வன்னி

பல இடங்களுக்குக் கைமாறிய செய்தி ஒன்று இன்றிரவு வந்துசேர்ந்தது. ஒருவேளை வன்னியில் இருந்து நான் எதிர்பார்த்திருந்த கடைசிச் செய்தியும் அதுவாகவே இருக்கும். பதினைந்து வருடங்களாக என் எழுத்துக்களுடன் ஆழ்மான உறவுகொண்டிருந்த என் நண்பர்களில் ஒருவர், ஒருபோதும் நான் நேர்¢ல் கண்டிராதவர், கொல்லப்பட்டுவிட்டார்.

என் எந்தக்கருத்தையும் அவர் ஏற்றுக்கொண்டவரல்ல. ஆனால் அவருடன் என் எழுத்துக்கள் ஆழமாக உரையாடிக்கொண்டிருந்தன. கடைசியாக அவருக்குக் ‘கொற்றவை’ பல கைகள் வழியாக அனுப்பப்பட்டது. என் ‘பின் தொடரும் நிழலின் குரலை’ கடுமையாகவும் நட்பார்ந்த தொனியுடனும் விமரிசித்து அவர் எழுதிய கட்டுரையை  அவர் கொண்ட புனைபெயரில் ‘சொல் புதிதில்’ வெளியிட்டேன். ஆழ்ந்த மார்க்ஸியப்பிடிப்பு கொண்டிருந்தவர். சைவ இலக்கிய ரசனையும் கிறித்தவ மதப்பிடிப்பும் ஒரே சமயம் கொண்டவர். அவரது உண்மையான பெயர் கூட எனக்கு தெரிந்திருக்கவில்லை என்று எண்ணுகிறேன்.

ஒவ்வொரு நாளும் இரவு நெடுநேரம் வரை மின்னஞ்சலில் செய்திகளைப் பார்த்துவிட்டு தூங்கச் செல்கிறேன். மரணச்செய்திகள். ஒருவேளை என் வாழ்க்கையில் தொடர்ச்சியாக வேண்டியவர்களின் இறப்புச்செய்திகளை இப்போதுதான் கண்டுகொண்டிருக்கிறேன். ஈழத்தில் தமிழ் மக்களின் வாழ்விடம் ஒரு பேரழிவுப்பிராந்தியமாக ஆகிவிட்டிருக்கிறது. நெடுநேரம் செயலற்ற ஊமை ஆங்காரமும் இனம்புரியாத இன்னதென்றிலாத கசப்பும் வெறுப்பும். பல்லில் துளையிடும்போது ஏற்படும் உக்கிரமான கூச்சம் போல ஒன்று.

இந்தப் பேரழிவுகளைப் பற்றி ஒரு சொல் கூடச் சொல்லக்கூடாது என்று எண்ணியிருந்தேன். தமிழில் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் அர்த்தமற்ற இரைச்சல் பெரும் கூச்சத்தையும் அருவருப்பையும் அளிக்கிறது. அந்தக்கூச்சலில் ஒரு துளியாக நம் குரலும் சென்றுசேர்வதில் என்ன பொருளிருக்க முடியும்? அது ஒரு நரகம். என் ஒரு சொல்கூட போலியாக ஒலிப்பதை நான் அனுமதிக்கலாகாது என்பது என் எண்ணம். இந்தக்குரலை எனக்குள்ளேயே ஒலிக்கச் செய்துவிடலாம். இப்போது வேறென்ன செய்ய இயலும்?

வன்னியில் நிகழ்ந்துகொண்டிருப்பது ஒரு மாபெரும் மானுடப்பேரழிவு. மனிதர்கள் இரக்கமில்லாமல் கொன்று ஒழிக்கப்படுகிறார்கள். எப்போதும் எந்தப்போரிலும் முதல்பலியாகும் எளிய மனிதர்கள். உயிர்வாழ்தல் என்ற ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு மண்ணில் வாழ்ந்து மறையும் கோடானுகோடிகள். வரலாற்றில் யாருடைய தவறு அது என்ன தவறு அது என்று ஆராயும் நேரமல்ல இது. இது ஒரு மனித அழிவு. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால் உலகசமூகம் அதை மௌனமாகப் பார்த்திருக்கிறது. ஏனென்றால் அது எப்போதும் அப்படித்தான் பார்த்துக்கோண்டிருந்தது. கம்பொடியாவில் போல்பாட் தன் மக்களில் நேர்ப்பாதியை கொன்றொழித்தபோது, சத்தமே இலலமல் எளிய மக்கள் நாற்பது லட்சம்பேர் அழிந்தபோது,  உலகசமூகம் என்ன செய்தது? நாம் என்ன செய்தோம்? இன்னும் சில வருடங்களில் ஈழமண்ணும் கம்போடியாபோல மட்காத எலும்புக்கூடுகள் காலடிதோறும் இடறும் ஒரு நிலமாக ஆகும். அதை உலகம் மறக்கும். நாமும் மறப்போம். மக்கள் ஈசல்கள் போல மடியும்போதுதான் ராஜதந்திரப் பிரசங்கங்கள் கூர்மை கொள்கின்றன எப்போதும்.

