இசை, வாசிப்பு-கடிதங்கள்

அன்புள்ள் ஜெ,

நுஸ்ரத் பதேஹ் அலி கானின் இசையை கேட்டிருப்பீர்கள். எனக்கு ரொம்ப பிடிக்கும். சுபி இசையாக இருந்தாலும், அதில் உள்ள பக்தியும் அன்பும் எளிதில் என்னை உருக்கிவிடுகிறது. உங்களுக்காக இந்த லிங்க்: Yadaan Vichhre Sajan Diyan Aiyan By Nusrat Fateh Ali Khan . சமயம் கிடைக்கும் பொது கேட்கவும். உங்கள் அபிப்பிராயத்தை கேட்க ஆவலாக உள்ளேன்.

– சீனு நரசிம்மன்

அன்புள்ள சீனு

நான் விரும்பும் பாடகர். ஆனால் வேறு எதிலும் மனம் செல்லவேண்டியதில்லை என்ற நிலையில் மட்டுமே கேட்கவேண்டியவர். சமன் குலைக்கக்கூடிய தன்மை இவரது பாட்டில் இருக்கிறது.

ஜெ

அன்புள்ள ஜெமோவிற்கு

நீங்கள் இதே சந்தேகத்திற்கு அல்லது இதனுடன் தொடர்புடைய சந்தேகங்களுக்கு ஏற்கனவே விடை கூறி இருக்கலாம்.

ஆரம்ப காலத்தில் பாலகுமாரனைப் படித்துவிட்டுப் பின் தி. ஜா., ஜெயகாந்தன், தேவன், அசோகமித்திரன், எம்விவி, ஆதவன், சுஜாதா, ஜெயமோகன் (இதுவரை வாசித்தவை உங்கள் கட்டுரைகள் மட்டுமே. கதைகள் நாவல்கள் இனிமேல்தான் வாசிக்கவேண்டும். இதுவரை வாசிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. சமீபத்தில் இணையத்தில் வெளிவந்த முதல் நான்கு கதைகளை வாசித்துள்ளேன்) என்ற வரிசையில் வாசித்தவன் நான். திட்டமிட்ட வரிசை இல்லை. அதுவாகவே அமைந்த ஒன்று. நடுவில் சில பெயர்கள் விடுபட்டிருக்கின்றன.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது பாலகுமாரன் எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பில் ஒரே ஒரு கதை மட்டுமே நினைவில் இருக்கிறது. சுஜாதா எழுதிய எந்தக் கதைகள் எனக்குப் பிடித்தவை என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. படிக்கும்போது கிடைத்த கிளுகிளுப்பு (அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது) இப்போது நிச்சயமாக இல்லை. சுஜாதாவின் ஒரு கதையும் (அப்போதும் இப்போதும்) மனதைப் பாதித்ததில்லை பாதிக்கவில்லை.

இந்தப் பட்டியலில் இருக்கும் மற்ற எழுத்தாளர்களை எடுத்துக் கொண்டால் எனக்குக் குறைந்தபட்சம் மனதைப் பாதித்த இன்னமும் பாதிக்கும் ஒரு நாவலாவது சிறுகதையாவது நினைவிற்கு வருகிறது. உங்கள் கண்ணீரைப் பின்தொடர்தல் நூலை எடுத்துக் கொண்டோமானால் சில பகுதிகள் மனப்பாடமாகப் பதிந்துள்ளது. அண்மையில் படித்த புத்தகம் என்பது கூடக் காரணமாக இருக்கமுடியும்.

என்னுடைய கேள்வியெல்லாம் இதுதான். இது காலப்போக்கினால் வரக் கூடிய மறதியா அல்லது அந்த எழுத்துக்களில் என் மனதைப் பாதிக்கக்கூடிய விஷயம் இல்லாததால் ஏற்படுவதா? இல்லை இதுதான் வணிக எழுத்துக்கும் மற்ற எழுத்துக்கும் உள்ள வித்தியாசமா?

நன்றி.

அன்புடன்

கோபி ராமமூர்த்தி

அன்புள்ள கோபி ராமமூர்த்தி

ஒரு படைப்பில் நாம் எதை நம்முடையதாக ஆக்கிக்கொள்கிறோமோ அதுதான் நினைவில் நிற்கும். அதுபலசமயம் படைப்பின் இயல்பை விட நம் இயல்பை சார்ந்தது. நாம் வாசிப்பவற்றை, கேட்பவற்றை மேலோட்டமான ஆர்வத்துடன் வாசித்தோமென்றால், அவற்றில் இருந்து நம் சிந்தனைகளை மேலே கொண்டுசெல்லவில்லை என்றால், அவற்றை நம் அனுபவத்துக்கு நிகராக கற்பனையில் உருவாக்கிக்கொள்ளவில்லை என்றால் அவை நம்மை விட்டு உதிர்ந்துவிடும்

