறார்கள். முள்ளிவாய்க்கால்படுகொலைக்கே வெற்று ஆர்ப்பாட்டம்செய்துவிட்டு அடங்கினார்கள். இந்த ஃபாஸிஸக் கோழைகளுக்காகவா நம் ஆதரவு? இவர்கள் ஆதரிப்பதனாலேயே  என்னைப்போல அனுதாபம் இருப்பவர்களும் மனம் கசந்து போகிறார்கள்.
முரளிதரன்

 

01. பேரறிவாளன் நல்லவர், அப்பாவி, எனவே தூக்குத் தண்டனை கூடாது, அவருக்கு சாதாரண தண்டனைகூட அநியாயம் என்றுதான் இங்குள்ள தமிழுணர்வாளர்கள் பேசுகிறார்கள். இது தவறு. தூக்குத் தண்டனையை எதிர்க்கிறோம் அவர்கள் தவறு செய்தவர்களாகவே இருந்தாலும் என்று அவர்கள் போராடவேண்டும்.

02. புலிகள் இன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இவர்களுக்குத் தூக்குத் தண்டனை அவசியமில்லை என்பது என் கருத்து. உடனே புலிகள் இல்லை என்று வைகோ, பழ நெடுமாறன் சொன்னார்களா என்கிறார்கள். அவர்கள் ஏன் சொல்லவேண்டும். அவர்கள் புலிகள் இருக்கிறார்கள் என்று சொல்வதே அவர்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை நிற்க வைத்துக்கொள்ளவும், உணர்வுரீதியாக ஏமாற்றவும்தானே.

03. அரசாங்கமே தடையை நீக்கவில்லை என்பது அடுத்த நியாயம். புலிகளில் ஒன்றிரண்டு பேர் அல்லது ஒரு சிறிய குழு மிச்சமிருக்கலாம் என்பது அரசின் கருத்தாக இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தில் புலிகள் இன்று ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்பதே உண்மை. புலிகள் பிரபாகரன் ஒருவரைச் சுற்றிக் கட்டப்பட்ட இயக்கம். பிராபகரன் கொல்லப்பட்டதுமே புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்பதே பொருள். பின் லாடன் கொல்லப்பட்டதும் அடுத்த ஒருவர் தலைமை ஏற்பதுபோல இங்கே நடைபெற வில்லை. புலித் தொடர்ச்சி நடக்கவில்லை. எனவே இவர்கள் மூவரையும் தூக்கில் இடுவது தேவையில்லை.

04. இவர்கள் மூவருக்கும் விடுதலை அளிப்பதையும் நான் ஆதரிக்கவில்லை. சிறையில் இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஒரு முன்னாள் பிரதமரை, இந்தியத் தலைவரைப் படுகொலை செய்தது என்பது இந்தியாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே.

05. ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையையும் எதிர்ப்பதை நான் ஏற்கவில்லை. இந்திய நீதிமன்றமே தூக்குத் தண்டனை குறித்த தீர்ப்பை இறுதி செய்யவேண்டும். கருணை மனுவும் உள்ளது. இந்தத் தற்போதைய நடைமுறையே போதுமானது.

06. கசாப், அன்சாரி போன்றவர்களுக்குத் தூக்குத் தண்டனை என்பதை நான் ஏற்கிறேன். வரவேற்கிறேன்.

07. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தது எனக்கு ஏற்புடையதல்ல. அவர்களுக்கும் ஆயுள் தண்டனையே தரப்படவேண்டும். மூன்று மாணவிகளுக்கும் என தனித்தனியாகத் தண்டனை அனுபவிக்கச் சொல்லி வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலேயே கழிக்க வைக்கலாம். ஒரு அரசியல்வாதிக்காக அராஜகமாக பஸ் எரித்தது அநியாயம். ஆனால் தூக்கு என்பது அதிகபட்சம் என்பது என் எண்ணம்.

08. பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்த மக்களும், ஜெயலலிதாவும் முன்வரவேண்டும். ஜெயலலிதாவின் ‘அரசியலுக்கு’ இது நல்ல ஒரு வாய்ப்பு. தமிழர் தலைவர் என்ற கருணாநிதியின் வேடத்தை ஒரேடியாகக் கலைத்துப்போட்டு, அந்த ‘வேடத்தை’ தான் எடுத்துக்கொள்ளலாம். அரசியல் கருதியாவது ஜெயலலிதா இதனைச் செய்யவேண்டும். வேடத்துக்காக அல்லாமல், உணர்வு ரீதியாக, உண்மை நிலை கருதி, இந்த மூவருக்குமான தூக்குத் தண்டனை எதிர்ப்பை ஜெயலலிதா செய்தால், அவருக்கு வாழ்த்துகள்.

