ஜக்கி,சூழியல்,கடிதம்

அன்புள்ள ஜெ,

இலங்கைப்போர்க் குற்றம் தொடர்பாகக் காலச்சுவடு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ரத்தானது பற்றிய உங்கள் பதிவை மின்னஞ்சல் மூலமாக வாசிக்க நேர்ந்தது. அது, உங்கள் தளத்திற்கு என்னை இட்டுச் சென்றது. விரிவாகப் படிக்கவில்லை. ஆனால் ஜக்கி பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன். நீங்களோ,  ஜக்கியிடம் தொடர்புள்ள உங்கள் நண்பர்களோ, யாராவது ஜக்கியிடம் எடுத்துரைத்தால் புண்ணியமாக இருக்கும். அவரும், அவரது இயக்கத்தினரும் லட்சக்கணக்கான மரங்களை நடுகிறார்களாம்.

அதனால் ஏற்படும் நன்மையை விட, இவர்கள் தமிழகம் முழுவதும் வைக்கும் பெரிய பெரிய டிஜிட்டல் பிவிசி கட்டவுட்களால் சுற்றுச்சூழல் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஏற்படும் கேடுகள் தான் மிக அதிகம். இவர்களது விளம்பர ஆர்ப்பாட்டம், அரசியல்வாதிகளை மிஞ்சுகிறது. இந்த பிவிசி மாசினால் புற்றுநோய் முதல் நரம்புத்தளர்ச்சி வரை, எடைகுறைந்து குழந்தைகள் பிறப்பது முதல்,ஹார்மோன் குளறுபடிகள் வரை பல்வேறு சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன. சீனாவும், ரிலையன்ஸ் போன்ற சந்தைகளும்,  இந்த ஆபத்தான பிவிசி ஐட்டம்களை, ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், காது குத்து கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு ‘நன்றி நன்றி நன்றி’  என்று பதாகைகள் வைப்பவர்கள் போன்றோர் மூலமாகத் தமிழகத்தின் தலையில் கட்டிக் குப்பைத்தொட்டியாக்கிக் காற்று, நீர், நிலம் எல்லாவற்றையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் நாங்கள் இதனை முறியடிக்கக் கூரையில் ஏறிக் கூவிக்கொண்டிருக்கிறோம்.  அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

நிற்க.

உங்களது ‘இன்றைய காந்தி’ படித்துக்கொண்டிருக்கிறேன். நண்பர் மருத்துவர் ஜீவாவிற்குப் புத்தகத்தை அர்ப்பணித்து உள்ளீர்கள். மகிழ்ச்சி.
நன்றியும் வாழ்த்துக்களும்
அ. நாராயணன்

To read all the issues of paadam, Pl visit our web

www.paadam.in &
blog  www.paadam-pm.blogspot.com and leave your comments.

Regards
A.Narayanan (98403 93581)
Editor
Paadam, Monthly Magazine in Tamil for Development Politics
2/628, Rapid Nagar,
Gerugambakkam
Chennai – 602 101.

அன்புள்ள நாராயணன் அவர்களுக்கு

தங்கள் கடிதம் கண்டேன். நீங்கள் ஜீவா அவர்களுக்கு வேண்டியவர் என்பதில் மகிழ்ச்சி. காந்தியை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதனால் இக்கடிதம்.

காந்தி எப்போதும் தன்னுடைய நோக்கங்கள் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டவர். அதில் தனிப்பட்ட உணர்ச்சிகள் கலக்காதபடி, கலக்காவிட்டாலும் கூட அப்படித் தோற்றமளித்துவிடாதபடி கவனம் கொண்டவர். ஏனென்றால் இது மக்கள் போராட்டம். மக்களை நோக்கி ஒரு கருத்தை எடுத்துச்செல்லும்போது அதை முடிந்தவரை எளிமையானதாக நேரடியானதாக – தவிர்க்கமுடியாததாக ஆக்குவதே அவரது வழக்கம். அதைப் பிறவற்றுடன் இணைத்துச் சிக்கலாக ஆக்கிக்கொள்வதை அவர் விரும்பியதில்லை.

