தமிழிசை ஒரு கடிதம்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

அன்புள்ள ஜெ..

பிராமணர்கள் கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக் கொடுப்பதை சிலாகித்து எழுதியிருந்தீர்கள். அவர்கள் தம் குலப் பண்பாட்டு விஷயமாகக் கற்றுக் கொடுப்பதும் உண்மையே. ஆனால், ஏன் மற்ற சாதியினருக்கு அதில் வெறுப்பு வருகிறது என்று யோசித்தீர்களா?? கர்நாடக சங்கீதத்துக்கும், பரதம் என்னும் சதிராட்டத்துக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் உள்ள உறவுகளை இன்று அக்கலைகளின் பிதாமகர்கள் கண்டு கொள்வதேயில்லை. சொல்லப் போனால் அதை பற்றிப் பேசிய/பேசிக் கொண்டிருக்கும் ஆபிரகாம் பண்டிதர்கள் நந்தனார்களாக இன்னும் மூலஸ்தானத்துக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள். அப்புறம் ஏன் வெறுப்பு வராது??

 

டிசம்பரில் கச்சேரிகளை வரிந்துகொண்டு போற்றும், விமர்சிக்கும் எந்த இதழுமே, தமிழ் பண்பாட்டுக் கலைகளை ஊக்குவிக்கும் நோக்கில் மிக அழகாக நடத்தப் பட்ட சென்னை சங்கமத்தைப் பற்றி எழுதவில்லை. கனிமொழியின் புலமையில் உங்களுக்கும் எனக்கும் விமர்சனங்கள் இருக்கலாம் – ஆனால், அவரும் கஸ்பாரும் நடத்தும் சங்கமத்தின் நோக்கங்கள் மிக உயர்வானவை. ஏன் நீங்கள் கூட சிறு பான்மையினர் நடத்தும் திருவையாறு நிகழ்வைச் சிலாகித்தும் எழுதியிருந்தீர்களே தவிர.. மக்களின் இயக்கமாக நடத்தப் பட்ட அந்த நிகழ்வை எழுதவில்லையே-  சுஜாதாவின் பாஷையில் சொல்ல வேண்டுமானால், இவர்கள் சபையில், இப்போதைக்கு ஆய்ச்சியர் குரவை வரைக்கும் தான் தமிழுக்கு அனுமதி..

அருணா சாயிராமின் அபாங் என் மனதை நெகிழ்த்தியிருக்கிறது. அதே சமயம் அவர் என்ன கவி பாடினாலும் என்று துவங்கிய உடனேயே கண்களில் நீர் வழிந்து ஓடும். தாய் மொழியுடனான தொப்புள் கொடி உறவு அது.. எனது நண்பனின் தாயின் மீது எனக்கு மதிப்பு உண்டு – ஆனால் எனது தாய் எனது உயிர். இந்த ஒரு உணர்வு இப்போதைய சங்கீத நிறுவனங்களில் இல்லை – அங்கே தமிழ் lesser mortal களுக்காகப் பாடப் படும் துக்கடா மட்டுமே.. பிராமணர்களை வெறுத்திடச் சொல்லும் திராவிடப் பாரம்பரியம் எவ்வளவு மோசமோ அதே அளவு மோசம் தமிழைக் கண்டு கொள்ளாமல் விடும் இந்த high handed upper class attitude.  இதைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன??

அன்புடன்

பாலா

நான் சாதாரணமாக எதிர்பார்த்த அதே தயார்நிலை எதிர்வினைதான் உங்களுடையது. இந்த எதிர்வினைக்காகவே நாம் பழக்கபடுத்தப்பட்டிருக்கிறோம். பெரும்பாலும் அரை உண்மைகளால் ஆனது இந்தத் தரப்பு. தாழ்வுணர்ச்சி அதன் விளைவான இயலாமைக்குப் பிறரைப் பழிசாரும் தன்மை ஆகியவை அடங்கியது.

முதல்விஷயம் தமிழிசையாகிய கர்நாடக சங்கீதம் பிராமணர்களுக்கு உரியதல்ல. அது சிறப்பாக தமிழ்மரபின் பாணர் , இசைவேளாளர் போன்ற சாதிகளுக்கு உரியது. மற்ற அனைத்துசாதிகளும் ரசனை சார்ந்து அதில் ஈடுபட்டனர். இசைச்சாதிகளை இழிசாதிகளாக புறந்தள்ளிய தமிழகத்துப் பெருஞ்சாதிகள்தான் அக்கலைகளை அவர்கள் மறக்கவும் கைவிடவும் காரணம். இன்றும் அம்மனநிலையே நீடிக்கிறது.

