பத்மநாபனின் சொத்து- கடிதம் வருத்தம்

இந்த இணையதளத்தில் வெளியான ஒரு கடிதத்தில் அவதூறான கருத்துக்கள் உள்ளன என்று ரோசா வசந்த் எழுதியிருந்தார்.

ரோஸாவசந்த்தின் எதிர்வினை:  (http://www.twitlonger.com/show/c0aoeq
http://www.jeyamohan.in/?p=18133 

ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்துள்ள இந்த கடிதத்தை முன்வைத்து, கடிதத்தில் 
குறிப்பிடப்படும் (சில வாரங்கள் முன்பு காலமாகிவிட்ட), சுந்தர்ராஜனின் 
குடும்பத்தை சேர்ந்தவருடன் விரிவாக பேசியதன் விளைவு இந்த எதிர்வினை. 

இந்த அறைகளை திறப்பதற்கு காரணமான சுந்தர்ராஜனை நேர்மையற்றவராக சித்தரிக்கும் 
தகவல்கள் பொய்யானவை என்று கேள்விப்படுகிறேன். குறிப்பாக இந்த கடிதத்தில் 
சொல்வது போல, சுந்தர்ராஜன் கோவிலுக்கு சொந்தமான வீட்டில் வாழவில்லை. கடந்த 30 
வருடங்களுக்கு மேலாக, தான் விலைக்கு வாங்கிவிட்ட சொந்த வீட்டில்தான் 
வசிக்கிறார். இந்த தகவலை தெளிவாக உறுதி செய்துவிட்டேன். இவ்வாறான 
குற்றச்சாட்டுகள் (வேறு சில இணைத் தகவல்களுடன் சேர்த்து நோக்கும் போது) 
அப்பட்டமான பொய். மேலும் பல கோவில் சொத்துக்களை சுந்தர்ராஜனது குடும்பம் தன் 
கைவசம் வைத்திருப்பதாக சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. 

கோவில் நகைகள் பவற்றை விற்கும் முயற்சியில் மன்னர் குடும்பம் ஈடுபட்டதை 
தொடர்ந்து, அதை தடுக்கும் பொறுட்டே, இவரால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாக 
கேள்விப்படுகிறேன். மன்னருக்கு அவர் நீண்டகாலமாக லீகல் அட்வைசராக இருந்து, 
பிணக்கு ஏற்பட்ட பின் விலகி கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது. தன் சொந்த 
உபயோகத்தில் உள்ள சொத்தைப் பாதுகாப்பதற்காகப் போட்ட வழக்கைப் பொதுநல வழக்கு 
என்று திரித்ததாக இந்த கடிதக்காரர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. இங்கே 
கவனிக்க வேண்டியது, இந்த வழக்கில் மன்னர் தரப்பில், பணபலத்துடன் அமர்த்தப்பட்ட 
வழக்கறிஞரை எதிர்த்து, தானே நீண்டகலத்திற்கு இவர் வழக்காடியிருக்கிறார். 
உடல்நிலை காரணமாக, பிற்காலத்தில் தன் சார்பாக வழக்கறிஞரை நியமித்த போது, அதற்கு 
சில லட்சங்களை தன் சொந்த பணத்திலிருந்து செலவழித்தார். அறைகளை திறக்கும் 
குழுவில் இவரும் முக்கியமானவராக (நீதிமன்றத்தால்) இடம் பெற்றார் என்கிற 
வகையில், இந்த குற்றச்சாட்டுகள் அடைப்படையில்லாமலாகிறது. திறந்த அறைக்குள் 
முதல் ஆளாக நுழைந்து, பிராணவாயு குறைவால் பாதிக்கப்பட்டார். இந்த பாதிப்பின் 
தொடர்ச்சி, அவர் இறப்பிற்கு காரணமாக இருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது. 
மன்னரை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட புனிதராக காண்பிக்கும் நோக்கில், இறந்த 
போனவரை, அவர் இறந்து சில நாட்கள் கழித்து, அவர் எதிர்வினை வைக்க இயலாத 
ஜெயமோகனின் தளத்தில் அவதூறு செய்திருக்கிறார்கள். 