ஒரு சமூகத்துக்காக அது மட்டுமே பேசமுடியும். அதுவே கசப்பான உண்மை. ஈழமக்களுக்காக ஈழத்தவர் கொள்ளும் துடிப்பில் நூற்றில் ஒருபங்குகூட தமிழகத்தில் இன்று இல்லை. ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் சாதாரண மக்களைக் கண்டுகொண்டிருக்கிறேன். அவர்கள் அளவில் ஓர் எளிய அனுதாபச் சூள் கொட்டலுக்கு அப்பால் ஈழ அவலம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. தமிழர் கொள்ளும் துடிப்பில் நூற்றில் ஒருபங்கே இந்திய சமூகம் அடையமுடியும். சமூகம் எப்போதுமே தன் வாலில் தீப்பிடித்ததை அறியாமல் தூங்கும் மலைப்பாம்புதான். லௌகீகத்துக்கு அப்பால் அது எதையுமே கவலைப்படுவதில்லை

அரை நூற்றாண்டாக நிகழும் இந்த மானுட அவலத்தை தமிழ் மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறார்களா நம் அரசியல்வாதிகளும் ஊடகவாதிகளும்? இந்திய அளவில் கொண்டுசென்றிருக்கிறார்களா? உலக மனசாட்சி முன்பாக எடுத்து வைத்திருக்கிறார்களா? நம் ஆங்கில ஊடகங்களில் ஈழப்பிரச்சினை பற்றிய பேச்சுகள் மிகமிகக் குறைவு. அந்தக்குரலை இந்திய அளவில் கொண்டுசெல்ல இன்றும்கூட யாரும் இல்லை. நான் வாசித்தவரை மலையாளத்தில் ஒரு பத்து கட்டுரைகூட குறிப்பிடும்படியாக வந்ததில்லை –அதில் ஐந்து நான் எழுதியதாக இருக்கும்.

இன்று இந்த உச்சகட்ட அழிவின் தருணத்தில் மக்களின் அபயக்குரல் எவர் காதிலும் விழவில்லை என்றால் அதற்கான எந்த பணியும் எப்போதும் செய்யப்பட்டதில்லை என்பதே காரணம். ஆனால் மறுபக்கம் சீரான பிரச்சாரங்கள் நெடுங்காலமாக நடைபெறுகின்றன. 1985ல் இந்திய அமைதிப்படை ஈழத்தை ஆக்ரமித்தபோது சுந்தர ராமசாமியின் காலச்சுவடு இதழில் நா.அமுதசாகரன் என்றபேரில் அ.ஏசுராஜா எழுதிய கட்டுரையை நான் மொழியாக்கம் செய்து மலையாளத்தில் டாக்டர் எம்.கங்காதரன் வெளியிட்ட ‘ஜெயகேரளம்’ இதழில் வெளியிட்டேன். கூடவே சில கட்டுரைகளும் எழுதினேன்.

ஆறுமாதம் கழித்து நான் எம்.கங்காதரனைச் சந்தித்தபோது அவரது கருத்துக்கள் முற்றாக மாறிவிட்டிருந்தன. அவரை இருமுறை இரண்டு
சிங்கள பௌத்த துறவிகளின் குழு நேரில் வந்து சந்தித்து உரையாடியிருந்தது. அவரிடம் பேசுவதற்கு மேலும் மேலும் தயாரிப்புகள் தேவையாக இருந்தன. இவ்வாறு நெடுங்காலமாக சீராக இந்திய ஊடகங்கள் ஒரு கருத்துவலைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

ஆனால் நேர் மாறாக இந்திய அரசியல்வாதிகள் ஈழ அவலத்தைக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் அரசியல் ஒன்று உள்ளது. அவரவர் வெறுப்பு உள்ளது. அதற்கு ஈழ அவலத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே ஒவ்வொருவரும் செய்யும் முயற்சியாக இருக்கிறது. ஒருவர் இந்திய தேசிய எதிர்ப்பாளர் என்றால் அவருக்கு ஈழ அவலமே மைய ஆயுதம். ஒருவர் பார்ப்பன எதிர்ப்பாளர் என்றால் அவருக்கும் அதுவே ஆயுதம். ஒருவர் இந்து விரோதி என்றால் அவருக்கும் ஈழ ரத்தமே முக்கியமான கருத்துக்கருவி. ஒவ்வொஒருவரும் அதை ஏந்தி தங்கள் எதிரிகளை தேடி அலைகிறார்கள். நான் நான் என்கிறார்கள். இங்கே நடந்துகொண்டிருப்பது இதுதான்.