— ஹரன் பிரசன்னா

 

அன்புள்ள ஜே எம்

நெடு நாட்கள் ஆயிற்று உங்களுக்கு எழுதி. மனைவியும் மக்களும் நீங்களும்  நலம்தானே?  
அன்னா ஹசாரே பற்றி சொல்லும் அளவுக்கு எனக்கு அறிவும் பொறுமையும் இல்லை.  ஆனால் இன்று ‘தூக்கில் இருந்து மன்னிப்பு’ வாசித்தேன்.  சில வாக்கியங்கள் என் சிற்றறிவில் நெருடியது.
முதலில் இது:

“சந்தேகத்தின் பலன் [benefit of the doubt ] போன்று அதற்கு வசதியான சில சந்துகளும் நம் சட்டத்தில் உள்ளன.”
benefit  of doubt என்பது ஒரு ஜனநாயக அரசின் குற்றவியல் நீதி பிரிவின் மிக அடிப்படையான வலுவான ஒரு கோட்பாடு. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபட்டு விடக் கூடாது என்ற ஒரு மேன்மையான மனிதாபிமானத்தில் எழுந்த ஒரு கருத்து.  உச்ச கட்ட குற்றங்களில் நீதி இந்த கோட்பாட்டிலேயே  ஆராயப்படுகிறது.  இந்த மேன்மையான  கோட்பாடு ஒரு ‘சந்து’  ஆனது நம் சீரழிவின் ஒரு சான்று.
இரண்டாவது:
“: ஸ்பெக்ட்ரம் வழக்கு வரை கோடிகளைக் கொட்டத் தயாராக இருக்கும் குற்றவாளிகளால் நீதிபதிகளை நெருங்கவே முடியவில்லை.” 
பார்க்கலாம்.  இன்னும் விசாரிப்புகளே முடியவில்லை.  வழக்கு ஆரம்பம் ஆகட்டும்.
மூன்றாவது:
“ஆனால் ஒரு நிரபராதியை அப்படி எளிதாக தண்டிக்கச் செய்யமுடியாது.”
ஏன் முடியாது ஜே எம்?  ஆதாரங்களை மறைத்து ஒரு குற்றவாளியைத் தப்பிக்க வைக்க முடியும் என்றால்,  பொய்யான ஆதாரங்களை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும்?
நான்காவதாக:
இரண்டாவதாக, இவர்கள் அரசியல் குற்றவாளிகள். சாதாரண குற்றவாளிகளுக்கும் அரசியல் குற்றவாளிகளுக்கும் கண்டிப்பாக வேறுபாடுண்டு. அரசியல்குற்றங்கள் என்பவை இலட்சியவாதத்தாலும் கருத்தியலாலும் தூண்டப்படுபவை. இவர்கள் அக்குற்றங்களை எந்த சுயநலத்துக்காகவும் செய்யவில்லை. அவர்கள் நம்பி ஏற்ற ஒரு கொள்கைக்காகவே செய்திருக்கிறார்கள். கருத்தியல் என்பது மனிதனின் பகுத்தறிவை, கருணையை எல்லாமே மறைக்கும் வல்லமை கொண்டது.
உங்கள் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன்.  என் வரையில் மரண தண்டனை என்பதே ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.  ஆனால் மேலே நீங்கள் சொல்லும் காரணத்துக்காக இவர்கள் தண்டனை விலக்கப் பட்டால் அதுவே ஒரு “precedence ”  ( நடைமுறை முன்னுதாரணம்) ஆகி விடாதா?  இதையே காட்டி மற்ற தீவிர வாத அமைப்புகள் நீதி மன்றத்தில் வாதாட மாட்டார்களா?
அன்புடன்
சிவா sakthivel

ஜெ

கோட்சே தனக்கு கொடுக்கப்பட்டிருந்த மரணதண்டனையை நீக்கச் சொல்லிக் கருணைமனு
போடவில்லை. கடைசி வரையில் தான் காந்தி மகான் மீது மரியாதை
வைத்திருந்தாலும், தனது செயலின் தன்மை குறித்து அவன் வருத்தம்
கொள்ளவில்லை. காந்தியின் அரசியல் படுகொலையில் தன் தரப்பு நியாயத்தில் அவன் கடைசிவரை பின்வாங்கவில்லை. காந்தியைக் கொன்றதற்கான தண்டனையை அவன் தலைநிமிர்ந்து ஏற்றுக்கொண்டான்.

ஆனால் ராஜீவ் கொலையாளிகள் தங்களது மரணத்தைக் கண்டு ஒப்பாரி வைக்கிறார்கள்.அனுதாபம் பெற முயற்சிக்கிறார்கள். தாங்கள் நிரபராதிகள் என்று அலறுகிறார்கள். தாங்கள் நிரபராதிகள் என்றால் ராஜீவ் படுகொலையைக் கண்டித்திருக்க வேண்டும். அல்லது கொலையாளிகள் என்றால் தாங்கள் செய்த அரசியல் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரவேண்டும்.
இரண்டுமில்லாமல் வரலாற்றிலும் இடம் வேண்டும் ஆனால் சாகக் கூடாது என்றால் எப்படி?