இது குறித்து ஆதாரங்கள் பற்றியும், நான் கேள்விப்படும் விஷயங்கள் குறித்தும் 
கேள்விகள் எழலாம். ஆனால் ஜெமோ தளத்தில் இது குறித்து வெளியாகும் விஷயங்கள் 
எந்தவித ஆதாரபூர்வங்கள் அடிப்படையில் இல்லாமல், போகிற போக்கில் 
சொல்லப்படுவதற்கான எதிர்வினையே இது. அங்கே ஆதாரபூர்வமாக ஏதேனும் வெளிப்பட்டால், 
நானும் அதை செய்ய முயற்ச்சிகள் எடுக்கலாம்.

பொதுவாக இந்த தளத்திற்கு ஓர் ஆசிரியர் குழு அல்லது ஆசிரியர் இல்லை.  எதிர்வினைகளில் தனிப்பட்ட தாக்குதல்கள் அவதூறுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது கடினமாகவே உள்ளது. அதைவிட எனக்குப்புரியாத நுட்பமான சாதிசார்ந்த உட்குத்துகளை கண்டுபிடிப்பது கடினம். சந்தேகம் வந்தாலே பலகடிதங்களை வெளியிடுவதில்லை. இருந்தாலும் நிறைய கடிதங்கள் அவ்வாறே பதிவாகிவிடுகின்றன.

அதை இணையதளங்களுக்குரிய சுதந்திரம் எனலாம். ஆனால் அது சிலசமயம் சிக்கலாக ஆகிவிடுகிறது. இம்மாதிரி கடிதங்களை உடனடியாக சரிபார்க்க முடிவதில்லை. அதிலும் எழுதப்பட்ட கட்டுரைக்கு ஆதரவாக வரும் ஒரு கடிதத்தை சட்டென்று நம்பும் மனநிலை வந்துவிடுகிறது. பல்வேறு வேலைகள் பயணங்கள் நடுவே அதற்கான அவகாசமும் இருப்பதில்லை.

ரோசாவந்தின் மறுப்புக்குப்பின்னர் இதைப்பற்றி விசாரித்தேன். கடிதமெழுதியவர் சுட்டும் சில கட்டுரைகள் மலையாளத்தில் வந்துள்ளன. ஆனால் அவை ஆதாரங்கள் அல்ல. திரு சுந்தர்ராஜன் பலதலைமுறையாக கோயில் நிர்வாக -கணக்கராக பணியாற்றிவந்த குடும்பத்தைச்சேர்ந்தவர். அக்காலத்தில் அவர்களுக்கு ஊதியமாக அளிக்கப்பட்ட சொத்துக்கள் சட்டபூர்வமானவையே. அவர் மன்னருக்கு நெருக்கமானவராக இருந்திருக்கிறார். ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். அந்த தளம் சார்ந்து அவருக்கும் மன்னருக்கும் கருத்துவேறுபாடுகளும் வில்லங்கங்களும் இருந்துள்ளன.

அனால் இந்த விஷயங்கள் சுந்தர்ராஜன் கோயில்நிலத்தை கையில்வைத்திருந்தார், அந்த பூசலுக்காகவே நீதிமன்றம் சென்றார் என்ற வரியை நியாயப்படுத்த போதுமானவை அல்ல. ஆகவே அந்தக்கடிதம் அரைகுறை ஆதாரங்களுடன் உள்நோக்குடன் எழுதப்பட்டதாகவே கொள்ளமுடியும். அது வெளியானதற்காக வருந்துகிறேன். அதை நீக்கம்செய்கிறேன். ரோசா வசந்த் அவர்களுக்கு நன்றி. கடிதங்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை என்பதை உணர்கிறேன்.

முந்தைய கட்டுரைஇசைக்கான காது
அடுத்த கட்டுரைதனுஷ்கோடியும் முற்போக்கு எழுத்தும்