அதேசமயம் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தியாகையர், சியாமாசாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் மூலம் அது பிரமணர்களின் குலக்கலையாக ஆகியது. அதை அழியாத குருசீட மரபு வழியாக அவர்கள் இன்றுவரை வளர்த்தெடுக்கிறார்கள். ஆகவே அதன் மிகச்சிறந்த சாதனைகளை நாம் இன்று காணமுடிகிறது. மேதமையை அதில் தரிசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது.

நீங்கள்[அதில் நானும் சேர்த்தி என்பதனால் நாம்] செய்தது என்ன? நாம் ஏன் அக்கலைகளை முற்றாக மறந்தோம்? அதைத்தான் நான் கேட்கிறேன். குறைந்தபட்சம் அதற்காவது நாம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா?

ஒரு பேச்சுக்காகச் சொல்கிறேன். கர்நாடக சங்கீத மேடையில் பிராமணர்கள் தமிழ்ப்பாடல்கள் பாடாவிட்டால் என்ன? நாம் ஏன் பாடக்கூடாது? நம்மிலிருந்து ஏன் நல்ல பாடகர்கள் உருவாகி வரக்கூடாது? ஏன் நாம் திரளாகப்போய் இசை கேட்டு அவர்களை வளர்க்கக்கூடாது? ஏன் நமது பழந்தமிழ் இசைமரபை மீட்டு எடுத்து ஒரு பெரும் அமைப்பாக ஆக்கக் கூடாது? யார் தடுத்தார்கள்? வணிகத்திலும் ஊடகத்துறையிலும் ஏன் இலக்கியத்திலும் நாம் அடைந்த வெற்றிகளை ஏன் இங்கும் அடையக்கூடாது?

நடப்பது என்ன தெரியுமா? தமிழிசையை வளர்ப்பதற்காக உருவான தமிழிசை இயக்கம் இன்று ஆதரிப்பாரில்லாமல் நசிந்து கிடக்கிறது. அதற்கான அமைப்புகள் ஒப்புக்கு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. பெரும்பொருட்செலவில் அண்ணாமலை அரசர் உருவாக்கிய அரங்கங்களில் பாட்டு கேட்க ஆளில்லாமல் நாற்காலிகள் காலியாகக் கிடக்கின்றன. ஐயமிருந்தால் ஒருமுறை இசைக்காலத்தில் சென்னை தமிழிசைமன்ற அரங்குக்குச் சென்று பாருங்கள்.

தமிழிசை அரங்குகளிலும் பாடுவதற்கு சுதா ரகுநாதனோ, பாம்பே ஜெயஸ்ரீயோதான் வரவேண்டியிருக்கிறது. மியூசிக் அக்காதமிக்குப் போகும் அதே கூட்டம்தான் இங்கும் வரவேண்டியிருக்கிறது. திருவையாறு தியாகராஜர் இசைவிழா நிகழும்போது அதே திருவையாறில் இசைப்பள்ளி வளாகத்தில் அதே நாளில் போட்டிக்காக தமிழிசைவிழா நடத்தப்படுகிறது. ஆனால் இன்று அங்கே பாடுபவர்கள் தியாகராஜ விழாவுக்கு வரும் இசைநட்சத்திரங்கள்தான். இம்முறை சுதா ரகுநாதன் பாடுவதைக் கேட்டேன்.

கிடத்தட்ட நூற்றாண்டு காணவிருக்கும் தமிழிசை இயக்கத்துக்கு என்ன நேர்ந்தது? தமிழிசைக்கு அமைப்புகளை உருவாக்கினார்கள். பள்ளிகளை உருவாக்கினார்கள். மாபெரும் ஆய்வு நூல்களை உருவாக்கினார்கள். தமிழிசை பற்றி அனல்கக்கப் பேசும் மேடைப்பேச்சாளர்களை உருவாக்கினார்கள். அதைக் கேட்கும் ரசிகர்கள் உருவாகவேயில்லை. உருவாக்க வேண்டிய சமூகங்கள் அதில் ஆர்வமே காட்டவில்லை. ரசிகர்கள் இல்லாத காரணத்தால் பாடகர்களும் உருவாகவில்லை. இதற்கும் நாம் பிறரைக் குறைசொல்லியாகவேண்டுமா என்ன?

