பழைய இலக்கியங்கள்:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

சில பல நாட்களாகவே உங்களுக்கு கடிதம்எழுத வேண்டும் என்று
நினைத்துக்கொண்டிருந்தேன். அது சாகியை (சாகியா, சக்கியா? எது சரியான உச்சரிப்பு என்று தெரியவில்லை. இது நாள் வரை சாகி என்றே நண்பர் வட்டத்தில் சொல்லி வந்திருக்கிறோம்.) பற்றிய கட்டுரையை பார்த்த பிறகுதான் கை வந்திருக்கிறது.

சாகியின் ஓப்பன் விண்டோ என்ற கதையை படித்த நாள் முதலாக நான் அவர் ரசிகன். எனக்கு இது வரை உங்களையும் சேர்த்து ஐந்து ரசிகர்கள்தான் தெரியும். அவரைப் பற்றி தமிழில் படித்தது உங்கள் எழுத்துதான். அவர் போன்று பின்னாளில் எழுதிய இன்னொருவர் ரொவால்ட் டால். மடில்டா, பல சிறுகதைகள், மிக அருமையானவை. (பேர் ஞாபகம் வருவதில்லை, கதைதான் ஞாபகத்தில் இருக்கிறது) நினைத்தாலே இனிக்கும் படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் ரஜினிகாந்துடன் பந்தயம் வைப்பார். பந்தயத்தில் தோற்றால் ரஜினியின் ஒரு விரலை வெட்டி விடுவேன் என்று பந்தயம். அது ரொவால்ட் டாலின் ஒரு கதையிலிருந்து எடுக்கப்பட்டதுதான். உங்களைப் போன்ற ஒரு வாசகர் நிச்சயமாக
படித்திருப்பீர்கள்.

டபிள்யூ.டபிள்யூ. ஜேகப்ஸ் பற்றி எழுதி இருந்தீர்கள். அவர் கிழக்கு,
மேற்கு என்றெல்லாம் யோசித்து எழுதியதாக எனக்கு தோன்றவில்லை. கதை எழுதி இருக்கிறார், அவ்வளவுதான். கிழக்கிலிருந்து வந்த குரங்கின் பாதத்திற்கு பதிலாக அது ரஷியாவிலிருந்து வந்திருக்கலாம், ஆஃப்ரிக்காவிலிருந்து வந்திருக்கலாம், என் இங்கிலாந்திலிருந்தே வந்திருக்கலாம். அதில் நீங்கள் இல்லாத குறியீடுகளை தேடி கண்டுபிடிப்பதாக தோன்றுகிறது. ஜேகப்ஸ், லார்ட் டன்சாணி  போன்றவர்கள் அமானுஷ்ய கதைகளை எழுதும்போது எxஒடிcனெச்ச் வேண்டும் என்பதற்காக கிழக்கை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடக்கூடிய, ஆனால் அவர்களை விட அருமையான எழுத்தாளரான எம்.ஆர். ஜேம்ஸ் கிழக்கை பயன்படுத்தியதே இல்லையே?

எம்.ஆர். ஜேம்ஸ் பற்றியும் எழுதுங்கள். நீங்கள் அவரை படிக்காமல் இருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி படிக்காமல் இருந்தால் உங்களுக்கே ஒரு எழுத்தாளரை சிபாரிசு செய்கிறேன். (திருநெல்வேலிக்கே அல்வா!)

அன்புடன்
ஆர்வி சுப்ரமணியன்

 அன்புள்ள ஆர்வி அவர்களுக்கு

பழைய பிரிட்டிஷ் -அமெரிக்க எழுத்தாளர்களைப்பற்றி எழுதலாமே என்று எழுத ஆரம்பித்தபின் வரும் முதல் கடிதம் நீங்கள் எழுதுவது. என்ன இது எதிர்வினையே இல்லையே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். நமக்கு சமகாலத்தில் ஐரோப்பாவில் பேசப்படாத எழுத்தாளர்கள் முக்கியமாகவே தோன்றுவதில்லை.

என் சிக்கல் என்னவென்றால் நான் தொடர்ந்து ஆங்கிலத்தில் படிக்கிறேன், ஆனால் காதில் ஆங்கில விழும் வாய்ப்பு அனேகமாக கிடையாது. ஆகவே எனக்கு பெரும்பாலான சொற்களின் உச்சரிப்பு தெரியாது. ஆங்கிலம் காதில் கேடாலே குழம்பிவிடுவேன். ஆகவே ஸக்கியா ஸாகியா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். அந்தச் சொல் ஸகா என்ற சம்ஸ்கிருத சொல்லின் பாரசீக வடிவம்தான்.

நீங்கள் சொன்ன எழுத்தாளர்களைப் படித்திருக்கிறேன் என்று சொன்னால் ஏமாற்றம் கொள்ள மாட்டீர்களே. நாங்கள் குமரிமாவட்டக்காரர்கள் லண்டன் மிஷன் துரைகளால் ‘வளர்க்கப்பட்டவர்கள்’. நீங்கள் பிரெஞ்சு ஜெர்மன் எழுத்தாளர்களைச் சொல்லியிருந்தால் படித்திருக்க வாய்ப்பில்லை.

குறியீடுகளை நான் கண்டு பிடிக்கவில்லை. ஜேக்கப் அந்த பொருளுடன் எழுதினாரென்றும் சொல்ல வரவில்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் பொதுவாக மேலோங்கியிருந்த மனநிலைகளைப் பற்றிச் சொன்னேன். அது ஜேக்கப்ஸிலும் செயல்பட்டு அந்தக் கதைக்குள் இருக்கிறது என்பது என் வாசிப்பு. மத்திய கால ஐரோப்பா பற்றி ஒரு அச்சம், இந்தியா போன்ற தூரக்கிழக்கு பற்றி அச்சம் கலந்த ஆர்வம்…

ரஷ்யா பற்றி எழுதினால் வேறு மாதிரி இருக்கும். ஸக்கி ஓநாய் வேட்டை என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அதில் வரும் ரஷ்யனைக் கவனியுங்கள். அவனை மேஜைமரியாதை தெரியாத, முட்டாள்தனமும் முரட்டுத்தனமும் கொண்ட, அதேசமயம் நம்பகமான கிராமத்துக் காட்டான் ஆக சித்தரித்திருப்பார். அக்காலத்து பிரிட்டிஷ் துரைகளுக்கு ரஷ்யர்கள் எப்போதும் அப்படித்தான் பொருள்பட்டார்கள். இந்தக்கதைகளில்  உள்ளோட்டமாக ஓடும் இந்த சரடுகள் முக்கியமானவை என்பதே என் தரப்பு

கன்யாகுமரிக்கே மரச்சீனிக்கிழங்கு என்றால் சரியாக இருக்குமோ?

ஜெயமோகன்

 

பேய்க்கிழக்கு

வீடு

ஒரு சாட்சி

முந்தைய கட்டுரைநான் கடவுள்:மீண்டும் கடிதம்
அடுத்த கட்டுரைநான் கடவுள், இன்னும்