வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’

இணைய விவாதமொன்றில் ஒர் ஆசாமி வேதசகாயகுமாரை ‘வேசகுமார்’ என்று வைதிருந்தார். வீட்டுக்கு வந்ததுமே ”சார் உங்களுக்குப் புதிய பேரு!” என்று சொல்லி அதைக் காட்டினேன். தலையை ஆட்டி சிரித்து மகிழ்ந்தார். ”வேத கஷாய குமார்ங்கிறதைவிட இது இன்னும் பொருத்தமா இருக்கு இல்ல சார்?”

வேத சகாய குமார் சிரித்தபடி ”இதுநாள் வரைக்கும் எப்டியும் ஒரு முப்பதுபேரு தேறும். பிசாசுங்கிற பேருதான் நிலைச்சு நிக்குது” என்றார். ஹெப்ஸிபா ஜேசுதாசனிடம் இவர் தன் புகழ்பெற்ற பைபிள் ஐயங்களைக் கேட்கப்போக ” ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே! உனக்க நாடகமெல்லாம் அறியிலாம்!”என்று அவர் கூச்சலிட்டதாகவும் உடனே இவர் அம்மையாரின் பின்னால் சென்று நின்று விட்டதாகவும் வரலாறு.

சித்த வைத்தியரும் தமிழாய்வாளருமான ஆரல்வாய்மொழி முத்தையா நாடாரின் பிற பிள்ளைகள் அனைவருமே டாக்டர்கள். இவரை மொழியை [அறுவை]சிகிழ்ச்சை செய்ய அனுப்ப வைத்தியர் எண்ணியிருக்கலாம். தந்தையின் மருத்துவக் கோட்பாட்டை வேதசகாய குமார் அப்படியே பின்பற்றுகிறார்.மூலச் சுவடிகளை முற்றோதிவிட்டு அப்படியே வெந்நீர் அடுப்பில் வைத்துக் கொளுத்திவிட்டு மனம் சொன்ன பாதையில்செல்வது இம்முறை. தமிழகத்து முக்கியத் தமிழறிஞர்களில் பெரும்பாலும் அனைவரையும் நானறிவேன், வேத சகாய குமார் அளவுக்கு ஆழ அகல தமிழைக் கற்றவர் என்று ராஜ்கௌதமன், பொ.வேல்சாமி போல சிலரையே என்னால் சொல்ல முடியும். அவரைப்போல மூலநூல்கள்மேல் பக்தி இல்லாத எவரையுமே கண்டதில்லை.

‘ரோகி ‘ முன்னால் வந்ததுமே அடிமுதல் முடிவரை கூர்ந்து கவனிக்கவேண்டுமென்பது ஆரல்வாய்மொழிபள்ளியின் வழமுறை. காலில் வீக்கமென்றால் குதத்துக்கு உள்ளேயும் முத்தையா வைத்தியர் கூர்ந்து பார்ப்பார். வேத சகாய குமார் அவ்வண்ணமே முதலில் பிரதியை மூன்றுதடவை சுத்தமாகப் படிப்பார். எழுத்துப்பிழைகள் உள்பட அனைத்தையும் கவனத்திலெடுத்துக் கொள்வார்.

”நாஞ்சில்நாடன் கதைகள் தொகுப்பிலே நாநூற்றி பத்தொன்பதாம் பக்கத்திலே ‘வெங்கப்பய வெளங்காப்பய’ன்னு ஒரு வரி வருது. வெங்கன்னு சொல்றதுக்கு என்ன அர்த்தம்? மொத்த நாஞ்சில்நாடன் கதைகளிலே இருபத்தெட்டு எடத்திலே இதே வார்த்தை வருது. மருந்தோ குழம்போ சுண்டிப்போறதுக்கு வெங்கிப்போறதுன்னு சொல்றதுண்டு…” இவ்வாறு பிரதி விளக்கம் விரியும்.