மிகச்சிறந்த உதாரணம், அன்னியத்துணி எதிர்ப்புப் போரின்போது கூடவே பட்டு அணிவதையும் எதிர்க்கவேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது. புழுக்களைக் கொன்று உருவாக்கும் பட்டுக்குக் காந்தி எப்படி எதிரியாக இருந்திருப்பார் என்பதை ஊகிக்கலாம். ஆனால் காந்தி அந்தப் போராட்டத்தில் பட்டுப்பிரச்சினையை சேர்க்கக் கண்டிப்பாக மறுத்துவிட்டார். ஏனென்றால் அது வேறு பிரச்சினை. தேவை இல்லாமல் பிரச்சினைகளை ஒன்றுடன் ஒன்று குழப்பவே அது உதவும். பட்டுநெசவை நம்பி வாழ்ந்த பல லட்சம் மக்களை எதிரிகளாக ஆக்கும். காந்தி உத்தேசித்தது பிரிட்டிஷ் பொருளியல் அடித்தளத்தை அசைக்க. அந்த நோக்குக்குப் பட்டு எதிர்ப்பு உதவாது.

இங்கே நீங்கள் ஜக்கி மீதான எதிர்ப்பையும் சூழியல் நோக்கையும் கலந்துகொள்கிறீர்கள். ஜக்கி மேல் உங்கள் விமர்சனங்கள் தனி. வினைல் போர்டுகளின் சூழியல் பிரச்சினைகள் தனி. தமிழகத்தில் வைக்கப்படும் பல லட்சம் வினைல் போர்டுகளில் ஜக்கி வைக்கும் போர்டுகளின் விகிதாச்சாரம் என்ன? அந்த போர்டுகளால் சூழியல் அழிவு உண்டாகிறது என்று சொல்ல வரும்போது உங்கள் நோக்கங்கள் ஐயத்துக்கு உள்ளாகின்றன. எந்த விஷயத்திலும் நம் நோக்கங்கள் ஐயத்துக்கு அப்பாற்பட்டே இருக்கவேண்டும்.

நம் சூழலில் சூழியல் போராட்டங்கள் இப்படி எல்லாவற்றுக்கும் சகட்டுமேனிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு அமைப்பை ஒரு மதத்தைப் பிடிக்கவில்லை என்றால் உடனே சூழியலைக் கையில் எடுப்பதெல்லாம் நீண்டகால அளவில் சூழியலுக்கு உள்ள நம்பகத்தன்மையை அழிக்கும்.

வினைல் போர்டுகளுக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள் என்றால் அதை அறிவுபூர்வமாக, உரிய தரவுகளுடன், நடைமுறை நோக்குடன் முன்வைக்கவேண்டும்.அதைத்தொடர்ச்சியாகமுன்னெடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு எல்லா சமூக, அரசியல், ஆன்மீக பிரச்சினைகளுடனும் போட்டுக் குழப்பியடிப்பது வெறும் சத்தத்தையே உருவாக்கும்.

ஜக்கிக்கு எதிராகப் போராடுகிறீர்கள் என்றால் அவரைப் பற்றிய உங்கள் விமர்சனங்களை முழுமையாகத் தொகுத்து முன்வைத்துப் போராடுங்கள்.அவரது ஆன்மீகம் சேவை அமைப்பு ஆகியவற்றில் உள்ள உண்மையான சிக்கல்களை எடுத்துச்சொல்லுங்கள். வினைல் போர்டு வைத்துச் சூழியலை அழிக்கிறார் என்பது போன்ற அபத்தங்களைச் சொல்லாதீர்கள்.

பொதுவாகத் தமிழ்நாட்டில் ஒரு மனநிலை உண்டு. இங்கே வசைபாடுதல் மேல் அபாரமான ஒரு மோகம் உள்ளது. அரசியல் சிந்தனை முதல் ஆன்மீகச் சிந்தனை வரை வசைபாடுதல் என்ற வடிவிலேயே வெளிவரும். வர்க்க எதிரிகளை, இன எதிரிகளை, ஊழல்வாதிகளை, அரசாங்கத்தை, சமூக அமைப்பை வசைபாடுதல். அதற்கு ஏதாவது ஒரு கொள்கைப்பற்றைப் பிடித்துக்கொள்ளுதல். ’நான் இந்தக்கொள்கைக்காக வசைபாடுகிறேனாக்கும்’ என்ற பாவனை.

உங்கள் கடிதத்தில் உள்ள வசைபாடும் தோரணை – வெறுப்பிலேயே ஆரம்பிக்கும் முறை எனக்கு மிகுந்த மனவிலகலை அளிக்கிறது. மன்னிக்கவும்.

ஜெ

ஜக்கிவாசுதேவ்

ஜக்கி குருகுலம்-ஒரு கடிதம்

ஜக்கி

 

முந்தைய கட்டுரைஅசோகவனம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்