அன்புள்ள பாலா, நீங்கள் இசைக்காக நீங்கள் அயலார் என எண்ணும் ஒரு சாராரிடம் சென்று நின்று அவர்கள் உங்கள் பாடலைப் பாடுவதில்லை என்று புலம்புவதன் அபத்தமாவது புரிகிறதல்லவா? நீங்கள் பாடுங்கள், கேளுங்கள், உங்கள் மரபை உருவாக்கி கடந்துசெல்லுங்கள். ஏன் முடியவில்லை? நான் கேட்பது அதை மட்டுமே

கர்நாடகச் சங்கீத நிகழ்ச்சிகளில் தமிழ்ப்பாடல்கள் பாடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து என் அனுபவத்தில் நிறையவே சொல்லமுடியும். முதலில் இசைநிகழ்ச்சிக்கே அதிகம் செல்லாதவர்கள், இசையே தெரியாதவர்கள்தான் இதை அடிக்கடிச் சொல்கிறார்கள். இன்றைய இசைநிகழ்ச்சிகளில் மிக அதிகமாகத் தமிழ்ப்பாடல்கள் பாடப்படுகின்றன என்பதே உண்மை.

மகாராஜபுரம் சந்தானம், மதுரை டி. என். சேஷகோபாலன், அருணா சாய்ராம், சுதா ரகுநாதன், சஞ்சய் சுப்ரமணியம், சௌம்யா, பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள்தான் தமிழகமே மறந்து போயிருந்த எத்தனையோ பாடல்களைக் கண்டெடுத்து அவற்றை சுவரப்படுத்தி மேடைதோறும் பாடிப் பிரபலப்படுத்தியவர்கள். அவர்களுடைய சேவைகளை தமிழ் மீது பற்றுள்ள எவருமே புறக்கணித்துவிட முடியாது. அந்த ஆர்வத்தையும் கலைத்தேர்ச்சியையும் சற்றும் பொருட்படுத்தாத மூர்க்கம் எனக்கு மனவருத்தத்தையே அளிக்கிறது. அது வெற்று அரசியல்.

ஏன் முற்றிலும் தமிழ்ப்பாடல்கள் பாடப்படக்கூடாது என்று கேட்கலாம். முதலில் அப்படி ஆணையிட நாம் யார் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அத்துடன் கர்நாடக இசையை ஓரளவேனும் அறிமுகம்செய்துகொண்டால் அதற்கான காரணம் தெரியும். எனக்கு இவ்விஷயங்களை தமிழிசை ஆய்வாளரான நா.மம்முது சொன்னார் என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

இன்றைய கர்நாடக இசை ஒரு முறைமை. அது தியாகையர் முதலிய மூவரால் உருவாக்கப்பட்டது. அவர்களின் பாடல்கள் சுவரப்படுத்தப்பட்டு அம்முறைமையின் கிளாஸிக்குகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. நெடுங்காலமாக குருசீட மரபாக அவற்றைக் கற்று வருகிறார்கள். ஆகவே அவற்றை அதிகமாகப் பாடுகிறார்கள்.

தமிழில் என்றல்ல, எம்மொழியிலாயினும் ஒரு புதுப்பாடலை மையப்பாடலாக விரிவாக ஆலாபனைகளுடன் பாடவேண்டுமென்றால் அதற்கு அவற்றை சுவரப்படுத்த வேண்டும். அதை எல்லாராலும் எளிதில் செய்துவிடமுடியாது. அந்தத் தடையையும் மீறி பெரும் சிரத்தையுடன் இன்று தமிழ்ப்பாடல்கள் சுவரப்படுத்தப்பட்டு பாடப்படுகின்றன. எந்த ஒரு மரபுக்கலையிலும், செவ்வியல் கலையிலும் மாற்றங்கள் உடனடியாக நிகழ இயலாது.