ஆனால் பிரதி ஆராய்ச்சி செய்யும் பண்டிதர்கள் போல அழகியலுணர்வை தவற விடமாட்டார். அவருக்கு எந்தப் படைப்பும் வாழ்க்கையைச் சொல்லி அவருக்கு கிளர்ச்சி ஊட்ட வேண்டும். கிளர்ச்சி ஏற்பட்டால் எங்கும் கால்தரிக்காது. பைக்கை எடுத்துக் கொண்டு விரைந்து வந்து உரத்த குரலில் ”சு.வேணுகோபால் எளுதின ஒரு கத இப்பம்தான் படிச்சேன்….அதுக்கு ஒரு உள்ளர்த்தம் என்னன்னா…”என்று உரத்த குரலில் உற்சாகமாகத் தொடங்கி சட்டென்று புருவம் மேலேறி முகம் தீவிரப்பட்டு [வேதசகாயகுமாரின் புருவம் அவரது உடம்பில் மிக சுறுசுறுப்பான ஓர் உறுப்பு] ”அந்தக் கதைய நாம அழகியல் ரீதியா மூணு கோணங்களில பாக்கலாம். ஒண்ணு…”என்று விரிவுரை ஆற்றி பைக்கில் ஏறி நாகர்கோயில் நகர்வாழ் பிற இலக்கிய நண்பர்களிடம் விரிவுரையாற்ற தடதடத்து விரைவார்.

வேத சகாய குமார் ஒரு லௌகீக ஞானி. சிமெண்ட் எது நல்லது [நாக்கில வச்சா சுண்ணாம்பு எரியணும்,ஆனா மாவுமாதிரி சாம்பல் ருசி இருக்கப்பிடாது] எவர் சில்வர் பாத்திரம் அசலா என்று எப்படி அறிவது [ விளிம்பைத் தடவிப்பாக்கணும். நல்ல எவர்சில்வரிலே விளிம்பு மொழமொழண்ணு இருக்கும்.] பலாப்பழத்தில் சுளை எப்படி கண்டுபிடிப்பது [ வெளியே புடைச்சு வளைஞ்சு இருக்கிற எடத்தில மட்டும்தான் சொளை இருக்கும்] போன்ற அரிய தகவல்களின் சுரங்கம். ஆகவே இரவு பகலாக சொந்தக்காரர்களுக்காகக் கடைகள் ஏறி இறங்கி உழைப்பவர். மீன் சாப்பிட மாட்டார். ஆனால் நாஞ்சில்நாடனுக்காக மீன்வாங்கக் கடற்கரைக்குப்போய் மீன்வகைகளை விரிவாக விளக்கி மீன்களை நுண்ணிதின் ஆய்ந்து பொறுக்கிக் கொடுப்பார்.

வேதசகாய குமார் நல்ல ஓட்டுநர். அவரது பைக் பின்னால் நான் நம்பி ஏறுவேன். நிதானமாக எல்லாப் பக்கத்தையும் பார்த்து,உரிய சாலைவசைகளுடன் ஓட்டுவார். வெள்ளைமாருதி வேனை ஆகாயவிமானம் ஓட்டும் நிபுணத்துவத்துடன் கொண்டுசெல்வார். அதேபோல எந்த ஒரு சரடையும் சங்க இலக்கியத்திலிருந்து தொடங்கி சிலப்பதிகாரம்,கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் வழியாக புதுமைப்பித்தன் சுந்தர ராமசாமி வரை கொண்டுவந்து சேர்த்துவிடுவார்.

”சங்கப்பாட்டில மள்ளர்வயல்களில இருந்து வைக்கோல்கூளம் பறந்து உமணர் உப்புவயல்களிலே போயிருக்கு.. அதனால அவங்களுக்குள்ள சண்டை நடக்குது. வயல் எப்டி உப்பளம் பக்கத்தில போச்சு? அப்டீன்னா அண்ணைக்குள்ள விவசாயம் அழிமுகங்களிலே இயற்கையான வண்டல்படிவுகளில நடந்திருக்கு. மேட்டுநிலத்துல விவசாயம்லாம் ரொம்பப் பின்னாடி வந்தது. காவிரியிலே அணைகட்டின பெறகு…ஆனா சங்க இலக்கியங்களில இயற்கை நுட்பமே இல்லாத திணைண்ணா கடல்தான். சும்மா கடல்காக்கை தாழைன்னு சொல்லிப் போய்ட்டே இருக்கான். மீனுன்னா அயிரையும் சுறாவும்தான். எல்லாம் வெள்ளாளன் அவன் வீட்டுத் திண்ணையிலே ஒக்காந்து எழுதினது.. கடலுண்ணா அவனுக்கு சாளைப்புளிமொளம்தான் ஞாபகத்துக்கு வரும்….”

