அயோத்திதாசர் என்ற முதற்சிந்தனையாளர்-3

[தொடர்ச்சி]

இன்றைய சிந்தனைகளின் எல்லைகள்.

நான் விஷ்ணுபுரம் நாவலுக்கான ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தபோது பாலக்காடு அருகே ஒரு மரபான பண்டிதரைச் சந்திக்கச்சென்றேன். அந்நாவலில் அவைதிக சிந்தனைகளை அழுத்தம்கொடுத்துப் பேசியிருப்பது வாசிப்பவர்களுக்குத் தெரியும். அது சம்பந்தமான பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த அறிஞர் வைதிக மரபான பூர்வமீமாம்ச முறைமையைச் சேர்ந்தவர். நான் ஏற்கனவே அந்தத் தளத்தில் கணிசமாக வாசித்திருந்தேன். ஆர்தர் ஆவலோன்,  எஸ்.என்.தாஸ்குப்தா, கெ.தாமோதரன், அகேகானந்த பாரதி, தேவிபிரசாத் சட்டோபாத்யாய என. பல அறிஞர்களிடம் நேரடித் தொடர்பும் இருந்தது.

ஆச்சரியமென்னவென்றால் நான் உரையாட ஆரம்பித்ததுமே ஆழமான அதிர்ச்சிக்கு உள்ளானேன். அவருக்கு நான் சொல்வது எதுவுமே புரியவில்லை. அவர் சொன்னது எதுவுமே எனக்கும் புரியவில்லை. நான் சொல்வது பூர்வமீமாம்சமே அல்ல என்று அவர் சொன்னார். அதேபோல அவர் பேசுவதெல்லாமே ஏதேதோ மூடநம்பிக்கைகள் மற்றும் கதைகள் என்று எனக்குப்பட்டது, தத்துவம் என்று தோன்றவேயில்லை. உடனடிப்புரிதலாக அவரை ஒரு பாமரர் என்றுதான் நான் சொல்லவேண்டும். ஆனால் அப்படியும் சொல்லமுடியாது. அவர் பல வருடங்கள் பல மரபான குருகுலங்களில் கற்றவர். வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணம்செய்தவர்.

இந்த விஷயம் என் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. பின்னர் ஒருமுறை பூச்சிமருந்துக்களைப்பற்றி ஆராய்வதற்காக வந்த ஒரு சூழியல்நிபுணருடன் தக்கலை வட்டாரத்தில் ஒரு வயதான விவசாயியைச் சந்திக்கச்சென்றேன். அவர் தலித் சாதியைச்சேர்ந்தவர். படிக்காதவர். அவர் விவசாயம் பற்றிக் கடலளவு அறிந்தவர் என்று சொன்னார்கள். ஆனால் அவருக்குப் பயிர்களைத்தாக்கும் பூச்சிகளைப்பற்றி ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. நோய்களைப்பற்றி  தெரிந்திருக்கவில்லை. மண்ணுக்கு என்னென்ன உப்புகள் தேவை என்று தெரிந்திருக்கவில்லை.

 

அவர் பேசியதெல்லாமே பருவநிலைகளைப்பற்றித்தான். அதாவது வானிலையைப்பற்றி அல்ல, வயலில் வரும் பருவநிலைகளைப்பற்றி. வயலில் உருவாகும் வாசனைகளையும் வண்ணங்களையும் வெப்ப வேறுபாடுகளையும்பற்றிப் பேசினார். அதையும் கதைகளாகவும் ’மூட’ நம்பிக்கைகளாகவும்தான் சொன்னார். அந்த நண்பர் ’இந்த விவசாயிகளுக்கு விவசாயம்பற்றி ஒன்றுமே தெரியவில்லை, மூடநம்பிக்கை இவர்களின் மூளையை இறுகச்செய்துவிட்டது’ என்றார். ‘ஆனால் அவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக விவசாயம் செய்கிறார்களே’ என்றேன். ‘அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது, விவசாயம்பற்றி ஒரு அறிவியலை உருவாக்கிக்கொள்ளாமலேயே இத்தனை வருடங்களாக இருந்திருக்கிறார்கள்!’ என்றார்.