இன்றைய கர்நாடக இசைமேடையில் தியாகையர், புரந்தரதாசர், அன்னமாச்சாரியா, ஜெயதேவர் போன்றவர்களின் பாடல்கள் அதிகமாகப் பாடப்படுகின்றன. நான் கேட்டவரை இவர்களின் பாடல்களே இசையும் மொழியும் இசையும் அழகு மேம்பட்டவை. தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருத மொழிகளைச் சேர்ந்த இப்பாடல்கள் இங்கே ஏன் ஒலிக்கின்றன என்றால் இசை என்பது இன்னும் இங்கே அகில இந்தியத் தன்மையுடன் இருக்கிறது என்பதனாலேயே. கேரளத்திலும் இதே பாடல்கள்தான். கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் இதே பாடல்கள்தான். கேரளத்தில் சில சுவாதித்திருநாள் பாடல்கள் கூடவே பாடப்படும்.

கேரளத்தில் யாரும் எல்லா பாட்டையும் மலையாளத்தில் பாடவேண்டுமென அறைகூவி நான் கேட்டதில்லை. சுத்த மலையாளிகளான ஜேசுதாஸ¤ம், நெய்யாற்றின்கரை வாசுதேவனும் பாடும்போதுகூட.. ஏனென்றால் இசையின் அந்த அகில இந்தியத்தன்மை அவர்களுக்கு தெரியும். அது பல நூற்றாண்டுகளாக மெல்ல மெல்ல உருவாகிவந்தது. அழுத்தமான வரலாற்றுப்பின்புலம் கொண்டது.

தமிழில் பாடு என்ற கூக்குரல் இசை சார்ந்தது அல்ல. குறுகலான மொழித்தேசியவாத அரசியல் சார்ந்தது. கலையை அரசியலின் கோடாலியால் பிளக்க நினைக்கும் முயற்சி அது. இரண்டாம் உலகப்போருக்கு முன் யூத இசைமேதைகளின் இசையை இசைக்க ஐரோப்பியநாடுகளில் சில தடைவிதித்தன. போருக்குப் பின் ஜெர்மனிய இசைக்கு சிலநாடுகளில் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோன்ற முட்டாள்தனம்தான் இது. இசை இதற்கெல்லாம் கட்டுப்பட்டது அல்ல. பண்பாட்டை பிரிவினை அரசியலால் பிளக்க எண்ணும் போக்கு ஆபத்தான நசிவுப்பாதை. எந்தக்கலைக்கும் அது ஆபத்தானதே.

தமிழ்நாட்டில் தமிழில் பாடுவது குறைந்தமைக்குக் காரணம் இன்றைய கர்நாடக இசையை உருவாக்கிய சூழல் பதினேழாம் நூற்றாண்டின் மராட்டிய அரசவைச்சூழல் என்பதே. இது ஓர் வரலாற்று உண்மை. இந்த உண்மையை இனி நாம் திருத்த முடியாது. இந்துஸ்தானி இசை இஸ்லாமிய அரசவையால் உருவாக்கப்பட்டது. நாளை அத்வானி நினைத்தால் அதை மாற்றமுடியுமா என்ன? மாற்ற முயன்றால் அனுமதிக்கலாமா?

தமிழில் பாடினால் தீட்டு என்றார்கள் என்றெல்லாம் இன்று பிரச்சாரம் நடக்கிறது. சம்ஸ்கிருதத்தில்தான் பாடுவேன் என்று சொல்லியிருந்தால் அதில் உயர்சாதி, மதவாத நோக்கை கண்டுகொள்ளமுடியும். தெலுங்கு தமிழை விட வைதீகமானதா என்ன?

**

கடைசியாக இரண்டு விஷயங்கள். பலரையும்போல நீங்களும் தமிழ் பாடல் பாடினால்தான் அது தமிழிசை என எண்ணியிருக்கிறீர்கள். தமிழிசை என்பது அதில் உள்ள சொல் வடிவம் அல்ல. அந்த பண் அல்லது ராக அமைப்பே பழந்தமிழ் இசைமரபில் இருந்து வந்ததுதான் என்றே தமிழிசை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆகவே தெலுங்கிலோ சம்ஸ்கிருதத்திலோ பாடப்பட்டாலும் அது தமிழிசைதான். செவ்வழிப்பண்ணில் ஆங்கிலத்தில் பாடினால் அது ஆங்கில இசையா?