அல்லது சமூகவியல் ஆய்வு ‘…மருதத் திணையிலே தலைவன் தலைவிய இளம் எருமையேன்னு கொஞ்சுறான். இண்ணைக்குக் கொஞ்சினா கஞ்சி கிடைக்காது. சங்ககாலப் பெண்கள் எலலமே மாமை நிறம்தான். ஆனா காப்பிய காலத்துக்குப்பிறகு வந்த எழுத்துக்களிலே பொண்ணுண்ணாலே செவப்பு நெறம்தான். கண்ணகிக்கே தாமரை நெறம். செட்டிப்பொண்ணு எப்டி இருந்திருக்கும்? நல்லா குளுப்பாட்டின அம்மன்செலை மாதிரி இருந்திருப்பா. இளங்கோ அவ மேலே பெயிண்டு அடிச்சுட்டாரு…இந்தப்பெயிண்டு அப்டியே நம்ம தமிழ்ப் பண்பாடுமேலே படிஞ்சிருக்கு… சொரண்டறது ரொம்ப கஷ்டம். இண்ணைக்கும் நம்ம சினிமாவில ஒரு கறுத்த பொண்ணு கெடையாது…”

பேச்சு எல்லாம் விரிவாகத்தான். எழுதுவதென்றால்தான் பிரபஞ்ச இயக்கம் உறைந்துவிடும். மூன்றரை மணிநேரம் அவர் விளக்கி இரண்டு சர்க்கரையில்லா டீ குடித்துக் கிளம்பும்போது ”சார், நீங்க இப்ப சொன்னதை இப்டியே எழுதிருங்க…நல்ல கட்டுரை ஆயிடும்…”என்பேன். ”சரியாச் சொன்னீங்க.நானே இதைத்தான் நெனைச்சேன். இப்பமே வீட்டுக்குப் போயி ஒக்காந்திர வேண்டியதுதான்…”. நேராகப்போகும் வழியில் மனைவிக்குத் தைக்கக் கொடுத்த ஜாக்கெட்டை வாங்கி, தங்கைக்காக மரக்கடையில் நுழைந்து மலேசியா கோங்கின் விலை விசாரித்துவிட்டு, அக்கா பையனுக்காக இருசக்கர உதிரிபாகமொன்றை ஐயம்நீக்கி நோக்கி வாங்கி, வீடுதிரும்பிப் படுத்து இளைப்பாறும்போது நான் கூப்பிட்டு ”சார் எழுதிட்டீங்களா?”

”இப்பதான் ஆரம்பிக்கணும்.. இண்ணைக்கு ராத்திரி ஒறக்கத்த விட்டிர வேண்டியதுதான்…” நள்ளிரவில் கூப்பிட்டு ”. ஜெயமோகன், தொடங்கியாச்சு. சூப்பரா வந்திட்டிருக்கு..” மறுநாள் அதிகாலையில் பைக்கில் கிளம்பி வந்து ஒரு கோடுபோட்ட அரைத்தாளை நீட்டி ”இப்ப இதுவரைக்கும்தான் எளுதியிருக்கேன்..பாத்து சொல்லுங்க” . நான் அதில் உள்ள ஆறுவரிகளைப் பார்த்துப் பதைபதைப்புடன் ”இது என்னசார்?” ”நேத்து சொன்னதை எளுதியிருக்கேன்….அப்ப ஒரு சந்தேகம். சங்க இலக்கியத்தில வாற அத்திரிதான் கோவேறு கழுதைன்னு யாரு சொன்னது? எந்த உரையாசிரியர்? உண்மையில அப்டி யாருமே சொல்லலை. அது இப்ப சமீபத்தில் நம்ம ஆளுக யாரோ சொன்னது. அதுக்கு ஒரு ஆதாரமும் இல்ல….அதைத்  தேடிப்போனப்ப வேற ஒரு விஷயம் கெடைச்சுது…”

வேதசகாய குமார் துல்லியமான கணக்குகள் எழுதும் பொறுப்பான குடும்பத்தலைவர். கட்டுரைகளும் பற்றுவரவு பாணியில்தான்.”…பாரதி ஒரு முன்னோடித் தமிழ்க்கவிஞர் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அவர் காலத்தில்தான் தமிழில் நவீனத்துவம் வந்தது என்பதையும் நாம் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். அந்த நவீனத்துவத்தையே ந.பிச்சமூர்த்தி முதலியோர் நம்பினார்கள் என்பதும் நம் கணக்கில் இருக்கத்தான் வேண்டும்.” என்ற கறாரான நடை ”மொத்தத்தில் பார்த்தால் பாரதி…” என்று முடிகிறது. விடை அல்லது ஈவு எப்போதுமே துல்லியம். கொஞ்சம் மெனக்கெட்டால் அவரது கட்டுரைகளைக் கட்டமிட்டுக் கணக்கு அட்டவணையாக மாற்றிவிட முடியும்

