இலக்கியம்,அரசியல்:கடிதங்கள்

அன்புடன் ஜெயமோகனுக்கு

தலைசிறந்த இலக்கியவாதிகள் பெரும்பாலும் ஒரு சில குணாதிசயங்களில் மிகவும் ஒத்துப் போகின்றனர் (மறதி, நடைமுறை செயல் தடுமாற்றங்கள், அன்றாட சராசரி வாழ்வில் ஒருவித சலிப்பு, உச்சகட்ட உணர்ச்சிகள் இன்ன பிற)…

என் நெடுநாளைய சந்தேகம் என்னவென்றால்… இது போன்ற ஒரு தனிப்பட்ட குணாதிசயமுடைய மனிதர்களின் குழு எப்படி உலகில் உள்ள ஒட்டு மொத்த மனித மனநிலைகளின் பிரதிநிதிகளாக முடிகிறது? சக சராசரி மனிதர்களின் உணர்வுகளை எப்படி இவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது… அல்லது… புரிந்துகொள்ள முடிகிறது என்று நாங்கள் நினைப்பதே ஒரு மாயைதானோ?

ரத்தன்

அன்புள்ள ரத்தன்

எழுத்தாளர்கள் வாழ்க்கையை தர்க்கபூர்வமாக அறிந்துகொள்கிறார்கள் என்றால் நீங்கள் சொன்னது சரி. ஆனால் உண்மையில் அவர்கள் வாழ்க்கையை உள்ளுணர்வு சார்ந்து மட்டும்தான் புரிந்துகொள்கிறார்கள். கற்பனைமூலம் உள்ளுணர்வை தூண்ட அவர்களால் முடியும். மொழிவழியாகச்செய்யப்படும் கற்பனைதான்  இலக்கியம். எழுத்தாளர்கள் தங்கள் ஆழ்மனம் வெளிபப்டும் படியாக மொழியில் படிமங்களையும் குறியீடுகளௌயும் உருவாக்கும் பயிற்சி பெற்றவர்கள். அதுவே இலக்கியத்தேர்ச்சி என்பது. அதன்மூலம் அவர்கள் அறியும்– வெளிப்படுத்தும் உண்மைகளை அவர்களாலெயே தர்க்கபூர்வமாகச் சொல்ல முடியாமல் போகலாம். அவர்களின் தன்னில் தோய்ந்திருக்கும் இயல்பு, மறதி , தன்முனைப்பு போன்றவை எல்லாம் இந்த அடிப்படை இயல்பில் இருந்து வருபவையே

ஒரு சமூகத்தில் ஒருவனை எடுத்து அவனை ஹிப்னடைஸ் செய்து அவன் ஆழ்மனத்தை வெளிப்படுத்தி அச்சமூகத்தை அறிகிறோம் என்று கொள்வோம். அந்த மனிதனை அச்சமூகத்தை முழுக்க  அறிந்தவன் என்று சொல்ல முடியுமா? ஆனால் அவனுக்கு தெரியும் என்பதும் உண்மை அல்லவா?

ஜெ

***

முதியவயதில் சுந்தர ராமசாமியும் அதே வெறுமையைத்தான் சென்றடைந்தார் என்று எண்ணுகிறேன். அந்த வெறுமையைக் கடக்கும் ஆன்மீகமான உள்வலிமையைப் பெறுவது இலக்கியவாதிக்கு எளியவிஷயம் அல்ல.// இலக்கியமே தடையாக உள்ளதா? அல்லது வேறு காரணமா?

செந்தில்குமார்

அன்புள்ள செந்தில்,

இலக்கியம் என்பது ஓர் ஊடகம் மட்டுமே. அதன் வழியாக வெளிவருவது நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் ஆழ்மனம். நம்முடையா அழம். அந்த ஆழத்தை நாமே அறியும் ஒரு கணமே இலக்கிய ஆக்கம். இந்த அறிதல் இருந்தால் இலக்கியம் மூலம் நாம்போகும் இடமே முக்கியம் என்ற எண்ணம் ஏற்படும்

மாறாக இலக்கியத்தையே இறுதி நோக்கமாகக் கொள்ளும்போது இறுதிநாட்களில் ஆழமான வெறுமையையே சென்றடைய நேரிடும்

ஜெ

 

***

ஜெ,

இலக்கியவாதிக்கு அரசியல் இல்லாமல் இருக்க முடியுமா? அரசியலற்ற இலக்கியவாதி என ஒருவன் உண்டா

எஸ்.ஏ.பிரபாகர்

அன்புள்ள பிரபாகர்

சொற்களை சகட்டுமேனிக்கு போட்டு சிக்கலாக்கப்பட ஒரு விவாதம் இது. ஓர் அரசியல் ஆத்மாவுக்கு இந்த விவாதம் மூலம் நாம் எதையுமே சொல்லி புரியவைத்துவிட முடியாது.