களப்பிரர் காலத்தில் முற்றாகக் கைவிடப்பட்டு மறைந்த தமிழிசை பக்தி இயக்கக் காலகட்டத்தில் மீண்டும் கண்டடையப்பட்டது. மீண்டும் கைவிடப்பட்டு பதினாறாம் நூற்றாண்டில் சாரங்கதேவர் என்ற இசைவாணரால் மறு அமைப்பு செய்யப்பட்டது. தியாகையர் காலத்தில் இன்றைய அமைப்பை எடுத்தது என்பது ஆய்வாளர்களின் தரப்பு. ஆந்திரமும் கர்நாடகமும் கேரளமும் பாடுவதும் தமிழிசைதான்.

ஆகவே இனிமேல் முற்றிலும் தமிழ்ப்பாடல்களே எழுதப்பட்டு பாடப்பட்டு தமிழிசை மறுமலர்ச்சி அடைந்தாலும்கூட அதன் கடந்தகாலத்தின் ஒருபகுதியாக தெலுங்கு சம்ஸ்கிருதப் பாடல்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதை ஒன்றும்செய்யமுடியாது. தியாகையர் போன்ற மகத்தான கலைஞர்களை அதிகாரமும் அரசியலும் புதைத்துவிடாது.

**

சென்னைசங்கமம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நம் சூழலில் பொத்தாம்பொதுவான விவாதங்கள் எப்படி நிகழ்கின்றன என்பதற்கான சான்று அக்கூற்று. கலைகள் மூன்று வகை. சடங்கு கலைகள் [அனுஷ்டானகலைகள்] , நாட்டார்க் கலைகள், செவ்வியல்க¨லைகள்.

சடங்குகலைகளே கலைகளின் முதல்வடிவம். அவை ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறை, குறிப்பிட்ட சந்தர்ப்பம் ஆகியவற்றில் இருந்து பிரிக்கமுடியாதவை. கணியான்முடியேற்று அப்படிப்பட்ட கலை. அதை முத்தாலம்மன் கோயிலில் இருந்து பிரிக்க முடியாது. அது கலையும் வழிபாடுமாக ஒரே சமயம் இருப்பது. நாட்டார்க்கலை என்பது சடங்குகலையின் வளர்ச்சியடைந்த வடிவம். எனினும் ஒரு சடங்கம்சம் இதிலும் உண்டு. ஒரு குறிப்பிட்ட பகுதியின் பண்பாட்டுடன் இணைந்தது அது.

இவ்விரு கலைகளிலும் கலைஞன் என்ற ஆளுமையின் பங்களிப்பு பெரிதாக இருப்பதில்லை. தேர்ச்சி மட்டுமே காணக்கிடைக்கும். இவை மீண்டும் மீண்டும் ஒரேமாதிரி நிகழும். நுட்பங்கள் அனேகமாக மிகவும் குறைவாகவே இருக்கும். ரசிகர்களுக்குப் பயிற்சி தேவை இருக்காது. ஆகவே பெருவாரியான மக்களை உள்ளிழுக்கக் கூடியவையாக இருக்கும். இலக்கணங்கள் மூலம் உருவாக்கப்படும் கட்டமைப்பும் அக்கட்டமைப்பில் கலைஞன் உருவாக்கும் புதிய வளர்ச்சிகளும் இவற்றில் இருப்பதில்லை.

செவ்வியல்கலை என்பது முழுக்கமுழுக்க கலைஞனின் கற்பனைத்திறன் மூலம் உருவாக்கப்படும் நுட்பங்கள் சார்ந்தது. இலக்கணம் மூலம் உருவாக்கப்படும் கட்டமைப்பு கொண்டது. அக்கட்டமைப்பைப் புரிந்துகொண்டுள்ள ரசிகர்கள் தேவைப்படுவது. ஆகவே அப்பயிற்சி பெறாதவர்களுக்கு உரியதல்ல அது.

மேலும் எல்லா செவ்வியல்கலைகளும் அவை உருவான மண்ணில் இருந்து மேலே எழுந்து ஒரு மானுடப்பொதுவான தன்மையை அடைந்திருக்கும். தன்னை இலக்கணப்படுத்திக்கொள்வதன் மூலம் அந்த மேலெழலை செவ்வியல்கலை சாத்தியமாக்குகிறது. அந்த இலக்கணம் காலமற்ற இடமற்ற ஒரு வெளியில் இருக்கிறது. அதைக் கற்கும் எவருக்கும் அது சொந்தமாகும்.