வேதசகாய குமார் திட்டவல்லுநர். 1997ல் பாரதி பற்றி ஒரு விரிவான ஆய்வுநூல் திட்டமிடப்பட்டு பிரம்மாண்டமான விவாதங்களுக்கு ஆளாகியது. ‘பாரதியோட கவிதைகளிலே அந்தக்காலத்தில இங்க இருந்த சுத்த அத்வைதத்தோட பாதிப்பு அதிகம். அந்த வகை அத்வைதம் காஞ்சிமடத்தோட எழுச்சியில அப்டியே காணாமப்போச்சு. கடையநல்லூரில இருந்து அக்காங்கிற பேரில எழுதின ஒரு இளம் விதவையோட பல வரிகள் பாரதியிலே எடுத்தாளப்பட்டிருக்கு. அவங்க ஒரு பெண்துறவி. ஆனா அவங்களோட பேரை பாரதி எங்கயுமே சொல்லலை” உடனே அதேசூட்டில் கிளம்பி அயோத்திதாச பண்டிதர். ”பண்டிதரோட பெரும்பாலான கட்டுரைகள் பாரதியோட நடந்த விவாதங்கள். அப்றம் வவேசு அய்யருக்கு பதில் சொல்றார்.அவங்க ரெண்டுபேரும் இவர் பேரை எங்கியுமே சொல்லலை. நான் நெஜ பறையர்களிட்ட பேசறேன்,பட்லர் பறையர்களிட்ட இல்லன்னு பாரதி சொல்றது இவரைப்பத்தித்தான்’

அங்கிருந்து ஆவேசமாக எழுந்து நாஞ்சில்நாடன். ”…நாஞ்சில்நாடனை சும்மா என்னமோன்னு நெனைச்சிட்டாங்க. அவரோட நுட்பங்கள் இவங்களுக்குத் தெரியல்ல. மண்ணில நிண்ணா அது நுட்பம் இல்லாத எழுத்தா? இவனுகள விடப்பிடாது ஜெயமோகன். நான் முடிவுசெய்தாச்சு…”

”சார்!”

”அதில்ல, ஒரு புக்கு எழுதிப்பிடவேண்டியதுதான்.நாஞ்சில்நாடனுக்கு ஒரு எடமிருக்கு. அங்க அவர நிப்பாட்டணும்” அதிலிருந்து சுடச்சுட கால்டுவெல். ”நம்ம இலக்கிய ஆராய்ச்சிகளிலே முதல் சயண்டிஃபிக் குரல் கால்டுவெல்லுக்கு உரியது. தரவுகள் இல்லாம ஊகங்களே செய்றதில்ல அவரு. இண்ணைக்குவரை அதை யாரும் கவனிச்சதில்லை. ஒரு நல்ல புக்கு எழுதணுமா வேண்டாமா நீங்களே சொல்லுங்க”

நாஞ்சில்நாடனைப்பற்றி நான் புத்தகம் எழுதுகிறேன் என்றபோது உவந்து சிரித்து ”நல்ல வேலை…எழுதுங்க.நானும் சேந்து எழுதறேன்.சேத்து அப்டியே போட்டிருவோம்.” ”நீங்க சொல்லி ஆறு வருஷமாச்சே சார்?” ”குறிப்புகள் எல்லாம் ரெடியா இருக்கு ஜெயமோகன். இப்ப ஆரம்பிச்சிரவேண்டியதுதான்… நான் ஒக்காந்தாச்சு” கடைசியாகப் பார்த்தபோது ”நவீனத்துவத்திலே சுந்தர ராமசாமிக்கு இருக்கிற பங்கைப்பத்தி ஒரு நல்ல புக்கு எழுதிரணும். இப்ப அதாக்கும் பிளான்”என்றார்.