’மண்ணுக்கு ரசாயன உரம் போடுகிறீர்களா’என்ற கேள்விக்கு அந்தப் பெரியவர் சொன்னார் ‘மண்ணு பூத்தா ஒண்ணும் வேண்டாம்ங்க…நல்லா பூத்து சிரிச்சா அது நல்லா வந்திரும்..சிலசமயம் பூக்காது. அப்பதான் ஏன்னு பாக்கணும்’ நான் ‘மண்ணு பூக்கிறதுன்னா என்ன?’ என்று கேட்டேன். ‘தெக்கத்திக் காத்திலே பூத்திரும். பூத்தா இங்க நம்ம வீட்டிலே அதுக்க வாசனை வரும். நல்ல சிவப்பா இதளு விரிஞ்சு பூக்கும்’ என்றார்

பின்னர் ஒருமுறை எஸ்.என்.நாகராஜன் உள்ளூர் வேளாண்மை முறைகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தேன். வேலூர்ப் பக்கம் விவசாயிகள் கூழாங்கற்களை சதுப்புநிலத்தில்போட்டு மிதித்து அதன் மேல் நெல் விவசாயம்செய்வதைப்பற்றிச் சொன்னார். அது காற்றோட்டமில்லாத சதுப்பு நிலத்துக்கு உள்ளே காற்றைக் கொண்டுசெல்கிறது. வேர்கள் மூச்சுவிட உதவுகிறது. பலநூறு வருடம் முன்னரே இந்த அறிவியல் நுட்பத்தைக் கண்டுபிடித்த அந்த விவசாயிகள் அதை இப்படி விளக்கினார்கள். குருவிகள் செரிமானமில்லாமலானால் கூழாங்கற்களைத் தின்னுவது போல மண்ணுக்கு செரிமானத்துக்காக இது தேவையாகிறது’

‘அது அவங்களோட நெரேஷன்…அந்த நெரேஷனைப் பிடிக்கலேன்னாக்க அவன்கிட்ட பேசமுடியாது. அவன் கிட்ட பேசலேன்னா அவன் மண்ணுகிட்ட என்னத்தை பேசுவே?’ என்றார் நாகராஜன். நான் உடனே அந்தப் பெரியவர் சொன்னதைப்பற்றி சொன்னேன். ‘அந்த அக்ரிகல்சர் சயண்டிஸ்ட் என்ன சொன்னான்?’ என்றார். ’அவருக்குப் புரியலே’ என்றேன். ‘அவரு உழுது மரமடிச்சுப் போட்ட மண்ணிலே அசோஸ் பைரில்லம் உருவாகிறதப்பத்தி சொல்லியிருக்காரு. தண்ணிமேலே காவிச்சிவப்பா இதழ்களா விரிஞ்சு டிசைன் கிடக்கும். ஒரு புளிச்ச மணம் வரும்…அது வந்தா அப்றம் எதுக்கு வேற நைட்ரஜன்? ரசாயன உரத்தைப்போட்டா அப்றம் எங்க அசோஸ் பைரில்லம் வரப்போகுது?’ என்றார்

அப்போதுதான் ரசாயன உரங்களைப்பற்றிய கடும் எச்சரிக்கைகள் உருவாகி அரசே அதற்கு எதிராகப் பேச ஆரம்பித்திருந்தது. புதிதாக அசோஸ் பைரில்லத்தை ஆய்வகத்தில் செய்து அதை விவசாயிகளுக்குக் கொடுக்க கடும்பிரச்சாரம் செய்தது அரசு. நான் கிட்டத்தட்ட பிரமித்துப்போனேன். அது ஒரு திருப்புமுனை எனக்கு.

ஆம், நம்முடைய சிந்தனைமுறை என்று ஒன்று இருக்கிறது. நாம் எங்கோ அதிலிருந்து நம்மை துண்டித்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே நம்முடைய முன்னோர்களிடம் நம்மால் பேச முடியவில்லை. நமக்கும் அவர்களுக்கும் நடுவே மாபெரும் கருத்து இடைவெளி உள்ளது. இந்த நாட்டில் படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் நடுவே உள்ள இடைவெளியும் இதுவே. இங்குள்ள ஒவ்வொரு அரசுத்திட்டங்களும் முழுமையாகத் தோல்வி அடைவதன் காரணமும் இதுவே.