நாட்டார் கலை ஒருபோதும் செவ்வியல்கலை அல்லது நவீனக் கலை அளிக்கும் முழுமையான கலையனுபவத்தை அளிப்பதில்லை. ஒரு நாட்டுப்புறப் பாட்டுக்கும் கம்பராமாயணப்பாட்டுக்கும் நவீனகவிதைக்கும் உள்ள வேறுபாடே நான் சொல்ல வருவது. ஏனென்றால் செவ்வியல்-நவீனக்கலை என்பது தத்துவ சாரம் கொண்டது. அந்தக் காலம் வரை வந்து சேர்ந்த ஞானங்களை எல்லாம் தன்னுள் அடக்கிக்கொண்டு மேலே செல்ல முனைவது. ஒரு நவீன மனிதனுக்கு நாட்டார் கலையில் இருந்து குறிப்பிட்ட நிலப்பரப்பின் பண்பாட்டுச்சித்திரம் ஒன்று கிடைக்கிறது. இறந்தகாலம் சார்ந்ததாக அது இருப்பதனால் அவன் ஆர்வத்தை அது ஈர்க்கிறது. அவனுடைய கற்பனையைத் தூண்டும் சிலகூறுகளை அவன் அதில் கண்டடையலாம்.

எந்த ஒரு நாகரீகச் சமூகத்துக்கும் அதன் முக அடையாளமாக நிற்பது செவ்விலக்கியமும், செவ்வியல் கலைகளுமே. சங்கப்பாடல்களும் சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் ,தஞ்சை பெரியகோயிலும், திருவெண்காடு வெண்கலச்சிற்பங்களும் எல்லாம்தான் தமிழ்ப்பண்பட்டின் முகங்கள். ஷேக்ஸ்பியரும், கதேயும், மைக்கேலாஞ்சலோவும், ரா·பேலும், ரெம்ப்ராண்டும், பீதோவனும், ·பஆக்கும் தான் ஐரோப்பாவின் முகங்கள். அவற்றில் அச்சமூகத்தின் வாழ்க்கையும் கனவும் உள்ளது
அந்தச் செவ்வியல்கலைகளுக்குத் தேவையான அடிவேர்ப்பரப்பைக் கொடுத்தவை, நேரடியான அனுபவதளம் மூலம் ஆதார வலுவாக நிற்பவை என்ற முக்கியத்துவம் நாட்டார் கலைகளுக்கு உண்டு.

நாட்டார் கலைகளுடன் எனக்கு நேரடி உறவுண்டு என்பதை என் படைப்புகளே காட்டும். ஆனால் அது என் மண்ணில் உள்ள நாட்டார் கலைகள். அவற்றின் வேரும் வேர்மண்ணும் எனக்கு நன்றாகத்தெரியும் என்பதனால்தான் என்னால் அவற்றை ரசிக்க முடிகிறது. வேறு ஒரு மண்ணின் நாட்டார் கலையை சும்மா ஒருமுறை வேடிக்கைபார்க்கலாம், அவ்வளவுதான்.

ஆனால் நவீன காலகட்டம் நாட்டார் கலைகளுக்கு உரியதல்ல. நவீனமயமாகும்தோறும் நாட்டுப்புறப் பண்பாடு அழிகிறது. கூடவே நாட்டார் கலைகளும் அழியும். இன்று நாட்டார்கலைகள் அழிந்துகொண்டிருக்கின்றனக். அனேகமாக ஒவ்வொருவருடமும் பல கலைகள் அழிகின்றன என்று ஆய்வாளரான அ.கா.பெருமாள் அவரது நாட்டார்கலைகளுக்கான கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடுகிறார். காரணம் அவற்றை ரசிப்பவர்கள் வேகமாக இல்லாமலாகிக் கொண்டே இருக்கிறார்கள்

நாட்டார் கலைகளை தக்கவைப்பதற்கான முயற்சிகள்தான் இன்று நடக்கின்றன. அதில் ஒன்றே சென்னை சங்கமம். அதன் கருத்தும் செய்முறையும் மிகத் தவறானவை என்பதே என் எண்ணம். நாட்டார்கலைகளை சென்னை போன்ற பெருநகர்ச் சூழலில் கிராமியக்கலைஞர்கள் வந்து தங்கள் கலைகளை நிகழ்த்த, சம்பந்தமே இல்லாமல் அவற்றை கூட்டம் வேடிக்கைபார்ப்பதனால் என்ன ஆகிவிடப்போகிறது? அக்கலைஞர்களுக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கலாம். முத்தாலம்மன் கோயிலில் அம்மனின் ஆவேசம் வந்து ஆடும் கணியான் பனகல் பார்க்கில் மெர்க்குரி விளக்கொளியில் ஆடும்போது அங்கே வெளிப்படுவது என்ன கலை?