எல்லாப் புத்தகங்களையும் போல பைபிளையும் ஆழக்கற்ற வேதசகாய குமார் தன்னிடம் ஆய்வுசெய்ய வந்த மாணவிக்கு ‘விவிலியத்தில் தகாத பாலுறவுகள்- ஒரு சமூக உளவியல் நோக்கு’ என்று தலைப்புக் கொடுத்து அந்த மாணவியின் மதபோதகத் தந்தையால் குடையுடன் துரத்தப்பட்டதாக செய்தி உண்டு. மாதாகோயில்களுக்குப் போவதில்லை.பொது இடங்களில் பாதிரிமார் அல்லது உபதேசிகள் அகப்பட்டால் பைபிளின் உள்ளர்த்தங்களை விளக்கி அவர்களுக்கு சாத்தானையே தரிசனம்செய்து வைப்பார். ரயிலில் சிக்கிய ஒரு ஃபாதர் கழிவறைக்குள் ஓடிக் கதவைத்தாழிட்டுக் கொண்டதாக வதந்தி .

தமிழறிஞர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர். கல்லூரியில் ஒரு தமிழறிஞர் ‘சிலப்பதிகாரத்தில் இளங்கோ கோவலன் தலை துண்டிக்கபப்ட்டு நெடுநேரம் தாண்டிய பின்னரே அங்கு கண்ணகி வருவதாகச் சொல்கிறார். ஏன்? அன்று வெட்டப்பட்ட தலையை ஒட்டவைக்கும் மருத்துவ முறை இருந்தது. அதற்கு சித்த மருத்துவ ஆதாரம் இருக்கிறது. ஆகவேதான் கண்ணகி வந்த இடைவெளிநேரத்தைக் கச்சிதமாகச் சொல்கிறார் அடிகள்”என்று பேசிக் கொண்டிருக்கையில் ஒரு மாணவி எழுந்து ”ஐயா, சிலம்பிலே கோவலன் கழுத்தைக் காவலன் வெட்டியதாக யார் சொன்னது?” என்று கேட்க ”வேறு எப்படி வெட்டுவர்கள்?”என அறிஞர் சீற ”வாளால் ‘நெடுகப் போழ்ந்ததாக’ சிலப்பதிகாரத்திலே சொல்லப்பட்டிருக்கிறதே. நெடுக்காக வெட்டினால் அந்த சித்த மருத்துவ மருந்து வேலைசெய்யுமா?” என மாணவி கேட்க ”இங்க வாறப்பவே சொன்னாங்க, போகாதே, பிசாசு இருக்கிற காலேஜுன்னு….என் புத்திய செருப்பாலே அடிக்கணும்” என்று குமுறியபடி அறிஞர் இறங்கிச் சென்றாராம்.

வேதசகாய குமார்க்கு ஒரு பௌராணிகர் என்ற இடமும் குமரிமாவட்ட வரலாற்றில் உண்டு. அய்யன் திருவள்ளுவருக்கு ‘நடமாடும் முத்தமிழ்’ அவர்கள் குமரியில் சிலை வைத்தபோது இவர் ஓடும் ரயிலில் அமர்ந்து ஒன்றுமறியாதவராக ” இல்ல கேக்கேன் ,சத்தியமாட்டு அது என்ன செலை? காதைப் பாத்தேளா? கருணாநிதியின் குலதெய்வம் அய்யனாரின் சிலைதான். நூறடியிலே அய்யனாருக்கு சிலை வைக்கணும்ணு வேண்டுதல். சர்க்கார் செலவிலே வைச்சா சிக்கலாயிரப்பிடாதேண்ணு இப்டி வச்சிருக்காரு. பாத்தியளா, இடுப்பில ஒரு ஒடிவு. அது குதிரையில இருந்து விழுந்து வந்ததாக்கும். ஆனா பேர மட்டும் அய்யன்னு சரியா போட்டுட்டாரு… ”என்று சொல்லி இரண்டே நாளில் அது பரவி இன்றும் நம்பப்படுகிறது.

சிலைக்குச் சாரம் கழற்றும்போது சங்கிலி விழுந்து சிற்பிக்குக் காலில் அடிபட்டபோது இவர் ரயில்நண்பரிடம் பரம ரகசியமாக ”…சாஸ்திர தோஷம். அறம் பற்றிப்போச்சு கேட்டேளா? திருவள்ளுவர் இப்ப கோவமாட்டு இருக்காருண்ணு பிரஸ்னம் வச்சுக் கண்டுபிடிச்சிருக்காங்க…” ”எதுக்கு?” ”பின்ன இவனுக திருக்குறள் சொல்லிக் குடுக்குத லெச்சணத்துக்கு அவருக்கு அங்க உறக்கம் வருமா? பண்டு பாண்டியன் கண்ணகிக்கு நூத்தெட்டு தட்டான்மாரைப் பலி குடுத்தான்லா? அத மாதிரி திருவள்ளுவருக்கு நூத்தியெட்டு தமிழ் வாத்தியாருகளை பலி குடுக்கானுக. அஞ்சு பலி ஆயாச்சுண்ணாக்கும் நான் கேட்டது…நமக்கென்ன, சர்க்கார் காரியம்.நம்ம பிள்ளை உண்டு குட்டி உண்டு…என்ன சொல்றீய?”