மறுபக்கம் நம்முடைய அறிவுலகத்தின் சிந்தனைகள் எல்லாமே இறக்குமதி செய்யப்பட்டவையாக உள்ளன. கல்வித்துறையில் ஒன்றாம்பாடம் முதல் ஆய்வுமேற்படிப்பு வரை நமக்கிருப்பது ’மொழிபெயர்த்து மனப்பாடம் செய்யும்’ கல்வி மட்டுமே. சிந்தனைகளை வளர்க்கும் கல்வி அல்ல. சுயமாகத் தேடச்செய்யும் கல்வியும் அல்ல. இந்தக்கல்விமுறைக்குள் செல்லும் ஒருவர் இழப்பது அவரது நீண்டமரபு அவருக்கு அளித்திருக்கும் தனித்தன்மை மிக்க அறிதல்முறைகளையே. அதன்பின் அவரிடம் சுயம் என்ற ஒன்று இல்லை. அவர் வெறும் எதிரொலியாகவே இருக்கிறார்

கடந்த ஐம்பதாண்டுக்காலகட்டத்தில் நமக்குப் பலதுறைகளிலும் முக்கியமான சிந்தனையாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். நம்முடைய சிந்தனைகளை அவர்கள் மடைமாற்றியிருக்கிறார்கள், நாம் நம்மை நோக்கும் பார்வையை மாற்றியமைத்திருக்கிறார்கள். ஆனால் நாம் ஏன் உலகுக்கு ஒரு கொடை என்று சொல்லத்தக்க ஒரு சிந்தனையாளரை உருவாக்கமுடியவில்லை? உலகசிந்தனையில் ஒரு திறப்பை நிகழ்த்தும் ஒரு சிந்தனையாளர் ஏன் நமக்கு உருவாகவில்லை?

அதற்கான காரணம் நாம் நமக்குமட்டுமே உரிய தனியாளுமையை இழந்துவிட்டோம் என்பதே. நாம் முதலில் நம்மை இழந்தபின்னரே நவீனக் கல்விக்குள் செல்லமுடிகிறது. அதில் ஈடுபட ஈடுபட நாம் மேலைநாட்டுச் சிந்தனைகளைப் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறோம். மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு ‘உப்பு அளவுக்கு உப்பாகுமா ஊறுகாய்?’ ஊறுகாயை உப்பிலிட்டது என்பார்கள். உப்பில் எத்தனை வருடம் ஊறவைத்தாலும் ஊறுகாய் உப்பைவிட உப்புத்தன்மையை அடைய முடியாதல்லவா?

இதுவே இன்றைய சிந்தனையின் மிகமுக்கியமான எல்லையாக உள்ளது என்பதே உண்மை. இன்றைய சூழலில் அசல்சிந்தனையாளன் என்பவன் அவனுடைய பிறப்பிலேயே அவனைச்சூழ்ந்துகொண்டிருக்கும் இந்த மாய உறையைக் கிழித்து வெளியே வந்து தன்னுடைய சுயத்தை மீட்டுக்கொள்ளமுடிந்தவன் என்று சொல்லலாம்.

 

 

இன்னொரு வழி

ஏற்கனவே சொன்ன இரு சிந்தனையாளர்களையே பார்ப்போம். எஸ்.என்.நாகராஜன், மு.தளையசிங்கம் இருவருமே முறையான மேல்நாட்டுப் பாணி கல்வி கற்றவர்கள். மார்க்ஸியம் என்ற ஐரோப்பிய மைய நோக்குள்ள சிந்தனைக்குள் சென்றவர்கள். அதன் எல்லைகளையும் இந்தியச்சூழலில் அதன் போதாமைகளையும் உணர்ந்து மேலே தேடிச்சென்றவர்கள். தங்களுடைய ஆளுமைகளை அதற்கேற்ப உருமாற்றிக்கொண்டவர்கள். இவர்களின் சிந்தனைகளை சுருக்கமாக அவர்கள் கல்லூரிகளில் கற்ற்றவற்றில் இருந்து வாழ்க்கையில் கற்றவற்றை நோக்கிச் செல்வதற்கான முயற்சிகள் என்று சொல்லலாம்

இருவழிகளை இவர்கள் முயன்றார்கள். தளையசிங்கம் இந்தியசிந்தனை மரபு அளித்த ஆய்வுக்கருவிகளை நவீன மேலைநாட்டுச் சொல்லாடலில் பொருத்தமுடியுமா என்று பார்த்தார். எஸ்.என்.நாகராஜன் இந்திய நாட்டுப்புற அறிவை நவீன மேலைநாட்டு அறிவியலுக்கு சமானமான ஞானக்களமாக உருவகிக்க முடியுமா என்று பார்த்தார்.

