இசை, மீண்டும் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,
மரபுக்கலைகள் குறித்த உங்கள் கடிதம் படித்தேன். அறிவுப்பூர்வமான(Assertive) வாதமாக இருந்தது.
சமஸ்தானத்து சபைகளில் அறிவார்ந்தோர் மட்டுமே விவாதித்துவந்த கலைகள், உதாரணமாக கர்நாடக இசை சமஸ்தானங்களின் அழிவின் போது பிழைத்தல்வேண்டி பெருநகரங்களுக்கு நகர்ந்தபோது தனக்கான புரவலர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டது. கர்நாடக இசை சபைகளில் பாடப்படும் முறைகள் வகுக்கப்பட்டபோது அது பொதுஜன ரசனைக்குள்ளாக்கப்பட்டது.அதனால் பாடப்படும் முறைகளில் பல சமரசங்கள் செய்துகொள்ளப்பட்டது. அது ஒரு கலை அது பிழைத்தல்வேண்டி செய்துகொண்ட சமரசம் என்ற நோக்கிலே பார்க்கப்படவேண்டும். இருப்பினும் தற்போது இருந்துவரும் கர்நாடக இசை சூழல் வெகுஜன ஆதரவிற்காக சமரசம் செய்துகொண்ட ஒரு நீர்த்துப்போன ஒரு தரமுடையதாக இருக்கிறது. பலருக்கும் பங்கிடவேண்டும்மென்றால் நீர்ப்பது தவிர்ப்பதற்கில்லை அல்லவா?

பொதுவாகவே நுண்கலைகள் புரவலர்களை நம்பியே இருந்திருக்கிறது என்று நம்புகிறேன். பெருவாரியான மக்களை சென்று சேர இயலாத நிலையில், வாழ்தலின் சாத்தியம் புரவலர்கள் மட்டுமே அல்லவா? கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச்சென்று சேர்க்கவேண்டும் என்ற நிலை அந்த கலையின், கலைஞர்களை போஷிக்கும் திறனிலேயே இருக்கமுடியும். கலைஞர்களும் தங்களுக்கான வாழ்கையை வாழ்ந்தாகவேண்டியிருக்கிறதுதானே? தங்கள் வாழ்கையை வாழவைக்காத கலையை நிச்சயம் கலைஞனும் வாழவைப்பதற்கு முயல்வதில்லை.

நமது இசையும், இலக்கியமும் ஒரு காலகட்டத்தில் பெரும் பக்தி இயக்கத்தின் ஆணிவேராக இருந்து வந்திருக்கிறது. பக்தி இயக்கத்தினாலேயே பல கலைகள் ஓரளவேனும் காப்பாற்றப்பட்டன என்றும் சொல்லலாம். சமீபத்தில் எழுந்த கடவுள் மறுப்பு பேரியக்கமும் கலைகளின் அழிவுக்கு ஒரு பெருங்காரணமாக இருக்கலாம். ஏனெனில் பாரத நாட்டில் கலைகள் பெரும்பாலும் கடவுளை நோக்கியே இருக்கிறது. பக்தியல்லாத போதும் ஞானமார்கத்தின் சங்கீதம் பெருக்கெடுத்திருக்கிறது.

இப்போது பெருவாரியான இளைஞர்களும் யுவதிகளும், பாரத பாரம்பரிய கலைகளின்பால் (குறிப்பாக கர்னாடக இசை) சற்றும் அறிமுகமில்லாதவர்களாகவும், அல்லது பெரு வெறுப்பு உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஏனெனில், அது அவர்களை பத்தாம் பசலிகளாக காட்டுவதாக நினைக்கிறார்கள். இப்போது அவர்களின் கவனம் ட்ரம்ஸ், கிடார், பியானோ போன்ற கருவிகளின் மீதே இருக்கிறது. ஏனெனில் இது அவர்களை ஒரு மேற்கத்திய சமூகத்தோடு அடையாளப்படுத்திக்கொள்ள மிகவும் தேவையானதாக இருக்கிறது. இது நமது கல்வி முறையும், கலாசார பரவலாக்கமும் கொண்டுவந்து சேர்த்தவை என்று நம்புகிறேன்.