பதி

**
இந்தக் கடிதங்கள் அனைத்துக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாகவே ஒரேபதிலைச் சொல்லிவிடுகிறேன்.

ஒன்று , எனக்கு வந்துள்ள கடிதங்களும் சரி நான் பொதுவாகச் சந்திக்கும் சாதாரண மக்களும் சரி , மூன்றுபேர் மீதும் எந்தக் கருணையும் காட்டப்படுவதை விரும்பவில்லை. இவர்களுக்கான  தண்டனை  தாமதமானதை  அரசின் கையாலாகாத்தனம் என்றே நினைக்கிறார்கள். இந்திய அரசு இன்னும் வலுவாகச் செயல்படவேண்டும் என்றே சொல்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள்.அந்த வேகம் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது

மூவரும் நிரபராதிகள் என்ற சொல்லும் பிரச்சாரம் மிக எதிர்மறையான விளைவையே உருவாக்கியிருக்கிறது.  இதைச்சொல்பவர்கள் நீதி மன்றத்தை இழிவுசெய்கிறார்கள். மத்திய அரசின் பழிவாங்கல் என்கிறார்கள். இவர்களில் பலர் நடுவே பலகாலம் மத்திய அரசின் பகுதியாக இருந்தவர்கள்.

ஆகவே இது வைகோ-நெடுமாறன் போன்றவர்களின் வழக்கமான அரசியல் என்றே மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மேல் இம்மிகூடசாதாரண மக்கள் எவருக்கும்  மதிப்பில்லை. அவர்களும் இதை ஓர் அரசியல் பிரச்சினையாக, உச்சகட்ட வெறுப்பின் மொழியிலேயே பேசிப்பேசி, மறு எல்லைக்குக் கொண்டுசென்றுவிட்டார்கள். தீவிர அரசியல்நிலைப்பாடுள்ள மிகச்சிலரைத்தவிர எவரிலும் இந்த தூக்கு நிறைவேற்றப்பட்டால் எந்த எதிர் எண்ணமும் எழாது.

மக்களின் இந்த எதிர்மனநிலையை முள்ளிவாய்க்கால் படுகொலையின் போதும் சரி , சமீபத்தில் ஐநா போர்க்குற்ற அறிக்கை வெளிவந்தபோதும் சரி கண்கூடாகவே கண்டேன். அவர்களின் மனசாட்சியுடன் பேச இங்கே ஆளில்லை. ஏனென்றால் பேசுபவர்கள் இதை மனசாட்சிப்பிரச்சினையாக நினைக்கவில்லை. தங்கள் வெறுப்பரசியலைப் பிரச்சாரம் செய்ய ஓர் அரிய தருணமாகவே இதைக் காண்கிறார்கள். ஒருவேளை மூவரும் தூக்கிலேறினால் மகிழவும் கூடும்.

மக்களில் பலர் இதையே சொல்லி தர்மபுரி பேருந்து எரிப்புக் கைதிகளையும் சும்மாவிட்டுவிடுவார் ஜெயலலிதா என்று கவலைப்படுவதைக் கேட்டேன். அந்த மக்களைப் பொறுத்தவரை மரண தண்டனை மிகமிக இன்றியமையாதது. அரசு தன் மொண்ணைத்தனத்தால் அதை ஒத்திப்போடுகிறது, அவ்வளவுதான். ’அதுவும் இப்பவே பத்து வருசமாயாச்சு, இன்னும் பத்து வருசம் இழுத்திட்டு வேண்டாம்னு சொல்லுவானுக’ என்றார் ஒரு விவசாயி.

ஆனாலும் நான் என் உணர்வுகளையே பின்பற்றுகிறேன். இதில் பிறவற்றில் நான் முன்வைக்கும் விரிவான தர்க்கபூர்வ அணுகுமுறையை என்னால் முன்வைக்க முடியவில்லை. நாளை பாராளுமன்றத்தில் அப்பாவி இந்திய வீரர்களைச் சுட்டுத்தள்ள சதிசெய்த அப்சலையும் மக்களைச் சுட்டுத்தள்ளிய கசாப்பையும் தண்டிக்கும்போது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையே அவர்களுக்கு ஆதரவாக நிறுத்த இந்த விஷயத்தை முன்னுதாரணமாகக் கொள்வார்கள் என நானும் உணர்கிறேன்.

ஆனாலும் என் உணர்வுகள் தூக்குத்தண்டனை ரத்தை நோக்கியே செல்கின்றன. அதற்குக் காரணம் தூக்குமரநிழலில் இருபத்தைந்தாண்டுகளைக்கற்பனைசெய்துகொண்டதுதான்.அவர்களுடன் என் இளமையை இணைத்துப் பார்ப்பதுதான்.

அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை

ஜெ

தூக்கிலிருந்து மன்னிப்பு

 

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே- என் விமர்சனங்கள்
அடுத்த கட்டுரைஒரு வரலாற்றுத்தருணம்