அனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது?

நான் ஜெக்குக் கேட்க நினைத்ததை நண்பர்கள் பலர் கேட்டு அவரே பதிலளித்து விட்டார் சந்தோசம். இதைப் பற்றி ஆலய வரலாறு நன்கறிந்த அ.கா. பெருமாள் ஏதாவது புதுத் தகவல் அறிந்தால் வெளியிட ஜெ மூலம் கோருகிறேன்.

தமிழகத்தில் கோவில் சொத்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அரசாங்கம் கைப்பற்றுவது சுலபமாக இருந்திருக்கக் கூடும்.  இரண்டு நாட்களாக இணையத்தில் நடக்கும் விவாதத்தில் தெரிவது ஆலய சொத்தை மக்களுக்காக அரசாங்கம் செலவிட வேண்டும் என்று சிலர் கூறினாலும் பெரும்பாலோர்,சொத்து அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். என் நிலைப்பாடும் அதுவே. களஞ்சியத்தில் சிலவற்றையாவது அரும்பொருள் காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
சிவா

அன்புள்ள சிவா,

இப்போது திருவனந்தபுரம் பத்மநாப சாமி ஆலயத்தில் கிடைத்திருக்கும் கிட்டத்தட்ட ஒருலட்சம்கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வத்தை என்ன செய்வது? இணையத்திலும் வெளியேயும் பலரும் எந்த மேலதிகப் புரிதலும் இல்லாமல் அதை உடனடியாக ‘மக்களுக்கு’ச் செலவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அவை மக்கள் சொத்து என்பது அவர்களின் வாதம்.

இந்தச்செல்வம் திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமானது. அந்த அரசு,மக்களின் வரிப்பணத்தால் சேமித்த செல்வம் அது. ஆகவே அது மக்களின் சொத்து என்பது உண்மை. திருவிதாங்கூர் அரசரின் கருவூலச்சொத்துக்களும் அதில் உண்டு. சுதந்திர இந்தியா,அச்சொத்துக்களை இந்திய அரசுக்குரியவையாகவே கொண்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு இந்திய யூனியன் உருவாக்கப்பட்டபோது இந்திய மன்னர்களிடமிருந்து நிலம் மட்டுமே பெறப்பட்டது. தனிப்பட்ட சொத்துக்கள், நகைகள் போன்றவை மன்னர்களுக்கே கொடுக்கப்பட்டன. குவாலியர் அரசர் போன்ற மன்னர்கள் அந்தப் பெரும்செல்வத்தின் பலத்தாலேயே இன்றும் அரசியல் சக்திகளாக நீடிக்கின்றனர்.

ஆனால் திருவிதாங்கூர் அரசு,சுதந்திரம் கிடைக்கும்போது கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருந்தது. வெள்ளையரின் சுரண்டல் ஒரு பக்கம். மறுபக்கம், உண்மையிலேயே மக்கள் நலம் நாடும் நோக்குடைய  கடைசி இரு மன்னர்களில்  மூலதிருநாள் மகாராஜா,கருவூலத்தின் கடைசிச் செல்வத்தையும் செலவிட்டு குமரிமாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு , முக்கடல், நெய்யாறு போன்ற பல அணைகளைக் கட்டி  நாடெங்கும் கால்வாய்களை வெட்டினார் என்பது. இன்றும் தென் திருவிதாங்கூர் நிலத்தின் வளத்தின் காரணம் அதுதான். அந்த அணைகளே உண்மையான பெரும் செல்வம்.

இந்த செல்வம் தங்களிடம் இருந்த தகவல் 160 வருடங்களாக அரச குலத்துக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆகவே அவை கணக்கில் வரவில்லை. இந்திய யூனியன் உருவாக்கப்பட்டபோது இந்த நிதிக்குவை பற்றி தெரிந்திருந்தால் இந்த சொத்து திருவிதாங்கூர் அரசகுலத்துக்கே சென்றிருக்கும். திருவிதாங்கூர் அரச குலம் – குறிப்பாக மறைந்த பாலராமவர்மா மகாராஜா, பிற அரசர்களைப்போல அல்லாமல் கிடைத்த சொத்துக்களையும் பொதுநலனுக்காகவே செலவிட்டார் என்பதும் இன்றைய திருவனந்தபுரத்தின் பெரிய பொதுநலநிறுவனங்கள் அவரது கொடை என்பதும் இன்னொரு உண்மை.

இன்னொரு விஷயம், அங்கே கிடைத்திருக்கும் பொருட்களில் பெரும்பாலானவை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தனியார் நிலப்பிரபுக்கள் அனந்தபத்மநாபனுக்குக் காணிக்கையாக வைத்த பொருட்கள். அவை திருவிதாங்கூர் அரசுக்கு கொடுக்கப் பட்டவை அல்ல. அவை கோயிலுக்கே சொந்தம் என்ற வாதமும் புறக்கணிக்கத் தக்கது அல்ல. இந்தியாவின் எல்லாக் கோயில்களிலும் அப்படி சிலைகளாகவும் நகைகளாகவும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பாரம்பரியசெல்வம் உள்ளது.   அவற்றை முழுக்க விற்றுக் கஜானாவில் சேர்க்க வேண்டும் என்று கோருவது எந்த நியாயம் என்று புலப் படவில்லை. நாளை கோவாவிலும் பிறபகுதிகளிலும் உள்ள தேவாலயங்களின் பொன்னாலான சிலைகளையும் உருக்க வேண்டும் என்று சொல்வார்கள். தாஜ்மகாலை சலவைக்கல் விலைக்கு விற்கலாமென்பார்கள்.

கடைசியாக, இந்த செல்வம் எதுவுமே புழங்கப்படும் பணமாக இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும். இவை 600 ஆண்டு முதல் 150 ஆண்டு வரை காலப்பழக்கமுள்ள தொல்பொருட்கள். அபூர்வமான வேலைப்பாடுள்ள நகைகள் மற்றும் சிற்பங்கள். இவற்றையெல்லாம் உருக்கித் தங்கமாக்கிப் பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு மூர்க்கமான அறியாமைவாதம். எந்த நாகரீக அரசும் அதைசெய்யாது. சர்வதேச கலைச்சந்தையில் இவற்றின் மதிப்பு  இன்னும் மும்மடங்கு எனப்படுகிறது.

ஆகவே இவை இந்திய அரசின் சொத்துக்கள் என்பதே சரி. பத்தூர் நடராஜர் போல, கிருஷ்ணதேவராயரின் மணிமுடி போல, தாஜ்மகால் போல, மதுரைப் பேராலயம் போல இவை நமது பாரம்பரியக் கலைச்சொத்துக்கள். அவற்றை உண்மையில் எதுவுமே செய்ய முடியாது. அருங்காட்சியகத்திலும் கருவூலத்திலும் பேணலாம்.

அப்படியானால் இவற்றால் பண மதிப்பே இல்லையா? உண்டு, நம்முடைய நிதி வைப்பு அதிக நிஜமதிப்பு பெறுகிறது. ஆனால் இந்திய அரசின் ஒட்டுமொத்த நிதியில் இது அவ்வளவு பெரிய தொகை கிடையாது.  நிதியாக இந்நகைகளை எடுத்துக் கொள்வதற்காகக் கேரள அரசுக்கும் கோயிலுக்கும் இந்திய அரசு நிதியீடு கொடுக்கலாம். கோயிலை சீரமைக்கலாம். கேரள அரசின் நிதிச்சுமை சற்று குறையலாம். அவ்வளவுதான்

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி-சிவத்தம்பி
அடுத்த கட்டுரைஅஞ்சலி, பிரேமானந்த குமார்