அரசியல் என்று எதைச் சொல்கிறோம் என்பதை முதலில் தெளிவாக்கிவிட்டே நாம் இதில் எதையாவது பேச ஆரம்பிக்க வேண்டும்.  நம் சூழலில் அரசியல் என்று சொல்லப்படுவது எது? ஒரு சமூகத்தை அல்லது நாட்டை  ஆட்சி செய்யும் அதிகாரத்தைக் கையாள்வதைப்பற்றி அல்லவா? அந்த அதிகாரம் கருத்துக்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகவே கருத்துக்களை உண்டு பண்ணி, அதை பரப்பி அதிகாரத்தை அடைய முயல்வதும் மறுதரப்பினர் அச்செயல்களை எதிர்ப்பதும் அரசியல் செயல்பாடு என்று சொல்லப்படுகிறது.

இந்தச்செயல்பாட்டில் இலக்கியவாதி ஏதேனும் ஒரு தரப்பை எடுத்தாகவேண்டும் என்று சொல்வது இலக்கியத்தை கொஞ்சமேனும் புரிந்துகொள்ளாத மூடத்தனம் மட்டுமே. அரசியலில் மூழ்கி இருக்கும் ஒரு மனம் எல்லாவற்றையும் அரசியலாக மட்டுமே காணும். ஆகவே அவரக்ள் கண்ணில் இலக்கியத்தில் உள்ள அரசியல் மட்டுமே படுகிறது. இலக்கியம் அரசியலாக மட்டுமே இவர்களால் பார்க்கப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த கூக்குரலை எழுப்பிக்கொண்டிருப்பவர்களே இவர்கள்தான். இவர்கள் நோக்கில் எதையுமே அரசியலாக அணுகலாம். சிறுநீர் மலம் கழிப்பதைக்கூட அரசியல்செயல்பாடு என்று விளக்கிவிடலாம். அதில் என்ன பொருள்? சோவியத் ரஷ்யா ஐன்ஸ்டீனின் e==mc2 என்னும் கோட்பாட்டை அரசியலாகத்தான் பார்த்தது. நெடுங்காலம் அதை நிராகரித்தது.

இலக்கியம் மனிதசிந்தனையும் மனிதனின் ஆழ்மனமும் மொழி வழியாக வெளிப்பாடு கொள்ளும் ஒரு கலை. மனித சிந்தனையில் ஒரு பகுதி அதிகாரம் அரசு அரசியலுடன் சம்பந்தமுடையது என்பதனால் இலக்கியத்தில் அரசியல் உண்டு. மெய்ஞானமும், உயர் தத்துவமும், மானுட ஆதி உணர்ச்சிகளும் இலக்கியத்தில் இருப்பது போலத்தான் அதுவும் இருக்கிறது. ஆனால் அது மட்டுமே இலக்கியம் என்றால் இலக்கியம் செல்லும் தூரங்களை அசட்டைசெய்து இலக்கியத்தை அரசியலின் அடியாளாக ஆக்கும் முயற்சி மட்டும்தான் அது.

இலக்கியம் கருத்துக்களை உருவாக்குகிறது. கருத்துக்களை தாங்கிநிற்கும் படிமங்களை  உருவாக்குகிறது. இவையெல்லாம் ஊற்றெடுக்கும் ஒரு ஆழத்தை நோக்கி எப்போதும் தன் கவனத்தை குவித்திருக்கிறது. சமூகம் எப்படி எவரால் எக்கருத்துக்களால் ஆளப்படவேண்டுமென்பதும் அதன் கவலைதான். பிரபஞ்சம் எந்த விசையால் விதியால் இயங்குகிறது என்பதும் அதன் கவலைதான். அதன் நோக்கும் பேச்சும் மிக விரிந்த எல்லை கொண்டவை. இதில் ஓர் இலக்கியவாதி எதில் தன் பார்வையை குவிக்கிறான் என்பதை அவனே தீர்மானிக்க முடியும். அவனது தேடல்தான் அவன் எதை எப்படி எழுதுகிறான் என்பதை முடிவுசெய்கிறது.

அரசியலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட  விஷயங்கள் ஏராளமானவை இவ்வுலகில் உண்டு. ஆகவே முற்றிலும் அரசியலற்ற எழுத்தும் கண்டிப்பாக உண்டு
ஜெ 

 

88

 

அன்பு ஜெ சார்.
பாவ மௌனம்  படித்தேன். அமைப்புகள் வெறும் கருவிகள், அவை தனி மனிதனின் ஆத்மதரிசனத்திற்கு அடங்கிப் பணி புரிய வேண்டியவை என்ற உங்கள் கருத்து சரியெனவே படுகிறது. தனியே இருந்து, தனியே படித்து, தனியே புரிந்து, தனியே சிந்தித்து, கொஞ்சம் தனியே உள்நோக்கப் பழகிக்கொண்டால், இதன் அர்த்தம் புரியும். வேறொரு தளத்தில் தனி மனித நியாய உணர்வின் வெளிப்பாடைக் குழந்தைகளிடம் கவனித்திருப்போம். வளர்ந்த பின் அசைவ உணவைப் பல வகைகளில் நியாயப்படுத்துகிறோம். ஒரு முறை குழந்தைகளை கசாப்புக் கடை அழைத்துச்சென்றால், அம்மா என்ற தீனக்குரலுடன் ஆடு கழுத்து அறுபடுவதையும், தலைஇழந்த முண்டம் துடிப்பதையும், ரத்த ஆறு பெருகுவதையும் பார்க்கும் பெரும்பான்மை குழந்தைகள் மனம் துடித்து மாமிசம் மறுக்கும். இயல்பாக தனி மனித இதயத்தில் ஊறும் கருணை, இரக்க உணர்ச்சியின் வெளிப்பாடு இது – எந்த தத்துவங்களும் படிக்காமலே. நம் துயரம் இந்த இயற்கையான உணர்வுகளையெல்லாம், நம் படிப்பறிவினால், கூட்டங்களின் உந்துதலால் தொலைத்து நிற்பது.
அன்புடன்
ரகுநாதன்

அன்புள்ள ரகுநாதன்

நாம் பண்பாட்டில் மிகச்சமீபகாலமாகவே அநீதிக்கு எதிரான மானுடத்தின் குரலை ஓங்கி ஒலிக்கும் ஒரு போக்கை அடைந்திருக்கிறோம். பாவமௌனம் என்றுமே இருந்துள்ளது. இன்றுதான் அதன் குரல் உலகெங்கும் கேகிறது. ஆம், வரலாறு முன்னோக்கித்தான் சென்றுகொன்டிருக்கிறது
ஜெ

 

அன்புள்ள ஜயமோகன்
 
”யார் தமிழர்” என்ற மடத்தனமான கேள்வியும், அதற்கு திட்டவட்டமான பதில்களும் தமிழ் சமுதாயத்தில் விசுவரூபம் எடுத்தது பரிதாபத்திற்குரியது. `தமிழ்தேசம்`  ( http://www.tamilnation.org/ )என்ற பொதுவாக ஈழத்தமிழர்கள் கலந்து கொள்ளும் வலைப் பதிவிலேயும் இந்த கேள்வி பெரிசாக ஆகி, அங்கே டாக்டர் விக்நேசன் என்ற பிரெஞ்ச் நாட்டு ஈழத் தமிழரும் கலந்து, அவர் கருத்துகளுக்கு நான் எதிர்ப்பு கூறி எழுதினேன்.
 
 
பொதுவாக இந்த கேள்வி காலனீய தாக்கத்திலிருந்து தான் எழுந்தது. இந்த கேள்விலதான் ஏதோ உயிர் போகின்ற சமாசாரம் இருப்ப்து என்ற எண்ணம்  திராவிட இயக்கத்தின் கொடை.
 
வணக்கத்துடன்
 
வன்பாக்கம் விஜயராகவன்

முந்தைய கட்டுரைஆர்.கே.நாராயணன்,ஆங்கில இலக்கியம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைவன்னி