இளமையில் நம் கவனம் தீவிரமாக இருக்கிறது. ஆகவே இளமையில் வாசித்தனை நினைவில் நீடிக்கின்றன. வயதாக ஆக நாம் கவனத்தை இழக்கிறோம். வாசித்தவை உதிர்கின்றன

வலுவான ஆக்கங்கள் நம் கவனமின்மையை மீறி நம்மை தாக்கி நம்மை யோசிக்கச் செய்யலாம். சிலசமயம் வலுவற்ற ஆக்கங்கள் நம் தனிப்பட்ட அனுபவங்கள் சிலவற்றை தீண்டி நம்மை பாதிக்கலாம்.

பொதுவாக முக்கியமான ஆக்கங்களை கூர்ந்து வாசிப்பது அவசியம். பலமுறை வாசிப்பதும் விவாதிப்பதும் குறிப்புகள் எழுதி வைத்துக்கொள்வதும் அவற்றை நம் நினைவில் நிறுத்த உதவும்

பழைய குருகுல முறைகளில் ஒரு நூலை முழுக்கமனப்பாடம் செய்யாமல் அதை பற்றி பேசுவதே இல்லை. உள்ளே இருக்கும் நூல்தான் உன்னுடைய நூல் என்பார் நித்யா. தனியாக நிங்கள் சிந்திக்கும்போது உங்களுக்குள் இருக்கும் விஷயங்களே சிந்தனைகளுக்கான கச்சாப்பொருட்களும் கருப்பொருட்களுமாகின்றன.

ஆனால் இலக்கிய ஆக்கங்கள் அப்படியே அச்சு அசலாக நினைவில் நிற்காமல் இருந்தாலும் நம் ஆளுமையில் ஆழமான மாற்றங்களை உண்டுபண்ணி நம்மை மாற்றி விடுகின்றன. அவை நம்மில் என்ன மாற்றங்களை உருவாக்கின, எவற்றை விட்டுச்சென்றன என நாம் அறிவதே இல்லை

ஒருவன் இலக்கியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றானா இல்லையா என அவன் எழுதும், பேசும் மொழியே சொல்லிவிடும். மிக தட்டையான மொழியில் எழுதும் பலர் பல நூல்களை குறிப்பிடுவதை காணலாம். அந்நூல்கள் அவனுக்குள் செல்வதே இல்லை என்பதே காரணம்

நம் அகம் என்பது மொழியால் ஆனது. அந்த அகமொழியை நாம் வாசிக்கும் நூல்களே கட்டமைக்கின்றன. அந்த மொழியை அவை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டே உள்ளன. ஒரு எழுத்தாளன் நமக்கு கொடுப்பது எல்லாமே நம் அகமொழியில் இருக்கும். அவன் செய்வது நம் மொழியை மாற்றுவதையே என்றுக்கூட சொல்லலாம்

உங்களைப்பற்றி, உங்கள் கடிதத்தில் இருந்து புரிந்துகொண்டது என்னவென்றால் பெரிய அக்கறைகளோ தீவிரமோ இல்லாத உதாசீனமான வாசகர் என்றுதான். அதைப்பற்றி உங்களுக்கு பெரிய கவலையும் இல்லை. அதை ஒரு தகுதியாக வேறு நினைக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. ‘இதுவரை வாசிக்க தோன்றவில்லை’ என்று சாதாரணமாகச் சொல்கிறீர்கள். அது ஒரு அறிவூக்கம் கொண்ட மனதின் இயல்பல்ல.

அறிதலுக்கான ஆசை என்பது மனிதனை இயக்கும் ஆதார விசைகளில் ஒன்று. அதில் சுணக்கம் கொண்ட மனம் எதையும் பெரிதாக அறிந்துவிடமுடியாது. ஒரு வாசலை திறக்கையில் இன்னும் நான்கு வாசல்கள் தெரிவதே அறிவின் இயல்பு. அந்த சவாலை சந்திக்காத மனம் அங்கே இங்கே தொட்டுத்தொட்டு எதையாவது தெரிந்து வைத்திருக்கும். அதனால் எந்த பயனும் இல்லை.

நம் கல்விமுறையும் சூழலும் உங்கள் மனநிலையையே உருவாக்குகின்றன. தீவிரமும் வேகமும் இங்கே கற்பிக்கப்படுவதில்லை. இவ்வளவு போதும் என்ற நிலை இயல்பாக உருவாகி வருகிறது

உங்கள் பிரச்சினை அதுவே, அதில் இருந்து நீங்கள் வெளிவரலாம். ஆனால் அவ்வளவு எளிதல்ல

ஜெ

முந்தைய கட்டுரைவிதிசமைப்பவர்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள்-கடிதங்கள்