ஒரே வாரத்தில் வதந்தி பரவி என்னிடமே பல தமிழாசிரியர்கள் திகிலுடன் சொல்லத்தலைப்பட்டார்கள். ஆஸ்பத்திரிகளில் சிகிழ்ச்சை எடுக்கும் தமிழாசிரியர்களைக் கண்டு பிடித்து அவர்களுக்கு ஊசி போட்டு பலி கொடுப்பதாக வதந்தி. தமிழாசிரியர்களுக்கு மாரடைப்பு வரவழைப்பதற்காக ஒரு மாத்திரை இறங்கியிருப்பதாக ஒரு சுழல் வதந்தி. ”சார்  ஃபோனா வருதுசார்” என்றேன்.. ”எனக்கு தினம் மூணு ஃபோன் வருது. அருமைநாயகம் காலில பட்டி கடிச்சிருக்கு, ஆஸ்பத்திரிக்குப் போனா ஊசி போட்டுக் கொன்னிருவாங்களான்னு இப்பதான் ஃபோன் போட்டுக் கேட்டார்”

ஆனால் அவரது புராணிக திறனின் உச்சம் இதுதான். கன்யாகுமரி தேவி, சபரிமலை அய்யப்பனின் சித்தி முறை. சண்டை வராமலிருக்குமா என்ன? கோபத்தில் சித்தி ”லே மண்ணாப்போறவனே , என்ன பேச்சுலே பேசுதே வெளங்காப்பயலே. இப்ப சொல்லுதேம்லே…இனி உன் பக்தனுங்க வருசத்துல நாலுமாசம் சகல விருத்திகெட்ட தமிழ் சினிமாப்பாட்டையும் உனக்க சன்னிதானத்துல வந்து நிண்ணு பாடி உனக்க அடைப்ப உருவுவானுக பாத்துக்கோ..ஆஹா, எங்கிட்டயா வெளயாடுதே?” என்று சாபம் போட்டுவிட்டாள். அப்படித்தான் ”அப்படிப் போடு போடு போடு சரணம் போடு முன்னாலே ”, ” கன்னிச்சாமியா வரட்டுமா குருசாமியா வரட்டுமா?”, ”அய்யப்பராசா அய்யப்பராசா என்னைக் காவல் பண்ணேண்டா” போன்ற பாட்டுகளால் சபரிமலை நிறைந்தது

பொறுத்துப்பார்த்த அய்யப்பன் தாங்க முடியாமல் வாவரிடம் குமுறினாராம் ”செறுக்கிவிள்ள அடிவயித்துல சவிட்டிப் போட்டாளே பாய். இதுக்கு அவ செருப்பால நாலு அடி அடிச்சாலும் பட்டிருப்பேன்… புலையாடிமோள அப்டி விடப்பிடாது. இந்தா இப்பம் நானும் சாபம் போடுதேன். இனி எனக்க பக்தர்களில பாதிபேரு நேராப்போயி அவளுக்க கடற்கரையில பேண்டு வச்சிட்டுப்போனாத்தான் வெரதம் பூர்ணமாகக் கடவது. ஓம் தத் சத்!” அப்படித்தான் டிசம்பரில் கன்யாகுமரி மலக்காடாக ஆயிற்று.

நான் பாய்ந்து வேதசகாய குமார் கைகளைப்பிடித்துக் கண்ணீர் மல்கினேன் ”சார், இது மட்டும் வேண்டாம் சார். வேற யாரிட்டயும் வாயத்தெறக்காதீங்க. இந்து மதத்தைப்பத்தி உங்களுக்குத் தெரியாது. உண்மையிலேயே இது ஒரு ஆசாரமா மாறி ஒரே வருசத்தில கன்யாகுமரி ஜில்லாவே அழிஞ்சிரும்சார்” பௌராணிகர் கனிந்த புன்னகையுடன் ”செரி விடுங்க அந்த அளவுக்கு சொல்றிய”என்றார்.

முந்தைய கட்டுரைவரம்பெற்றாள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமருதம் என்ற பள்ளி