குப்பை- கடிதங்கள்

ஜெ,
இந்த இணைப்பில் உள்ள நிகழ்ச்சியை 2 வருடங்களுக்கு முன்பு பார்த்த பிறகு அனாவசிய எலெக்ட்ரானிக்ஸ் குப்பைகைளை வாங்குவதைக் குறைத்துக்கொண்டேன்.

http://www.cbsnews.com/video/watch/?id=4586903n&tag=mncol;txt


Rajesh

அன்புள்ள ஜெ,

“நான் அமெரிக்கா கனடா நாடுகளில் பயணம்செய்யும்போது அங்கே  காகிதம் பிளாஸ்டிக் போன்றவை மிதமிஞ்சிப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துக் குப்பையில் போடும்படி அறிவுறுத்துகிறார்கள். மக்களும் செய்கிறார்கள். அவை 95 சதம் மறுசுழற்சி செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சொல்லப்பட்டு அவர்கள் நம்புகிறார்கள். அதைப் பலரும் சொன்னார்கள்.

ஆனால் அது உண்மையல்ல. அம்மக்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் மிகையாக  வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே அப்படி பிரச்சாரம்செய்யப்படுகிறது. அங்குள்ள சூழியலாளர்களும் அதை நம்பிப் பேசாமலிருக்கிறார்கள். உண்மையில் அந்தக் குப்பைகள் அப்படியே கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டு மலைமலையாக ஆப்பிரிக்க ,ஆசிய நாடுகளுக்குக் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. ஐரோப்பிய மக்கள் அக்கறையாகப் பிரித்துக்கொட்டியவை ஒரேயடியாகக் கலக்கப்பட்டுப் பலமாதம் கழித்து அழுகல் குப்பையாகக் கொண்டு கொட்டப்படுகின்றன. இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.”
நானும் அவ்வாறு மறுசுழற்சி செய்ய முற்படும் ஒருவனாதலால், இந்தத் தகவல் அதிர்ச்சியளிக்கிறது! இவ்வாறு குப்பை ஏற்றுமதி செய்யப்படுவது ஒரு விதிவிலக்கு (exception / aberration) மட்டுமே தவிர வழக்கு (norm) இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது. பெரும்பாலான குப்பை ஏற்றுமதி செய்யப்படுவதற்கான ஆதாரங்கள் (சுட்டிகள்) கொடுத்தால் உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்,
-கார்த்திக்

கார்த்திக்,

இதுவரை தூத்துக்குடியில் மட்டும் நான்குமுறை குப்பைகள் நிறைக்கப்பட்ட கப்பல்கள் பிடிபட்டிருக்கின்றன– முழுக்கப்பல்கள்.  கண்டலா துறைமுகத்துக்கு வந்த குப்பைக்கப்பல்கள் மூன்றுமுறை பிடிபட்டிருக்கின்றன. பிடிபட்டதெல்லாமே தற்செயலாகத்தான்.

இவ்வளவு விதிவிலக்குகள் இருக்குமா என்ன? விதிவிலக்கு என்றால் இப்படி ஏற்றுமதிசெய்த நாடுகள் அந்த ஏஜென்சிக்கள் மேல் என்ன நடவடிக்கைகள் எடுத்தன? இச்செய்தி அங்கே எந்த நாளிதழிலாவது, ஊடகத்திலாவது வந்ததா?

இணையத்தில் சோமாலியாவில் என்னதான் பிரச்சினை என்று பாருங்கள், ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குப்பைக்கப்பல்களுக்கு எதிரான கலகமே மெல்லமெல்லக் கொள்ளைக்குழுக்களாக உருமாறியது. கென்யாவிலும் இதே நிலைதான்

ஜெ

 

இந்தியா என்னும் குப்பைக் கூடை

 

 


முந்தைய கட்டுரைஅசடனும் ஞானியும்
அடுத்த கட்டுரைஓர் ஆசிரியரின் கடிதம்