அதை ஒரு கலைநிகழ்ச்சி என என்னால் ஏற்க முடியவில்லை. அந்தக் கலைகளை நகர்மக்கள் உண்மையிலேயே ரசிக்கிறார்கள் என்றும் நான் நினைக்கவில்லை. நாம் நம்மை சும்மா ஏமாற்றிக்கொள்வதில் பொருளில்லை. நான் அறிந்தவரை உண்மையிலேயே இந்த நாட்டார்கலைகளை உண்மையிலேயே ரசிக்கும், அதில் இருந்து ஊக்கம் பெறும் எந்த நவீன எழுத்தாளனையும் எந்த நவீனக் கலை ரசிகனையும் நான் கண்டதில்லை. இப்போது உள்ளது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு மேலோட்டமான ஆர்வம். நகர் சார்ந்த குற்ற உணர்ச்சி. அத்துடன் அபூர்வமாக சிலருக்கு ஆராய்ச்சி நோக்கு, அவ்வளவுதான்.

சென்னை சங்கமத்தின் நாடார்கலைகள் மிகத் தரம் குறைந்தனவாக இருந்தன என்றும், அக்கலைஞர்கள் ஆர்வமே இல்லாமல் ஆடினார்கள் என்றும்தான் நான் கேள்விப்பட்டு வருகிறேன். ஒப்புநோக்க தேவிபாரதி ஈரோட்டிலும் ஹரிகிருஷ்னன் மேட்டூரிலும் அப்பகுதி நாட்டார்கலைகளை மீட்கும்பொருட்டு நடத்தும் கலைவிழாக்கள் ஆத்மார்த்தமானவை. முக்கியமானவை.

அதையும் செவ்வியல் கலை நிகழ்ச்சியையும் ஒப்பிட்டுக்கொண்டீர்கள் என்றால் நம்மை நாமே ஏமாற்றுகிறோம் என்றே பொருள். இலக்கியம் என்று வரும்போது நாம் நவீன இலக்கியத்தைத்தான் சொல்கிறோம். அது இன்று நிகழ்வது. நேற்றின் ஞாபகச்சின்னம் அல்ல. நாட்டார் கலை ஒரு வேடிக்கைப்பொருள்தான் இன்று. அதன் மண்ணில் அதனுடன் ஈடுபாடு கொண்டு சிறுவயதுமுதலே இருந்துவரும் சிலருக்கே அது கலையனுபவத்தை அளிக்கும், அதன் எல்லைக்குட்பட்ட அனுபவத்தை.

என்னுடைய மனம் செவ்வியல் கலையை செவ்விலக்கியத்தையே மானுட வெளிப்பாடாகக் காணக்கூடியது. அதுவே என் இயல்பு. அதுவே இயல்பாக ஒரு கலைஞனுக்குரிய ரசனை. ஆகவேதான் எனக்கு செவ்வியல் இசையும் செவ்வியல் நடனமும் முக்கியமானதாகப் படுகிறது. செவ்வியல் கலைகளில் பயிற்சிபெறச் சோம்பல்கொண்டு அதைப் பழிக்கும் சமூகம் தன் நுண்மையைத்தான் இழக்கிறது.

தமிழின் இசை என்று நாட்டார் இசையைச் சொல்லி நாம் செவ்வியல்கலை இல்லாதவர்கள் என்று எளிமைப்படுத்திக்கொள்ளும் சுய இரக்கம் தேவையா என்ன? தமிழின் இசை தொன்மையான தமிழிசையே. நாம் நம் லௌகீகச் சுயநலத்தாலும் ஈடுபாடின்மையாலும் சுரணையின்மையாலும் கைநழுவவிட்ட செல்வம் அது. நாளை அதை நம் வாரிசுகள் உணர்ந்து வென்று சாதிக்கலாம். அப்படி எதிர்பார்ப்போம். சாக்குபோக்குகளும், அர்த்தமில்லாத பழிசாரல்களும் செய்து அந்தப்பொறுப்பை தட்டிக்கழிக்காமல் இருப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைஇடம் ,ஒரு கேள்வி
அடுத்த கட்டுரைஜெகெ இருகடிதங்கள்