முற்காலத்தில் உலக கலாசாரங்களுடன் அதிக அறிமுகமில்லாத காரணத்தால் ஒருவரின் வாழ்கையை அவர் சார்ந்த இடத்தோடு மட்டுமே தொடர்புபடுத்திக்கொள்ளவேண்டிய நிலையில், அந்த மண்ணின் மரபோடு ஒத்திருக்கவேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் இப்போது அக்கவலை இல்லை. ஒருவர் எப்படி வாழ்ந்தாலும் உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு கலாசாரக்குழுவோடு அவரை தொடர்பு படுத்தி நியாயப்படுத்தமுடியும். எனவே எப்படி இருப்பினும் கவலையில்லை என்ற நிலை.

நிச்சயம் கர்நாடக இசை  பிராமண சாதியினரால் மட்டும் தங்கள் குலத்தின் பண்பாட்டு அடையாளமாகக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பிராமண சாதியினராலும் என்று சொல்லலாம். ஏனென்றால் எனக்குத் தெரிந்தே பல பிராமணரல்லாத பெரும் இசை/நடன க்குடும்பங்களும் உண்டு.பெரும்பான்மை வாதத்தின்படி, ஆம். நீங்கள் சொல்வது சரிதான்.

எனக்கு கதகளியைப் பற்றிய அறிவொன்றுமில்லை. அது ஒரு நுண்கலை என்றால் அதனுடைய சமீபகால பரிணாமத்தை அறிய ஆவலாக உள்ளேன். அதுவும் அவைகளில் இருந்து மேடைகளுக்கு வந்த ஒரு கலையா?
Of all the lies, art is the least untrue. என்று படித்திருக்கிறேன். எவ்வளவு உண்மை. அதேசமயம் எவ்வளவு போலி.
-ராம்
அன்புள்ள ராம்
எல்லா மரபுக்க்லைகளும் கலைஞனின் தனித்தேர்ச்சியை வலியுறுத்துபவை. ஆகவே நெடுங்கால அர்ப்பணிப்பு தேவைப்படுபவை. ரசிகர்களுக்குப் பயிற்சியை வலியுறுத்துபவை. ஆகவே பரவலாக செல்ல முஇயாதவை. இக்காரணங்களால் மரபுக்கலைகள் எவராலாவது பேணப்படவேண்டியவையாக இருக்கின்றன. பிரபுகக்ள், கோயில்கள் போன்ற அமைப்புகள்…கதகளி பிராமணர்களால் நிகழ்த்தப்படதேயில்லை. அதில் பிராமணர்கள் பாஅகர்களாக கவிஞர்களாக பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால் அது பெரும்பாலும் நாயர் சாதியின் கலையே. மாரார் எழுத்தச்சன் பொதுவாள் போன்ற ஆலயச்சாதியினரும் பங்குபெற்றுள்ளனர். ஆனால் ஐம்பதுகளில் அது மறுமலர்ச்சி அடைந்தபின் அந்தச் சாதியடையாளம் அறவே இல்லை. நம் சமகாலக் கதகளிக் கலைஞர்களில் கலாமண்டலம் கைதரலி போன்ர ப்ரு பெரும்பாடகர் உருவாகி வந்தது அதன் அடையாளம். முன்பெல்லாஅம் பெண்கள் ஆடுவதில்லை. இப்போது பெண்களும் நிறைய கதகளி ஆடுகிறார்கள்
ஜெ
முந்தைய கட்டுரைஇந்திய சிந்தனை மரபில் கீதை
அடுத்த கட்டுரைஇந்திய சிந்தனை மரபில் குறள் 2