இந்த வரிசையில் நான் அயோத்திதாசரை எங்கே வைக்கிறேன்? முக்கியமான விஷயம் அவர் நவீனக்கல்விக்குள் வரவே இல்லை என்பதுதான். அவருக்குக் குடும்பப் பாரம்பரியமாகவே ஓர் அறிவுப்புலம் இருந்தது. அறிவாளரான தந்தையிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு சிந்தனைப்பழக்கம் இருந்தது. அவர் உதறவேண்டிய எதையும் அதிகமாகக் கற்கவில்லை. ஆனால் மரபான சிந்தனையின் பின்புலத்தில் நின்றுகொண்டு சமகாலப்பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்தார். எதிர்வினையாற்றினார். சமகாலப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுயன்றார். அதன் விளைவாக ஒரு சிந்தனைத்தளத்தைக் கட்டமைத்தார்

அந்தசிந்தனைத்தளம் நமக்கு மிக அன்னியமாக, தனித்துவம் கொண்டதாக இருக்கிறது. அதற்குள் நுழைவதற்கான சாவி இன்று நம்மிடம் இல்லை. நாம் அதன் விரிசல்கள் வழியாகவே நுழைய முடிகிறது. அந்தப் பயணத்தில் நம்முடைய மரபையும் வாழ்க்கையையும் பார்க்க உதவக்கூடிய சிந்தனைக்கருவிகளைக் காணமுடிகிறது. அது அளிக்கும் சாத்தியக்கூறுகளே அயோத்திதாசரைத் தத்துவ ஆய்வுத்தளத்தில் முக்கியமானவராக ஆக்குகின்றன.

யுவன் சந்திரசேகர் ஒரு கதையில் சொல்கிறார். தவழ்ந்து செல்லும் பருவத்தில் ஒரு கட்டிலுக்கு அடியில் சென்று ஏகப்பட்ட முட்டுகள் பட்டு அழுது பின்னர் ஒரு தரிசனம் கிடைத்தது. எப்படி உள்ளே போனோமோ அதே போல மெல்லமெல்லக் காலெடுத்து வைத்துப் பின்னால் வந்து விடுவது ஒரு நல்ல வழி என்று. வாழ்க்கையில் அது தனக்கு மிக முக்கியமான தருணங்களில் உதவியது என்கிறார்.

இந்திய தத்துவசிந்தனைப் புலத்தை ஆராயும்போது மிகச்சிக்கலான பல முட்டுகளும் குட்டுகளும் நம் மண்டையில் விழுகின்றன. ஐரோப்பியமைய நோக்கு கொண்டவர்களைப்போலப் போகிறபோக்கில் முத்திரை குத்தி உதறிவிட்டுப் போகாமல் யோசித்தால் பலவற்றுக்குத் தீர்வு காணவே முடியாது. அதற்குக் காரணம் இந்திய தத்துவசிந்தனைப்புலத்தை நாம் ஆராயும் முறைமையாக இருக்கலாம். அது இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய இந்தியவியலாளர் நமக்களித்தது. அதில் நுழைந்தது போலவே பின்னால் வந்து பார்த்தாலென்ன?

தமிழ்ச் சூழலில் அப்படிப் படிப்படியாகப் பின்னால் சென்றால் என்ன நிகழும்?  இன்றைய பின்நவீனத்துவ சிந்தனைகளில் இருந்து-எண்பதுகளின் நவீனத்துவ சிந்தனைகளில் இருந்து-அறுபதுகளின் மார்க்ஸிய சிந்தனைகளில் இருந்து -நாற்பதுகளின் பகுத்தறிவு சீர்திருத்த சிந்தனைகளில் இருந்து-இருபதுகளின் மறுமலர்ச்சிவாத சிந்தனைகளில் இருந்து -பின்னால் சென்றால் எங்கே செல்வோம் ? நாம் அங்கே அயோத்திதாசரைக் காணமுடியும், ஒரு மாற்றுச்சாத்தியத்துடன். இந்த அம்சத்தாலேயே நான் அவரை நம் முதல்சிந்தனையாளர்களில் ஒருவர் என்கிறேன்.

 

[மேலும்]

முந்தைய கட்டுரைஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7
அடுத்த கட்டுரைஇ.பா