இந்திய தேசத்தின் மனிதாபிமான சாரத்தை தட்டி எழுப்பிக் குரல்கொடுக்க வைக்க வேண்டிய நேரத்தில் இந்திய எதிர்ப்புக்குரல்களை எழுப்புவதில் உள்ள அபத்தத்தை எவரும் உணர்வதில்லை. அது எத்தனை பெரிய ஆயுதத்தை எதிரிக்கு வீசிக்கொடுப்பது என்று உணராத கண்மூடித்தனமான உணர்ச்சிகர அரசியல். அதை வெளிப்படுத்தும் மிகையான நாடகத்தனம். வரலாற்றின் இந்த தருணத்தில் தன்னை எபப்டி வெளிப்படுத்திக்கொள்வது என்றே ஒவ்வொருவரும் சிந்திக்கிறார்கள்.

இன்று ஈழ அவலம் தமிழகத்தில் உருவாக்கும் உணர்வெழுச்சி கூட வெறும் இந்திய எதிர்ப்பு கோஷங்களாக இந்திய அளவில் ஊடகங்களால் முன்வைக்கப்படுகிறது. அந்த சித்திரத்தை உருவாக்குவதற்கு யாரை முன்னிறுத்தவேண்டுமோ அவர்களுக்கு மட்டும் அதிக விளம்பரத்தைக் கொடுத்து அவர்கள் குரலை தமிழர் குரலாக ஆக்குகின்றன ஊடகங்கள். அந்த மேடையில் நம் அரசியல்நடிகர்கள் ஆடுகிறார்கள்.  ஆகவே இந்திய அளவில் ஒரு மனிதாபிமானப்பிரச்சினையாகக் கூட இதைக் கொண்டுசெல்ல நம்மால் முடியவில்லை.

வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு அப்பால் சென்று இந்த தருணத்தை தன் கையில் எடுத்து மேலே செல்லும் ஒரு அரசியல் அறிஞன் நமக்கு இல்லை. அத்தகைய திராணிகொண்ட அரசியல்வாதிகள் , ராஜதந்திரிகள் அன்றி பிறர் வாயே திறக்காமலிருக்க வேண்டிய தருணம் இது. சொற்கள் ஒவ்வொன்றும் கவனமாக வெளிப்பட வேண்டிய நேரம். ஆனால் நாம் கொந்தளிக்கிறோம். என்னென்ன அபத்த நாடகங்களைப் போடமுடியுமோ அதையெல்லாம் போடுகிறோம். நம் அபத்த ஆட்டத்துக்கு விலையாக மனித உயிர்கள் அழிகின்றன.

இந்த ஆட்டத்தின் எதிர்நிலையில் செயலற்று, சுயவெறுப்பின் உச்சியில் நின்றுகொண்டு, தன்னைத்தானே காறி உமிழ்ந்துகோண்டு, மௌனம் பாவிப்பதே நுண்ணுணர்வும் நேர்மையும் கொண்ட ஒருவர் இப்போது செய்யக்கூடியதாக இருக்கிறது. எழுதினால் நமது பாவனைகளையும் நாடகங்களையும் பற்றி மட்டுமே எழுத வேண்டும்

சென்ற காலத்துப்பிழைகள் ஒவ்வொன்றும் கண்முன் தெரிகின்றன. ஆயுதங்களைவிடப்பெரிய ஆயுதம் கருத்து என்ற உண்மை. வரலாற்றுப்பிழைகள் ஒன்றுடன் ஒன்று திரண்டு பெரிய பாறைபோல தெரியும்போது நம்பிக்கை கொள்ள ஏதும் எஞ்சவும் இல்லை.

விடைபெற்றுச் சென்ற நண்பருக்கு பரிபூரணமான நம்பிக்கையிழப்பின் மௌனத்தைமட்டுமே இந்த இரவில் அஞ்சலியாக்க முடியும்.

முந்தைய கட்டுரைஇலக்கியம்,அரசியல்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதஞ்சை ப்ரகாஷ் :விழா